சின்னம்மாவுக்காக சின்ன அம்மாவை மறந்த எம்.எல்.ஏ.,! "சோப்'பை வீணாக்காமல் "சோப்' போடும் அதிகாரிகள்!

Added : பிப் 21, 2017
Advertisement
""தமிழக அரசியல் களமே, ரொம்ப பரபரப்பாக போயிட்டிருக்கு பார்த்தியா மித்ரா. எம்.எல்.ஏ., எல்லாம் தொகுதிக்குள் போனா, இருக்குது கச்சேரி,'' என்று கோபமாக பேசியவாறே, மித்ராவின் வீட்டுக்குள் வந்தாள் சித்ரா.""வாங்கக்கா! ரொம்ப சரியா சொன்னீங்க. மக்கள் ரொம்பவே கொதிச்சு போயிருக்காங்க. அதோட விளைவ, விரைவில் பார்க்கலாம். இப்போ ஆளும் கட்சியில் யார் இருக்கா; ஆளும் கட்சியில் எத்தனை அணி
சின்னம்மாவுக்காக சின்ன அம்மாவை மறந்த எம்.எல்.ஏ.,! "சோப்'பை வீணாக்காமல் "சோப்' போடும் அதிகாரிகள்!

""தமிழக அரசியல் களமே, ரொம்ப பரபரப்பாக போயிட்டிருக்கு பார்த்தியா மித்ரா. எம்.எல்.ஏ., எல்லாம் தொகுதிக்குள் போனா, இருக்குது கச்சேரி,'' என்று கோபமாக பேசியவாறே, மித்ராவின் வீட்டுக்குள் வந்தாள் சித்ரா.
""வாங்கக்கா! ரொம்ப சரியா சொன்னீங்க. மக்கள் ரொம்பவே கொதிச்சு போயிருக்காங்க. அதோட விளைவ, விரைவில் பார்க்கலாம். இப்போ ஆளும் கட்சியில் யார் இருக்கா; ஆளும் கட்சியில் எத்தனை அணி இருக்கு, யாருக்கு யார் ஆதரவுன்னு ஒன்ணுமே புரியல,'' என்று, அரசியல் குறித்து பேச ஆம்பித்தாள் மித்ரா.
""அதை விடு. கூவத்தூர் ரிசார்ட்டில் அடைச்சு வெச்சிருந்த திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., நிலையை பார்த்தியா,'' என்றாள் சித்ரா.
""ஆமா, கேள்விப்பட்டேன். அவருடைய சின்ன அம்மா இறந்துட்டாங்கன்னு தெரிஞ்சும் கூட, அவர் வரலியாமே. அந்த விஷயமே அவருக்கு அந்த நேரத்தில் சொன்னாங்களான்னும் தெரியல,'' என்று மித்ரா கூறினாள்.
""சின்ன அம்மா மறைவுக்கு, அவர் மரியாதை செலுத்தினாரோ இல்லையோ; பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், மரியாதை கொடுத் தாங்க தெரியுமா,'' என்று கேட்டாள் சித்ரா.
""ஓ.. அதெப்படி?'' என்று, என வியப்புடன் கேட்டாள் மித்ரா.
""இடைப்பாடி சி.எம்., ஆனதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., வீட்டையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செஞ்சிருந்தாங்க. ஆனா, எம்.எல்.ஏ.,வோட சின்ன அம்மா இறந்து, வீட்டிலே துக்க காரியம் நடந்திருக்குன்னு, போராட்ட இடத்தை பன்னீர் ஆதரவாளர்கள் இடம் மாத்தீட்டாங்க,'' என்று சித்ரா கூறினாள்.
""காலமான தன் சின்ன அம்மாவுக்கு அஞ்சலி செலுத்த கூட வராம, கட்சியின் சின்னம்மாவோட கட்டுப்பாட்டில் இருந்த எம்.எல்.ஏ.,வுக்கு, பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் நடந்து கொண்ட நாகரீகமான நடவடிக்கை தெரிஞ்சா ரொம்ப நல்லது,'' என்று மித்ரா கூறினாள்.""அட, நீ வேற. அவங்களுக்காவது புத்தி வரதாவது. இந்த டிராபிக் மேட்டரு கேளு. காங்கயம் ரோடு டிப்போ பக்கம் போனா, குறுக்கு வீதிகளில் எல்லாம், பஸ்களை நிறுத்தி வெச்சிருக்காங்க பார்த்தியா, '' என்று சித்ரா கேட்டாள்.
""ஆமா, நானே கேக்கணுமுன்னு நினைச்சேன். கடந்த ஒரு வாரமாவே, பல பஸ்கள் வெளியவே நிக்குதே. ஏன்,'' என்று மித்ராவும் ஆச்சரியத்தோடு கேட்டாள்.
""கண்டக்டர், டிரைவருங்க சாப்பிடறதுக்காக, பஸ்களை அங்கே கொண்டு போறாங்களாம். உள்ளே போகணுமுனா, "கேட்பாஸ்' வாங்கணும். அதை தவிர்க்க, பக்கத்து வீதிகளில் நிறுத்திட்டு உள்ளே போயிட்டு வர்றாங்களாம்,'' என்று சித்ரா கூறினாள்.
""ரெண்டு பேரு சாப்பிடறதுக்காக, ஒரு பஸ்சையே கொண்டு வர்றது "டூ.... மச்' சித்ரா அக்கா. இதெல்லாம், போக்குவரத்து கழக அதிகாரிங்களுக்கு தெரியாதா,'' என்று, மித்ரா கேட்டாள்.
""டிப்போவை சுத்தி, வெளியே பஸ்கள் நிக்கறது அதிகாரிங்களுக்கு தெரியாம இருக்குமா. டிப்போவில் வேலை பாக்கிற "டெக்னிக்கல்' பணியாளர்கள், மெக்கானிக்குகளுக்கு, கை கழுவுறதுக்கு கூட, சோப் தர்றதில்லையாம். சோப்பிலும் மிச்சம் பிடிக்கறதா நெனைச்சு, ஒரு சோப்பை ரெண்டு துண்டா வெட்டி, கை கழுவறத்துக்கு ஊழியர் களுக்கு கொடுக்கறாங்களாம்,'' என்று சித்ரா கூறினாள்.
""அப்படி மிச்சம் புடுச்சு, எந்த அதிகாரிக்கு "சோப்' போடுறாங்களாம். அடுத்து, மாநகராட்சி பத்தின செய்தி ஒன்னு சொல்றேன் கேளேன்,'' என்று மித்ரா, அடுத்த விஷயத்துக்கு நுழைந்தாள்.
""மாநகராட்சின்னாலே, சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. யாரை பத்தின விஷயம்,'' என்று சித்ரா ஆர்வமோடு கேட்டாள்.
""சுகாதார ஆய்வாளர்கள், சனிக்கிழமை ராத்திரி வந்தாலே, மொபைல்போனை பார்த்தா மிரளுறாங்க. போனை எடுத்தா, இந்த பக்கம் ஆய்வுக்கு வரல; அந்த பக்கம் ஆய்வுக்கு ஏன் போகலைன்னு, மக்கள் வறுத்தெடுக்கறாங்களாம். அதிகாரிங்க, டென்ஷனாயிடறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
""உண்மையை சொன்னா, எதுக்கு டென்ஷனாகணும்,'' என்று, சித்ரா கேட்டாள்.
""அதே மாதிரிதான் இப்ப நான் சொல்லப்போறதும். சிவன் சொத்து குலநாசமுன்னு தெரிஞ்சும், இப்படி கொள்ளையடிச்சு, பக்தர்களோட சாபத்தை வாங்கி கட்டிக்கறாங்க,'' என்று, மித்ரா ஆதங்கத்தோடு கூறினாள்.
""யாரு கோபத்துக்கு, யாரு ஆளானாங்க? கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்,'' என்று சித்ரா கேட்டாள்.
""திருப்பூர் ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு, திருப்பணி குழு சார்பில், பல வேலை நடந்திருக்கு. ஆனா, கோவில் அதிகாரிங்க, அந்த வேலைக்கு "பில்' போட்டு, பல லட்ச ரூபாயை "லபக்'கிட்டாங்க.
இதுவரை இல்லாத அளவுக்கு, கோவில் நிர்வாகம் மேல, அடுக்கடுக்கா முறைகேடு புகார் போயிருக்கு. ஆனாலும், மருந்துக்கு கூட நடவடிக்கை இல்லை,''என்றார் மித்ரா.
""அட... ஈஸ்வரா...'' என்று வாயடைத்து போனாள் சித்ரா.
""ஈஸ்வரன் கோவில் செயல் அலுவலர் கட்டுப்பாட்டிலே, பல சின்ன கோவில்கள் இருக்குது. அங்கெல்லாம் என்ன தான் வேலை செய்யறாங்கனு தெரியலை; கிட்டத்தட்ட, 60 "செக் புக்' வாங்கியிருக்காங்கனு பேங்க்ல சொல்றாங்க. கோவில் கணக்குல இருந்த பணத்த, மத்த கோவில் கணக்குல மாத்தி போட்டு, என்னமோ பண்றாங்கன்னு, அங்கிருக்கற அலுவலர்களே மனம் வெறுத்துப் போயிட்டாங்க,''என்று முடித்தாள் மித்ரா.
""நல்லவேளை, இந்து முன்னணிக்காரங்க துணிச்சலா களமிறங்கினதால, கோவில்
ஆவணங்களை எடுத்துட்டு போய், லாட்ஜில் "ரூம்' போட்டு 'கணக்கு' பார்த்திட்டு இருந்தது, வெளிச்சத்துக்கு வந்திருக்கு. இனியும் "மேலிடம்' சும்மா இருக்காம, நடவடிக்கை எடுத்தா
பரவாயில்லை'' என்று சித்ரா கூறியதும், மித்ராவின் சித்தப்பா அங்கே வந்தார். ""என்ன, சிவராமசூரியன் அங்கிள், நல்லாருக்கீங்களா?'' என்று சித்ரா கேட்டதும், ""எனக்கென்னம்மா? ரொம்ப நல்லாருக்கேன்'' என்றவாறே அவர், வீட்டுக்குள் சென்றார்.
""எப்படியோ, இரண்டு "லோடு 'மண்ணு கிடைச்சுடுச்சுனு சந்தோஷம்...'' என்று, வேறு விஷயத்தை மித்ரா ஆரம்பிக்க, ""அது என்ன மேட்டர்,'' என்று சித்ரா ஆர்வத்தோடு
கேட்டாள்.
""அனுமதியில்லாம மண் ஏத்திட்டு போன லாரிகளை, சப்கலெக்டர் பிடிச்சு நிறுத்தியிருந்தாரு ஞாபகம் இருக்கா? நாள் கணக்குல மண்ணோட நின்னதால, "டயர்' வீணாப்போகுமுன்னு, லாரி உரிமையாளர்கள் கதறிட்டு இருந்தாங்க. அப்ப தான், சப்கலெக்டர் ஆபீசை சுத்தி, பராமரிப்பு நடந்துச்சு. மேடு பள்ளமா இருக்கறதால, மண்ண அப்படியே அங்க கொட்ட சொல்லிட்டாங்க. லாரி டிரைவர்களும், மண்ணை கொட்டிட்டு வேகமாக கிளம்பி போய்ட்டாங்க; எப்படியோ, இரண்டு "லோடு' மண்ணு கிடைச்சிருச்சு...'' என்றாள் சித்ரா.
""மடத்துக்குளம் தாலுகாவுல என்னதான் பிரச்னையாம்? திடீர்னு பெண் அலுவலர்கள் போராட்டம் நடத்தினாங்களாம்?'' என்றாள் மித்ரா.
""மடத்துக்குளம் தாலுகா ஆபீசுல, சான்றிதழ் வழங்குற விவகாரத்துல, தாசில்தாருக்கும், அங்குள்ள அலுவலர்களுக்கும் மாறுபட்ட கருத்து நிலவுதாம். இந்த நிலைமையில, "கொஞ்சி குலாவிட்டு இருக்கறீங்களா?னு ஒரு பெண் அலுவலரை, "சூடா' கேட்டுட்டாராம். கொதிச்சுப்போன அலுவலர்கள், எந்த வேலையும் செய்யாம, இரண்டு மணி நேரம் போராட்டம் நடத்திருக்காங்க. என்று சொல்லியாவறே, வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X