திருக்குருகைப் பிரான்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

திருக்குருகைப் பிரான்

Added : பிப் 06, 2017
Share
அன்று விடிகாலை திருவரங்கத்தில் இருந்து புறப்பட்ட ராமானுஜரின் பரிவாரம் ஒரு முழுப்பகல், முழு இரவு பயணம் செய்து மறுநாள் விடியும் நேரம் திருக்கோட்டியூரைச் சென்றடைந்தது. இடையே ஓரிடத்திலும் ராமானுஜர் தங்கவில்லை. உணவைத் தவிர்த்தார். ஆசாரியரைச் சந்திக்கப் போகிற பரவசமே அவருக்கு உற்சாகமளித்தது.'மகாபுருஷர்கள் வாழ்கிற காலத்தில் வாழ நாம் அருளப்பட்டிருக்கிறோம். இந்த
திருக்குருகைப் பிரான் Ramanujar Download

அன்று விடிகாலை திருவரங்கத்தில் இருந்து புறப்பட்ட ராமானுஜரின் பரிவாரம் ஒரு முழுப்பகல், முழு இரவு பயணம் செய்து மறுநாள் விடியும் நேரம் திருக்கோட்டியூரைச் சென்றடைந்தது. இடையே ஓரிடத்திலும் ராமானுஜர் தங்கவில்லை. உணவைத் தவிர்த்தார். ஆசாரியரைச் சந்திக்கப் போகிற பரவசமே அவருக்கு உற்சாகமளித்தது.

'மகாபுருஷர்கள் வாழ்கிற காலத்தில் வாழ நாம் அருளப்பட்டிருக்கிறோம். இந்த வாய்ப்பை நல்ல விதமாகப் பயன்படுத்தாமல் விட்டால் அது பெரும் பிழையாகிவிடும். மக்கள் நம்மை நம்பி வந்து காலட்சேபம் கேட்கிறார்கள். தருமம் அறிய விழைகிறார்கள். கருணாமூர்த்தியான எம்பெருமானின் பாதாரவிந்தங்களைத் தரிசிக்க வழி காட்டுவோம் என்று மனப்பூர்வமாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு நாம் பாத்திரமாவது அனைத்திலும் தலையாயது' என்றார் ராமானுஜர்.
'சரியாகச் சொன்னீர் ஆசாரியரே! எனக்குக் கிட்டிய வாய்ப்பை நான் தவறவிடவில்லை. எப்படியோ உம்மைச் சேர்ந்து விட்டேன்!' என்றான் கூரேசன்.
'அபசாரம். நமது ஞானமென்பது புல்நுனி நீர்த்துளியின் கோடியில் ஒரு பங்கு. ஒரு பெரிய நம்பியின் உயரத்தை நம்மால் அண்ணாந்து பார்க்க முடியுமா! அவரே வியக்கும் திருக்கோட்டியூர் நம்பியின் ஆளுமை எப்பேர்ப்பட்டதாக இருக்கும்! இவர்களுக்கெல்லாம் பரம ஆசாரியராக விளங்கிய ஆளவந்தாரின் அறிவு விஸ்தீரணம் எண்ணிப் பார்க்கவும் இயலாத ஒன்றாக அல்லவா இருக்கும்!'
'இருக்கலாம். ஆனால் ஆளவந்தாரே தமக்குப் பிறகு உம்மையல்லவா தம் இடத்துக்கு மனத்துக்குள் வரித்திருக்கிறார்?' என்றான் முதலியாண்டான்.
'பதவி சுகமானதல்ல முதலியாண்டான்! அதுதான் பயத்தைத் தருவது. பொறுப்பை உணர்த்துவது. வாழ்நாளுக்குள் நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டியதன் இன்றியமையாமையை எப்போதும் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருப்பது. தயவுசெய்து என்னைப் பெரிதாக எண்ணாதீர்கள். ஆசாரியரைத் தவிர வேறு சிந்தனையே வேண்டாம்!'
ஆனால் அவர்களால் தமது ஆசாரியரைத் தவிர வேறு யாரையும் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
வழி முழுதும் ராமானுஜர் திருக்குருகைப் பிரான் என்னும் திருக்கோட்டியூர் நம்பியைப் பற்றியும் திருக்கோட்டியூரைப் பற்றியுமே பேசிக்கொண்டு வந்தார்.
'முதலியாண்டான்! திருக்கோட்டியூருக்குப் பெயர்க்காரணம் தெரியுமோ உனக்கு?'
'இல்லை சுவாமி. கோஷ்டி என்றால்...'
'இது சுத்தமான தமிழ்ப் பெயர் கொண்ட திவ்யதேசம். திருக்கு என்றால் பாவம். திருக்கை ஓட்டுகிற ஊர் இது. பாவம் தொலைக்கும் புண்ணிய பூமி. பேயாழ்வார் இந்த ஊருக்கு வந்திருக்கிறார். சௌமிய நாராயணப் பெருமாளை அவர் பாடியிருக்கிறார். பூதத்தாரும் வந்திருக்கிறார். பெரியாழ்வார் பாடியிருக்கிறார். மங்கை மன்னன், திருமழிசைப்பிரான் என ஐந்து ஆழ்வார்களால் பாடப்பெற்ற தலம் அது.'
பெரிய நம்பி மூலம் தானறிந்த அனைத்து விவரங்களையும் தமது சீடர்களுக்குச் சொல்லிக்கொண்டே வந்தார். ஊர் எல்லையை அடைந்ததும் பரபரப்பானார். பேச்சு நின்றுவிட்டது. கண்மூடிக் கரம் குவித்தார். மானசீகத்தில் அரங்கனை வேண்டிக்கொண்டு, குளத்தில் குளித்தெழுந்து கோயிலுக்குச் சென்று சேவித்துவிட்டு வந்தார்.
'சரி. நீங்கள் அனைவரும் இங்கே இருங்கள். நான் சென்று ஆசாரியரை தரிசித்துவிட்டு வருகிறேன். அவர் அனுமதியோடு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்' என்று சொல்லிவிட்டு நம்பிகளின் இல்லம் இருக்கும் இடத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு, அத்திக்கு நோக்கி விழுந்து வணங்கினார். அப்படியே தண்டனிட்டுக்கொண்டே போகத் தொடங்கினார்.
ராமானுஜரின் உடன் வந்திருந்த குழுவினருக்கு ஒரே வியப்பாகிப் போனது. எம்மாதிரியான ஆசார்ய பக்தி இது! இந்தப் பணிவல்லவா இவரது உயரத்தை வகுத்தளித்திருக்கிறது! ஆளவந்தார் மிகச் சரியாகத்தான் கணித்திருக்கிறார் என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள்.
தண்டனிட்டபடியே குருகைப்பிரான் இல்லத்தை அடைந்த ராமானுஜர், ஆசாரியரின் அனுக்கிரகத்துக்காகக் காத்திருந்தார். உள்ளிருந்து வந்து விசாரித்துச் சென்ற நம்பியின் சீடர்கள் அவரிடம் சென்று ராமானுஜர் வந்திருக்கும் விவரத்தைச் சொன்னதும், 'வரச் சொல்' என்றார். ராமானுஜர் வீட்டுக்குள் சென்றார்.
ஆசாரியரைக் கண்டதும் சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்து, பணிவும் பவ்யமுமாகப் பேசத் தொடங்கினார்.
'அடியேன் ராமானுஜன். திருவரங்கத்தில் பெரிய நம்பி வழிகாட்டி, தங்களைத் தேடி வந்திருக்கிறேன். பரம ஆசாரியரான ஆளவந்தாரின் பிரிய சீடரான தாங்கள், எனக்கு ரகஸ்யார்த்தங்களை போதித்து அருள வேண்டும்!'
திருக்கோட்டியூர் நம்பி, ராமானுஜரை உற்றுப் பார்த்தார்.
'காஞ்சியில் திருக்கச்சி நம்பி நலமாக இருக்கிறாரா?'
'பேரருளாளன் நிழலில் வசிப்பவர் அவர். அவரால்தான் காஞ்சிக்குப் பெருமை. அடியேன் திருவரங்கம் வந்து சேர்ந்த பிறகு அவரை தரிசிக்க இன்னும் வாய்க்கவில்லை.'
'ஓஹோ. அரங்கத்தில் பெரிய நம்பி நலமா? அரையர் சுகமாக உள்ளாரா?'
'பகவத் கிருபையால் அனைவரும் நலமாக உள்ளார்கள். அடியேன் பெரிய நம்பியிடம்தான் தற்சமயம் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். த்வய மந்திரத்தின் உட்பொருளை போதித்துக் கொண்டிருந்தபோதுதான் சுவாமிகள் தங்களைப் பற்றி எடுத்துச் சொன்னார். எனக்கு ரகஸ்யார்த்தங்களைத் தாங்கள்...'
'போய்விட்டுப் பிறகொரு சமயம் வாருங்கள்!' என்று சொல்லிவிட்டு திருக்குருகைப் பிரான் எழுந்து விட்டார்.
ராமானுஜர் திடுக்கிட்டுப் போனார். 'சுவாமி, அடியேன்..'
'பிறகு வாருங்கள் என்றேன்' என்று சொல்லிவிட்டு உள்ளே போனவர் என்ன நினைத்தாரோ, மீண்டும் ஒருதரம் சட்டென்று வெளியே வந்தார்.
'ஓய் ராமானுஜரே! மோட்சத்தில் ஆசையுடைய ஜீவன் வாழ்க்கையில் ஆசை துறக்க வேணும். புரிகிறதா?' என்று கேட்டுவிட்டு சட்டென்று உள்ளே போய்விட்டார்.
ராமானுஜர் மிகவும் குழப்பமானார். ஆசாரியர் இப்படித் தன்னை முற்றிலும் ஒதுக்கக் காரணம் என்னவாக இருக்கும்? புரியவில்லை. சரி, பிறகொரு சமயம் வரச் சொல்லியிருக்கிறாரல்லவா? அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டார்.
ஆனால், மறுமுறை அவர் திருக்கோட்டியூருக்கு வந்தபோதும் நம்பி மசியவில்லை. இப்போதும் அதே பதில். போய்விட்டுப் பிறகு வாரும்.
இம்முறை விடைதரும்போது முந்தைய வருகையின்போது கடைசியாகச் சொன்ன வரியின் தொடர்ச்சியே போல் மற்றொரு வரியைச் சொன்னார்.
'ஆசையைத் துறந்தால்தான் அகங்காரம் ஒழியும். மமகாரம் நீங்கும்.'
ராமானுஜர் மூன்றாவது முறை சென்றபோது, 'அகங்கார மமகாரங்கள் ஒழியாவிட்டால் உடலாசை ஒழியாது!' என்றார்.
திருவரங்கத்துக்கும், திருக்கோட்டியூருக்குமாக ராமானுஜர் பதினெட்டு முறை நடக்க வேண்டியிருந்தது. அவர் சளைக்கவேயில்லை. எப்படியாவது நம்பியின் அருட்பார்வை தன்மீது பட்டுவிடாதா, தன்னை ஏற்றுக்கொண்டு அருள்பாலிக்க மாட்டாரா என்ற எண்ணம் தவிர வேறில்லை அவருக்கு. ஆனால் ஒவ்வொரு முறை சென்றபோதும் ஒருவரி போதனை கிடைத்ததே தவிர, அவர் தேடி வந்த ரகஸ்யார்த்தப் பேழையை நம்பி திறந்தபாடில்லை.
ராமானுஜர் துவண்டு போனார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X