சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

ஓம் நமோ நாராயணாய!

Added : பிப் 07, 2017
Share
Advertisement
கொதித்துப் போய்விட்டார் குருகைப் பிரான். 'ஓய் ராமானுஜரே! நாம் என்ன சொல்லி அனுப்பி வைத்தோம், நீர் எப்படி வந்து நிற்கிறீர்? இதுதான் நீங்கள் ஆசாரியர் சொல் கேட்கிற லட்சணமா? உம்மைப் பெரிய ஞானஸ்தன் என்று ஊரே கொண்டாடுகிறது. போதாக்குறைக்கு உமக்குத் திருமந்திர உபதேசம் செய்யும்படி அரங்கனே வேறு சிபாரிசு செய்கிறான். குருவின் ஒரு சொல்லைக் காக்க உம்மால் முடியாதபோது அத்தனை
ஓம் நமோ நாராயணாய! Ramanujar Download

கொதித்துப் போய்விட்டார் குருகைப் பிரான். 'ஓய் ராமானுஜரே! நாம் என்ன சொல்லி அனுப்பி வைத்தோம், நீர் எப்படி வந்து நிற்கிறீர்? இதுதான் நீங்கள் ஆசாரியர் சொல் கேட்கிற லட்சணமா? உம்மைப் பெரிய ஞானஸ்தன் என்று ஊரே கொண்டாடுகிறது. போதாக்குறைக்கு உமக்குத் திருமந்திர உபதேசம் செய்யும்படி அரங்கனே வேறு சிபாரிசு செய்கிறான். குருவின் ஒரு சொல்லைக் காக்க உம்மால் முடியாதபோது அத்தனை பெரிய ஞானப்புதையலை எப்படி எடுத்து ஏந்துவீர்?'
கோபத்தில் அவரது முகம் சிவந்து ஜொலித்தது. ராமானுஜர் அமைதியாக அவர் தாள் பணிந்து நிதானமாக பதில் சொன்னார். 'ஆசாரியரே! உங்கள் வார்த்தையை நான் மீறு வேனா? ஒருக்காலும் மாட்டேன். என்ன பிழை கண்டீர் என்று சொன்னால் உடனே திருத்திக் கொள்வேன்.''உம்மைத் தனியாக அல்லவா நான் வரச் சொல்லியனுப்பினேன்? எதற்காக இந்த இரண்டு பேரை உடன் அழைத்து வந்திருக்கிறீர்?'முதலியாண்டானுக்கும் கூரத்தாழ்வானுக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. இது என்ன கஷ்டம்! பதினெட்டு முறை நடையாய் நடந்து ஆசாரிய அனுக்கிரகம் கிட்டுகிற நேரத்தில் தம்மால் அதற்குத் தடையா? பேசாமல் வெளியே போய்விடலாமா? அவர்கள் ராமானுஜரைப் பார்த்த கணத்தில் அவர் அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு குருகைப் பிரானை நோக்கினார். 'சுவாமி, நீங்கள் என்னைத் தனியாகத்தான் வரச் சொல்லியிருந்தீர்கள். ஆனால், தண்டும் பவித்திரமுமாகத் தனியே வரவும் என்றல்லவா உமது சீடர் என்னிடம் சொன்னார்?''ஆம், சொன்னேன். அதிலென்ன?''இந்த முதலியாண்டான் எனது தண்டு. கூரேசனே பவித்திரம்!' என்று இருவரையும் முன்னால் அழைத்து அவரது தாள் பணியச் செய்தார்.
திகைத்து விட்டார் குருகைப் பிரான்.'என்னது? இவர் தண்டு, அவர் பவித்திரமா?''ஆம் சுவாமி. அனைத்தையும் துறந்து நான் சன்னியாசம் பெற்ற போதுகூட தாசரதியைத் தவிர உள்ள மற்றனைத்தையும்தான் துறந்தேன். இது என் மனத்துக்கும் எம்பெருமான் திருவுள்ளத்துக்கும் தெரியும். இன்று தங்கள் முன் அந்த ரகசியத்தை வெளிப்படுத்துகிறேன். முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் வைணவம் தழைக்கத் தம்மை அர்ப்பணித்தவர்கள். திருத்தொண்டு தவிர இன்னொரு சிந்தையில்லாதவர்கள். எனது திரிதண்டமும் பவித்திரமும் இவர்களே ஆவர். எனவே, தாங்கள் எனக்கு போதிக்கும் ரகஸ்யார்த்தங்களை இவர்களுக்கும் சேர்த்து அருள வேண்டும்!'குருகைப் பிரானுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ராமானுஜர் தமது இரு சீடர்களைப் பற்றி ஆதியோடு அந்தமாக அவருக்கு எடுத்துச் சொன்னார். முதலியாண்டானின் ஆசாரிய பக்தி. தவத்தில் அவனுக்கிருந்த தீவிரம். பற்றற்ற பான்மை. கோடானுகோடி ஜன சமூகத்தையும் தன் சொந்தமாக எண்ணுகிற பெருந்துறவு மனம். பிறகு கூரேசனின் தியாகம். எப்பேர்ப்பட்ட செல்வந்தன் அவன்! அனைத்தையும் கணப்பொழுதில் விசிறியடித்துவிட்டுத் திருமால் சேவைக்கு ஓடி வந்தவன். 'ஆசாரியரே! தகுதியற்ற இருவரைத் தங்கள் முன் நான் கொண்டு வந்து நிறுத்துவேனா? எத்தனைப் பிரயத்தனப்பட்டு எனக்கு இந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது? இதை இழக்க விரும்புவேனா? தங்கள் மூலம் இவர்கள் திருமந்திரப் பொருள் அறிந்தால் அது தொண்டர் குலம் பெறும் பேறாகும். தங்களைத் தவிர வேறு யாரால் இதனை வாழ்விக்க இயலும்?' நெடுநேரம் அவர் யோசித்தார். பிறகு என்ன நினைத்தாரோ? 'சரி, போகிறது. தண்டும் பவித்திரமுமாக வரச் சொன்னது நான்தான். நீர் இவர்களே உமது தண்டும் பவித்திரமும் என்று சொல்லிவிட்டீர். இனி பேச்சில்லை. ஆனால் ஒன்று. உம்மைத் தாண்டி இந்த ரகஸ்யார்த்தங்கள் வேறு யாருக்கும் போய்ச் சேரக்கூடாது.''ஆகட்டும் சுவாமி.''உயிர் பிரியும் காலம் நெருங்கும்போது தக்க பாத்திரம் ஒன்றைக் கண்டடைந்தால் அங்கு சொல்லி வைக்கலாம். அதற்குமுன் திருமந்திரப் பொருளை வெளியிட்டால் உமக்கு நல்ல கதி கிட்டாது.'
'தங்கள் சித்தம்.''இப்படி வந்து அமரும்.'ராமானுஜர் பணிவும் பக்தியுமாகத் திருக்குருகைப் பிரான் எதிரே சென்று சேவித்து அமர்ந்தார். நம்பிகள் தொடங்கினார்.ஓம் நமோ நாராயணாய. திருமந்திரம் என்பது அதுதான். அனைத்து ரகசியங்களுக்கும் மூலாதாரம் அதுதான். நான்கு வேதங்களும் அவற்றின் அங்கங்களான உபநிடதங்களும் அவற்றின் சுருக்க விளக்கங்களான பிரம்ம சூத்திரமும் கீதையும் இன்ன பிற தத்துவ ஞானத் தேடல்களின் விளைவுகள்
யாவும் சென்று சேரும் இடம் அதுவே. தன்னை அறிந்தவனால் மட்டுமே இறைவனை அறிய இயலும். பூரணமாக இறைவனை அறிந்தவனுக்கே தாம் பெறவேண்டிய பேறு எது என்பது புரியும். தெரிந்துவிட்டால் கிடைத்துவிடுமா? எத்தனைத் தடைகள், எவ்வளவு இடர்பாடுகள்! அந்த இடர்களை அறிந்து களையும்போதுதான் பால்வழிப் பாதையின் கதவு திறக்கும். பரமன் அருள் சித்திக்கும். அவனைச் சென்று சேரும் வழி புலப்படும்.
அந்த வழியைத் திறக்கும் சாவித்துவாரமே திருமந்திரம். ஓம் நமோ நாராயணாய.குருகைப் பிரான் ரகஸ்யார்த்தங்களை விளக்கத் தொடங்கியதுதான் ராமானுஜருக்குத் தெரியும். மறுகணமே அவர்தம் ஆசாரியரின் அந்தராத்மாவுக்குள் ஊடுருவிப் போனார். வெளியே நிகழும் எதுவும் தெரியாத மோன நிலை. குருவும் அவர் தரும் சொல்லும். சொல்லும் அது தரும் பொருளும். பொருளும் அது விரியும் வெளியும். வெளியும் அதன் உள்ளுறைக் கருவும்.
ஆசாரியரின் வாய் திறந்து உதிர்ந்து கொண்டிருந்த பெரும்பொருளைக் கரம் கூப்பிக் கண்மூடிய நிலையில் நெஞ்சில் ஏந்திக் கொண்டிருந்தவரின் கண்ணில் இருந்து கரகரவென நீர் வழிந்து கொண்டிருந்தது.காலம் உறைந்து மீண்டதொரு கணத்தில் அர்த்த விசேஷங்களைச் சொல்லி முடித்து, குருகைப் பிரான்
நிறுத்தினார்.ராமானுஜர் சாஷ்டாங்கமாக அவரை விழுந்து வணங்கி, 'என்ன தவம் செய்தேன் சுவாமி! இப்பிறவி அர்த்தம் கண்டது.''ஆனால் சொன்னது நினைவிருக்கட்டும் ராமானுஜரே! நீர் சரியான பாத்திரம் என்று நம்பித்தான் உம்மிடம் இதனைச் சொல்லி வைத்தேன். தப்பித்தவறிக் கூட பாத்திரம் பொத்தலாகி விடலாகாது.'தலைவணங்கி விடைபெற்று வெளியே வந்தார் ராமானுஜர்.முதலியாண்டான் ஏதோ சொல்ல வாயெடுக்க, சட்டென அவனைத் தடுத்து, 'கோயிலுக்குப் போக வேண்டும் தாசரதி! அதன்பிறகுதான் பேச்செல்லாம்.'ரகஸ்யார்த்தம் கேட்டு வந்தவர்கள் அவர்கள். ஆனால் ராமானுஜர் சொன்னதற்குள் ஒரு ரகஸ்யார்த்தம் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.

(நாளை தொடரும்...)

writerpara@gmail.com


- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X