எம்.எல்.ஏ.,வை ஓரங்கட்டிய ரத்தத்தின் ரத்தங்கள்; எதையும் கண்டுக்காத கமிஷனரின் சத்தங்கள்

Added : பிப் 09, 2017
Advertisement
""குளிர் காலத்தில, வெயில் இப்படி கொளுத்துதே. உஸ்... அப்பப்பா...'' என்று, புலம்பியவாறே, வேர்வை வழிய, வண்டியை அவசரமாக, மரத்தின் நிழலில் நிறுத்திய சித்ரா, மொபைல் போனில், மித்ரா எண்ணை டயல் செய்தாள்.""எங்கிருக்கிற, மங்கலம் ரோட்டுல, தாடிக்கார முக்குக்கு, வர்றியா. காரைக்குடி மெஸ்ல, மதியம் சாப்பாடு வாங்கணும்,'' என்றாள். மறுமுனையில், ""இதோ, அஞ்சு நிமிஷத்துல, வந்துடறேன்,''
எம்.எல்.ஏ.,வை ஓரங்கட்டிய ரத்தத்தின் ரத்தங்கள்; எதையும் கண்டுக்காத கமிஷனரின் சத்தங்கள்

""குளிர் காலத்தில, வெயில் இப்படி கொளுத்துதே. உஸ்... அப்பப்பா...'' என்று, புலம்பியவாறே, வேர்வை வழிய, வண்டியை அவசரமாக, மரத்தின் நிழலில் நிறுத்திய சித்ரா, மொபைல் போனில், மித்ரா எண்ணை டயல் செய்தாள்.
""எங்கிருக்கிற, மங்கலம் ரோட்டுல, தாடிக்கார முக்குக்கு, வர்றியா. காரைக்குடி மெஸ்ல, மதியம் சாப்பாடு வாங்கணும்,'' என்றாள். மறுமுனையில், ""இதோ, அஞ்சு நிமிஷத்துல, வந்துடறேன்,'' என்றாள் மித்ரா. சொன்ன மாதிரியே, வந்த மித்ராவுடன், மெஸ்சுக்குள் சென்றாள் சித்ரா.
"ஆர்டர்' கொடுத்து விட்டு, அங்கிருந்த சேரில் உட்கார்ந்தவாறே, ""அரசு விழா என்றாலே, ஆளுங்கட்சி கொடி பறப்பது வழக்கம். ஆனா, கார்ப்பரேஷன் பகுதியில, அண்மையில் நடந்த, எம்.எல்.ஏ., பங்கேற்ற நிகழ்ச்சிகளில், ஆளுங்கட்சி கொடிகளை பார்க்கவே முடியல தெரியுமா,'' என்று ஆரம்பித்தாள் சித்ரா.
""அரசு நிகழ்ச்சிக்கு கட்சிக்கொடி எதற்குன்னு, எம்.எல்.ஏ., சொல்லீட்டாரா?'' என, ஆச்சரியத்துடன், கேட்டாள் மித்ரா.
""இதில், அதிசயப்பட ஒன்னுமில்லே. கட்சிக்காரங்கதான், எம்.எல்.ஏ., மீதான அதிருப்தியை காட்ட, கட்சிக்கொடி கட்ட வரவில்லையாம்...''
""ஏன், ஏதாச்சும் உள் குத்து விவகாரமா?''
""உள்கட்சி விவகாரம் ஏதுமில்லே. ஆனா, எல்லை பிரச்னைதான் விவகாரமா இருக்கு...''
""கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லேன்,'' என்று சலித்து கொண்டாள் மித்ரா.
""பல்லடம் தொகுதியில, திருப்பூர் மாநகராட்சியோட சில வார்டுகள் இருக்கு. அதில், வளர்ச்சி திட்டப்பணிகளோட துவக்க விழாவில் தான், எம்.எல்.ஏ., கலந்துக்கிட்டாரு. அப்போது தான், கட்சி கொடிகள் கட்டல,'' என்றாள் சித்ரா.
""என்ன காரணமாம்?'' என்ற மித்ரா கேட்க, ""வார்டு பகுதியில் வளர்ச்சிப்பணிக்கு, தொகுதி வளர்ச்சி நிதியில் ஒதுக்கீடு செய்யணும்னு உள்ளூர்வாசிகள் போய் கேட்டபோது, "உங்கள் வார்டுக்கு, மாநகராட்சி நிதியில் இருந்து பணிகளை கேட்டு செய்யுங்க. தொகுதி வளர்ச்சி நிதியில், வேலைகளை செய்ய
முடியாது'ன்னு சொல்லீட்டாராம். அதனால, தங்கள் வார்டுக்கு நிதி ஒதுக்காத அவரோட நிகழ்ச்சிக்கு போய், கட்சிக்கொடி கட்டணுமான்னு, உள்ளூர் கட்சிக்காரங்க, ஒதுங்கிட்டாங்க. அவரும், தன் பகுதி கட்சிக்காரங்களை அழைச்சிட்டு வந்து, நிகழ்ச்சியில கலந்துகிட்டாராம்,'' என்று சித்ரா கூறினாள்.
""மாநகராட்சி பகுதியாக இருந்தாலும், தன் தொகுதிக்குள் வரும் பகுதிக்கு நிதி ஒதுக்கி, வேலை செய்யறதுதானே, ஒரு மக்கள் பிரதிநிதிக்கு அழகு. இது கூடவா, அவருக்கு யாரும் சொல்லித்தரல,'' என்று மித்ரா கேட்டாள்.
""அவர் தரப்பில், "நகரப்பகுதியில், எப்படியாது நிதி வாங்கி, வேலை செஞ்சுடலாம்; ஊரகப்பகுதிக்கு, இந்த நிதியில் செஞ்சாத்தானே உண்டு'ன்னு கேட்டிருக்காரம்,'' என்றாள் சித்ரா.
""ஓ... விஷயம் அப்படி போகுதா?'' என்றாள் மித்ரா. அதற்குள், பார்சல் வந்துவிடவே, இருவரும் வண்டியில் புறப்பட்டனர்.
""வாய்ப்பு கிடைச்சா போராட்டம் நடத்திடறாங்க,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
""விவரமா சொல்லுங்க''
""வளர்மதி ஊழியர்கள் உள்ளிருப்பு நடத்தினாங்களே; அதை சொல்றேன். பொங்கல் பரிசு பொருள், உள்தாள் வேலை இருந்ததால, ரேஷன் கடையில வியாபாரம் இல்லை. வழக்கமாக, 20ம் தேதி கொடுக்கற சம்பளத்தை, 30ம் தேதி வரை கொடுக்கல''
""ஊழியர்களும், கணக்கு முடிச்ச பணத்தை, கொடுக்க வந்திருக்காங்க. கூட்டம் சேர்ந்ததும், சம்பளம் கொடுக்கலைன்னு பேசி, "தோழர்கள்' அப்படியே உட்கார வெச்சு, போராட்டமா மாத்திட்டாங்க. ஆனா, பேச்சு நடத்த யாரும் வரல. கடைசியில், குடிமைப்பொருள் தாசில்தாரை வரவெச்சு, பேச்சு நடத்தின மாதிரி
முடிச்சுட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""ரேஷன் கடை ஊழியருக்கு, "பாயின்ட் ஆப் சேல்' மெஷின் வெக்கற வரைக்கும் பிரச்னை இல்ல. ஆனா, அதிகாரிகளுக்கு, "கப்பம்' கட்டுறதும் குறைஞ்ச மாதிரி தெரியல. சம்பளமும் கொடுக்கலைன்னா என்னதான் பண்ணுவாங்க,'' என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.
""நலத்திட்ட உதவிக்கு ஏற்பாடு செஞ்சும், பயனாளிகள் வராததால, நிகழ்ச்சியை ரத்து செஞ்சுட்டாங்க தெரியுமா,'' என்று, கலெக்டர் ஆபீஸ் தகவலை சொன்னாள் மித்ரா.
""அட; இப்படியெல்லாம் நடக்குதா?''
""இரண்டு வாரத்துக்கு முன், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துல, தெற்கு தாலுகாவ சேர்ந்த பயனாளிகளுக்கு, ஓ.ஏ.பி., கொடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. தாசில்தார், எங்க வரணும்னு சொன்னாங்கன்னே தெரியலை; நிகழ்ச்சிக்கு ஒருத்தரும் வரல. கலெக்டர், டி.ஆர்.ஓ., எல்லோரும் இருந்தும், பயனாளிகள் வராததால, நிகழ்ச்சியை "கேன்சல்' செஞ்சுட்டாங்க,'' என்று மித்ரா கூறினாள்.
""அப்படியா, சங்கதி. "கேன்சல்' சொன்னதும் ஞாபகத்துக்கு, போலீஸ் மேட்டருதான் வருது,'' என்று சித்ரா கூறுவதற்குள், ""சீக்கிரம் சொல்லுங்க,''என்று பரபரத்தாள் மித்ரா.
""திருப்பூர் சிட்டில, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி, அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க, ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும், மேஜை போட்டு போலீஸ் ஒருவரை வரவேற்பாளராக உட்கார வைச்சாங்க. அப்புறம், ரெண்டு மூணு நாள், ஒருத்தரையும் காணோம். புகார் கொடுக்க வரும் பொதுமக்கள், போலீஸ் வரவேற்பாளர்களை தேடும் நிலையே அனைத்து ஸ்டேஷன்களிலும் இருக்குது. சரி, புகாரை, கொடுத்தாலும், எரிஞ்சு விழறாங்க,'' என்று சித்ரா சொன்னதும், மித்ரா, தலையை ஆட்டி பலமாக ஆமோதித்தாள்.
அதற்குள் வீடு வந்து விடவே, ""ஓகே. மித்ரா நான் கௌம்பறேன்,'' என்று சொல்லிவிட்டு, ""அடடே, இன்னொரு மேட்டர் சொல்லணும்னு நினைச்சேன். ஆங்... அது, திருப்பூர் ஜி.எச்., ஆம்புலன்ஸ் பத்தின வீடியோவை, வாட்ஸ் ஆப்ல வந்துதே பார்த்தியா மித்ரா?,'' என்றபடி, தனது ஸ்மார்ட்போனை காட்டினாள் சித்ரா.
""பார்த்திட்டேன். "108' ஆம்புலன்ஸ் ஒன்னு ஸ்டார்ட் ஆகாம மக்கர் பண்ண, இன்னொரு ஆம்புலன்ஸ் வண்டியை கட்டி இழுத்துட்டு போறதை தானே சொல்றே,'' என்று மித்ரா கேட்டாள்.
""ஆமா, அதே வீடியோ தான். ஆம்புலன்ஸ் வாகன நிலைமை, ரொம்ப கவலைக்கிடமா இருக்கே. இந்த வாகனங்களை வெச்சுட்டு, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைச்சிட்டு வர்றது, ரொம்ப ரிஸ்கா இல்லே,'' என்று சித்ரா ஆதங்கப்பட்டாள்.
""நம்ம சுகாதாரத்துறைக்கு, ரிஸ்க் எடுக்கறது, ரஸ்க் சாப்பிடற மாதிரி; நோயாளிங்க நிலைமை தான் பாவம்,'' என்று சித்ரா கூற, ""சுகாதாரத்துறைன்னு சொன்னதும், இன்னொரு சங்கதி ஞாபகத்துக்கு வருது.
திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப்பிரிவில, ஆட்கள் பற்றாக்குறை இருக்கறதால, யாருக்குமே லீவு இல்லைன்னு, சொல்லீட்டாங்களாம். இதனால, சுக, துக்கத்துக்கு கூட போக முடியலையேன்னு, ஊழியர்கள் புலம்பறாங்க,'' என்று மித்ரா கூறினாள்.
""உண்மையே, கொஞ்சம் கஷ்டமான விஷயம். அதிகாரிங்க ரியாக்ஷன் எப்படி இருக்காம்,'' என்று சித்ரா கேட்டாள்.
""ஒரு வேலையை முடிக்கறத்துக்குள்ள இன்னொரு வேலை; ஒரு காய்ச்சல் போனா, இன்னொரு காய்ச்சல் வந்திடுது. என்னால, என் வீட்டுக்கே போக முடியலைன்னு, நகர்நல அலுவலரும் நொந்துபோய் சொன்னாராம்,'' என்றாள் மித்ரா.
""மாநகராட்சி பத்தி, என்கிட்டே ஒரு தகவல் இருக்கு,'' என்று சித்ரா கூற, ""என்ன விஷயம்? யாரு பத்தின விஷயம்,'' என்று மித்ரா ஆவலோடு கேட்டாள்.
""மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு துறைக்கும், மண்டல உதவி கமிஷனர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமா இருக்காம். மண்டலத்துல விழிப்புணர்வு நிகழ்ச்சி, சிறப்பு நோய் தடுப்பு முகாம் நடத்தினா கூட, செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு சொல்லறதில்லையாம். ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு பேசின கமிஷனர், நாமளே இப்படி இருந்தா எப்படின்னு, சத்தம் போட்டாராம்,'' என்றாள் சித்ரா.
""கமிஷனர் இந்த வேலையாச்சும் செய்யறாரே. அதுவரை சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான். சரி மித்ரா, நேரமாச்சு நான் கௌம்பறேன்,'' என்றபடி, ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து, சிட்டாக பறந்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X