பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசு கட்டுப்பாட்டில் கோடநாடு எஸ்டேட்? : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் எகிறும் எதிர்பார்ப்பு

Updated : பிப் 15, 2017 | Added : பிப் 15, 2017 | கருத்துகள் (4)
Share
Advertisement
தமிழக அரசு கட்டுப்பாட்டில் கோடநாடு எஸ்டேட்?  : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் எகிறும் எதிர்பார்ப்பு

சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, கோடநாடு உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களும் அரசால் பறிமுதல் செய்யப்படும் நிலை உள்ளது. கோடநாடு எஸ்டேட், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் எஸ்டேட் ஆக மாற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 1991 - 96 காலகட்டத்தில், முதல்வராக ஜெ., இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, அவர் மீதும், உடந்தையாக இருந்ததாக சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தயாரித்த சொத்துப் பட்டியலில் (வரிசை எண்: 166), நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட, 900 ஏக்கர் கோடநாடு எஸ்டேட்டும் இடம் பெற்றிருந்தது.
பிரம்மாண்ட பங்களா : இந்த எஸ்டேட்டை வாங்கிய பின், அதாவது 1996க்குப் பின், ஆட்சியில் ஜெ., இருந்த போதும், இல்லாத போதும், சென்னைக்கு அடுத்தபடியாக, அதிக நாட்கள் தங்கியிருந்தது, கோடநாட்டில் தான். இதற்காகவே, பல கோடி ரூபாய் மதிப்பில், 48 ஆயிரம் சதுர அடி பரப்பிலான பிரம்மாண்டமான மாளிகை, அங்கு கட்டப்பட்டது. அந்த மாளிகையில் இருந்தவாறே, கட்சியையும், ஆட்சியையும் ஜெ., நடத்தி வந்தார். ஆரம்ப காலத்தில், கோவைக்கு விமானத்தில் வந்து, சாலை வழியாக, காரில் கோடநாடு எஸ்டேட்டுக்கு சென்று வந்தார் ஜெயலலிதா. 2001ல் மீண்டும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் சென்றார். அவரது ஹெலிகாப்டர் இறங்குவதற்காகவே, அங்கு, ஹெலிபேடு அமைக்கப்பட்டது. இந்த எஸ்டேட்டுக்கு, ஜெ.,யுடன், சசிகலாவும் வருவது வழக்கம். சொத்து குவிப்பு வழக்கு தாக்கல் செய்த போது, இது சாதாரண எஸ்டேட் ஆக இருந்தது. ஜெ., இதை வாங்கிய பின், இதன் தரமும், அழகும் மட்டுமின்றி, படிப்படியாக பரப்பளவும் கூடியது. அருகிலுள்ள, 600 ஏக்கர், ஹர்ஷன் எஸ்டேட்டும் வாங்கப்பட்டு, இத்துடன் இணைக்கப்பட்டது. இடையிலும், வழியிலுமாக ஆங்காங்கே இருந்த சின்ன சின்ன எஸ்டேட்களும் மிரட்டி வாங்கப்பட்டன.மேலும், குன்னுார் அளக்கரை அருகேயுள்ள சிறுசிறு நிறுவனங்களின் எஸ்டேட்களும், தனி நபர்கள் சிலரிடமிருந்த எஸ்டேட்களும், ராவணன், சிவகுமார் உள்ளிட்ட சசிகலாவின் உறவினர்கள் பெயர்களில் கை மாறியுள்ளன. அதன்பின், வேறு சிலருடைய பெயர்களுக்கும் மாற்றப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, தற்போது கோடநாடு எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமாக, 1,600 ஏக்கர் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இந்த எஸ்டேட்களில், இரண்டு அதிநவீன தேயிலை பேக்டரிகளும் நிறுவப்பட்டுள்ளன. சொத்து குவிப்பு வழக்கில், கோடநாடு எஸ்டேட்டின், 900 ஏக்கர் தோட்டமும், ஒரு தேயிலை பேக்டரியும் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. லஞ்ச ஒழிப்பு துறையின் மனுவை ஏற்று, மதுரை சிறு வழக்குகள் நீதிமன்றம், 1997 பிப்., 22ல் பிறப்பித்த உத்தரவுப்படி, இந்த சொத்து முடக்கி வைக்கப்பட்டது. இதன்படி, இந்த சொத்தை செட்டில்மென்ட், கிரையம், தானம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆயினும், எஸ்டேட் தொடர்ந்து ஜெயலலிதா பயன்பாட்டிலேயே இருந்தது.
யாருக்கு போகும்?: வழக்கு நடந்து வந்த காலகட்டத்தில், இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருந்த சுதாகரன் மற்றும் இளவரசி வெளியேற்றப்பட்டு, ஜெ., மற்றும் சசிகலா பெயர்களில் மட்டுமே, இந்த எஸ்டேட் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவும் இறந்து விட்ட நிலையில், சசிக்கு மட்டுமே இது சொந்தமாகுமோ என, பல தரப்பிலும் விவாதங்கள் கிளம்பின. இதற்கு மாறாக, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்படி, கோடநாடு எஸ்டேட்டில், 900 ஏக்கரும், ஒரு தேயிலை தொழிற்சாலையும், அரசால் பறிமுதல் செய்யப்படும் வாய்ப்பு உருவாகிஉள்ளது. சொத்து குவிப்பு வழக்கு பட்டியலில் இருந்த மற்ற சொத்துக்கள், அரசால் ஏலம் விடப்பட்டாலும், இதை ஏலம் விடுவதற்கு வாய்ப்பில்லை என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.ஏனெனில், அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகமான, 'டேன் டீ' நிறுவனத்துக்கு, இந்த சொத்து மாற்றப்படுவதற்கான வாய்ப்பு, அதிகமுள்ளது.
எங்களுக்கே கொடுங்க!: நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கத்தின் செயலர் ஆல்வாஸ் கூறியதாவது:கோடநாடு எஸ்டேட், மிகுந்த லாபத்தில் இயங்கி வருகிறது. அதை நஷ்டத்தில் இயங்கி வரும், 'டேன் டீ' வசம் ஒப்படைத்தால், ஒரு பயனுமின்றி போய் விடும். எனவே, நீலகிரி பழங்குடியினருக்காக, ஒரு கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி, அவர்கள் வசம் இந்த எஸ்டேட்டை ஒப்படைக்க வேண்டும்; இதை அரசிடம் கோரிக்கையாக வைப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
கோடநாடு ஊராட்சியின் முன்னாள் தலைவர் பொன்தோஸ் கூறியதாவது: கோடநாடு எஸ்டேட், பலரிடமிருந்தும் மிரட்டி வாங்கப்பட்ட சொத்து. இது பற்றி விரிவாக விசாரித்து, பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு, மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மாளிகை, ஜெயலலிதாவால் ஆசை ஆசையாகக் கட்டப்பட்டதால், அதை அவரது நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
பிரம்மாண்ட மாளிகை, தேயிலை தோட்டத்தின் நடுவே ஏரி, எஸ்டேட் முழுவதும் வலம் வருவதற்காக உயர் தரச் சாலை, கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க மிகப்பெரிய ஆடிட்டோரியம், பல அடுக்கு பாதுகாப்பு என்று கோடநாட்டை, பூமியின் சொர்க்கமாக உருவாக்கியிருந்தனர்.இதை அனுபவிக்க, இப்போது, ஜெ., உயிருடன் இல்லை; சசிகலாவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத் தான் காலத்தின் கோலம் என கூறுவர்.
ரூ.5,000 கோடி மதிப்பு : பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுவாக, இதுபோன்ற வழக்குகளில், சேர்க்கப்பட்ட சொத்துக்கள், அரசிடம் ஒப்படைக்கப்படும். அந்த சொத்தை அரசு, வேறு தேவைகளுக்கு அல்லது ஏலம் விட்டு பணத்தை திரட்டுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம். இவ்வகையில், உச்ச நீதிமன்ற உத்தரவால், கோடநாடு எஸ்டேட், தமிழக அரசிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி, 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோடநாடு எஸ்டேட்டை என்ன செய்வது என்பதை, தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பணம் ரூ.10 கோடி செலவு : ஜெ., ஆட்சியில் இருந்த போது, கோடநாடு எஸ்டேட்டுக்கு, தங்கு தடையற்ற மின்சாரம் தர வேண்டும் என்பதற்காக, கீழ்கோத்தகிரி அருகில், ஒன்னட்டி என்ற இடத்தில், 33 கே.வி., துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிக மழை, காற்று காரணமாக மின் தடை ஏற்படுமென்று கருதி, துணை மின் நிலையத்திலிருந்து, எஸ்டேட் வரை புதை மின் வடமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 10 கோடி ரூபாய் வரை, அரசு நிதி செலவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meenu - Chennai,இந்தியா
16-பிப்-201713:29:25 IST Report Abuse
Meenu கூடா நட்பு கேடாய் முடிந்தது.....
Rate this:
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
16-பிப்-201708:14:49 IST Report Abuse
தேச நேசன் வழக்கில் குறிப்பிடப்பட்ட விவரம் .// ஊட்டியில் 900 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள கோடநாடு தேயிலை தோட்டம், ஆங்கிலேயரான தாமஸ் என்பவருக்கு சொந்தமாக இருந்தது. அதை விற்பனை செய்வதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டார். அதை வாங்க 2 பெரிய நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டது. அந்த தகவல் கிடைத்ததும் கும்பல் ஒன்று தேயிலை தோட்ட உரிமையாளரை நம்பர் பிளேட் இல்லாத காரில் அழைத்து சென்று மிரட்டியதுடன், தேயிலை தோட்டத்தை ராமசந்திர உடையார் குடும்பத்திற்கு தான் விற்பனை செய்ய வேண்டும் என்று மிரட்டியது. இது தொடர்பாக தாமஸ் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரை மிரட்டி வாங்க செய்ததுடன், ரூ.10 கோடி மதிப்பிலான தேயிலை தோட்டத்தை ரூ.7.50 கோடிக்கு மிரட்டி உடையார் குடும்ப பேரில் பதிவு செய்யப்பட்டது.இரண்டொரு மாதங்களில் கோடநாடு தேயிலை தோட்டத்தை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயரில் பதிவு செய்யப்பட்டது/// எனவே கோடநாடு தேயிலை பழைய உரிமையாளர்களிடம்தான் த்திரும்ப ஒப்படைக்கவேண்டும்
Rate this:
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
16-பிப்-201708:09:33 IST Report Abuse
தேச நேசன் கோடநாடு நிலங்கள் NPஉடையாரால் பவர் பாத்திரம் மூலம் பலரிடமிருந்து மிரட்டிப் பெறப்பட்டு ஜெயாவுக்கு கொடுக்கப்பட்டதாகத்தான் செய்தி வந்தது ஜெயா சசிக்காக பலரிடமும் மிரட்டி வாங்கப்பட்ட சொத்துக்கள் உண்மை உரிமையாளர்களிடமே ஒப்படைக்கபபடவேண்டும் அதுதான் நியாயம் அதிகார துஷ்பிரயோகம் மூலம் வாங்கிய சொத்துக்களை உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதே நியாயம் சட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X