ஆறு பேருக்கு பெட்டி... ஆறுக்குட்டி மட்டும் கெட்டி!| Dinamalar

ஆறு பேருக்கு பெட்டி... ஆறுக்குட்டி மட்டும் கெட்டி!

Added : பிப் 14, 2017
Share
ஆறு பேருக்கு பெட்டி...  ஆறுக்குட்டி மட்டும் கெட்டி!

ஆலுமா டோலுமா வுட்டாலங்கடி மாலுமா பேச்சு கலீஜ்ன்னு கிராக்கிவுட்டா சாலுமா...
வடவள்ளி செல்லும் டவுன் பஸ்சில் பண்பலையில் எகிறியடித்தது பாட்டு. சித்ராவும், மித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
''மித்து! பாட்டைக் கேட்டா ஒனக்கு கூவத்தூர் ஞாபகம் வருதா?'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா...அந்தக் கூட்டத்துலு, நம்ம ஊரு எம்.எல்.ஏ.,க்களும் இருக்குறாங்கன்னு நினைச்சா, என் உச்சி மண்டையில 'கிர்'றுங்குது,'' என்று தலையை ஒரு சுழற்று சுழற்றினாள் மித்ரா.
''எலக்ஷன் நேரத்துல, பிரசாரத்துக்குக் கூட வர முடியாம, சூலூர்ல ஒருத்தரு படுத்துக்கிடந்தாரே; அவரையும், நம்மூரு மக்கள் ஜெயிக்க வச்சாங்களே. அவரு தான், கூவத்தூர்ல 'ஓவர்' ஆட்டமாம். சரக்குலயே மூழ்கிக் கெடக்குறாராம். ஏகப்பட்ட சுகர், பிரஷர் எல்லாத்தையும் வச்சுக்கிட்டு, இப்பிடி, 'மிதந்துட்டு' இருக்காரு. என்ன ஆகப்போகுதோன்னு அங்க இருக்குற 'மினிம்மா' ஆட்களே பயப்படுறாங்க,'' என்றாள் சித்ரா.
''வடக்கால இருக்குற எம்.எல்.ஏ., அங்க, 'டாய்லெட்'ல இருந்து ரகசியமா, சொந்தக்காரங்களுக்கு போன் பண்ணாராம். இங்க இருக்குற அவரோட சொந்தக்காரங்க, 'அந்தம்மாவுக்கு ஆதரிச்சிட்டு, இங்க ஊருக்குள்ள வந்துராதீங்கன்னு சொன்னாங்களாம். அதுக்கு, 'செவ்வாய்க்கிழமைக்கு மேல நல்ல முடிவா எடுப்போம்'னு சொன்னாராம்,'' என்றாள் மித்ரா.
''கொண்ட கொள்கையில கெட்டியா இருக்காரு, எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி. ஓ.பி.எஸ்.,க்கு ஆதரவு தெரிவிச்சு, தொகுதிக்குள்ள பெரிய ஹீரோவாயிட்டாரு. மத்த ஆறு எம்.எல்.ஏ.,க்கள், ஊருக்கு வராட்டாலும், அவுங்க வீடுகளுக்கு, 'பெட்டி' கரெக்டாப் போயிருச்சாம். அதனால, அவுங்க வர்றது சந்தேகம்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
தனது மொபைலில், 'வாட்ஸ் ஆப்'பில் வந்த ஒரு வீடியோவைக் காண்பித்தாள் மித்ரா. ஒரிஜினல் கொங்கு பாஷையில், நம்மூர்
எம்.எல்.ஏ.,க்களை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார் ஒரு பாட்டி.
''இதே வெறுப்பு, மக்கள் எல்லார்ட்டயும் இருக்குக்கா... மக்களோட மனநிலையைத் தெரிஞ்சுக்காம, சட்டசபையில கை தூக்கிட்டு வந்தாங்கன்னா, அப்புறமா இங்க ஊருக்குள்ள தலை காட்டுறது கஷ்டம் தான்,'' என்றாள் மித்ரா.
''எனக்கென்னவோ, நம்ம ஊரு எம்.எல்.ஏ.,க்கள், சீக்கிரமே அணி மாறிடுவாங்கன்னு தோணுது,'' என்றாள் சித்ரா.
''சிட்டிக்குள்ள ஒரு இடத்துல கூட, 'மினிம்மா'வுக்கு பேனர் வைக்க முடியலை; பேனர் வச்சா கிழிச்சிர்றாங்கன்னு, சுங்கம் பஸ் டெப்போ சுவத்துல பிரமாண்டமா, 'மினிம்மா' படத்தை 'பெயின்ட்'ல வரைஞ்சு, வச்சிருந்தாங்க. அதுலயும் சகதியையும், சாணியையும் அடிச்சே அழிச்சிட்டாங்கன்னா, கட்சிக்காரங்களுக்கு எவ்ளோ வெறுப்பு இருக்குன்னு பாரு,'' என்றாள் மித்ரா.
''ஆனா, கோயம்புத்தூர்ல இருக்குற பல பேரு, கட்சி உடையக்கூடாதுன்னு பொறுமை காக்குறதாச் சொல்றாங்க. யார்ட்ட கொடியும், சின்னமும் போகுதோ, அவுங்க பின்னால தான் போவோம்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
இருவரும் பயணித்த தனியார் பஸ், அரசு டவுன் பஸ் ஒன்றை முந்திக் கொண்டு சென்றது. அரசு பஸ்சில் வெளியேறிய புகை, இருவரையும் திடீரெனத் தாக்கி, மூச்சுத் திணற வைத்தது. கொதித்தாள் மித்ரா...
''இங்க பாருக்கா... எவ்ளோ புகை போகுதுன்னு. சிட்டிக்குள்ள ஓடுற கவர்மென்ட் டவுன் பஸ்க பெரும்பாலும் இப்பிடித்தான் புகையா கக்கிட்டுப் போகுது. துளி கூட, 'மெயின்டெனன்ஸ்' கிடையாது. இது மட்டுமில்லை; பிரேக் இல்லை, ஆயில் இல்லைன்னு டிரைவர்க, என்ன குறை சொன்னாலும் சரி பண்றதே இல்லியாம். இருக்கிறதை வச்சு ஓட்டுங்கிறாங்களாம். அதுக்கு மேல கேள்வி கேட்டா, குறி வச்சு, 'சஸ்பெண்ட்' பண்றாங்களாம்...''
''நீ 'சஸ்பெண்ட்'ன்னு சொன்னதும் தான், ஒரு மேட்டர் ஞாபகத்துக்கு வந்துச்சு. ஹவுசிங் போர்டுல, முறைகேடு பண்ணி, 'சஸ்பெண்ட்' ஆன, 'மாஜி' கவுன்சிலரோட 'ஹஸ்பெண்ட்', இப்பவும், தினமும் டாடாபாத் ஆபீசுக்கு வந்து, இ.இ., உட்பட எல்லாரையும் மெரட்டி, தினமும் பணம் பறிச்சிட்டுப் போறாராம். அவரோட தங்கச்சி மேல, ஏகப்பட்ட புகார் வந்தும், இவருக்குப் பயந்துட்டு, மாத்த மாட்டேங்கிறாராம் அந்த இன்ஜினியர்...''
''நானும் கேள்விப்பட்டேன்க்கா. அந்த லேடிக்கு, ஒரு லீவ் லெட்டர் கூட, சுயமா எழுதத் தெரியாதாம். ஆனா, வெளியாளுங்க மூணு பேரை, தனக்கு உதவியா ஆபீஸ்ல வேலைக்கு வச்சிக்கிட்டு, பத்திரத்துக்கு இவ்ளோ வேணும்னு வழிப்பறி நடத்திட்டு இருக்காங்களாம். அநேகமா, விஜிலென்ஸ்ல அந்தம்மாவும் சீக்கிரம் மாட்டுவாங்கன்னு அந்த ஆபீஸ்ல பேசிக்கிறாங்க...''
''இந்த 'மாஜி' கவுன்சிலர்க ஆட்டம் இன்னும் ஓய்ஞ்ச பாடில்லை மித்து... ஆடிஸ் வீதியில, நம்ம பிரஸ் கிளப் பக்கத்துலயே ஒரு ஆக்கிரமிப்பு டீக்கடை வச்சு, வாடகை வசூல் பண்றாரு, அந்த ஏரியா 'மாஜி' கவுன்சிலரு. சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்ல, கேரளாக்காரரு ஒருத்தரு, ஏகப்பட்ட ஆக்கிரமிப்புக் கடை போட்ருக்காராம். ஆனா, ஆக்கிரமிப்புல கைவைக்கவே, கார்ப்பரேஷன் கமிஷனரு நடுங்குறாரு,'' என்றாள் சித்ரா.
''அவரு, லீவு போட்டுப் போனாலும் போனாரு...'டேக்ஸ்' போடுற 'பைல்' ஆயிரக்கணக்குல 'பெண்டிங்' கிடக்குதாம். கார்ப்பரேஷன் வருவாய்த்
துறையில, உதவி பொறுப்புல இருக்கிற ஒருத்தருதான், அத்தனைக்கும் காரணமாம். ஒவ்வொரு 'பைல்'க்கும் பேரம் நடக்குதாம். ஆனா, கேட்டா 'ஆன்லைன்' பிரச்னை காரணம்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
''மித்து... வடவள்ளியில இருக்குற 'இன்ஸ்'சைப் பத்தி பேசிட்டு இருந்தோமே. அவரைப்பத்தி டி.எம்.கே.,காரங்கதான் ஏதேதோ கிளப்பி விடுறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''என்ன 'ரீசன்'... அந்த வள்ளியம்மை கோவில் மேட்டரா?'' என்றாள் மித்ரா.
''ஆமா... அந்த கோவிலுக்குப் பக்கத்துல ஒரு லாட்ஜ் இருக்காம். அதுக்குப் பின்னால, பாரஸ்ட் டிபார்ட்மென்ட் இடம், ரெண்டு ஏக்கர் காலியா கெடந்திருக்கு. அதை சுத்தம் பண்ணி, அங்க பஸ்களை நிறுத்தி, டி.எம்.கே.,காரங்க வசூல் பண்ணிட்டு இருந்தாங்களாம். பின்னால இருக்குற குடியிருப்புக்காரங்க, வழியில்லாம தவிச்சிருக்காங்க. அப்புறம் தான், அங்க பஸ்சு எதுவும் போக முடியாதபடி தடுப்புப் போட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அதுக்கும், 'இன்ஸ்'க்கும் என்ன சம்மந்தம்?''
''இந்த தடுப்பு போட்டுக் கொடுத்தது, ஆளுங்கட்சிக்காரரு. அதே ஏரியாவுல, இளநி விக்கிற ஒருத்தன், லா காலேஜ் பசங்களுக்கு கஞ்சா சப்ளை பண்ணிட்டு இருந்திருக்கான். அவன் உடன்பிறப்பாம். அவனை, அந்த 'இன்ஸ்' தூக்கிட்டாரு. அதுக்கு, டி.எம்.கே.,வுல பொறுப்புல இருக்குற ஒருத்தரு, 'இன்ஸ்'ஐக் கூப்பிட்டு, பெரிய 'துரை' மாதிரி மெரட்டிருக்காரு. நீ என்ன அந்த ஆளுங்கட்சிக்காரனுக்கு பினாமியான்னு கேட்டாராம்...''
''அட்ரா சக்கை... அட்ரா சக்கை!''
''அதுக்கு அவரு, 'நீங்க என்ன கஞ்சா விக்கிறவனுக்கு பினாமியான்னு கேட்டாராம்...''
''சூப்பரப்பு!''
''உடனே, அவரோட மச்சான் உடன் பிறப்பு, ஸ்டேஷனுக்கு நேர்ல போயி, சண்டை போட்டாராம்; அவரையும், காய்ச்சி எடுத்து அனுப்பிட்டாராம். அதுல தான், கடுப்பாகி, அந்த 'இன்ஸ்'க்கும், ஆளுங்கட்சி ஆளுக்கும் முடிச்சுப் போட்டு, தகவலைப் பரப்பி விட்டுட்டாருங்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''அக்கா! நம்ம பாலசுந்தரம் ரோட்டுல இருக்குற பசங்க ஹாஸ்டல்ல, தண்ணி வசதி கிடையாது. வெளியில இருந்து விலைக்கு வாங்குறாங்களாம். ஒரு வருஷத்துக்கு பத்து லட்ச ரூபாய்க்கு தண்ணிய விலைக்கு வாங்குனதா, ஆபீசர்க கணக்குக் காமிச்சிருக்காங்க. இதுக்கு 'போர்வெல்' போட்ருக்கலாம்; கார்ப்பரேஷன்ல பணம் கட்டி, தண்ணிய வாங்கிருக்கலாம்னு பசங்க குமுறுறாங்க,'' என்றாள் மித்ரா.
''அப்பிடியெல்லாம் செஞ்சா, ஆபீசர்களுக்கு என்ன லாபம்?'' என்றாள் சித்ரா.
''இப்பல்லாம், துட்டு கிடைக்காத எந்த வேலையையும் எந்த ஆபீசரும் செய்யுறதில்லை. என்.எச்., ரோடுகள்ல, 'ஹோர்டிங்ஸ்'களை எல்லாம் எடுக்கச் சொல்லி, உத்தரவு மேல உத்தரவு, கலெக்டருக்குப் போகுது. ஆனா, நஞ்சப்பா ரோட்டுலயே, பிரமாண்டமா விளம்பரம் வச்சிருக்காங்க. ஏன் கண்டுக்காம இருக்காரு, கலெக்டரு?'' என்றாள் மித்ரா.
வடவள்ளியில் வட்டமடித்து நின்றது, பஸ். இருவரும் இறங்கி, தோழியின் வீடு நோக்கி நடக்கத் துவங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X