கர்நாடகாவில் பந்த்; 30 பஸ்களுக்கு தீ வைப்பு : முதல்வர்- கவர்னர் மோதல் உச்சக்கட்டம்

Updated : ஜன 22, 2011 | Added : ஜன 21, 2011 | கருத்துகள் (42) | |
Advertisement
பெங்களூரு : கர்நாடக மாநில கவர்னருக்கு எதிராக ஆளும் பா.ஜ., நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ஜ., தொண்டர்கள் மாநிலம் முழுவதும் 30 பஸ்களை தீ வைத்து கொளுத்தினர். பரத்வாஜ், முதல்வர் எடியூரப்பா இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடக மக்களிடம் தன் கவுரவத்தை இழந்துள்ள கவர்னரை திரும்பப் பெற வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம், கவர்னர் மாளிகை
BJP calls state bandh Today protesting governor Bhardwaj's sanction for prosecution of chief minister Yeddyurappa. ,கர்நாடக கவர்னர் - எடியூரப்பா இடையே தீவிரமாகிறது ம��

பெங்களூரு : கர்நாடக மாநில கவர்னருக்கு எதிராக ஆளும் பா.ஜ., நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ஜ., தொண்டர்கள் மாநிலம் முழுவதும் 30 பஸ்களை தீ வைத்து கொளுத்தினர். பரத்வாஜ், முதல்வர் எடியூரப்பா இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

கர்நாடக மக்களிடம் தன் கவுரவத்தை இழந்துள்ள கவர்னரை திரும்பப் பெற வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம், கவர்னர் மாளிகை முற்றுகை, பேரணி என பல போராட்டங்கள் நடந்து வருகிறது. இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பா.ஜ., உயர்மட்ட கமிட்டியின் உத்தரவையடுத்து, இன்று கர்நாடக அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


நில மோசடி புகார் குறித்து, முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் அசோக் ஆகியோர் மீது விசாரணை நடத்த அனுமதிக்குமாறு, கவர்னர் பரத்வாஜை, வக்கீல்கள் சிராஜின் பாஷா, பாலகிருஷ்ணா ஆகியோர் சந்தித்து, 1,700 பக்கம் கொண்ட மனு கொடுத்தனர். இதையடுத்து, இது தொடர்பான முக்கிய பைல்களை, ஜன., 20ம் தேதிக்குள், அனுப்புமாறு, கவர்னர் பரத்வாஜ், அரசு தலைமைச் செயலரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.


பரப்பரப்பான நிலையில், கடந்த 19ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பா மீது விசாரணை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது, என்று கவர்னருக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை ராஜ்பவனுக்கு, பேக்ஸ் மூலம் முதல்வர் எடியூரப்பா அனுப்பியிருந்தார்.இதனால், கவர்னர் பரத்வாஜ் அதிருப்தியுற்றார்.


வக்கீல்கள் மனு மீது இரண்டு நாட்களில் பதில் அளிப்பதாகவும், "திருடனே போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்' என, கவர்னர் பரத்வாஜ், மறைமுகமாக எடியூரப்பாவை தாக்கி இருந்தார். தான் கேட்டபடி முக்கிய ஆவணங்களை அரசு அனுப்பாமல் உள்ளது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.


அமைச்சர்கள் கூறுகையில், கவர்னர் கேட்டதில், 90 ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மீதி ஆவணங்கள் விரைவில் அனுப்பப்படும் என்று தெரிவித்தனர். இந்நிலையில், கர்நாடக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் தலைமையில், பெங்களூரில் நேற்று நடந்தது.


மன்னிப்பு கேட்க வேண்டும் கவர்னர்: கூட்டத்திற்கு பின், மக்கள் தொடர்பாளர் ஆயனூர் மஞ்சுநாத், நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக, கவர்னர் அளவுக்குமீறி தரக்குறைவாக பேசி வருகிறார். இதனால், கர்நாடக மக்களிடம் தன் கவுரவத்தை அவர் இழந்துள்ளார். இத்தகைய உள்நோக்கம் கொண்ட கவர்னரை திரும்பி பெற வேண்டும். கவர்னர், தன் செயலுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது.


30 பஸ்களுக்கு தீ வைப்பு : இதற்கிடையில் இன்று மாநிலும்முழுவதும் நடந்த பந்த்க்கு பெரும்பான்மை இடங்களில் ஆதரவு இருந்தது. மாநிலம் முழுவதும் பள்ளிகள் , கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் ஓசூரில் நிறுத்தப்பட்டன. பெங்களூரு, தேவனாகிரி, ஹசன், தும்கூர், ஜெயாநகர், கே.ஆர்.,புரம் உள்ளிட்ட பகுதிகளில் 30 பஸ்களை பா.ஜ.,வினர் தீ வைத்துகொளுத்தினர். பல இடங்களில் கவர்னருக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.இதற்கிடையில் மாநில அமைச்சர்கள், கவர்னர் மாளிகைக்கு பேரணியாக புறப்பட்டு செல்கின்றனர்.


கோர்ட்டை அணுக முதல்வர் முடிவு : கவர்னர் உத்தரவுக்கு எதிராக கோர்ட்டை அணுக முதல்வர் முடிவு செய்துள்ளார். அம்மாநில சட்ட அமைச்சர் சுரேஷ்குமார் கூறுகையில் கவர்னர் அளித்த அனுமதிக்கு எதிராக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய தயாராகி வருகிறோம். வரும் திங்கட்கிழமை கர்நாடக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்படும் என்றார்.வழக்கு போட அனுமதி அளிக்கும் ஆர்டர் காபியை கவர்னர் முதல்வருக்கு வழங்கவில்லை. வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


ப.சிதம்பரம் கடும் கண்டனம்: பா.ஜ.,வின் முழு அடைப்பு போராட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல்வர் மீது விசாரணை நடத்தும் கோரிக்கைக்கு அனுமதி அளிக்க உரிமை உள்ளது என்கிறது லோக்யுக்தா. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது,


இப்போராட்டத்திற்கு பின், டில்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நாளை மறுதினம் பா.ஜ., எம்.பி.,க்கள், மேலிட தலைவர்கள் சந்தித்து, கவர்னர் தன் பதவியின் கவுரவத்தை மறந்து, செயல்படுவது குறித்து புகார் செய்யவுள்ளனர்.தற்போது வக்கீல்கள் வேடத்தில் வந்துள்ள, ம.ஜ.த., தொண்டர்களை, தேவகவுடா பயன்படுத்தி, முதல்வருக்கு எதிராக அளித்துள்ள புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ள கவர்னர் முன்வந்துள்ளார். இது சகிக்க முடியாததாகும்.ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கவர்னருக்கு எதிராக தீவிர போராட்டத்தை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று நடப்பதாக இருந்த அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யபட்டதாக எடியூரப்பா அறிவித்தார்.


வழக்கு தொடர கவர்னர் அனுமதி :முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு தொடர, அனுமதி அளித்து கவர்னர் பரத்வாஜ் நேற்றிரவு உத்தரவிட்டார்.முதல்வர் எடியூரப்பாவின் கடிதத்திற்கு பதிலளித்து கவர்னர் பரத்வாஜ் அனுப்பிய கடிதத்தில், "அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தான் அனைத்தையும் செய்கிறேன். இது குறித்து முடிவு மேற்கொள்ளும் அதிகாரம் எனக்குள்ளது. பல்வேறு புகார்களால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உங்களிடம் விளக்கம் கேட்டிருந்தேன். ஆனால் நீங்களோ, அமைச்சரவையில் முடிவு மேற்கொண்டு, அனுமதி அளிக்க வேண்டாம், என்று கடிதம் எழுதியுள்ளீர்கள். இது சரியல்ல. எனக்கு கடிதம் எழுதி, தேவையில்லாத குழப்பத்தை உருவாக்க வேண்டாம். எனது அதிகாரத்தை மீறி எதையும் செய்யவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.


இது மட்டுமின்றி, உள்துறை அமைச்சர் அசோக் மீதும் வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்துள்ளார். இதனால், கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மனசாட்சிபடி செய்யும் கவர்னர்: இது குறித்து கவர்னர் பரத்வாஜ் கூறுகையில், "எனது மனசாட்சியின்படி செயல்படுகிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட விரோதமல்ல. அரசிடம் கேட்ட விளக்கங்களை எனக்கு தரவில்லை. எனவே, முதல்வர் எடியூரப்பா மீதும், அமைச்சர் அசோக் மீதும் வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளேன்,'' என்றார்.


கவர்னர் மீது எடியூரப்பா குற்றச்சாட்டு: ""என் மீது வழக்கு தொடருவதாக அனுமதியளித்த கடித நகலை கொடுப்பதற்கு, கவர்னர் பரத்வாஜ் மறுக்கிறார்,'' என்று முதல்வர் எடியூரப்பா குற்றம் சாட்டினார்.


நேற்றிரவு முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ""என் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்துள்ள தகவல்கள் பத்திரிகைகள், மீடியா மூலம் தான் தெரிகிறது. என்னிடமோ, எனது அலுவலகத்திற்கோ வரவில்லை. அனுமதி கடிதத்தை கொடுக்க கவர்னர் மறுக்கிறார். எதிர்க்கட்சிகள் இந்த அரசை எதுவும் செய்ய இயலவில்லை. அதனால், கவர்னர் மூலமாக ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளனர்,'' என்றார்.


இது தொடர்பாக கவர்னர் பரத்வாஜுக்கு, முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையில், கவர்னர் பரத்வாஜை சந்திக்க முதல்வர் எடியூரப்பா செல்வதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை, என்று பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கவர்னரின் அனுமதியை கண்டித்து, பெங்களூரு கே.ஆர்.,புரம் உட்பட சில பகுதிகளில் சாலைகளில் தடுப்புகள் போட்டு, மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதித்தது.


எதிர்க்கட்சிகளின் கைப்பாவை என்கிறார் அருண்ஜெட்லி: ""எதிர்க்கட்சிகளின் கைப் பாவையாக கவர்னர் பரத்வாஜ் செயல்பட்டுள்ளார்,'' என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.பா.ஜ., தலைவர் அருண்ஜெட்லி கூறியதாவது:


கவர்னரின் செயலை பா.ஜ., கடுமையாக எதிர்க்கிறது. இது அரசியல் சதி. அரசியல் பின்னணியில் கவர்னர் செயல்பட்டுள்ளார். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தினர் ஏற்கனவே லோக் ஆயுக்தாவிடம், முதல்வருக்கு எதிராகவும், பா.ஜ., அரசுக்கு எதிராகவும் புகார் கொடுத்துள்ளனர்.இதற்கிடையில், மாநில அரசு 1994ம் ஆண்டிலிருந்து நடந்த முறைகேடுகளை விசாரிக்க, நீதிபதி பத்மராஜ் கமிஷனை நியமித்துள்ளது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, இரண்டு தனிப்பட்டவர்களின் கோரிக்கையை ஏற்று, கவர்னர் அனுமதியளித்துள்ளார். விசாரணை முடியும் வரை பொறுத்திருக்க வேண்டும். இவை அனைத்தும் கவர்னருக்கும் தெரியும். ஆனால், எதிர்க்கட்சிகளின் கைப் பாவையாக செயல்பட்டுள்ளார்.


மூன்று வாரங்களுக்கு முன்பு நடந்த தாலுகா, ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில், 21 ஜில்லாக்களை கையில் வைத்திருந்த காங்கிரஸ், இப்போது நான்கு இடத்தை பெற்றுள்ளன. மக்கள் ஆதரவை இழந்துவிட்ட காங்கிரஸ், இத்தகைய கீழ்மட்ட அரசியலில் ஈடுபட்டுள்ளது.கவர்னரின் முடிவு குறித்து, நாளை (இன்று) நடக்கும் பா.ஜ., மேலிட கூட்டத்தில் விவாதித்து, அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம்.இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.


ஊழல் வழக்கு 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு : கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தங்கள் உறவினர்களுக்கு அரசு நிலத்தை முறைகேடாக வழங்கியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக கர்நாடக கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை‌ தொடர்பாக, கவர்னர் பரத்வாஜிற்கும், முதல்வர் எடியூரப்பாவிற்கும் இடையேயான பனிப்போர், இருகட்சிகளுக்குமிடையே வார்த்தைப் போராக உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்கவே எடியூரப்பா மீது தாக்குதல் : பா.ஜ., : 2ஜி ஸ்‌பெக்ட்ரம் அலைவரிமை ஊழலை மறைக்கவே, முதல்வர் எடியூரப்பா மீதான தாக்குதலை, கவர்னர் பரத்வாஜ் மூலம் காங்கிரஸ் கட்சி துவக்கி உள்ளதாக, பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி கவர்னர் செயல்பட்டு வருகிறார். இவரது நடவடிக்கைகளால் மாநிலத்தின் செயல்பாடுகள் அலங்கோலப்படுகிறது. எக்காரணம் கொண்டும், எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலக்கப்படமாட்டார். கேபின்ட் அமைச்சர்களின் ஆதரவோடு கவர்னர் செயல்பட வேண்டும், ஆனால் பரத்வாஜோ, இதற்குமாறாக செயல்படுகிறார். இந்திய அரசியலமைப்பின்படி உள்துறை அமைச்சர் சிதம்பரம் செயல்படுவதாக கருதினால், அவர் உடனே கவர்ன‌ரை திரும்பப்பெற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வீரப்பமொய்லி கடும் தாக்கு : சட்டம் மற்றும் நீதிக்கு முன்னால் அனைவரும் சமமானவர்களே.....இதற்கு முதல்வர் எடியூரப்பா அப்பாற்பட்டவர் அல்ல என்று எடியூரப்பாவை, மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி கடுமையாக தாக்கியுள்ளார். டில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மொய்லி கூறியதாவது, முதல்வர் மீதான ஊழல்புகார்களை விசாரிக்கும் உரிமை மாநில கவர்னர்களுக்கு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும்....ஆனால் ஏனோ எடியூரப்பா உள்ளிட்ட பாஜவினருக்கு ‌இது தெரியாமல் போய்விட்டது. ஊழல், முறைகேடான அனுமதி ( உறவினர்களுக்கு தகாத முறையில் சலுகை அளித்தல் உள்ளிட்டவைகளின் மொத்த உருவமாக எடியூரப்பா திகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.


எடியூரப்பா மக்களுக்கு நன்றி : கர்நாடக மாநில கவர்னர் மாநில அரசின் முன்னேற்றத்திற்கு பாடுபடாமல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஏஜெண்டாக செயல்படுவதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முதல்வர் எடியூரப்பா கூறியதாவது : கவர்னருக்கு, பந்தின் மூலம், மக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.கவர்னரை திரும்ப அழைத்துக்கொள்ள, மத்திய அரசிற்கு பா.ஜ., கோரிக்‌கை விடுக்கிறது, எந்த வழக்கு விசாரணையையும் சந்திக்க தயார். ஊழல் பற்றி விசாரணை நடத்தாமல் வழக்கு தொடர அனுமதி கொடுத்துள்ளார். கவர்னர் அனுமதி கொடுத்ததன் காரணமாக நான் முதல்வர் பதவியில் இருந்து விலக போவதில்லை. இதேபோல் புகார் கொடுத்ததால் வேறு எந்த மாநிலத்திலும் முதல்வர்களாக இருந்தவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததில்லை என எடியூரப்பா கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
22-ஜன-201123:17:25 IST Report Abuse
Mohamed Nawaz முப்பது பஸ்களை எரித்து கர்நாடகத்தை ஸ்தம்பிக்க செய்த, கொடிகளை நஷ்டமாக்கிய தொண்டர்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். தான் குற்றமற்றவன் என்பதை முதல்வர் எடியுரப்பா நிரூபிக்காமல் இப்படி செய்வது பிஜேபிக்கு மட்டும் எந்த விதத்தில் நியாயம்? நவாஸ். செங்கோட்டை
Rate this:
Cancel
vallanadu mani - tirunelveli,இந்தியா
22-ஜன-201122:37:15 IST Report Abuse
vallanadu mani காங்கிரசின் அட்டூழியங்களை மனதில் வைத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம கொஞ்சம் யோசித்து ஒட்டு போடணும்னு நினைக்கிறேன்.
Rate this:
Cancel
Abdul rahim - Thanjavur,இந்தியா
22-ஜன-201120:43:58 IST Report Abuse
Abdul rahim கிருஷ்ணா சாரதி அவைகளே சரியாக சொன்னிர்கள் உங்களை மாதிரி எல்லோரும் இருக்க வேண்டும் அப்பா தான் நம் நாடு நன்றாக வாழும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X