இளையராஜாவின் 'இளையகானம்'| Dinamalar

இளையராஜாவின் 'இளையகானம்'

Added : பிப் 02, 2017 | கருத்துகள் (1)
இளையராஜாவின் 'இளையகானம்'

சமீபத்தில் வெளியான 'இளமி' திரைப்படத்தில், இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் வெளியான, 'தீப்பறக்க முட்டிபாரு திமில நீயும் தொட்டு பாரு' பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிபரப்பாகி கொண்டிருக்கிறது. தற்போது ஜல்லிக்கட்டு பற்றி பேசப்படும் நிலையில் இந்த பாடலை முணுமுணுக்காத இளைஞர்கள் குறைவு. அந்த பாடலை பாடியவர் சிவகங்கை மாவட்டம் ஆந்தையூரை சேர்ந்த இளையராஜா, 31.'வாடி என் கருத்தப்புள்ள, இரண்டு நாளா உறக்கமில்ல' மற்றும் 'அத்த மக உனை நினைத்து' என்ற இவரது கிராமிய பாடல்கள் தென் மாவட்டங்களில் எல்லா கிராமங்களிலும் ஒலிப்பதை கேட்டிருக்கலாம். இந்த பாடலை இளையராஜா இனிய குரலில் பாட இளைஞர்களின் ஆரவாரத்தை சொல்லவும் வேண்டுமா?இளையராஜாவுடன் பேசியதிலிருந்து...தேவகோட்டையில் பள்ளி படிப்பையும், காரைக்குடியில் பட்டப்படிப்பையும் படித்தேன். பள்ளியில் படிக்கும் போதே கிராமங்களில் வள்ளி திருமணம் போன்ற நாடகங்களை பார்க்க செல்வேன். ஒரு முறை நாடகம் பார்க்க சென்ற போது விளையாட்டாக பாடி, கிராமத்தினர் உற்சாகமூட்டினர். அதையடுத்து நாடகங்களில் நடித்தும், பாடியும் வந்தேன். கல்லுாரியில் படிக்கும் போதே பாட்டு போட்டிகளில் பங்கேற்று பல முறை பரிசுகளை பெற்றேன். 'மண் மணத்தை மறக்காமல் பாடு' என நண்பர்கள் உசுப்பேத்த கிராமிய பாடல்களை பாட துவங்கினேன். பின் திருச்சியில் இன்னிசை குழுவில் இணைந்து இரண்டு ஆண்டுகள் திரைபாடல்களை பாடும் வாய்ப்பு கிட்டியது. இது என் குரலை மேலும் வளம் சேர்க்க வாய்ப்பாக அமைந்தது. 'இளையகானம்' என்ற கிராமிய இசைக்குழுவையும் நடத்தினேன். சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பாடியதை கேள்விப்பட்டு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'வெளுத்துகட்டு' திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிட்டியது.பரணி இசையில் ரோஷிணி என்ற பாடகியுடன் 'ஒத்தையா இருந்த உசுருக்குள்ள' பாடினேன். பின் மானே மரகதே, உன் சிரிப்புல தான் போன்ற இசை தொகுப்புகளை வெளியிட்டது வரவேற்பையும், பெயரையும் பெற்று தந்தது.ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான 'வானவில் வாழ்க்கை' யிலும் பாடியிருக்கிறேன். பெயர் சொல்லும் பாடகராக நிலையான ஒரு இடத்தை பெற வேண்டும் என்பதே லட்சியம், என்றார்.இவரது பாடல் கேட்க 98653 26406.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X