சென்னை: ''அ.தி.மு.க., ஆட்சியைகவிழ்க்க, தி.மு.க., சதி செய்து வருகிறது,'' என, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: தமிழக அரசியலில், குழப்பத்தையும், கலவரத்தையும், தி.மு.க.,
உருவாக்கி வருகிறது.சட்டசபை கூட்டத்தில், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் அல்லது கூட்டத்தை ஒத்திவைத்திருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல், ரகசிய ஓட்டெடுப்பு முறையில் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசு தொடர்ந்து நடைபெற, சபைக்குள்ரகசிய ஓட்டெடுப்பு அமல்படுத்தப்படுவதில்லை.
ஒவ்வொரு மானிய கோரிக்கையிலும், ஓட்டெடுப்பு நடத்தப்படும். ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி, மானிய கோரிக்கையை தோற்கடித்தால், அரசை எவ்வாறு நடத்த முடியும்? எனவே, ரகசிய ஓட்டெடுப்பு ஜனநாயக முறைக்கு ஒவ்வாது. அது, சட்டத்திற்கு விரோதமானது. கட்சி தாவல் தடுப்பு சட்டத்திற்கு எதிரானது. சட்டத்திற்கு விரோதமான செயலை, தி.மு.க., வலியுறுத்தியது; அதை, சபாநாயகர் நிராகரித்தார்.சட்டசபையில், கோரம் இல்லை என்றால் தான், நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்ற முடியாது. எதிர்க்கட்சி உறுப்பினர் கள் இல்லாமல், நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது எனக் கூற முடியாது. இதில், கவர்னர், மத்திய அரசு, யாரும் தலையிட முடியாது. இது, முழுக்க முழுக்க சபாநாயகர் உரிமை.ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் தி.மு.க., ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
பன்னீர் மீது நடவடிக்கை! : ''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக ஓட்டளித்த, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மீது, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கூவத்துார் சொகுசு விடுதியில், எம்.எல்.ஏ.,க்களை தங்க வைத்ததால் தான், அவர்களால் ஒழுங்காக ஓட்டு போட முடிந்தது. தி.மு.க.,வை பொறுத்தவரை, பன்னீர்செல்வம் என்னவாகிறார் என்பது முக்கியமல்ல. அவர்களின் ஒரே நோக்கம், ஆட்சியை கவிழ்ப்பது தான்.
சட்டசபைக்குள் காவலர்களை அழைப்பது, சபாநாயகர் உரிமை; யாரை வேண்டுமானாலும் அழைக்க லாம். பன்னீர் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மீது, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.