புதுடில்லி : ஊழலை ஒழிப்பது தொடர்பாக, நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் லோக்பால் மசோதாவுக்கு விரைவில் இறுதி வடிவம் கொடுப்பது என, முடிவு செய்யப்பட்டது.
ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் மற்றும் "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் போன்றவற்றில், மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இது தொடர்பாக விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.ஆனால், ஊழலை ஒழிப்பது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்குவதற்காக, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்றை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழுவில் விவசாய அமைச்சர் சரத் பவார், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், ராணுவ அமைச்சர் அந்தோணி, தொலை தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, அமைச்சர் நாராயணசாமி மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் முதல் கூட்டம் நேற்று, டில்லியில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடை பெற்றது.
அமைச்சர்களுக்கான சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்வது, தேர்தலுக்கு அரசே நிதியுதவி அளிப்பது மற்றும் வெளிப்படையான பொது கொள்முதல் கொள்கையைப் பின்பற்றுவது, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுக்க, வெளிப்படையான அணுகுமுறையை பின்பற்றுவது போன்றவை குறித்து நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர், பிரதமரையும் விசாரணைக்கு உட்படுத்த வகை செய்யும் லோக்பால் மசோதாவிற்கு விரைவில் இறுதி வடிவம் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், ஊழல் ஒழிப்பு செயல்பாட்டு முறை தொடர்பான பல்வேறு அறிக்கைகளை ஆய்வு செய்ய இரண்டு கமிட்டிகளை நியமிக்கவும் கேபினட் செயலருக்கு அமைச்சரவை குழு உத்தரவிட்டது.ஊழலை ஒழிப்பதற்கான வழிமுறைகளை அமைச்சர்கள் குழு, 60 நாட்களுக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE