ஒரத்தநாடு போக 75 ஆயிரம்... ஓஹோன்னு நடக்குது பேரம்!

Added : ஜன 31, 2017
Share
Advertisement
ஒரத்தநாடு போக 75 ஆயிரம்... ஓஹோன்னு நடக்குது பேரம்!

குளிர் காலம் துவங்கியதிலிருந்து அவ்வப்போது, 'வாக்கிங்'குக்கு மட்டம் போடும் மித்ரா, திடீரென இன்றைக்கு தனக்கு முன்பாகவே காத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, ஆச்சரியமான சித்ரா, ''மித்து...இவ்ளோ சீக்கிரமா வந்துட்ட...அதான் மழை வர்றது மாதிரி இருக்கா?'' என்று வானத்தைப் பார்ப்பது போல, தலை துாக்கினாள்.
''நம்ம ஊர்ல மழை வந்துட்டாலும்...!'' என்று, அலுத்துக் கொண்டாள் மித்ரா.
''நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழைன்னு வள்ளுவர் சொல்லுவாரு. நம்ம ஊர்ல நல்லவுங்களே இல்லாமப் போயிட்டாங்களா மித்து?'' என்றாள் சித்ரா.
''அதிகாரத்துல இருக்கிறவுங்க யாரும் நல்லவுங்களா இல்லைன்னு இயற்கைக்கு கோபமாயிருச்சா அல்லது இந்த மாதிரி ஆளுங்களை தேர்ந்தெடுத்த நம்ம மக்களுக்கு தண்டனை கொடுக்குதான்னு தெரியலை. ஏன்னா, இப்பல்லாம் எதிர்பார்ப்பு இல்லாம, யாரும் அரசியலுக்கு வர்றதில்லை,'' என்றாள் மித்ரா.
''மித்து... நீ இதைச்சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகம் வந்துச்சு. எம்.ஜி.ஆர்., முதல்வரா இருக்கிறப்போ, மலரவன் வீட்டுக்கு வந்திருக்காரு. அப்போ, அவர்ட்ட, 'ஒனக்கு என்ன வேணும்னு' எம்.ஜி.ஆர்., கேட்டாராம். 'கட்சிக்கு ஆபீசே இல்லை; இடம் வாங்க பணம் கொடுங்க'ன்னு கேட்டாராம் மலரவன். அதுக்கு எம்.ஜி.ஆரு., 'ஒனக்கு என்ன வேணும்'னு திரும்பக் கேட்டதுக்கு, 'எனக்கு தான் நீங்க இருக்கீங்களே'ன்னு சொன்னாராம்,'' என்றாள் சித்ரா.
''அச்சோ....கேக்குறப்பவே சிலிர்க்குதேக்கா...!'' என்றாள் மித்ரா.
''முழுசா கேளுடி. அப்போ, கையில இருந்த எட்டாயிரம் ரூபாயைக் கொடுத்துட்டு, அப்புறமா சென்னை போய், 27 லட்ச ரூபா அனுப்புனதுல கட்டுனது தான் இதயதெய்வம் மாளிகை. ஆனா, அதைக் கட்டுன, மலரவனே இப்போ, கட்சித்தலைமைக்கு எதிரா கிளம்பீட்டாரு. அவரோட தலைமையில, ஜெ.தீபா பேரவைக்கு தலைமை அலுவலகம் கட்டித் திறந்திருக்காங்க... வரலாறு மாறுது மித்து,'' என்றாள் சித்ரா.
இருவரும் அரை ரவுண்ட் முடிப்பதற்குள், ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கியது. எதிரில், 'வாக்கிங்' வந்த ஒரு அதிகாரியைப் பார்த்ததும் ஏதோ நினைவுக்கு வந்தவளாய் மித்ரா கேட்டாள்...
''அக்கா... இந்த வருஷம், குடியரசு தினத்துல யார் யாருக்கெல்லாம் பதக்கம், பாராட்டு கிடைச்சிருக்கு பார்த்தியா?''
''அது பெரிய்ய்ய பட்டியலா இருக்குமே''
''அந்த பட்டியல்ல பி.ஆர்.ஓ., ஆபீஸ்காரங்க அஞ்சு பேரு இருக்காங்க. அந்த பி.ஆர்.ஓ.,வைப் பத்தி, ஏற்கனவே ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' இருக்கு. ஏ.பி.ஆர்.ஓ.,, நம்ம மாவட்டத்துல இருக்குற ஆளுங்கட்சி எம்.பி.,யோட நெருங்குன சொந்தக்காரரு. இவுங்க ரெண்டு பேர்னால, எந்த
பிரயோஜனமும் இல்லைன்னு பத்திரிகைக்காரங்க குமுறிட்டு இருக்காங்க. அவுங்க ரெண்டு பேருக்கும் பாராட்டுப் பத்திரம் கொடுத்திருக்காங்க...''
''மத்த மூணு பேரு?'' ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.
''ஒருத்தரு போட்டோகிராபர்... அவருக்கு கொடுத்ததுல தப்பில்லை; ஆனா, பல பேர்ட்ட பணத்தை வாங்கி ஏமாத்திட்டுத் திரியுற ஒருத்தருக்கு கொடுத்திருக்காங்க. விதிகளை மீறி, இன்னொருத்தரோட வீட்டுல குடியிருந்தப்போ, அதிரடியா ஹவுசிங் போர்டுகாரங்க, 'சீல்' வச்சாங்களே... அந்த டிரைவருக்கும் கொடுத்ததுலதான், கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிறவுங்களே கடுப்பாயிட்டாங்க,'' என்றாள் மித்ரா.
''இதை விடக்கொடுமை, கார்ப்பரேஷன்ல நடந்திருக்கு மித்து... அங்க 25 வருஷம் வேலை பார்த்த, 30 பேருக்கு பாராட்டுப் பத்திரம் கொடுத்தாங்க. அதுல பல பேரு, பயங்கர 'கரப்ட்' ஆசாமிங்க. கொடுமை என்னன்னா, அவுங்க எல்லாம், 'அப்பழுக்கின்றி பணியாற்றியவர்'ன்னு அடைமொழி கொடுத்திருக்காங்க,'' என்று சிரித்தாள் சித்ரா.
''குடியரசு தினவிழா பங்ஷனுக்கு, 'டவுன் பிளானிங்'ல இருக்குற முக்கியமான லேடி ஆபீசர் எட்டியே பார்க்கலையாம்,'' என்றாள் மித்ரா.
''அது தான் ஒனக்குத் தெரியுமா... அவுங்க இப்போ ஆபீசே வர்றதில்லையாம். அவரோட வீட்டுக்கே, கட்டட 'பைல்' எல்லாம் போயிருதாம். அங்கேயே வச்சு 'டீலிங்' முடிக்கிற அவரு, அப்பப்போ ஆர்.எஸ்.புரத்துல இருக்குற பெரிய ஆபீசர்ட்ட போய், 'கணக்கை' கரெக்டா ஒப்படைச்சிர்றாராம்,'' என்றாள் சித்ரா.
''பெரிய ஆபீசர்க்கு 'டீலிங்' எல்லாமே, அவுங்க மூலமாத்தான் முடியுதாமே'' என்றாள் மித்ரா.
''அதை விடு மித்து... கார்ப்பரேஷன் சார்புல, சிறந்த என்.ஜி.ஓ.,க்களை தேர்ந்தெடுத்து அஞ்சு பேருக்கு விருது கொடுத்தாங்களே... அவுங்க அஞ்சு பேருமே லேடீஸ் தான். ஏன் நம்ம ஊர்ல நல்லது செய்யுற என்.ஜி.ஓ.,க்கள்ல ஆம்பளைங்களே இல்லையா?'' என்று கேட்டாள் சித்ரா.
இருவரும் நடந்து போகும் நடைபாதைக்கு அருகிலுள்ள சாலையில், குப்பைகளை அள்ளிய துப்புரவுப் பணியாளர், பெரிய பிளாஸ்டிக் பையில் அவற்றைக் குவித்து, ரோட்டில் தரதரவென இழுத்துக் கொண்டு சென்றார். அதைப் பார்த்த மித்ரா கேட்டாள்...
''நம்ம கார்ப்பரேஷன்ல, 'ஸ்வச் பாரத்' எப்பிடியிருக்கு பார்த்தியா?''
''கண் துடைப்பு கார்ப்பரேஷன் மித்து...இதே 'ஸ்வச் பாரத்'ல, 'மார்க்' வாங்குறதுக்காக, துப்புரவுப் பணியாளர்களுக்கு, 'பயோ-மெட்ரிக்' அட்டெனன்ஸ் எடுத்துட்டு இருந்தாங்களே. அது இப்போ, 'ஒர்க்' ஆகுறதே இல்லை. அது இருந்தா, பொய்க் கணக்கு எழுத முடியாதே. அதே மாதிரி வெள்ளலுார்ல, குப்பை லாரிகளை எடை போடுற இடத்துல, 'சிசிடிவி'யும் 'ஒர்க்' ஆவுறதில்லையாம். புரியுதா மேட்டர்?''
''நல்லாவே புரியுது. குப்பை லாரிகள்ல, 'ஜிபிஎஸ்' பொருத்துறதும் அரைகுறையாத்தான் நடந்திருக்காம்''
''அய்யோ... இந்த கார்ப்பரேஷன் குப்பைய விடு மித்து. வேற ஏதாவது பேசு,'' என்றாள் சித்ரா.
''அக்கா... வ.உ.சி.,யில நம்ம பசங்க நடத்துன ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பற்றி, ஒரு இன்ட்ரஸ்ட்டிங் நியூஸ்... ஆறு நாள் நடந்த போராட்டத்துக்கு, தண்ணி, பிஸ்கட், சாப்பாடு, இளநீர்ன்னு மொத்தம் ஆயிரத்து 20 பேரு, 'டொனேட்' பண்ணுனதா, போலீஸ் கணக்குப் போட்டிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''இது தான் தெரிஞ்ச விஷயமாச்சே,'' என்று குறுக்கிட்டாள் சித்ரா.
''விஷயம் அது இல்லை... போராட்டம் முடிஞ்ச பிறகும், எட்டு லோடு டெம்போ நிறையா, பிஸ்கட், உணவுப் பொருள், தண்ணி பாட்டில் மிஞ்சிருக்கு. அதையெல்லாம், 'ஸ்டூடன்ட்ஸ் ஆர்கனைசர்ஸ்', கோயம்புத்துார்ல இருக்குற ஆதரவற்றோர் காப்பகம், முதியோர் இல்லம்னு பல இடங்களுக்குப் பிரிச்சுக் கொடுத்து, அதுக்கு ரசீதும் வாங்கி வச்சிட்டாங்களாம். கிரேட்ல...!'' என்றாள் மித்ரா.
''இவ்ளோ பொறுப்பான பசங்க, 'கொடிசியா' ரோட்டுல கொதிச்சது தான் ஏன்னு தெரியலை,'' என்றாள் சித்ரா.
''அங்க நடந்த பிரச்னைக்காக, சில பேரு மேல போலீஸ் கேஸ் போட்ருக்கு. அதுல, 'ரிசர்வ் சைட்'களை மீட்குறதுக்காக ஓயாமப்போராடுற சமூக ஆர்வலர் தியாகுன்னு ஒருத்தரு மேலயும் கேஸ் போட்ருக்காங்க. அவரு மட்டுமே, கோவை கார்ப்பரேஷனுக்கு, நுாறு கோடி ரூபா சொத்தையாவது மீட்டுக் கொடுத்திருப்பாரு. அவரு மேல கேசு போடச் சொன்னது, கதர்க்கட்சியில இருந்து வந்த, 'மாஜி' கவுன்சிலர் ஒருத்தராம்'' என்றாள் மித்ரா.
''அவருக்கு ஏன் இவரு மேல கோவம்?''
''அந்த 'மாஜி'யோட ஏரியாவுல இருக்குற ரிசர்வ் சைட் ஆக்கிரமிப்பை அகற்றுன பிரச்னையில முன் பகை இருந்திருக்கு. இப்போ ஆளுங்கட்சி 'இன்புளூயன்ஸ்'சை பயன்படுத்தி, கேசுல சேர்த்துட்டாராம்...''
''இன்னொரு விஷயம் சொல்றேன் கேளு... நம்ம டிஸ்ட்ரிக்ட்ல குரூப் 2ல போஸ்ட்டிங் ஆன, 160 பேர்ல, இன்னமும் 25 பேரு, ஒரத்தநாடுக்கு டிரெயினிங்குக்கு போக முடியாம தவிக்கிறாங்க. அதை முடிச்சாத்தான் புரமோஷன் கிடைக்கும். ஆனா, அங்க அனுப்பணும்னா, ஆளுக்கு, 75 ஆயிரம் கொடுங்கன்னு, எச்.எஸ்.,ல இருக்குற ஒரு ஆபீசரு, பேரம் பேசுறாராம். பின்னாடி இருக்கிறவரு, மாவட்டத்தோட பெரிய ஆபீசராம்,'' என்றாள் மித்ரா.
''மாவட்ட ஆபீசர்னு சொன்னதும், இன்னொரு ஆபீசரோட கறை படிஞ்ச பல்லு, கண்ணுல வந்தது. தடை செய்யப்பட்ட பான் மசாலா எல்லாத்தையும் பிடிக்குற, 'புட் சேப்டி' டிபார்ட்மென்ட் டாக்டர் ஒருத்தரே, எப்பப் பார்த்தாலும், 'பான்' போட்டுக்கிட்டே 'தம்' அடிக்கிறாராம். அவருக்கு மட்டும் அது, எங்க இருந்து வருதுன்னு தெரியலை,'' என்றாள் சித்ரா.
இரண்டு சுற்று முடிய, ஓய்ந்து இருவரும் ஓரமாய் உட்கார்ந்தார்கள். சில்லென்று வீசியது குளிர் காற்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X