விழிப்புணர்வு இருந்தால் விதியை வெல்லலாம்| Dinamalar

விழிப்புணர்வு இருந்தால் விதியை வெல்லலாம்

Added : பிப் 16, 2017 | கருத்துகள் (1)
விழிப்புணர்வு இருந்தால் விதியை வெல்லலாம்

புற்றுநோய் என்ற வார்த்தையை கேட்டாலே நம் மனதில் ஒரு பயம் வருகிறது. புற்றுநோய் வந்து விட்டால் பிழைக்க முடியாது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இன்றைய நிலை அதுவல்ல. தேவையான சிகிச்சைகளை செய்துகொண்டு நலமுடன் வாழலாம். உலக அளவில் மனித இறப்புக்கு காரணமான நோய்கள் பட்டியலில், இரண்டாமிடத்தில் புற்றுநோய் இருக்கிறது. இந்தியாவில் இருபாலரும் புற்றுநோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயில் பல வகை உள்ளன.
பெண்களும் புற்றுநோயும் : மார்பக புற்றுநோயும், கருப்பை வாய் புற்றுநோயும் பெண்களை தாக்குவதில் முக்கியமானதாகும். உலக அளவில் 4.5 லட்சம் பெண்கள், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிக அளவு பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. குறைந்த வயதில் பூப்படைவதும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதுமே, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாகும். 'ஈஸ்ட்ரோஜன்' சுரப்பு அதிகமாக இருப்பதால், ஒன்பது வயதுக்குள் பெண்கள் பூப்படைகின்றனர். இது புற்றுநோய் செல்கள் உண்டாக காரணமாகிறது. குறைந்த வயதில் பூப்படையும் பெண்கள், இருபது வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்வதுடன், குழந்தை பெற்ற பின் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதனால் புற்றுநோய் உள்ளதா என முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். மார்பகங்களில் கட்டி தென்பட்டால் அதனை கண்டுபிடித்து உடனடியாக அகற்றி உயிரை காப்பாற்றலாம். இல்லையென்றால் நோய் முற்றி மரணம் ஏற்படலாம். எனவே நோயின்றி வாழ பரிசோதனை முக்கியம்.
தாய்ப்பாலின் அவசியம் : வேலைக்கு செல்லும் பெண்கள், காலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே குழந்தைகளுக்கு பால் கொடுக்கின்றனர். ஒரு சிலருக்கு, தாய்ப்பாலே சுரப்பதில்லை. சிலர் தாய்ப்பால் கொடுத்தால் அழகு குன்றிவிடும் என்ற தவறான எண்ணத்தில், தாய்ப்பால் கொடுப்பதில்லை. இதுபோன்ற தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். எனவே குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால், குழந்தைகளுக்கும், ஊட்டம் கிடைக்கிறது.மார்பக புற்றுநோய், பெண்களுக்கு அதிகம் வருவதாக கண்டறியப்பட்டாலும், புகைப்பிடித்தல் காரணமாக 15 சதவீத மார்பக புற்றுநோய் ஆண்களுக்கும் வருகிறது.
மரபு வழி நோய் : மரபு வழியிலும் 15 சதவீதம் புற்றுநோய் வருகிறது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஜீன்கள் பி.ஆர்.சி.ஏ.1, பி.ஆர்.சி.ஏ.2 என அழைக்கப்படுகின்றன. ஒரு வீட்டில்ஏற்கனவே ஒருவருக்கு புற்று நோய் இருந்தால் மற்றவர்கள்'மேமோகிராபி' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இப்புற்றுநோயை சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் சரிசெய்யலாம்.பெண்கள் தங்கள் மார்பகங்களில் ஏதேனும் கட்டிதென்பட்டாலோ அல்லது நீர், ரத்தம், சீழ் முதலியவை வடிந்து வந்தாலோ, தடித்து இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.'மேமோகிராபி' சோதனையின் மூலம் நம் கைகளுக்கு தட்டுப்படாமல் இருக்கும் தடிப்புகள், சிறு கட்டிகள் துல்லியமாக தெரிந்துவிடும். எனவே, நாற்பது வயதிற்கு மேற்பட்ட இருபாலரும் இந்த பரிசோதனை மேற்கொண்டால் மார்பக புற்றுநோய் பாதிப்பை அறியலாம். புற்றுநோயைகண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் இயல்பான வாழ்க்கை வாழலாம்.
சூரிய ஒளி சிகிச்சை : தினமும் மூன்று மணி நேரம் சூரிய ஒளி உடல் மேல் பட்டால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சூரிய ஒளி உடலில் படும் போது விட்டமின் 'டி'உற்பத்தி துாண்டப்படுகிறது. மார்பக செல்கள், விட்டமின் 'டி'யை ஒரு வித ஹார்மோனாக மாறும் திறன் பெற்றவை. இந்த ஹார்மோன் மார்பகத்தில்புற்றுநோய் வர விடாமல் தடுக்கிறது. இளம், நடுத்தர மற்றும் வயதான பெண்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் இது தெரியவந்தது.
உயிரிழப்பு : உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிக அளவில் மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளது. ஆனால், மரண மடைவது குறைந்த சதவீதத்தினர்தான். மார்பக புற்றுநோயால் அதிக அளவில் இறப்பு ஏற்படுவது இந்தியாவில் தான் என தெரிய வந்துள்ளது. இதற்கு மார்பக புற்று நோய் குறித்து நம் நாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம்.அமெரிக்க பெண்கள், உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்கின்றனர். இதனால், நோய் பாதிப்பை கண்டறிந்து, அறுவை சிகிச்சை, ஹீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள். உயிரிழப்பு தடுக்கப்படுகிறது.
தேவை விழிப்புணர்வு : அதிக அளவில் மக்கள்தொகையுள்ள நம் நாட்டில் முறையாக நோயாளிகளை பதிவு செய்வதில்லை. இதனால் யாருக்கு என்ன நோய் உள்ளது எனகணக்கிடுவதில் சிக்கல் உள்ளது. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், கிராமப்புற மக்களிடம் போதிய விழிப்புணர்வு இன்றி உயிரிழப்பு ஏற்படுகிறது. இன்றும் கூட மார்பகத்தில் கட்டி உள்ள பெண்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வருவதில்லை. 'சாதாரண கட்டிதானே, அதனால் ஒன்றும் ஆகி விடாது' என்றே நினைக்கின்றனர்.மேலும், அதை வெளியில் சொல்வதற்கு வெட்கப்படுகின்றனர். மருத்துவர்களை அணுகாமல் அக்கம் பக்கத்தினர் சொல்வதை கேட்டு தவறான சிகிச்சைகள் எடுக்கின்றனர். நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அந்நிலையில், நோய் பல உறுப்புகளை பாதித்து விடுகிறது. அதனால், சிகிச்சை அளித்தும் நோயாளியை காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.
வரும்முன் காப்போம் : நோய் வந்தபின் அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்வதை விட, வரும்முன்காப்பதே புத்திசாலித்தனம். மேலை நாடுகளின் இந்நடைமுறையை பின்பற்றி உடலை சீரான இயக்கத்தில் வைத்துக் கொள்கின்றனர். அங்கு நாற்பது வயது பெண்கள் 'மேமோகிராபி' பரிசோதனை கட்டாயமாக செய்து கொள்ள வேண்டும்.அவர் மருத்துவமனையை அணுகாவிட்டால், மருத்துவமனையிலிருந்து அவருக்கு அழைப்பு வரும். இதனால் நோய் இருப்பது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு குணமாக்கப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் இந்நடைமுறை இல்லை. தாமாக வந்து பரிசோதனை செய்பவர்கள் மிகவும் குறைவு.விதியை வெல்வோம்
நாம் பயன்படுத்தும்'டூவீலர்களை' குறிப்பிட்ட இடைவெளியில் 'சர்வீஸ்' செய்கிறோம். 'ஆயில்' மாற்றுகிறோம். ஆனால் இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கும் நம் உடல் உறுப்புகளை பரிசோதனை செய்ய மனம் வருவதில்லை. வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம். இது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி யும் பயனில்லை. நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வராததற்கு பொருளாதாரமும் ஒரு காரணமாக உள்ளது.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோயில்லாமல் வாழ வேண்டியது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமான ஒன்று. எவ்வளவு பொருளாதார வசதிகள் இருந்தாலும், நோய் என்று வந்து விட்டால் மனிதர்கள் ஆட்டம் கண்டு விடுகின்றனர். நம் நாட்டில் புற்று நோய்க்கு சிறப்பான சிகிச்சை முறைகள் உள்ளன. மக்களாகிய நாம் விழிப்புடன் இருந்தால் விதியை வென்று நலமுடன் வாழலாம்.
- டாக்டர் நாகேந்திரன்

மதுரை, 97901 11411We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X