சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

வசந்த உற்சவம்

Added : பிப் 20, 2017
Share
Advertisement
தகித்துக் கொண்டிருந்தது மணல் வெளி. முந்தையக் கணம் வரை சூடு பொறுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் திருக்கோட்டியூர் நம்பி பேசத் தொடங்கியதும் அந்நினைவே இல்லாது போனது. உலகு மறந்து கரம் கூப்பி நின்று விட்டார்கள்.'எம்பெருமானாரே, நீர் பட்டினி கிடந்து வாடியது போதும். இதோடு உமது உபவாசத்தை நிறுத்திக் கொள்ளும்.'ராமானுஜரால் பதில் சொல்ல
வசந்த உற்சவம் Ramanujar Download

தகித்துக் கொண்டிருந்தது மணல் வெளி. முந்தையக் கணம் வரை சூடு பொறுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் திருக்கோட்டியூர் நம்பி பேசத் தொடங்கியதும் அந்நினைவே இல்லாது போனது. உலகு மறந்து கரம் கூப்பி நின்று விட்டார்கள்.

'எம்பெருமானாரே, நீர் பட்டினி கிடந்து வாடியது போதும். இதோடு உமது உபவாசத்தை நிறுத்திக் கொள்ளும்.'ராமானுஜரால் பதில் சொல்ல முடியவில்லை.
'சொல்வது காதில் விழுகிறதா? இன்னொரு விஷயம். இனி நீங்கள் ஏழு வீடுகளில் பிட்சை எடுக்க வெளியே செல்ல வேண்டியதில்லை. நான் சொல்கிறேன். உமக்கு இனி ஓரிடத்துப் பிட்சைதான். அதையும் இந்தக் கிடாம்பி ஆச்சான் மட்டுமே செய்வார்.'
'சுவாமி..!'
'மறு பேச்சே கிடையாது. வைணவம் தழைக்க நீங்கள் வேண்டும். நீங்கள் வேண்டுமென்றால் நீங்கள் நீடு வாழ வேண்டும். உணவில் விஷம் கலக்கிற உத்தமர்களிடம் பிட்சை எடுத்து உண்டு என்னாவது?' திடுக்கிட்டுப் போனது கூட்டம்.
மிக அந்தரங்கமான ஒரு சிலரிடம் ராமானுஜர் நடந்ததைத் தெரிவித்திருந்தது உண்மையே. ஆனால் அத்தனை பேருக்கும் வெட்டவெளிச்சமாக்கி விட்டார் திருக்கோட்டியூர் நம்பி.
'என்ன, ராமானுஜருக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதா? யார் செய்தது இந்நீசச் செயலை?' கொதித்துப் போய் விட்டார்கள் அரங்கன் அடியார்கள்.
'இல்லை. விட்டுவிடுங்கள். யார் என்பது முக்கியமல்ல. எண்ணத்தில் விஷம் தோய்ந்தவர்களும் எம்பெருமான் கோயில் கொண்டிருக்கிற தலத்திலேயேதான் வசிக்கிறார்கள். அவனே சகித்துக் கொள்ளும்போது நாம் பொறுமை இழக்கக்கூடாது' என்று தடுத்துவிட்டார் ராமானுஜர்.
'இங்கேயே பேசிக்கொண்டிருந்தால் எப்படி? அனைவரும் திருமடத்துக்கு வாருங்கள். இலை போடத் தயாராக நான் முன்னால் போகிறேன்' என்று சொல்லிவிட்டுக் கிடாம்பி ஆச்சான் முன்னால் விரைந்தான்.
அன்று மடத்தின் சமையலறை அவனது கட்டுப்பாட்டுக்கு வந்தது.
உடையவர் உண்ண ஏற்றது எது என்று அவனே தீர்மானிப்பான். இன்னொருத்தரை நெருங்க விடாமல் தன் கையால் தானேதான் சமைப்பான். சீடர்கள், பக்தர்கள், விருந்தினர்கள் யாரானாலும் சரி. எத்தனை பேரானாலும் சரி. ராமானுஜர் வசித்து வந்த சேரன் மடத்தில் தளிகை அவனுடையதுதான்.
'எம்பெருமானாரே! நீர் என்னிடம் கேட்ட ரகஸ்யார்த்தங்களுக்கு அப்பால், பெரிய நம்பிகள் சொல்லிக்கொடுத்த ரகஸ்யார்த்தங்களுக்கு அப்பால் அவசியம் பயிலவேண்டிய இன்னொன்று உண்டு. அது, திருவாய்மொழி விளக்கம். நான் திருமாலையாண்டானிடம் சொல்லி வைக்கிறேன். அவர் உமக்கு இனி திருவாய்மொழி வகுப்பெடுப்பார்' என்று பரிவோடு சொன்னார் திருக்கோட்டியூர் நம்பி.
திருமாலையாண்டான் நம்பியும் ஆளவந்தாரின் சீடர்களுள் ஒருவர். பெரும் ஞானஸ்தன். ஆளவந்தார் சொல்லிக் கொடுத்ததற்கு மேல் அணுவளவும் இன்னொருவர் சொன்னது அவர் செவியில் ஏறாது. அப்படியொரு குருபக்தி கொண்டவர்.
அன்று மதிய உணவின்போது திருக்கோட்டியூர் நம்பி இதனைச் சொன்னபோது, 'சுவாமி, இதைவிட எனக்கு பாக்கியம் ஏது? காத்திருக்கிறேன்!' என்றார் ராமானுஜர்.
'இப்போதெல்லாம் உடையவருக்குப் பாடம் கேட்க நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது நம்பிகளே. திருக்கோயில் பணிகள் மூச்சு முட்ட வைக்கின்றன' என்றார் பெரிய நம்பி.
'உண்மைதான் சுவாமி. ஆனால் அரங்கன் ஆளும் பூமி இது. அக்கிரமங்கள் கூடாதல்லவா? அதிகார துஷ்பிரயோகம் தவறல்லவா? ஒரு சாதாரண அரசனுக்கு அவப்பெயர் வந்தாலே தாங்க மாட்டாமல் தவியாய்த் தவித்து விடுவான். இவன் அரசனுக்கெல்லாம் அரசனல்லவா! அருளாட்சி புரிகிறவனல்லவா? அவனது திருக்கோயிலில் தவறுகள் நடைபெறுவதை என்னால் காணச் சகிக்கவில்லை.'
அவர்களுக்குப் பிரச்னையின் தன்மை தெரியும். அதன் தீவிரம் தெரியும். சிறு ஊழல்களைப் பற்றி ராமானுஜர் சிந்திக்கவில்லை. நெடுநாள் நோக்கில், பிழைபடாத பெருந்தொண்டாகக் கோயில் நிர்வாகம் வார்த்தெடுக்கப்பட வேண்டுமென அவர் விரும்பினார். செய்த சீர்திருத்தங்கள் எல்லாமே அதற்காகத்தான்.
சோழ தேசத்தில் சைவம் செழித்துக் கொண்டிருந்த காலம். ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசனும் சிவத்தொண்டனாக இருந்தான். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி சிவாலயங்களைக் கட்டுவித்து, தினப்பணிகளும் திருவிழாக்களும் தவறாமல் நடக்க மானியங்கள் எழுதி வைத்துக் கொண்டிருந்தார்கள்.
'என் பெருமானுக்கு அப்படியொரு தொண்டு மனம் கொண்ட மன்னன் வாய்க்க மாட்டானா' என்று ராமானுஜர் ரகசியமாக ஏங்கிக் கொண்டிருந்தார். ஒரு மன்னனின் கவனிப்பு இருந்துவிட்டால் மற்றவர்களின் ஆட்டமும் கொட்டமும் அடங்கிவிடும். அதிகார துஷ்பிரயோகங்கள், இருந்த சுவடு தெரியாமல் ஓடிவிடும். மானியங்கள் பொருட்டல்ல. தானியங்களும் பொருட்டல்ல. மாலவன் தாள் பணியும் மன்னன் ஒருவன் வேண்டும்.
'எனக்குப் புரிகிறது உடையவரே. ஒரு மன்னனே தொண்டன் ஆகி உம் மனக்குறையைப் போக்கட்டும்!' என்று சொல்லிவிட்டு திருக்கோட்டியூர் நம்பி கிளம்பிப் போனார். ராமானுஜர் தமது வழக்கமான பணிகளில் மூழ்கத் தொடங்கினார்.
கோயிலில் வசந்த உற்சவம் ஆரம்பமானது. வண்ண விளக்கொளியும் வாண வேடிக்கைகளும் சுடர்விடத் தொடங்கின. எங்கெங்கிருந்தோ பக்தர்கள் திருவரங்கத்தை நோக்கி வரத் தொடங்கினார்கள். நான்கு புறமும் சூழ்ந்த காவிரிக்கு அணை கட்டினாற்போல எங்கும் மனித முகங்கள். ஊரெங்கும் மங்கல வாத்திய முழக்கங்கள். ஆடல் பாடல் அரங்கேற்றங்கள். திரும்பும் இடமெல்லாம் பிரபந்தப் பாராயணம் ஒலித்துக் கொண்டிருந்தது. இங்கே காலட்சேபங்கள். அங்கே கலை நிகழ்ச்சிகள். பூவுலக சொர்க்கமென வருணிக்கப்படும் திருவரங்கம் அப்போது சொர்க்கத்தை விஞ்சிய பேரெழில் நகரமாக ஜொலித்துக் கொண்டிருந்தது.
கண்ணிமைக்க நேரமில்லாமல் உடையவரும் அவரது சீடர்களும் திருக்கோயில் பணிகளில் தம்மைக் கரைத்துக் கொண்டார்கள். அதிகாலை
துயிலெழுந்து காவிரிக்குக் குளிக்கப் போகிற வரைதான் நேரம் அவர்களுடையதாக இருக்கும். நித்ய கர்ம அனுஷ்டானங்கள் முடிந்தபிறகு கோயில் வேலைகள் கூடிவிடும்.
அன்றைக்கு அப்படித்தான் உடையவரும் அவரது சீடர்களும் காவிரிக்குக் குளிக்கப் போனார்கள். பிரபந்தம் பாடியபடியே நீராடி முடித்துக் கரையேறிய ராமானுஜர் ஒரு கணம் அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டார்.
'சுவாமி, என்ன ஆயிற்று?' என்றான் கூரத்தாழ்வான்.
'அங்கே பார்!' என்று அவர் சுட்டிக்காட்டிய திசையில் அத்தனை பேரும் திரும்பிப் பார்த்தார்கள்.
புவி காணாத ஒரு சம்பவம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. எந்த யுகத்திலும் யாரும் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க முடியாத ஒரு சம்பவம். அறியாமையின் எல்லையும் கவித்துவ மனத்தின் வெளிப்பாட்டு உச்சமும் கூடிக் களிக்கிற மகத்தானதொரு மாயத் தருணம்.
அவர்கள் யாருக்கும் பேச்சே எழவில்லை. திகைப்பு நீங்கவே பல கணங்கள் பிடித்தன.

(நாளை தொடரும்...)
writerpara@gmail.com

- பா.ராகவன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X