சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

அழைத்து வாரும் அரையரே!

Added : ஜன 30, 2017
Share
Advertisement
ஒன்றுமே நடவாதது போல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது காவிரி. ஊர் தோன்றிய காலம் தொடங்கி அனைத்துக்கும் சாட்சியாக அரங்கனுக்கு ஜோடி போட்டுக்கொண்டு கவனித்துக் கொண்டிருக்கிற நதி. மகிழ்ச்சியும் துயரமும் நதிக்குக் கிடையாது. ஆனால், எத்தனையோ மகிழ்ச்சித் தருணங்களுக்கும் துயரப் பொழுதுகளுக்கும் தனது இருப்பைச் சகாயமாக்கியிருக்கிறது.இதே காவிரிக் கரையில் எத்தனை நாள், எத்தனை
அழைத்து வாரும் அரையரே! Ramanujar Download

ஒன்றுமே நடவாதது போல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது காவிரி. ஊர் தோன்றிய காலம் தொடங்கி அனைத்துக்கும் சாட்சியாக அரங்கனுக்கு ஜோடி போட்டுக்கொண்டு கவனித்துக் கொண்டிருக்கிற நதி. மகிழ்ச்சியும் துயரமும் நதிக்குக் கிடையாது. ஆனால், எத்தனையோ மகிழ்ச்சித் தருணங்களுக்கும் துயரப் பொழுதுகளுக்கும் தனது இருப்பைச் சகாயமாக்கியிருக்கிறது.
இதே காவிரிக் கரையில் எத்தனை நாள், எத்தனை பொழுதுகள் ஆளவந்தாரோடு சத்விஷயம் பேசியபடி நடந்து சென்றிருக்கிறோம்! நம்பமுடியாத அபூர்வப் பிறப்பு அவர். நம்மாழ்வாரிடமிருந்து நேரடியாகத் தமிழ் மறைகளைப் பெற்ற நாதமுனியின் பேரன் வேறு எவ்விதமாகவும் இருந்துவிட முடியாதுதான். தமது ஞானத்தையும் சரி; தான் கற்ற பிரபந்தங்களின் உள்ளுறை பொருள்களையும் சரி. ஒரு நதியைப் போலவே வாரி வழங்கியவர் அவர். திருவரங்கக் கோயில் நிர்வாகம் ஒருபுறம். வைணவ தரிசன விஸ்தரிப்பு ஒருபுறம். ஆ, அதுதான் பெரிய சவால். எந்தச் சோழன் மறைந்தாலும், எந்தப் புதிய சோழன் வந்தாலும் தேசத்தில் சைவத்துக்குத்தான் மரியாதை. காணுமிடம் எங்கும் சிவத்தலங்கள். கால் படும் இடங்களில் எல்லாம் திருப்பணிகள்.
வைணவ தரிசனத்தை மூடி மறைத்துத்தான் பரப்ப வேண்டியிருந்தது.மன்னர்களும் மனிதர்களே அல்லவா? மனிதர்களால் எதைத் தடுத்துவிட முடிகிறது? ஒரு பூ மலரும் கணத்தில் யாரும் அதை நேரில் கண்டதில்லை. எல்லாப் பூக்களும் மலர்ந்தபடியேதான் இருக்கின்றன. யுகம் யுகமாக. இன்றுவரை ஒரு சாட்சி ஏது? ஆனால், ஆளவந்தார் எதைக் குறித்தும் கவலைப்பட்டதில்லை என்பதைப் பெரிய நம்பி நினைத்துப் பார்த்தார். 'ஆசாரியரே, உமக்குப் பின் எங்களுக்குக் கதிமோட்சம் தரப் போவது யார்?' என்று அவரது இறுதி நாள்களில் சீடர்கள் கதறியபோது கூட அவர் அமைதியாகத்தான் இருந்தார். ராமானுஜரை அழைத்து வரச்சொன்னதைக் கூட, எந்த நுாற்றாண்டிலோ எழுதி மறைக்கப்பட்ட ஒரு புராதனமான ஓலைச் சுவடியைத் தேடி எடுத்து துாசு தட்டும் விதமாகத்தான் வெளிப்படுத்தினார். என் விருப்பம் இது. எம்பெருமான் விருப்பம் என்னவோ அதுதான் நடக்கப் போகிறது என்கிற பாவனை. ஒருவேளை நோயின் கடுமை அளித்த உளச்சோர்வாகவும் இருக்கலாம்.
பலவிதமாக யோசித்தபடியே பெரிய நம்பி நதிக்கரையோரம் நடந்து கொண்டிருந்தார். சற்றுப் பின்னால் அவரது நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு யோசனைதான். பெரிய நம்பி எதற்கு இத்தனை யோசிக்கிறார்? ஆளவந்தாரின் விருப்பம் ராமானுஜர்தான் என்பது தெரிந்துவிட்டது. அவரது மடங்கிய விரல்கள் நிமிர்ந்த கணத்தில் அதைத் தவிர வேறு யோசனைக்கே இடமில்லை என்பது நிரூபணமாகிவிட்டது. அப்புறம் என்ன? ஒரு கணம் நின்று திரும்பிய பெரிய நம்பி அவர்களை உற்றுப் பார்த்தார். ஒரு கேள்வி கேட்டார். 'அரங்கன் சித்தம் அதுதான் என்றால் ராமானுஜர் ஏன் உடனே காஞ்சிக்குத் திரும்பிச் சென்றிருக்க வேண்டும்?''அதுதானே? காரியங்கள் முடிகிற வரைக்கும் இருந்த மனிதர், பெருமாளைச் சென்று சேவிக்கக்கூட இல்லாமல் அப்படியே போய்விட்டாரே?' என்றார் மாறனேர் நம்பி. 'திருவரங்கத்துக்கு வந்துவிட்டு, கோயிலுக்குப் போகாமல் திரும்பிய ஒரே மனிதர் அவராகத்தான் இருப்பார்!' என்றார் திருக்கோட்டியூர் நம்பி. 'இல்லை நம்பிகளே! ராமானுஜரைத் தவறாக எண்ணாதீர்கள். அவருக்கு அரங்கன்மீது கோபம். தமது மானசீக ஆசாரியரான ஆளவந்தாரை, தான் வந்து சேவிக்கும் சில நிமிட நேரம்கூட விட்டு வைக்காமல் எடுத்துக்கொண்டு விட்டானே என்கிற ஏமாற்றம்.' என்றார் பெரிய நம்பி. 'பெரிய நம்பி சொல்வதுதான் சரி. இதுவே எங்கள் காஞ்சிப் பேரருளாளன் என்றால் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டுத்தான் நியாய தருமத்தையே யோசிப்பான் என்று முணுமுணுத்துக் கொண்டேதான் அவர் கிளம்பிச் சென்றார். நான் கவனித்தேன்!' என்றார் திருமாலையாண்டான்.
'நமக்கு நமது ஆசாரியரின் விருப்பம் நிறைவேறியாக வேண்டும். ஸ்ரீவைஷ்ணவ தரிசனம், ஒரு சரியான நிர்வாகியில்லாமல் அப்படியே இருந்துவிட முடியாது. ஏதாவது செய்தாக வேண்டும். யாராவது செய்துதான் தீரவேண்டும்' என்றார் அரங்கப் பெருமாள் அரையர். அரை வினாடி கண்மூடி யோசித்த பெரிய நம்பி ஒரு முடிவுடன் சொன்னார், 'நல்லது அரையரே. பொறுப்பை உம்மிடமே விடுகிறோம். செய்து முடித்து, அழைத்து வாருங்கள்' என்றார்.திடுக்கிட்ட அரையர், 'நானா? என்னால் எப்படி முடியும்?'அவர்கள் மொத்தமாகக் கோயிலுக்குப் போனார்கள். கைகூப்பிக்கேட்டார்கள். 'எம்பெருமானே, திருக்கச்சி நம்பியைப் போல உன்னுடன் நேரடியாக உரையாடும் வக்கெல்லாம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்கள் பக்தி உனக்குத் தெரியும். எங்கள் நோக்கம் நீ அறியாததல்ல. ஆளவந்தாரின் பீடத்தை அடுத்து அலங்கரிக்க ராமானுஜரை நாங்கள் இங்கே தருவிக்க விரும்புகிறோம்.
இது நடக்குமா? யாரால் சாத்தியமாகப் போகிறது?'அவர்களது தயக்கத்திலும், தடுமாற்றத்திலும் ஒரு நியாயம் இருந்தது. ஏனென்றால், ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனுடன் தனது மானசீகத்தில் இரண்டறக் கலந்திருந்தார். கோயிலென்றால் வரதர் கோயில். தெய்வமென்றால் பேரருளாளன். விந்திய மலைக்காட்டில் வேடுவனாக வரதன் வந்த கணத்தில் உருவான சொந்தம் அது. பேரருளாளனின் திருவடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு விட்டோம் என்கிற உணர்வுதான் அவரது உணவாகவும் உயிர் மூச்சாகவும் இருந்தது.பெரிய நம்பிக்கு இது தெரியும். அவரது சகாக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் ராமானுஜர் திருவரங்கம் வந்தே தீரவேண்டும். காஞ்சியில் இருந்து அவரைக் கிளப்புவது எப்படி? அரங்கன் சன்னிதியில் இந்தக் கோரிக்கையுடன் அவர்கள் கைகூப்பி நின்றபோது, சட்டென்று ஓர் எண்ணம் ஒரே சமயத்தில் அனைவர் மனத்திலும் உதித்தது. அது அரங்கன் திருவுள்ளம்.காஞ்சிப் பேரருளாளனுக்கு சங்கீதம் என்றால் இஷ்டம். நாட்டியம் என்றால் அதைவிட இஷ்டம். கலாரசிகனான அவன் உத்தரவு தராமல் ராமானுஜர் காஞ்சியை விட்டுக் கிளம்ப மாட்டார்.
எனவே இசையிலும் நடனத்திலும் நிகரற்றவரான அரையர், காஞ்சிக்குச் சென்று வரதராஜனை மகிழ்வித்து, காரியத்தை சாதித்துவிட வேண்டியது. இப்படி ஒரு யோசனை மனத்தில் பட்ட மறுகணமே அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அரையருக்கு வியப்பில் கிறுகிறுத்துவிட்டது. 'நான் அப்போதே சொன்னேனே?' என்றார் பெரிய நம்பி.'தாமதிக்க வேண்டாம் அரையரே. இன்றே கிளம்பிவிடுங்கள். திரும்பி வரும்போது ராமானுஜரோடுதான் நீங்கள் வரவேண்டும்!''அரங்கன் சித்தம்!' என்று சொல்லிவிட்டு அரையர் புறப்பட்டார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X