கோபுர வாசல்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

கோபுர வாசல்

Added : பிப் 08, 2017
கோபுர வாசல் Ramanujar Download

ராமானுஜர் செய்ய உத்தேசித்திருந்தது, அவரது சீடர்களுக்குத் தெரியாது. அவர் சொல்லவில்லை. அவர்கள் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் வாசலுக்கு வந்தபோது, சேவித்துவிட்டு ஊர் திரும்பிவிடப் போகிறோம் என்றுதான் நினைத்தார்கள்.
'சுவாமி, சன்னிதிக்குச் செல்லலாமே?' என்றான் முதலியாண்டான். ராமானுஜர் யோசனையுடன் கோயிலுக்கு வெளியிலேயே நின்றிருந்தார். அது அங்கே உற்சவ நேரம். ஊர் மக்கள் நிறையப் பேர் கோயிலுக்கு வந்திருந்தார்கள். 'கூட்டமாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?' என்றான் கூரத்தாழ்வான்.ராமானுஜர் புன்னகை செய்தார். ஒன்றும் பேசாமல் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார். சீடர்களால் அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. என்ன ஆயிற்று இன்று இவருக்கு? எதற்காக இத்தனை வேகம்? வந்த காரியம் நல்லபடியாக முடிந்துவிட்டது. நிதானமாகக் கோயிலுக்குப் போய் சேவித்துவிட்டுப் போனால்தான் என்ன?ராமானுஜர் கோயிலை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தார். ஆனால் அந்த வேகம் அசாத்தியமானது.உள்ளே நுழைந்தவர் சன்னிதிக்குச் செல்லவில்லை. நேரே கோபுரத்தின் மேல் மாடத்தை அடையும் படிகள் இருக்கிற பக்கத்தை விசாரித்துக்கொண்டு அங்கே சென்றார்.
யாரையும் பார்க்கவில்லை. எது குறித்தும் கவலை கொள்ளவும் இல்லை. என்ன ஏது என்று யாரும் விசாரிப்பதற்கு முன்னர் கோபுரத்தின் மீது ஏறிவிட்டார். ஒன்றும் புரியாமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த கூரத்தாழ்வானிடம் ஊர்க்காரர் ஒருவர் கேட்டார், 'அவர் ராமானுஜர் அல்லவா? கோயிலுக்கு வந்தவருக்கு கோபுரத்தின் மீது என்ன வேலை?''தெரியவில்லை சுவாமி. எங்களுக்கும் அதே யோசனைதான்.''அதுசரி, குருகைப் பிரான் இம்முறை அவருக்கு உபதேசம் செய்து விட்டாராமே? அந்தப் பக்கம் இருந்துதான் வருகிறேன். நம்பிகள் மாளிகை வாசலில் அவரது சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.''ஆம் சுவாமி. இன்றைய தினம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. யாருக்கும் கிட்டாத மிகப்பெரும் ரகஸ்யார்த்தங்கள் இன்று எங்கள் ஆசாரியருக்குக் கிடைத்தன. எதை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ, அதை அறிய நேர்ந்தது. எது கிடைத்துவிட்டால் வேறு எதுவுமே அவசியமில்லையோ, அது கிடைத்து விட்டது. எந்த மந்திரம் நிகரற்றதோ, எந்த மந்திரம் இப்பிறப்புக்கும் மறுபிறப்பற்ற பேரானந்த நிலைக்கும் ஆதாரமோ, அந்த மந்திரம் வசப்பட்டு விட்டது.' புல்லரித்து விவரித்துக் கொண்டிருந்தான் முதலியாண்டான்.
'இதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் ஐயா. ராமானுஜர் ஆசீர்வதிக்கப்பட்டவர். இதே ஊரில் இத்தனை நுாறு பேர் வசிக்கிறோமே, எங்களையெல்லாம் குருகைப் பிரான் இதுகாறும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை என்பதை அறிவீரா?''அதுமட்டுமா... அவரிடம் சீடனாகச் சென்று சேரக்கூட எங்களுக்கு வழியில்லை சுவாமி. அவர் எந்த அடிப்படையில் தமது மாணாக்கர்களைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதே எங்களுக்குப் புரியவில்லை.' 'அப்படிச் சேருகிற சிலரைக் கூட சில காலம் வைத்திருந்துவிட்டு அனுப்பி விடுகிறார். தொடர்ந்து வாசிக்கிறவர்கள் வெகு சொற்பம்.''வேதபாடம் பயிலவே இத்தனை கெடுபிடிகள். அதற்கெல்லாம் மூலாதாரமான சத்விஷயத்தை போதிப்பதென்றால் எத்தனையெத்தனை தகுதிகள் எதிர்பார்ப்பார்!'ஒருவர்தான் ஆரம்பித்தது. வரிசையாக ஏழெட்டு உள்ளூர்க்காரர்கள் அங்கே சேர்ந்து விட்டார்கள். குருகைப் பிரானின் குணாதிசயங்களைப் பற்றியும், ராமானுஜருக்கு அவர் ரகஸ்யார்த்தம் போதித்தது பற்றியும் ஆச்சரியப்பட்டுப் பேசத் தொடங்கினார்கள்.'ஓய் ராமானுஜரே! கோபுரத்தின்மீது ஏறி நின்று என்ன செய்து கொண்டிருக்கிறீர்? கீழே வாருமய்யா. ரகஸ்யார்த்தம் அறிந்த உம்மைச் சேவித்தாவது புண்ணியம் தேடிக் கொள்கிறோம்!' கீழிருந்து ஒருவர் குரல் கொடுத்தார்.'அப்படியா விரும்புகிறீர்கள்? ஏன், நீங்களே அதன் உட்பொருளை அறியலாமே? பிறவிப் பெருங்கடலை நீந்த உமக்கொரு உபாயம் உள்ளதென்றால் வேண்டாமென்று சொல்லி விடுவீர்களோ?'திடுக்கிட்டுப் போனது கூட்டம். என்ன சொல்கிறார் இவர்? புரியவில்லையே.ராமானுஜர் பேசத் தொடங்கினார்.
'திருக்கோட்டியூர் மக்களே! திருமந்திரத்தின் உட்பொருளை அறிவதற்கு நான் பதினெட்டு முறை இந்த ஊருக்கு நடையாய் நடந்தேன். இந்தக் காலக்கட்டத்தில் தவமும் விரதங்களும் என்னை மெலிவுற வைத்தன. உடலும் உள்ளமும் வருந்தி படாதபாடுபட்டு ஒரு வழியாக ஆசாரியரின் கருணைக் கண் திறக்கப் பெற்றேன். ஆனால் இத்தனை மெனக்கெடல் அத்தனை பேருக்கும் சாத்தியமா?''நிச்சயமாக இல்லை சுவாமி!' 'ஆனால் காற்று பொதுவானது. வெளிச்சம் பொதுவானது. நீர் பொதுவானது. இப்புவி அனைவருக்கும் பொதுவானது. அவ்வண்ணமே அண்டப் பெருவெளியை ஆளும் பரம்பொருளின் அருளும் அனைவருக்கும் பொதுவானது. அவனை அறிய, அவனது சொரூபத்தை அறிய, அவனது சுபாவத்தை அறிய, இறுதியில் அவனையே சென்றடைய உங்களுக்கெல்லாம் ஆசை இல்லாதிருக்குமா?''அதெப்படி சுவாமி! தெரிந்த அளவுக்கு பக்தி செய்கிறோம். முடிந்த அளவுக்கு சிறப்பாக வாழ முயற்சி செய்கிறோம். ஆனால் முழுமை என்ற ஒன்று எங்கே நமக்கெல்லாம் வாய்க்கிறது?''சரியாகச் சொன்னீர்கள். முழுமை என்பது பரம்பொருளே. எதை அறிந்தால் வேறெதுவும் முக்கியமில்லையோ, அதை அறிய விருப்பம் இருக்கிறதா உங்களுக்கு?'கோபுரத்தின் உச்சியில் ஒரு மனிதர். கீழே பத்திருபது பேர் கொண்ட கூட்டம். என்ன உரையாடல் நடக்கிறது அங்கே?ஆர்வத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மேலும் மக்கள் அங்கே வந்து சேரத் தொடங்கினார்கள். சில நிமிடங்களில் நுாற்றுக்கணக்கானவர்கள் அங்கே வந்து குழுமி விட ஆளாளுக்குக் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். 'ராமானுஜர் எதற்கு கோபுரத்தின் உச்சிக்குச் சென்று நிற்கிறார்? என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அவரிடம்?'ராமானுஜர் சொன்னார். 'இக்கணத்துக்காகவே நான் இங்கே காத்திருக்கிறேன் அன்பர்களே! திருமந்திரத்தின் உட்பொருள் எனக்குத் திருக்கோட்டியூர் நம்பி மூலம் இன்று அறியக் கிடைத்தது.
இம்மந்திரத்தை அதன் உண்மை சொரூபத்துடன் அறிபவனுக்கு மோட்சம் எளிது. எண்ணற்ற முனிவர்களும் யோகிகளும் யுகக்கணக்கில் தவமிருப்பது இதற்காகத்தான். என் பேறு, இன்று நான் இதனைப் பெற்றேன். உங்களுக்கு விருப்பம் உண்டானால் நான் பெற்றதை உங்களுக்கும் அறிவிப்பேன்!' ஆ, ஆ என்று ஆரவாரம் எழுந்தது. அனைவரும் வியப்பிலும் பரவசத்திலும் மெய்சிலிர்த்துப் போய், 'கூறுங்கள் ராமானுஜரே! எங்களையும் கடைத்தேற்றுங்கள்!' என்று கூக்குரலிட்டார்கள்.முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் திகைத்து விட்டார்கள்.'இது ரகசியமானது. பகிரங்கப்படுத்தினால் உனக்கு நரகம் நிச்சயம்' என்று நம்பிகள் சொல்லியனுப்பியதுதான் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.ராமானுஜர் அவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்தார். மனவோட்டம் புரியாதவரா அவர்? ஆனால் ஆறுதல் ஏதும் சொல்லவில்லை. புன்னகைதான் செய்தார்.தன்னை திடப்படுத்திக்கொண்டு ஆரம்பித்தார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X