உள்துறை வீதி| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

உள்துறை வீதி

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (4)
 உள்துறை வீதி Ramanujar Download

கொட்டார வாசலுக்குத் தெற்கே உமிக்கட்டிலில் அமர்ந்திருந்தார் உடையவர். கோயில் மாடுகளுக்காகக் கொண்டு வரப்படும் தவிடைச் சேகரித்து வைக்கிற இடம் அது. முதலியாண்டான் பக்கத்தில் இருந்தான். கூரத்தாழ்வான் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்தான். கோயில் நிர்வாகிகள் பலபேர் சுற்றி நின்றிருந்தார்கள்.
'கூரேசா! நாங்கள் கணக்கு வழக்கு பார்க்கப் போகிறோம். உனக்கு இடைஞ்சலாக இருக்குமானால் நீ வேறு இடம் சென்று அமர்ந்து உன் வேலையைப் பார்க்கலாம்' என்றார் ராமானுஜர்.தமது முதன்மைச் சீடர்கள் இரண்டு பேருக்கும் வேலைகளைப் பகிர்ந்து கொடுத்திருந்தார் அவர். வைணவ நடைமுறைகளை எளியோரும் புரிந்துகொள்ளும்படி எழுத்தில் ஆவணமாக்கும் பொறுப்பு கூரத்தாழ்வானுக்கு. கோயில் நிர்வாகம் சிக்கலின்றி நடைபெற உரியதைச் செய்து மேற்பார்வை இடுகிற பொறுப்பு முதலியாண்டானுக்கு. கூரத்தாழ்வான் வேலையில் ராமானுஜருக்குப் பெரிய பிரச்னைகள் இல்லை. அது அவரும் அவனும் மட்டும் சம்பந்தப்பட்டது. அவன் கர்மயோகி என்கிறபடியால் சுணக்கத்துக்கு வாய்ப்பில்லை. ஆனால் கோயில் நிர்வாகம் அப்படிப்பட்டதல்ல. ஏராளமான தொழிலாளர்கள், எக்கச்சக்கமான உத்தியோகஸ்தர்கள், அவர்களுக்கு மேலே அதிகாரிகள், அதற்கும் மேலே மேற்பார்வையாளர்.திருக்கோயில் பணியே என்றாலும் தொழிலாகி விடுகிறபோது தொல்லைகள் வராதிருப்பதில்லை. இண்டு இடுக்குகளில் கரப்பான்பூச்சிகளும், சந்து பொந்துகளில் ஊழல்களும் எங்கும் எதிலும் தவிர்க்க முடிவதில்லை. அது பெரிய கோயில். எத்தனை தலைமுறைகளாக, எத்தனை எத்தனை மன்னர்களின் மானியங்கள் சேர்ந்து கிடக்கின்றன! நிலங்களாக, வயல்களாக, தோப்பும் துரவுமாக, பொன்னும் மணியுமாக, காலகாலமாகத் தொடரும் கட்டளைக் கல்வெட்டுகளாக யாரும் அதுவரை எண்ணிப் பார்த்ததுகூட இல்லை.ராமானுஜர் செய்ய ஆரம்பித்தார்.'இதோ பார் முதலியாண்டான்! ஒவ்வொன்றுக்கும் எனக்குக் கணக்கு வேண்டும். தினசரி வரவு செலவு முதல் ஆண்டிறுதிக் கணக்கு வரை எதிலும் ஒரு சிறு பிழையும் நேர்ந்துவிடக் கூடாது. இது புல்லுக்குப் பொசிகிற நீர் அல்ல. அரங்கன் சொத்தில் அரை நெல்லளவும் வீணாகிவிடக் கூடாது.''உத்தரவு சுவாமி!'அன்று அது ஆரம்பித்தது. கோயில் நிலங்களில் இருந்து வருகிற தானியங்கள் அளக்கப்பட்டன. யார் யாரிடமிருந்து என்ன வருகிறது, எவ்வளவு வருகிறது என்று எழுதி வைக்கப்பட்டது. எடுத்து செலவு செய்யும்போதெல்லாம் தவறாமல் குறித்து வைக்கப்பட்டது. வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் ராமானுஜரே சம்பளம் நிர்ணயித்தார். அவரவர் பணிகளுக்கு நியாயமான சம்பளம். உரிய நாளில் அது சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்று பார்க்க ஓர் ஊழியர்.அரங்கனுக்கு ஆண்டு முழுதும் உற்சவம்தான். உற்சவம் என்றால் செலவில்லாமல் எப்படி? எப்போதும் கட்டுமானப் பணிகள் இருக்கும். எப்போதும் செப்பனிடும் பணிகள் இருக்கும். மதில் சுவர்களைப் பராமரிப்பதே பெரும்பணி. ஒவ்வொன்றையும் கவனித்துச் செய்ய நிபுணர்களைத் தருவித்தார்.ஆ, சோலைகள் முக்கியம். வண்டினம் முரலும் சோலை. மயிலினம் ஆலும் சோலை. கொண்டல் மீதணவும் சோலை. குயிலினம் கூவும் சோலை.'காவிரி பாய்ந்து செழிக்கிறது தாசரதி! இந்நகரில் கண்ணில் படும் இடமெல்லாம் சோலைகளாக இருக்க வேண்டாமா? அரங்கனின் அர்ச்சனைக்கு நானாவித மலர்களும் துளசியும் தவனமும் வந்து குவிய வேண்டாமா?''அவசியம் சுவாமி!'கண்கட்டு வித்தையே போல் திருவரங்கம் முழுதும் சோலைகள் உதித்தன. எங்கும் பூத்துக் குலுங்கின. தோட்டப் பணிகளுக்கு ஏராளமான பேர் சேர்க்கப்பட்டார்கள். கோயில் வேலைக்கு யாரும் வரலாம். குலம் பொருட்டல்ல. சாதி பொருட்டல்ல. அந்தஸ்து பொருட்டல்ல. அரங்கன்மீது மாளாக்காதல் கொண்டவனா? வா, போதும். செய்வது சேவைதான். ஆனால் சம்பளம் உண்டு. அதுவும் சரியான சம்பளம்.மறுபுறம் கருவூல நிர்வாகம். கணக்காளர். உதவியாளர்கள். யாரும் தனியே உட்கார்ந்து வேலை பார்க்கக்கூடாத இடம். 'கொத்திலவராகவே இருக்கட்டும்!' என்றார் ராமானுஜர். கொத்துக் கொத்தாகத்தான் அவர் ஆள்களைப் பணியமர்த்தினார். யாரும் நப்பாசையில் கூடத் தவறு செய்துவிட முடியாதபடிக்கு ஏற்பாடு.மடைப்பள்ளி நிர்வாகத்துக்குத் தனியொரு குழுவை அமைத்தார். எம்பெருமானுக்கு அமுது செய்விப்பது பெரிய காரியம். பிரசாதமாக அதுதான் பக்தர்களுக்குப் போகிறது. மடைப்பள்ளிக்கு உள்ளே வருகிற அரிசி, பருப்பு, மிளகு, வெல்லம், நெய் எதிலும் தரத்தில் ஒரு மாற்றும் குறையக் கூடாது.'அனைத்தும் செய்துவிடலாம் உடையவரே! ஆனால் சிப்பந்திகள் அத்தனை பேருக்கும் கோயிலுக்கு அருகிலேயே வீடு கட்டித் தரவேண்டும் என்கிறீர்களே, அதுதான் சற்று…'நிர்வாகிகள் தயங்கினார்கள்.'ஏன், இதிலென்ன தயக்கம்? ராஜாவுக்கு சேவகம் செய்கிறவர்கள் கோட்டைக்குள்ளேயேதான் இருப்பார்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர வேண்டாமா? இவன் ராஜனுக்கெல்லாம் ராஜன். இவனது சேவகர்கள் மட்டும் எதற்குச் சிரமப்பட வேண்டும்? தவிர, கோயில் காரியத்தில் இருக்கிற அத்தனை பேரும் அரங்கன் திருமுன் சமமானவர்கள். அவர்கள் வசிக்கும் வீடுகளும் ஒரே மாதிரிதான் இருந்தாக வேண்டும்.'அதிகாரியா, அடிமட்ட ஊழியனா என்ற பேச்சுக்கே இடமில்லை. அரங்கன் சேவையில் இருக்கிறவர்கள். அவ்வளவுதான். விக்கிரம சோழன் வீதியில் ராமானுஜர் மேற்பார்வையிலேயே ஊழியர் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அத்தனை பேரையும் அவரே அழைத்து வந்து அங்கே குடி வைத்தார்.'சுவாமி, கோயில் பணியாளர்களுக்காக இப்படியொரு வீதியே அமைவது இதுதான் முதல் முறை. இந்த வீதிக்கு என்ன பெயர் இடலாம்?''பெயரென்ன பெயர்? கோயில் உள்துறைப் பணியாளர்கள் வீதி இது. அவ்வளவுதானே!'உள்துறைப் பணியாளர் வீதிதான் பிறகு உத்தர வீதியாக மருவிப் போனது. 'சுவாமி, எனக்கென்னவோ நீங்கள் உள்துறை ஊழியர்கள் அத்தனை பேரையும் ஒரே இடத்தில் குடி வைத்ததற்கு வேறு காரணம் இருக்கலாம் என்று திரும்பத் திரும் பத் தோன்றுகிறது!' தயங்கித்தான் சொன்னான் முதலியாண்டான்.'எளிய காரணம்தான் தாசரதி. திருவரங்கப் பெருமான் உற்சவங்கள் பெரும்பாலும் இரவில் தொடங்குகின்றன. இரவுப் பொழுதிலேயேதான் முடியவும் செய்கின்றன. பணியாளர்கள் நள்ளிரவுக்குப் பிறகு கோயில் காரியங்களை முடித்துவிட்டு அவரவர் வீடு போய்ச் சேர்வது சிரமம். கோயிலுக்குப் பக்கத்திலேயே வீடிருந்தால் அவர்களுக்குச் சற்று நிம்மதியாக இருக்கும். தவிர, அரங்கனுக்கு அருகில் இருக்கிறோம் என்னும் எண்ணம் எப்போதும் அவர்களைத் தவறுகளில் இருந்து தள்ளி நிற்கச் சொல்லும்.'முதலியாண்டானுக்குப் புரிந்தது. மிகவும் பிடித்தது. ஆனால் வேறு சிலருக்கு இது அறவே புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை.'சீர்திருத்தமாவது மண்ணாங்கட்டியாவது? இந்த மனிதரைத் தீர்த்துக்கட்டி விட்டுத்தான் மறுவேலை!' என்று முடிவு செய்தது ஒரு கூட்டம்.
(நாளை தொடரும்...)writerpara@gmail.com- பா.ராகவன் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X