கட்சியின் செயல் தலைவர் என்ற முக்கிய பொறுப்புக்கு வந்தபின், முதன் முறையாக ஸ்டாலின் மேற்கொள்ளவுள்ள டில்லி பயணத்தின் போது, கனிமொழி அங்கு இருக்கமாட்டார் என, தெரிய வந்துள்ளது. தமிழக சட்டசபையில் நடந்த சம்பவங்கள் குறித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து முறையிட, தி.மு.க., சார்பில், நேரம் கேட்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நாளை மாலை, 6:30க்கு, ஜனாதிபதியை சந்திக்க, தி.மு.க., தரப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, நாளை காலை, விமானம் மூலமாக, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் டில்லி வருகிறார். இவருடன், மூத்த தலைவர் துரைமுருகன் மட்டுமே உடன் வரவுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்து இருந்த போதிலும், டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கு வதை தவிர்க்க, ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். பதவியில் இல்லாத போது டில்லிக்கு வந்தால், தி.மு.க., தலைவர் கருணாநிதி, எப்போதும் தங்கும் லீலா பேலஸ் ஓட்டலில் ஸ்டாலினும் தங்கவுள்ளார். தலைவர்களை சந்திப்பது உட்பட, டில்லியில் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகளில், சக எம்.பி.,க்களுடன் சேர்ந்து, தி.மு.க., ராஜ்யசபா,
எம்.பி.,யான கனிமொழி தான் முன்னின்று ஈடுபடுவது வழக்கம். ஆனால், கட்சியின் செயல் தலைவர் என்ற மிக முக்கிய பொறுப்புக்கு வந்தபின், ஸ்டாலின் மேற்கொள்ளவுள்ள இந்த முதல் டில்லி பயணத் தில், தி.மு.க.,வின் டில்லி முகமாக அறியப்படும் கனிமொழியை காண இயலாத சூழ்நிலை உருவாகிஉள்ளது. துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி தலைமையில்,
எம்.பி.,க்கள் அடங்கிய குழு, ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்த குழுவில், கனிமொழியும் இடம் பெற்றுள்ளார். இதனால், தி.மு.க.,வின் மற்ற எம்.பி.,க்களான, டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் மட்டுமே ஸ்டாலினுடன் இருப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. சந்திக்க நேரம் கேட்டு, பிரதமரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், உ.பி., தேர்தல் நேரம் என்பதால் சந்திப்புக்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.
- நமது டில்லி நிருபர் -