சிவகங்கை: ''தமிழகத்தில் மட்டுமே 3 மாதங்களில் 3 முதல்வர் என்ற நிலை சாத்தியமாகி உள்ளது,'' என காங்., சட்டசபைத் தலைவர் ராமசாமி தெரிவித்தார்.
சிவகங்கை உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: தற்போது அமைந்துள்ள தமிழக அரசால் நமக்கு எந்தவித முன்னேற்றமும் இருக்காது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து எந்த பணியும் நடக்கவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு கூட தர முடியல்லை. அ.தி.மு.க., தலைமையை ஊழல் செய்தவர்கள் என, உச்சநீதிமன்றமே கூறிவிட்டது; ஆனால் அ.தி.மு.க.,வினர் மக்களை சந்தித்து ஆதரவு பெறுவோம் என கூறுவது வியப்பாக உள்ளது. மக்கள் பணி செய்யாத இந்த அரசு விரைவில் அகற்றப்படும். முதல்வராக விரும்பியவர் சிறையில் உள்ளார். தலைமை செயலகத்தில் எந்தவித பணியும் செய்யாமல் அமைச்சர்களும், அதிகாரிகளும் உள்ளனர். மக்கள் பணி செய்ய முடியாமல் திணறுகின்றனர். அவர்கள் விரைவில் துாக்கி எறியப்படுவர். எங்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும், என்றார்.