இளைஞர்களுக்கு காத்திருக்குது இன்னும் பல பணிகள்!

Added : பிப் 04, 2017 | கருத்துகள் (3)
Share
Advertisement
   இளைஞர்களுக்கு காத்திருக்குது இன்னும் பல பணிகள்!


முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், 'இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது; அவர்களின் சக்தியால் தான், நாடு வல்லரசாகும்' என, உறுதியாக தெரிவித்து வந்தார். அவரது அறிவுரைகள், எந்த அளவுக்கு மாணவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது, தெரியாமலே இருந்தது.
இந்நேரத்தில் வந்த ஜல்லிக்கட்டு பிரச்னை, இளைஞர்களை ஒற்றுமைப்படுத்தியது. உணர்ச்சி உந்துதலால் ஏற்பட்ட வழக்கமான குரல் தான் என, பலரும் எண்ணியிருந்த நிலையில், மற்றொரு, 'வர்தா' புயலாக சென்னையில் மையம் கொண்டது.
தேசப்பிதா, மஹாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை நினைவுகூரும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், ஐந்து நாட்கள், இரவு, பகலாக இடைவேளை இன்றி நடந்துள்ளது, இளைஞர்களின் போராட்டம்.
பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்க வேண்டும் என, மஹாத்மா எண்ணினாரோ, அதை நினைவூட்டும் வகையில், சிறு அசம்பாவிதமும் இல்லாமல், பொதுமக்கள், காவல் துறைக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இளைஞர் பட்டாளம் நடத்திக் காட்டியது.
இளைஞர்கள் பொறுப்பற்றவர்கள், சிறப்பாக முடிவெடுக்க தெரியாதவர்கள், உணர்ச்சி மயமானவர்கள், நன்னடத்தை குறைபாடு கொண்டவர்கள், தலைமை பொறுப்புக்கு தகுதி அற்றவர்கள் போன்ற, பல கோட்பாடுகள் தகர்க்கப்பட்டுள்ளன.
பிரியாணி பொட்டலம், மது, போக்குவரத்து படி, வாகன ஏற்பாடு செய்து கூட்டம் கூட்டும் அரசியல் கட்சியினரை, மக்கள் செல்வாக்கு தங்களுக்கு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து, இளைஞர்கள் போராட்டம் சுய சிந்தனை செய்ய வைத்துள்ளது.
போஸ்டர், பத்திரிகை, ஊடக விளம்பரம், எதுவுமே இல்லாமல் லட்சக்கணக்கில் திரண்டனர். அதற்கு காரணம், நவீன தொழில்நுட்பத்தின் வெளிப்பாடு. தங்கள் கைகளில் உள்ள, மொபைல் போன் செயலிகளை சிறப்பாக செயல்படுத்திய இளைஞர்கள், வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் தேவையான நேரத்தில், தேவையானவற்றை சிறப்பாக பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள் என்பதும் தெளிவாகியுள்ளது.
இளைஞர்கள் நினைத்தால், ஆண், பெண், மூத்தோர் உட்பட, அனைவரையும் ஒருங்கிணைத்து, நற்செயல்களில் ஈடுபடுத்த முடியும் என நிரூபித்து, கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்றை நடத்திக் காண்பித்துள்ளனர்.
இத்தகைய மகத்தான இளைஞர் சக்தி, இந்தியாவின், குறிப்பாக, தமிழகத்தின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பயன்பட வேண்டும் அல்லது பயன்பட முடியும் என்பதை பார்ப்போம்.
இந்த நாட்டின் சட்ட, திட்டங்கள் ஒரு நல்ல, நேர்மையான அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பதற்கு எந்த வகையிலும் உதவிகரமாக இல்லை. வேட்பாளர் சரியில்லாதவர் என்றால், அவரை நிராகரித்து அல்லது எதிர் ஓட்டளித்து தகுதி நீக்கம் செய்ய வழியில்லை. அதை விட, போட்டியிடும் வேட்பாளர் எவருமே தகுதி இல்லாதவர் என, வாக்காளர்கள் முடிவு செய்து, 'நோட்டா' ஓட்டுகளை, 90 சதவீதம் அளித்தாலும், அதிக ஓட்டு பெற்றவரையே, வெற்றி பெற்றவராக தேர்தல் கமிஷன் அறிவிக்குமாம். இது, என்ன நீதி என்றே தெரியவில்லை.
இப்படிப்பட்ட நிலையில், சிறந்த, நேர்மையான, நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய வழி உள்ளது. அப்பணியை, இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டும். அதை, கிராம அளவிலிருந்து துவங்க வேண்டும். அதற்கு தகுந்த சந்தர்ப்பம், வெகு அருகிலேயே உள்ளது. ஆம்... உள்ளாட்சித் தேர்தல், விரைவில் வரவுள்ளது.
வார்டுகளில் குழுக்கள் அமைத்து, இளைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், உள்ளாட்சி அமைப்பில், வார்டு உறுப்பினர் முதல், மாவட்டத் தலைவர் வரை, சிறந்தவர்களை தேர்வு செய்ய முடியும்.
ஜாதி, மதங்களை விட்டு வெளியே வருவதிலும், சிறந்த உறுப்பினர்களை நேர்மையாக தேர்வு செய்ய, மக்களை பண்படுத்தவும், இளைஞர்களால் நிச்சயமாக முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர், இளைஞர்கள்.
இதை, உள்ளாட்சி தேர்தலில் நடத்தி காட்டி விட்டால், அரசியல்வாதிகளும், தங்கள் போக்கை மாற்றி, சிறந்த மக்கள் பணியாளர்களை களத்திற்கு அனுப்புவர். தேவை என்றால், இளைஞர் குழு கூடித் தேர்ந்தெடுக்கும், ஒரு நல்ல வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடியும். இன்றைய தொழில்நுட்பம் உங்களுக்கு நன்றாகவே கைகொடுத்துள்ளது.
மேலும், கிராம அளவில், விவசாயிகள் மட்டுமின்றி அனைவரையும் ஒருங்கிணைத்து, மறந்து போன, 'குடி மராமத்து' பணிகளை மீட்டெடுக்க வேண்டும். நம் வீட்டுத் தோட்டத்தை, நாமே சுத்தம் செய்வது போல, நம் கிராமத்தை, நாமே சரி செய்ய வேண்டும்.
என் பள்ளிப் பருவத்தில், குடி மராமத்து பணியில், என்னால் முடிந்த அளவுக்கு செய்த வேலைகள், இன்றும் நினைவில் இனிக்கிறது. நாமே செய்யும் போது தான், பணிகள் தரமாகவும் இருக்கும்.
கிராமங்களின் நீர் நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மக்களை தயார் செய்து விட்டால் போதும்; வேலைகள் தானாக நடக்கும். பல கிராமங்களை ஒருங்கிணைத்து, முறைபடுத்திக் கொண்டால், வேலை செய்ய தவறும் அதிகாரிகளை இழுத்து வந்து, வேலை செய்ய வைக்க முடியும். பலனளிக்காத திட்டங்களை நிறைவேற்ற துடிப்பவர்களை நேர்மைப் படுத்த இயலும். தக்க ஆலோசனைகளை பகுதி மக்களிடமிருந்தும், தகவல் தொழில்நுட்ப குழுக்கள் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
மது அருந்துபவர்களின் ஆதரவில் தான், அரசு வருவாயைப் பெருக்குகிறது. அப்பணம், மக்கள் முன்னேற்றத்துக்கு பயன்பட்டால் கூட, ஓரளவு ஆறுதல் பட்டுக்கொள்ளலாம். மதுவின் கெடுதலை புரிய வைக்க, மதுபிரியர்களின் அருகிலேயே, எப்போதும் இருப்பவர்களால் தான் முடியும். அந்த பணியை, அந்தப் புரட்சியை இளைஞர்கள் செய்ய முடியும்.
நமக்கு அருகில் இருக்கும்
அன்னியர்கள், சந்தேகத்திற்கிடமானவர்களின் செயல்பாடுகளை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்புக்கு உறுதுணையாக இருங்கள். முந்தைய காலத்தில், 'அன்னியர் வருகை பதிவேடு' என்ற புத்தகம், கிராம மணியக்காரரிடம் இருக்கும். வெளியாட்கள் யார் வந்தாலும், அவர்கள் யார் வீட்டுக்கு, எதற்காக, எப்போது வந்தனர், என்ன செய்தனர் போன்ற விபரங்களை, அதில் பதிவு செய்து, அதிகாரிகளுக்கு தெரிவித்து விடுவர். பின்னாளில், தவறு ஏதும் நடந்தால் உடனடியாக துப்பறிந்து விடுவர்.
இதனால், குற்றங்கள் தடுக்கப்பட்டன. அந்நிலை மீண்டும்
வர உதவுங்கள்.
கிராமப்புற, நகர்ப்புற இளைஞர்களிடம் இருக்கும் தொடர்பு வாயிலாக, வேலைவாய்ப்பு, கல்வி, வளர்ச்சி மற்றும் பிற உதவிகளை தேவையானவர்களுக்கு செய்து கொடுங்கள். லஞ்சம், ஊழலை எதிர்க்க, உங்களின் தொழில்நுட்பத்துடன் களம் இறங்குங்கள்.
இவை எல்லாவற்றிலும் கவனம் செலுத்தும் வேளையில், உங்களின் உடல் நலம், வருமானம், குடும்பத்தினரின் அன்பு ஆகியவற்றை, மறவாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய தொழில்நுட்ப பலன்களை இப்போது தான் அறிந்து கொண்டுள்ளோம். இதைக் கண்டு, நம் இளமைக் காலத்தில் இப்படி இல்லாமல் போய் விட்டதே என, ஏங்கும் நிலையில் உள்ளவர்கள் ஏராளம்.
கானல் நீராகிப் போன, நாட்டின் சிறந்த எதிர்காலத்தை, நேற்றைய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம், இன்றைய இளைஞர்கள் மீட்டெடுப்பர் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கின்றனர்.
அப்துல் கலாம் கண்ட, '2020ல் இந்தியா வல்லரசு' என்ற கனவு, எங்கள் காலத்தில் நனவாகும் என்ற நம்பிக்கை, தற்போது ஏற்பட்டுள்ளது. உங்கள் சேவை நல்ல வழிகளில் தொடரட்டும்.
இ- மெயில்:
pasupathilingam@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k.vijayalakshmi - cuddalore,இந்தியா
08-பிப்-201708:19:13 IST Report Abuse
k.vijayalakshmi இந்த கட்டுரையின் பதிவுகளின் நோக்கம் மற்றும் அதன் அவசியம் இரண்டு தினங்கள் சென்று தான் தெளிவாகிறது. ஆம் நல்ல ஆட்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் இன்று காலை செய்தி படித்தவுடன் புரிந்தது. இளைஞர்கள் செயல் பட வேண்டிய நேரமிது என்று கருதுகிறேன். அதனாலாயே தாமதமாக கருத்து தெரிவிக்க நேர்ந்துள்ளது.
Rate this:
Soosaa - CHENNAI,இந்தியா
10-பிப்-201713:47:01 IST Report Abuse
Soosaaஅப்படி செயல் படக்கூடாதுன்னு தான் ரொம்ப ஜாக்கிரதையாக கடைசி நாள் செய்து விட்டார்கள்.....
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
05-பிப்-201708:30:21 IST Report Abuse
spr சிறப்பான கருத்துக்கள் பாராட்டுகள் இவையனைத்தையும் எல்லோரும் செயல்படுத்த வேண்டும் ஆனால் "இளைஞர்கள் நினைத்தால், ஆண், பெண், மூத்தோர் உட்பட, அனைவரையும் ஒருங்கிணைத்து, நற்செயல்களில் ஈடுபடுத்த முடியும் என நிரூபித்து, கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்றை நடத்திக் காண்பித்துள்ளனர் அதில் சிலர் மாணவர்கள் என்பதுதான் உண்மை". எனவே எல்லோரும் சும்மாவேனும் மாணவர்கள் மாணவர்கள் என்று சொல்லி அவர்களைக் கொம்பு சீவிவிடவேண்டாம் அவரவர் சொந்தப பிரச்சினைக்கு கூட மாணவர்களை போராட அழைக்கும் நிலை மாறட்டும். இன்னமும் சென்னையில் சில கல்லூரிகள் இருக்கும் தெருவில், பயணப்படும் பேருந்துகளில், சாலையோரங்களில், அன்றாடம் பயணிக்கும் மக்கள் முகம் சுளிக்கும்படி கொச்சை வார்த்தைகளை பேசி பெண்களை இழிவுபடுத்தும் பல மாணவர்களை (குறிப்பாக இளைஞர்களை) பார்க்கையில் மாணவர் சமுதாயம் வெகுவாக மாற வேண்டும் என்றேதான் தோன்றுகிறது அவர்கள் முதலில் தங்கள் படிப்பை வெற்றிகரமாக முடிக்கட்டும் அதுதான் அவர்களை சமுதாயத்தில் ஒரு பொறுப்புள்ள நபராக உயர்த்தும் முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், கூட 'இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் உள்ளது அவர்களின் சக்தியால் தான், நாடு வல்லரசாகும்' என, உறுதியாக தெரிவித்து வந்தார் எனவே உங்கள் கோரிக்கை பொதுவாக "இளைஞர்களுக்கு" என்பதாக இருக்கட்டும் மாணவர்களை திசை திருப்ப வேண்டாம் வாழ்த்துகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X