சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

கொடுத்து வைத்தவன்

Added : பிப் 03, 2017
Share
Advertisement
கோவிந்தன் இப்போது இங்கு வர அவசியமில்லை. அவன் பெரிய திருமலை நம்பியிடமே சிறிது காலம் இருக்கட்டும் என்று ராமானுஜர் சொன்னார்.சுற்றியிருந்த சீடர்களுக்கு இது வியப்பாக இருந்தது. 'ஆசாரியரே, உமது தம்பி மனம் மாறி வைணவ தரிசனத்துக்கு மீண்டும் வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் நீங்கள் உடனே அவரைக் காண விரும்புவீர்கள் என்று நினைத்துத்தான் நம்பிகள் அவரைத் திருவரங்கத்துக்குக்
கொடுத்து வைத்தவன் Ramanujar Download

கோவிந்தன் இப்போது இங்கு வர அவசியமில்லை. அவன் பெரிய திருமலை நம்பியிடமே சிறிது காலம் இருக்கட்டும் என்று ராமானுஜர் சொன்னார்.

சுற்றியிருந்த சீடர்களுக்கு இது வியப்பாக இருந்தது. 'ஆசாரியரே, உமது தம்பி மனம் மாறி வைணவ தரிசனத்துக்கு மீண்டும் வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் நீங்கள் உடனே அவரைக் காண விரும்புவீர்கள் என்று நினைத்துத்தான் நம்பிகள் அவரைத் திருவரங்கத்துக்குக் கிளம்பச்சொல்லியிருக்கிறாராம்.'
'மாற்றம் நிகழவேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம். கோவிந்தனால் ஆக வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. ஆனால் அவன் பக்குவம் அடையவேண்டியது அனைத்திலும் முக்கியம். அவன் திருவரங்கம் வருவதைவிட நம்பியிடமே இருந்து பயில்வதுதான் சிறப்பு' என்றார் ராமானுஜர்.
விஷயம் பெரிய திருமலை நம்பிக்கு எட்டியது. ஒரு நல்ல நாள் பார்த்தார். கோவிந்தனைத் தன்னோடு திருமலைக்கு அழைத்துச் சென்று பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார். அன்றே அவனுக்கு ராமாயண வகுப்பைத் தொடங்கி விட்டார். ராமாயணத்தின் கதைக்கு அப்பால் உள்ள ஆழ்ந்த உட்பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி விளக்குவதில் நம்பிகள் கைதேர்ந்தவர். அது ஆளவந்தார் அவருக்கு அளித்த வரம்.'கோவிந்தா, ராமன் பிறப்பின் சாரம் உனக்குச் சரியாகப் புரிந்துவிட்டால் நீ நான்கு வேதங்களையும் கணப்பொழுதில் புரிந்து கொண்டுவிட முடியும். தத்துவங்களின் உச்சம் என்பது ராமாவ
தாரம். புரிகிறதா?'செய்தி மீண்டும் திருவரங்கத்தை எட்டியது. முதலியாண்டான் ராமானுஜரை அணுகி, கோவிந்தனுக்கு ராமாயணப் பாடம் ஆரம்
பிக்கப்பட்ட விவரத்தைச் சொல்ல, 'அப்படியா? மிக்க மகிழ்ச்சி. 'உடனே கூரேசனை ஊருக்கு அனுப்பி, அவனது பத்தினியோடு இங்கே திரும்பி வரச் சொல்!' என்றார் ராமானுஜர். முதலியாண்டானுக்குப் புரியவில்லை. தன்னைத் தேடிக் கிளம்பிய தம்பியைத் திருவரங்கத்துக்கு இப்போது வரவேண்டாம் என்று சொல்லித் தடுத்தவர், கூடவே இருக்கும் கூரத்தாழ்வானை எதற்கு இப்போது ஊருக்குத் துரத்துகிறார்?கூரத்தாழ்வானே சற்றுத் தயங்கத்
தான் செய்தான். 'அத்தனை அவசரமில்லை ஆசாரியரே. நான் உங்களுடன் இருக்கவே விரும்புகிறேன்.''தவறு கூரேசா! நீ திருமணமானவன். உன் மனைவியை அங்கு தனியே விட்டுவிட்டு இங்கு நீ எந்த தருமத்தையும் காக்க இயலாது. மட்டுமல்ல. உனது தவம் எத்தனை சிறப்பானதென்றாலும், அது பூரணமடைவது உன் மனைவியால்தான்.'வேறு வழியின்றி கூரத்தாழ்வான் காஞ்சிக்குப் புறப்பட்டான். பழைய கூரேசன் என்றால் பல்லக்கில்தான்
போவான். பல்லக்குத் துாக்கிகள் தவிர, சேவகத்துக்கென ஒரு படையே பின்னால் வரும். இப்போது அதெல்லாம் இல்லை. அனைத்தும் உதிர்ந்த நினைவுகள். அந்தக் கூரேசன் வேறு. அவனது ஆகிருதி வேறு. ஊரில் அவனுக்கு இருந்த பேரும் மரியாதைகளும் வேறு.முதலியாண்டான் அடிக்கடிக் கேட்பான். 'எப்படி விட முடிந்தது? எப்படி உதற முடிந்தது? ஒன்றுமில்லாதவர்கள் உஞ்சவிருத்திக்குப் போவது பெரிய விஷயமல்ல. நீங்கள் ராஜ வாழ்க்கை வாழ்ந்த மனிதர். ஒரு கணத்தில் உதறித் தள்ள எப்படி சாத்தியமானது கூரேசரே?'கூரேசன் புன்னகை செய்வான். ஒரு சம்பவம் நடந்தது. அதை எப்படி அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருக்க முடியும்? கேட்பவருக்கு ஆஹாவென வாய் பிளக்கத் தோன்றினாலும் அவனைப் பொறுத்தவரை அது அவமானகரமான விஷயம். முதலியாண்டான் துருவித் துருவிக் கேட்டபோது வேறு வழியின்றி சொன்னான்.கூரேசன் பிறவிப் பணக்காரன். கூரத்தில் இருந்து காஞ்சியைத் தாண்டி நெடுந்தொலைவுக்கு அவனது புகழ் பரவியிருந்த நேரம் அது.

'பணத்தோடு சேர்த்துக் குணம் படைத்த பெரிய மனிதர். எப்படி அள்ளி அள்ளிக் கொடுக்கிறார் இந்த மகாத்மா! யாருக்கு இந்த மனம் வரும்!' என்று வியக்காத வாயில்லை. தனது மாளிகைக்கு அருகே ஓர் அன்ன சத்திரத்தை நிறுவி, நாளும் பொழுதும் பசித்து வருவோருக்குப் பந்தி பரிமாறி மகிழும் சுபாவம் அவனுக்கு. பரம பக்திமான். தனது சொத்து முழுதும் தான தருமங்களுக்குத்தான் என்பதில் நெல்லளவு மாற்றுச் சிந்தனையும் அவனுக்கு இருந்ததில்லை.சொல்லி வைத்த மாதிரி அவனுக்கு வாய்த்த மனைவியும் அதே குணம் கொண்டவளாக இருந்தாள். ஆண்டாள். ஆ, எப்பேர்ப்பட்ட பேரழகி! ஆனால், விதி அவளுக்கு ஜாதகக் கட்டங்களில் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.'ஐயா உமது மகளை யார் திருமணம் செய்து கொண்டாலும் அவருக்கு உடனடி மரணம் நிச்சயம்' என்று சோதிடர்கள் சொல்லிவிட்டுப் போயிருந்தார்கள். கூரேசனுக்கு அது வியப்பாக இருந்தது. வாழ்வையும் மரணத்தையும் தீர்மானிப்பது பரமாத்மா அல்லவா? சோதிடர்களுக்கு அச்சக்தி உண்டென்றால் பரந்தாமன் எதற்கு? 'சரி, உங்கள் மகளை நான் மணந்து கொள்கிறேன்' என்று ஆண்டாளின் தந்தையிடம் போய்ச் சொன்னான். 'நீங்கள் பெருங்கோடீஸ் வரர். ஊரறிந்த உபகாரி. அப்பழுக்கற்ற பக்திமான். ஆனால் ஐயா, என் மகளை நீங்கள் மணந்தால் உங்கள் வாழ்க்கை முடிந்து விடுமே?''அதையும் பார்க்கிறேன்' என்று சொல்லித்தான் அவன் ஆண்டாளைக்
கைப்பிடித்திருந்தான். 'ஆண்டாள்! மனித வாழ்க்கை மிகவும் சிறியது. தவிரவும் அற்பமானது. கண்மூடித் திறக்கும் நேரத்தில் பிறவி முடிந்துவிடும். வாழும் கணங்கள் ஒவ்வொன்றிலும் நாம் அடுத்தவருக்குப் பயன்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை.' என்றான் கூரேசன். 'பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் நாலு இலையை எடுத்துப் போடலாமே? வெளியே பசியோடு பலபேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றாள் ஆண்டாள்.
அப்படி ஒரு மனைவி இன்னொருத்தருக்கு வாய்க்க மாட்டாள். இருவருக்கும் பேரருளாளனை விஞ்சிய தெய்வம் இல்லை. ராமானுஜரை விஞ்சிய ஆசாரியர் இல்லை.

'நாம் அவரை அண்டித் தாள்பணிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது ஆண்டாள். நம் ஊருக்கு இத்தனை பக்கத்தில் ஞானச்சுடரொளி தகித்துக் கொண்டிருக்கிறபோது நாம் அர்த்தமே இல்லாமல் இங்கு தினங்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.' 'ஏன் வீணடிக்க வேண்டும்? கிளம்பிவிட வேண்டியதுதானே?' 'கிளம்பலாம்தான். ஆனால் இருக்கிற சொத்துபத்தையெல்லாம் அத்தனை சீக்கிரம் தானம் செய்து விட முடியாது போலிருக்கிறதே.'
'பொறுப்பை என்னிடம் விடுங்கள்' என்றாள் ஆண்டாள். அன்று முதல் கூரேசனின் இல்லம் ஒரு தானத் திருமாளிகையானது. போகிற
வருகிறவர்களையெல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்தார்கள். இரு கரம் ஏந்தி அளிக்கையில் சிந்தும் சத்தம் இருபது காத துாரம் வரை கேட்டது. பொன்னும் மணியும் ரத்தினங்களும் வைர வைடூரி யங்களும், கல்லும் மண்ணுமெனத் தோன்றியது அவர்களுக்கு! ஊரே மூச்சடைத்து நின்றது. என்ன ஆகிவிட்டது கூரேசனுக்கு? நுாற்றாண்டு கால சொத்து சுகங்களை எதற்காக இப்படிக் கண்மூடித்தனமாக அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்?
பதில் சொல்லிக் கொண்டிருக்கக்கூட அவகாசமில்லாமல் இருவரும் காரியத்தில் கண்ணாக இருந்தார்கள்.அப்போது அது நடந்தது.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com

- பா.ராகவன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X