இன்னலை தருவது கூடா நட்பு| Dinamalar

இன்னலை தருவது கூடா நட்பு

Added : பிப் 13, 2017 | கருத்துகள் (1)
இன்னலை தருவது கூடா நட்பு

'அன்பு ஈனும் ஆர்வமுடைமை அது ஈனும்நண்பென்னும் நாடாச் சிறப்பு'
அன்பின் பரிமாற்றமே நட்பாகும். நட்பின் வளர்ச்சிக்கு அன்பே துணை வரும். நட்பு என்பது இன்சொல், கனிவான முகம், நெகிழும் மனம், உதவும் கரம், மன்னிக்கும் குணம், விட்டு கொடுக்கும் பண்பு இவற்றில் இருந்து பிறப்பதேயாகும். நட்பு என்பது சிறிது நேரம் முகமலர்ந்து பேசிப் பிரிவதன்று. அன்பால் மனதோடு பழகுவது. இன்னல்களையும் தாண்டி சுகமான அன்பைத் தருவது நட்பு. நல்லதீர்வுகளுக்கு உயிர் தருவது நட்பு. நட்பை அகநட்பு, குடும்ப நட்பு, புறநட்பு என மூவகை வகைப்படுத்தலாம்.
அகநட்பு
'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்துஅகநக நட்பது நட்பு'
முகம் மட்டும் மலரும்படி பழகுவது நட்பாகாது என, திருவள்ளுவர் கூறுகிறார். அன்போடு உள்ளுணர்வுடன் பழகுவதே நட்பாகும். உயிரும் மெய்யும் இணைந்து, உயிர்மெய் எழுத்தாவது போல, அகவாழ்வில் ஆணும் பெண்ணும் இசைந்தி ருந்தால் தான் அன்பெனும் நட்பு மலரும். வாழ்வில் நட்பெனும் பண்பிருந்தால், இறுக்கமான சூழலையும் மாற்றி, சலனமில்லா வளமான வாழ்வைப் பெறலாம். இருகை இணைந்தால் நேசம் உருவாகும். வாழ்வில் அன்பினை வெளிப்படுத்தவில்லை எனில், கட்டாந்தரையில் இட்ட தண்ணீர் போல் வறண்டு விடும். அன்பினை நேசமாக வெளிப்படுத்தினால் இல்லறம் நல்லறமாகும். கூறாத அன்பு பிறக்கும்இடத்திலேயே மறைந்து விடும்.
பெற்றோரிடம் காட்டாத நேசம்உடன் பிறப்புகளை நாடாத உள்ளம்துணையிடம் சொல்லாத பாசம்குழந்தையிடம் தேடாத அரவணைப்புஇவையனைத்தும் பயனற்றது. மனதில் தோன்றும் அன்பை புதைத்து விடாது, நட்புடன் வார்த்தைகளால் வெளிப்படுத்தினால் வாழ்வு மலரும். புத்துணர்ச்சி பெறும். உயர் பதவி யில் இருந்த ஒருவர் தன் துணைவி யின் பிரசவ நேரத்திலோ, இக்கட்டான தருணத்திலோ, நோய்வாய்பட்டு இறக்கும் நேரத்திலோ தான் நிறைவு செய்யாத நேரத்தை மிகவும் மனம் வேதனைப்பட்டு, வருந்தி மற்றவர்களிடம் பகிர்ந்து இருந்தார். பிரிவு காட்டி நட்புடன் இருக்க வேண்டிய காலங்களை இழந்து, பிரிவு ஏற்படும் போது வருந்தி மனத்துயர் அடைவதில் பயன் இல்லை.காலத்தே மழை பொழிந்தால், உயிருக்குப் பயன். காலத்தே அன்பு காட்டினால் உறவுக்கு பயன்.
குடும்ப நட்பு
குடும்பத்தில் நட்பு விரியும் போது உறவு பலப்படுத்தப்படும். தவறு இழைப்பதும், விவாதம் செய்வதும் மனித வாழ்வில் இயல்பாகும். அதை மறந்து மன்னித்து அன்பு காட்டினால் பல உறவுகள் இணைந்த இல்லறம், இனிமையாகும்.
'அன்பின் வழியது உயிர்நிலை அது இலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு'தற்போது பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் இடையே எண்ணப் பகிர்வு குறைந்து விட்டது. நேரமின்மை காரணமாக இருந்தாலும், மனம் இருந்தால் வழிவகுத்து உணர்வுகளை பரிமாறிக் கொள்ளலாம். சரியான எண்ணப் பரிமாற்றத்தால் பல சிக்கல்களுக்கு தீர்வு காணலாம்.அதற்கு சிறந்த உதாரணம், பிரெய்ல் எழுத்து முறையை உருவாக்கிய லுாயி பிரெய்ல் ஆவார். கண்ணொளியை இழந்தவர்களுக்கு, கலங்கரை விளக்கமாக தோன்றியவர். பிரெய்ல் பிரான்சில் கூப்பெரி என்ற கிராமத்தில் குதிரைக்கு லாடம் செய்யும் ஏழைத் தொழிலாளியின் மகனாக பிறந்தார். மூன்று வயதில் பிரெய்ல் தன் தந்தையின் பட்டறையில், விளையாடிக் கொண்டிருக்கும் போது தோலை ஓட்டை போடும் ஊசியால் கண்ணைக்குத்தி கொண்டதால், கண்பார்வையை இழந்தார். சில நாட்களில் மற்றொரு கண் பார்வையையும் இழந்தார். பெற்றோரின் சரியான தொலைநோக்கு பார்வை யால் பிரெய்ல் கண் பார்வை இழந்தோர் பள்ளியில் சேர்க்கப்பட்டார். விரலால் தொட்டுப் படிக்கும் எழுத்துக்கள் மேடாக இருந்ததால், புத்தகங்கள் மிகவும் தடிமனாக இருந்தது. கையாள்வது கடினமாக இருந்தது. அந்த சமயத்தில் ராணுவ ரகசிய பரிமாற்றத்திற்கென, சார்லஸ் பார்பியா என்னும் ராணுவத்தளபதி, 12 புள்ளிகளை கொண்ட புதிய எழுத்து முறையை உருவாக்கினார். அதை பார்வையற்ற குழந்தைகளுக்கு பயிற்றுவித்தார். இந்த முறையும் சிறிது கடினமாக இருந்ததால் இரவும், பகலும் சிந்தித்து செயலாற்றி ஆறே புள்ளிகளை கொண்டு மொழி, கணிதம், இசை, அறிவியல் போன்றவற்றை கற்க புதிய குறியீட்டு முறையை பிரெய்ல் உருவாக்கினார். அந்த குறியீட்டை உருவாக்க தன் தந்தையின் பட்டறையில் இருந்த ஆணியை தான் பயன்படுத்தி பழகினார்.
அரவணைப்பு
பிரெய்லின் பெற்றோர் அன்புடன், நட்புடன் தங்களது மகனை வழிநடத்தி சென்றதால், பார்வையற்றோருக்கு விழிகளாக பிரெய்லி முறையை தந்தார் லுாயி பிரெய்லி. தகுந்த அரவணைப்பு வெற்றியை காண உதவும். அரவணைப்பின்றி வளரும் குழந்தைகள் அரண் ஏதும் இன்றி பல இன்னல்களை சுமப்பார்கள். குழந்தைகள் நாணல் போன்றவர்கள். தெளிவான பாதை இல்லையெனில் வளைத்து விடுவார்கள். கூடா நட்பு வந்து சேரும்.'ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும்'கூடா நட்பானது, இறப்பது போன்ற இன்னலைத் தரும் என்று வள்ளுவம் உரைக்கிறது.முதுமைக்கு முக்கியத்துவம் குடும்ப நட்பில் முதுமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முதுமை என்பது இளைப்பாறும் காலம். அவர்களை சுமையாக கருதாது. அவர்களும் சுமைதாங்கியாக இருந்தவர்களே என்பதை நினைத்து இனிய உறவென ஏற்று, நட்பு பாராட்ட வேண்டும். அவர்களின் தனிமையை மாற்ற நட்பெனும் கரத்தை நீட்ட வேண்டும். மழலையும், முதுமையும் தனிமையை தவிர்க்க விரும்பும் பருவம். அப்பருவத்தில் துணையாக நிற்க வேண்டும்.
புறநட்பு
அன்பெனும் நட்பு அகத்தில் மட்டும் தோன்றுவதல்ல. புறத்திலும் தோன்றும். இறைவன் மனிதனோடு, மனிதன் இறைவனோடு, மனிதன் மனிதனோடு, மனிதன் மற்ற உயிரினங்களோடு என்று பல நட்பு வட்டங்கள் உள்ளது. நட்பு வாழ்வின் லாப, நட்டத்தை கணக்கிடாது. அன்பால் மலரும் நட்பு என்றும் ஊன்று கோலாய் வரும். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படியை மாணிக்க வாசகருக்காக இறைவன் ஏற்றது, இறைவன் மனிதன் மீது கொண்ட நட்பு. ரத்தம் வழியும் சிவனின் கண்ணிற்கு, தன் கண்ணை ஈந்த கண்ணப்ப நாயனார் கொண்ட அன்பு இறை மீதுள்ள நட்பு. பிசிராந்தையார் என்னும் புலவர், முகம் காணாத கோப்பெருஞ்சோழனின் மீது கொண்ட நட்பால், பாண்டிய மண்டலத்தில் இருந்து சோழ நாட்டிற்கு சென்று, மன்னனுடன் வடக்கே நோன்பிருந்து உயிரை விட்டது மனிதன் மனிதன் மீது கொண்ட நட்பு. காக்கை, குருவி எங்கள் ஜாதி என்று பாடிய மகாகவியும், வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலாரும்'யாவர்க்கும் ஆம் இறவற்கு ஒரு பச்சிலையாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறையாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி யாவர்க்கும் ஆம் பிறர்க்குஇன்னுரை தானே'என உரைத்த திருமூலரும் உயிர்களிடம் தங்களின் அன்பால், நட்புணர்வை வெளிப்படுத்திஉள்ளார்கள். சுமந்து பெற்ற பிள்ளை போல், வளர்க்கும் பயிர்கள் தண்ணீர் இன்றி மடிந்து போனால் உயிர் பிரிவதைப் போல், மனம் உடைந்து போகும் விவசாயிகள் காட்டும் அன்பு பயிர்கள் மீதுள்ள நட்பு.அன்பெனும் மலரில் நட்பு மவுனமாக மென்மையாக வளரும். நட்பு மலரும் போது அன்பு உன்னத நிலையை அடையும். எனவே அனைவர் மீதும் அன்பு கொள்வோம்.
முனைவர் ச.சுடர்க்கொடி கல்வியாளர், காரைக்குடி

94433 63865

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X