சென்னை : ""புதிய ஊதிய விகிதம் ஒப்பந்தத்தின்படி, அரசு ஊழியர்களைப் போல், போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். ஆண்டுக்கு ஒன்றரை சதவீதமாக இருந்த சம்பள உயர்வு, இனி 3 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 2,000 ரூபாயும், அதிகபட்சமாக 6,500 ரூபாயும் சம்பள உயர்வு கிடைக்கும்,'' என பல்வேறு அறிவிப்புகளை, அமைச்சர் நேரு நேற்று வெளியிட்டார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு, புதிய ஊதியம் வழங்குவது தொடர்பாக, அரசுடன் தொ.மு.ச., நிர்வாகிகள் ஏற்கனவே பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை , தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மாலையில் புதிய தலைமைச் செயலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.போக்குவரத்துத் துறை செயலர் ரமேஷ் ராம் சர்மா மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குனர்கள் மற்றும் தொ.மு.ச., நிர்வாகிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, நிருபர்களிடம் கூறியதாவது:ஒப்பந்தம் நிறைவேறியதன் மூலம், ஆண்டுக்கு 552 கோடி ரூபாய் அளவிற்கு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பணப்பயன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, அரசு ஊழியர்கள் பெறும் சம்பள விகிதம் போன்று, இனி போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்கப்படும். இதன் மூலம், தொழிற்சங்கங்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.ஊழியர்கள், குறைந்தபட்சம் 2,000 ரூபாய் முதல், அதிகபட்சமாக 6,500 ரூபாய் சம்பள உயர்வு பெறுவர். ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில், ஆண்டுக்கு ஒன்றரை சதவீதம் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வந்தது.
இனி, இது 3 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.மேலும், அரசு ஊழியர்களைப் போல், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இனி பதவி உயர்வுகள் கிடைக்கும். ஏற்கனவே, மூன்று பதவி உயர்வுகள் இருந்தது, புதிய ஒப்பந்தத்தின் மூலம் ஐந்து பதவி உயர்வுகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் புதிய ஊதிய உயர்வு பலன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஊழியருக்கும் முதல் தவணையாக ஏற்கனவே 7,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதன் மூலம், 80 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.மீதமுள்ள ஒட்டுமொத்த நிலுவைத் தொகைகளும் சேர்த்து மொத்தம் 80 கோடி ரூபாய், வரும் முதல் தேதி சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். புதிய ஊதிய ஒப்பந்தத்தின் மூலம், ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 295 பேர் பயன் பெறுவர்.இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.
அரசு ஊழியர்களா?அமைச்சரிடம்,"அரசு ஊழியர்களைப் போல், சம்பள விகிதம் அறிவித்துள்ளீர்கள். அதைப் போல், போக்குவரத்து தொழிலாளர்கள், அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவார்களா?' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "இந்த கேள்வியை முதல்வரிடம் தான் கேட்க வேண்டும். எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் நான் செய்துள்ளேன்' என்று, அமைச்சர் பதிலளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE