சிந்தனை செய் மனமே!| Dinamalar

சிந்தனை செய் மனமே!

Added : பிப் 15, 2017
சிந்தனை செய் மனமே!

நாம் மூச்சு விடுவதால் மட்டும் வாழவில்லை. சிந்திப்பதால் வாழ்கிறோம். செயல்படுவதால் வாழ்கிறோம். ரஷ்ய தலைவர் லெனின் காலமான போது, ஒரு செய்தி நிறுவனம் இப்படி அறிவித்தது 'லெனின், தான் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்'. சிந்திப்பவர்கள் சிறகடிக்கிறார்கள். சிகரங்களை தொடுகிறார்கள்.
ஒரு ஊரில் ஒரு பயில்வான் இருந்தான். உடல் வலிமையை காட்டி எல்லோரையும் உருட்டி மிரட்டினான். அந்த ஊருக்கு ஒரு மகான் வந்தார். பயில்வானின் கொடுமைகளை சொல்லி மந்திர சக்தியால் அவனை அடக்கும்படி மக்கள் முறையிட்டனர். மகான் அந்த பயில்வானை தனிமையில் சந்தித்தார். 'உன் வலிமையை என்னிடம் காட்ட முடியமா?' என்று கேட்டார். 'முடியும்' என்றான் அவன். 'நீ தோற்றுவிட்டால் பிறருக்கு துன்பம்செய்யாமலிருப்பாயா?' என்று மகான் கேட்க, 'சரி' என்றான் அவன்.அவர், ஒரு கைக்குட்டை அளவுக்கு ஒரு பட்டுத்துணியை அவனிடம் கொடுத்தார். சற்று துாரத்தில் எதிரில் இருந்த சுவரை காட்டி, 'இந்த பட்டுத்துணிசுவருக்கு அந்த பக்கம் போய் விழும்படி எறி' என்றார். இதென்ன பிரமாதம் என்றபடி, துணியை சுருட்டி வீசி எறிந்தான். ஆனால், அது சுவரை தாண்டுவதற்குள்காற்றடித்து உள்பக்கமே விழுந்தது. மீண்டும் மீண்டும் முயற்சித்தான். அதேவிளைவுதான் ஏற்பட்டது.
'என்ன? உன் பலம் இவ்வளவுதானா?' என்று ஏளனமாக பார்த்தார். 'உன் முயற்சி வெற்றி பெறாததற்கு என்ன காரணம் என்பதை சிந்தித்தாயா?' என்று கேட்டார். அவன், ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றான். 'இப்போது நான் எறிகிறேன். பார்' என்று சொல்லிவிட்டு, உடைந்து கிடந்த செங்கல்துண்டுகளில் ஒன்றை எடுத்து துணியுடன் நடுவில் வைத்து முடிச்சு போட்டார். பிறகு வீசி எறிந்தார். காற்றின் தடையை தாண்டி சுவற்றுக்கு வெளியே கல் விழுந்தது.செயலும், சிந்தனையும் செயல் மட்டும் போதாது. செயலோடு சிந்தனையும் இணைய வேண்டும் என்று போதித்தார். அவன் அவரது சீடனானான். எல்லோரும் விஞ்ஞானிகளாக வேண்டும் என்று அவசியமே இல்லை. ஆனால் எல்லோருக்கும் விஞ்ஞான மனப்பான்மை வேண்டும். விஞ்ஞான மனப்பான்மையை அறிவுப்பூர்வமாக சிந்திக்கும்போது, வெற்றியை அடையும் பாதை இதுதான் என்பது தெளிவாகிவிடுகிறது. இதென்ன? இதெப்படி? இது எங்கே, இது எப்போது? இது எதற்காக? இது வேண்டுமா? எதிர்கால விளைவு என்ன? என்ற கோணத்தில் தொடரும் அறிவின் வேட்கையே சிந்தனைக்கு அடிப்படை.நினைத்தல், ஆராய்தல், நடந்த நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்துதல், ஒருங்கிணைத்து பார்த்தல், மறந்ததை நினைவு எல்லைக்குள் இழுத்தல், திடமான தீர்மானத்திற்கு வருதல் என்று பல படி நிலைகள் சிந்தனையில் உண்டு. பசி, தாகம், பணத்தேவை, நிர்வாகம், உறவு, பாலுணர்வு போன்ற பல பிரச்னைகளை தீர்க்க உதவும் முறையே இது.
படிப்படியான சிந்தனை : ஒரு சோதனைக்கூண்டில், ஒரு குரங்கை அடைத்தனர். அதற்கு எட்டாத உயரத்தில் வாழைப்பழம் தொங்கியது. கூண்டுக்குள் ஒரு குச்சியும், மரப்பெட்டியும் இருந்தன. வாழைப்பழத்தை எடுக்க குரங்கு முயற்சித்தது. முடிய வில்லை. கொஞ்ச நேரம் அங்குமிங்கும் உலாவவிட்டு குச்சியை கையில் எடுத்து பழத்தை நோக்கி உயர்த்தியது. அப்போதும் முடியவில்லை. சிறிதுநேரம் கழித்து குச்சியோடு, மரப்பெட்டியின் மீது ஏறியது. வாழைப்பழத்தை தட்டியது. இந்த முறை அதற்கு வெற்றி. படிப்படியான சிந்தனை என்பது இதுதான்.
ஆக்கப்பூர்வமான சிந்தனை : ஒரு சிறுவன் பெற்றோருடன் மேஜையில் சாப்பிட்டு கொண்டுஇருந்தான். சுடுநீர் கொதித்து கொண்டிருந்த கெட்டிலின் மூடி படபடவென ஆடுகிறது. மற்றவர்களுக்கு அது சாதாரண நிகழ்ச்சி. ஆனால் அவனுக்கோ சிந்தனையில் பொறி தட்டியது. உள்ளிருக்கும் நீராவிதான் இதற்கு காரணம் என அறிந்தான். ஆராய்ந்தான்; அறிவித்தான். உலகமே வியக்கும் எண்ணம் நீராவி இயந்திரங்கள் உருவாயின. அந்த சிறுவன்தான் ஜேம்ஸ்வாட்.புதிய வாழ்க்கைக்கு பயன்படும் கருவிகளை கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் இப்படி ஆக்கப்பூர்வமாக சிந்திப்பவர்களே. இந்த சிந்தனை என்பது தயாரிப்பு, அடைகாத்தல், உணருதல், சரிபார்த்தல் என்று நான்கு நிலைகளை கொண்டதாக அமையும்.
தயாரிப்பு : தேவையான விபரங்களை சேகரித்தல், அடைகாத்தல்,சிந்தனையில் மனம் குவிதல், உணருதல், தெளிவான எல்லைகளை அடைதல்.முடிவினை பலமுறை சரிபார்த்து உறுதிப்படுத்துதல். இவ்வகை சிந்தனைகளில் இருந்தே கருத்துக்கள் பெறப்படுகின்றன. இவற்றால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடையலாம். வானகத்தில் வெற்றி அடையலாம். தேர்வில் சாதனை படைக்கலாம். இலக்கியத்தின் எல்லையை தொடலாம். ஆன்மிக அனுபவங்களை பெறலாம். எல்லாவற்றிற்கும் தேவையானது ஆழ்ந்த சிந்தனை.
அபூர்வ கணங்கள் : படைப்பாற்றலில் இத்தன்மைக்கு முக்கியத்துவம் உண்டு. நாம் ஒரு பிரச்னைக்கு தீர்வு வேண்டி சிந்திக்கதொடங்குவோம். உடனடியாக தீர்வு கிடைக்காது. ஆனால் ஆழ்மனம் அதை பதிய வைத்துக் கொள்ளும். விடைகாணும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். விடை கிடைத்தவுடன் அதை வெளிப்படுத்திவிடும். அது நாம் குளிக்கும் நேரமாகஇருக்கலாம். துாங்கும் நேரமாக இருக்கலாம் அல்லது வேறு பணியில் ஈடுபட்டிருக்கும்போது நிகழலாம். நாமே அதிசயப்படத்தக்க தீர்வாக அமையலாம். படைப்பாற்றலை வளர்த்துக் கொண்டவர்களுக்கு இது சாத்தியம்.அவசரமான சிந்தனையும் வேண்டும்ஆழமாக சிந்திக்கிறேன் என்று சொல்லி எண்ணங்களை ஊறுகாய் போட்டு விடக்கூடாது. சில உடனடி முடிவுகளும் வேண்டும். பிரசவம் பார்ப்பதில் ஒரு டாக்டர் மிகவும் கெட்டிக்காரர். சிசேரியன் அதிகம் பிரபலம் ஆகாத காலத்தில், பிரசவத்தின்போது குழந்தையின் தலைதான் முதலில் வரவேண்டும். ஆனால், ஒரு பெண்ணுக்கு குழந்தையின் கை முதலில் வந்ததாம். அதை சரிசெய்யாமல் நார்மல் டெலிவரி நடக்காது என்ற நிலையில் சிகரெட்டை பிடித்தபடியே யோசித்து கொண்டிருந்தபோது அந்த டாக்டர் திடீரென சிகரெட் கங்கினால் குழந்தையின் கையில் சுட, குழந்தை கையை உள்ளே இழுத்துக்கொள்ள சுகப்பிரசவம் ஆயிற்றாம். ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்கள் உண்டு.
வித்தியாசமானசிந்தனைகள் : இத்தகைய சிந் தனைகள் தொழில் துறையில் பல உள்ளன. ஐஸ்கிரீம் கண்டுபிடிக்கப்பட்ட காலம். அதை சைனா கோப்பை என்று சொல்வோமே. அதைப்போன்ற கோப்பைகளில் வைத்து கொடுப்பார்கள். அவைகள் உடைந்து போகும். அழுக்காகிவிடும்; அடிக்கடி கழுவவேண்டும். கூட்டம் அதிகமாகி விட்டால் கோப்பைகளுக்கு தட்டுப்பாடாகிவிடும். இத்தகைய பிரச்னைகளில் இருந்து விடுபட ஒருவர் சிந்தித்து தான் கோன் ஐஸ்கிரீம். அதை உண்ணும்போது கப்பையும் சேர்த்தே தின்கிறோம் அல்லவா?உரையாற்றும்போதேசிந்தனை ஒரு சமூக நலப்பணி மன்றத்தின் ஆண்டுவிழாவில், நான் உரையாற்றினேன். திடீரென ஒருவரை மேடைக்கு அழைத்துவந்து, அவர் மாஜி ராணுவவீரர். எதிரியின் துப்பாக்கிச்சூட்டில், தோள்பட்டையில் காயம்பட்டுவிட்டது. அறுவைசிகிச்சை செய்து பிழைத்துக்கொண்டார். அறுவைசிகிச்சை செய்த டாக்டர், தோட்டாவை வெளியே எடுத்தால் ஆபத்து அதிகம் என்று சொல்லி உள்ளேயே வைத்து தைத்து விட்டாராம். அவருக்கு ஒரு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தும்படி என்னிடம் சங்கத்தலைவர் சொன்னார்.நானும் அப்படியே செய்து, இப்படி சொன்னேன்.'இன்று ஒரு அதிசயம் கண்டேன். குண்டான மனிதர்களைதான் இதுவரை பார்த்திருக்கிறேன். குண்டோடு வாழ்பவரை இன்றுதான் பார்க்கிறேன்' என்றேன். அவை ஆரவாரித்தது. மூளை இருக்கும் இடம் எல்லோருக்கும் ஒன்றுதான். சிந்தனை பிறக்கும் விதம் வேறுவேறு.
- முனைவர் இளசை சுந்தரம்எழுத்தாளர், மதுரை

98430 62817We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X