தேர்தலால வந்துச்சு கடனே... தேறுனா ஓடிருவாரு உடனே!

Added : பிப் 09, 2017
Share
Advertisement
தேர்தலால வந்துச்சு கடனே... தேறுனா ஓடிருவாரு உடனே!

காலையிலேயே வெயில் அடித்து வெளுக்கத் துவங்கியிருந்தது. பேரூர் கோவிலுக்குப் போவதற்காக, சித்ராவை அழைப்பதற்காக வந்திருந்தாள் மித்ரா. வீட்டிற்குள் புகுந்து, 'அக்கா, ரெடியா' என்றவள், அவசரமாய் 'டிவி'யைப் போட்டாள்.
''என்னடி வந்ததும் வராததுமா, 'டிவி'யைப் போட்டு, அப்பிடி என்ன பார்க்குற?'' என்றாள் சித்ரா.
''நேத்து வந்த ஆயாம்மா... நீயெல்லாம் சி.எம்.,மான்னு கடற்கரையில அந்த பொண்ணு கத்துச்சே. அதுவும் நடந்துருச்சேன்னு பார்க்கிறேன்,'' என்றாள் மித்ரா.
''அது சரி, கோயம்புத்தூர்ல ஆதரவு எப்பிடி இருக்கும் மித்து?'' என்றாள் சித்ரா.
''கிழிஞ்சிரும்...இப்பவே எங்க பார்த்தாலும், தீபா பேனராத் தெரியுது; சிட்டிக்குள்ள 'மினிம்மா' பேனரை, மருந்துக்கும் காணலை; ராமநாதபுரம் 80 அடி ரோட்டுல மட்டும், 'எக்ஸ் கவுன்சிலர்' சக்திவேலு, வழக்கமா 'அம்மா'வுக்கு வைக்கிற மாதிரி 'மினிம்மா'வுக்கும் பிரமாண்ட பேனரு வச்சிருக்காரு,'' என்றாள் மித்ரா.
''அந்த இடத்தை என்ன, அவருக்கு பட்டா போட்டுக் கொடுத்துட்டாங்களா, வருஷம் முழுக்க பெருசு பெருசா பேனரு வைக்கிறாரு. கட்சியில இதுக்குன்னு அவருக்கு எதுவும் சிறப்பு நிதி கொடுக்குறாங்களா?'' என்று கேட்டாள் சித்ரா.
''அது தெரியலை...ஆனா, மத்த இடங்கள்ல, எங்கேயுமே காணோம். போன வாரம், இதய தெய்வம் மாளிகைக்கு எதிர்ல, ஜெ., பிறந்த நாளுக்காக வச்ச பேனர்லயும், 'மினிம்மா' படமும், அவுங்களுக்குக் கொடுத்த அடைமொழி மாதிரியே சின்னதாத்தான் இருந்துச்சு. பேரே கிடையாது. ஜெ., படத்தைக் கிழிக்காம, அந்த படத்தைக் கிழிக்க முடியாதபடி, 'டெக்னிக்'கா வச்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''ரூரல் ஏரியாவுல எப்பிடி இருக்கு மித்து?'' என்றாள் சித்ரா.
''சிட்டியை விட, கிராமத்து 'சைடு'ல, அந்தம்மாவுக்கு எதிர்ப்பு அதிகமா இருக்கு. நரசிம்மநாயக்கன்பாளையத்துல எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் பொதுக்கூட்டத்துல, எம்.ஜி.ஆர்., ஜெ.,நாமம் வாழ்க கோஷத்துக்கு அப்புறம், 'சின்னம்மா வாழ்க'ன்னு ரெண்டு பேரு கத்திருக்காங்க. அதுக்கு அங்க இருந்த ஏரியா அவைத்தலைவரே, இதெல்லாம் கத்தக்கூடாதுன்னு தடுத்துட்டாராம்,'' என்றாள் மித்ரா.
இருவரும் கால் டாக்சியை வரவழைத்து, பேரூர் புறப்பட்டனர். பண்பலையின் ஒலியை அதிகப்படுத்துமாறு, டிரைவரிடம் சொன்னாள் சித்ரா.
'வள்ளி வள்ளியென வந்தான் வடிவேலன் தான்... புள்ளி வைத்து புள்ளி போட்டான் புதுக்கோலம் தான்!'ராஜாவின் பாட்டு, பேச்சை திசை மாற்றியது. சித்ரா தான் கேட்டாள்...
''வள்ளி, வடிவேலன்னு கேட்டதும், நம்ம மருதமலை அடிவாரத்துல இருக்குற ஒரு கோவில் ஞாபகம் வந்துச்சு மித்து. அந்தக் கோவில்ல முன்ன எப்பவும் இல்லாத அளவுக்கு, பெரிய அளவுல பாதுகாப்பு போட்ருக்காங்களாம். 'சிசிடிவி' மாட்டி இருக்காங்களாம், அப்பப்போ ஆளுங்க வந்து போயிட்டே இருக்காங்களாம். ஏதோ ஒரு பெரிய கம்பெனியோட கறுப்புப்பணத்தை, அங்க பதுக்கி வச்சிருக்கலாம்னு அரசல் புரசலா பேச்சு கிளம்பிருக்கு,''
''கம்பெனிக்காரங்க பணத்தை, எப்பிடிக்கா அங்க வைக்க முடியும்?''
''அவுங்க தான், அந்த கோவிலுக்கு பல லட்ச ரூபா செலவழிச்சு, கும்பாபிஷேகம் நடத்துனாங்களாம். முழு கன்ட்ரோலும் அந்த கம்பெனிக்காரங்கள்ட்ட இருக்காம். அதனால தான், இந்த சந்தேகம் வந்துருக்கு,''
''வடவள்ளி போலீசுக்குத் தெரிஞ்சா, அள்ளிட்டு வந்துருவாங்களே?''
''நீ வேற... அங்க இப்போ இருக்குற 'இன்ஸ்'ஐ அந்த கம்பெனிக்காரங்கதான் கொண்டு வந்ததா பேசிக்கிறாங்க. அவரு பேருலதான் 'தூய்மை' வச்சிருக்காராம்; 'மைண்ட் எல்லாமே 'மணி'யைப் பத்தித்தானாம். அவரைப் பத்தி, ஏகப்பட்ட 'கம்பிளைன்ட்' குவியுது...''
''ஆமாமா... டிஎம்கேகாரங்க கூட, அவரு மேல பயங்கர கடுப்புல இருக்காங்க. ஸ்டாலின் வந்தப்போ, அவரைப் பார்க்கப் போன சில பசங்களைக் கூப்பிட்டு, 'கஞ்சா கேசு போட்ருவேன்'னு மெரட்டுனாராம்,'' என்றாள் மித்ரா.
''அவரெல்லாம் ரூரல் பார்ட்டி... நம்ம சிட்டி இன்ஸ்பெக்டர்கள் சிலரோட சம்பாத்தியத்தைப் பட்டியல் போட்டா, அதுவே நம்மள மெரட்டிரும்,'' என்றாள் சித்ரா.
''அது தெரிஞ்ச விஷயம் தான... நீ சொல்றது யாரைப்பத்தி?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் மித்ரா.
''பல பேரு இருக்காங்க. இவுங்களைப் பத்தி, தகவல் சேகரிச்சு, மேலிடத்துக்கு அனுப்ப வேண்டிய பொறுப்புல இருக்கிற, 'இன்ஸ்' ஒருத்தரே, ஸ்டேஷனுக்கு 10 ஆயிரம் வீதம், 15 ஸ்டேஷனுக்கும் ஒன்றரை லட்ச ரூபா 'மாமூல்' வாங்குறாராம். அப்புறம், ஏதாவது 'ஸ்பெஷல்' புகார் வந்தா, அதுக்கேத்தது மாதிரி, தனித்தனியா வசூலைப் போட்ருவாராம்,'' என்றாள் சித்ரா.
'சிட்டிக்குள்ளயே, 'ஜோரான இன்ஸ்'ன்னு சொல்லு' என்று சிரித்த மித்ரா, ''அக்கா! ஒவ்வொரு ஆணோட வெற்றிக்குப் பின்னாலயும் ஒரு பெண் இருக்கிறதாச் சொல்லுவாங்களே. நம்ம சிட்டியில தெற்கால இருக்குற ஒரு பெண் போலீஸ் ஆபீசரோட வருமான வரலாறுக்குப் பின்னால, ஒரு ஆண் இருக்கிறாரு. அவரு வேறு யாருமில்லை. அவுங்க ஹஸ்பெண்ட் தான்,'' என்றாள்.
''ஏன்...அவரு பெரிய பிஸினஸ்மேனா?'' என்றாள் சித்ரா.
''மில்களுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் பண்ற சாதாரண பிஸினஸ் தான். ஆனா, அந்தம்மா ஏரியாவுக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள்ல ஏதாவது பிரச்னைய முடிக்கணும்னா, 'அவரைப் போய் பாருங்க'ன்னு ஸ்டேஷன்ல அனுப்புறாங்களாம். அங்க போனா, அவரு வலுவா 'பில்' போட்டுர்றாராம்,'' என்றாள் மித்ரா.
இவர்களின் வண்டியை முந்திக் கொண்டு, வக்கீல்கள் சீருடை அணிந்த இருவரின் வாகனம் வேகமாகச் சென்றதைப் பார்த்த சித்ரா கேட்டாள்...
''மித்து... நம்ம ஊர்ல, 'பார் அசோசியேஷன்' தேர்தல்ல, உடன்பிறப்பு ஜெயிச்சிட்டாராம்; ரத்தத்தின் ரத்தம் தோத்துட்டாராமே?''
''ஆமாக்கா... வெறும், 75 ஓட்டுல தோத்துட்டாரு. அந்த உடன் பிறப்புக்கு, இதுவரைக்கும் யாரும் இவ்ளோ, 'டப் பைட்' கொடுத்தது கிடையாதாம். இதுல வேடிக்கை என்னன்னா, ஜெயிச்சவரு, யாருக்கும் ஒரு டீ கூட வாங்கித்தரலையாம்...''
''ஆனா, தோத்துப்போன வக்கீலு, எலக்ஷனுக்கு முன்னாலயும், ரிசல்ட் வந்த பிறகும் கூட, வக்கீல்களுக்கு சரக்கு, சாப்பாடுன்னு சந்தோஷமா செலவு பண்ணிருக்காரு. தோத்த பிறகும், ஒவ்வொருத்தரையும் பார்த்து, நன்றி சொல்லிருக்காரு. பத்து பைசா செலவு பண்ணாத உடன்பிறப்பு, அவுங்க தளபதியைப் பார்த்து, 'ஆளுங்கட்சியை தோற்கடிச்சுட்டோம்'னு பெருமையா சொல்லிட்டு வந்திருக்காரு...''
வண்டி, மாநகராட்சி அலுவலகம் அருகே, சிக்னலுக்காகக் காத்திருந்தது. மித்ரா கேட்டாள்...
''நம்ம இளந்தாரி ஆபீசர், பத்து நாளு லீவைப் போட்டுட்டு, பேமிலியோட ஜாலியா, சிங்கப்பூர் டூர் போயிருக்காராம்...''
''கார்ப்பரேஷன்ல ஒரு வேலையும் நடந்தபாடில்லை; ஊருக்குள்ள தண்ணிப் பிரச்னை தலை விரிச்சாடுது. இவரு தான், இதை ஸ்பெஷலா கவனிக்க வேண்டிய ஆபீசர்... இவரு என்னடான்னா இந்த நேரத்துல இப்பிடி, 'டூர்' போயிருக்காரு... கவர்மென்ட்ல இதெல்லாம் கவனிக்கவே மாட்டாங்களா?''
''அதை விடு... பாவம் ரொம்ப உழைச்சுக் களைச்சுப் போயிருப்பாரு. கார்ப்பரேஷன்ல எதுக்குமே நிதியில்லை, நிதியில்லைன்னு சொல்லிட்டு, நல்லா இருந்த அவரோட ஆபீசையும், மேயரோட ஆபீசையும், மறுபடியும் புதுப்பிக்கிறதைத்தான் யாராலயும் ஏத்துக்கவே முடியலை. வுட் ஒர்க், டாய்லெட் டைல்ஸ் எல்லாத்தையும் இப்போ மாத்த வேண்டிய அவசியம் என்னன்னே தெரியலைன்னு குமுறுறாங்க...''
''மித்து... அந்த 'டவுன் பிளானிங்' லேடி ஆபீசர் பத்தி, அன்னிக்கு நம்ம பேசுனோமே... அவுங்க இப்பல்லாம், கரெக்டா ஆபீசுக்கு வந்துர்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.
அதைக்கேட்காத மித்ரா, ''அக்கா...கோவைப்புதூர் ஏரியாவுல, ஏகப்பட்ட 'மொபைல் டவர்'களைப் போட்ருக்குற ஒரு பெரிய கம்பெனியால, 'பிராட்பேண்ட் சர்வீஸ்' கொடுக்க முடியலை; காரணம், கேபிள் பதிக்க முடியலை; வேலைய தொடங்குனா, பெரிய 'அமவுன்ட்' வேணும்னு கார்ப்பரேஷன் ஆபீசர்கள் தடுக்குறாங்களாம்,'' என்றாள்.
''அமவுன்ட்ன்னதும் ஞாபகம் வந்துச்சு... நம்மூர்ல அந்த அரசியல்வாதி, அத்தனை ஆயிரம் கோடி வச்சிருக்காரு, இவரு இத்தனை ஆயிரம் கோடி வச்சிருக்காருன்னு பேசுவாங்கள்ல. நம்மூரு எம்.எல்.ஏ., ஒருத்தரு, ஏழு கோடி ரூபா கடன்ல இருக்காராம். கட்சியில ஏதாவது பிரச்னை வந்து, கடனை அடைக்க யாராவது உதவுனா, தேறுன பக்கம் உடனே போயிருவாருன்னு அவரோட ஆதரவாளர்கள் பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
பேரூர் ரோட்டில், வாகன பரிசோதனைக்காக போலீசார் நிறுத்த, வண்டியை ஓரம் கட்டினாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X