தாத்தா, பாட்டி இல்லாத வீடு!| Dinamalar

தாத்தா, பாட்டி இல்லாத வீடு!

Added : பிப் 23, 2017 | கருத்துகள் (3)
தாத்தா, பாட்டி இல்லாத வீடு!

உறவுகள் தொடர் கதை, உணர்வுகள் சிறுகதை. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை என்று, நான்கு பக்கங்களும் உறவுகளால் சூழப்பட்ட நாடு நம் நாடு. பிறநாட்டவர்கள் வியந்து நம்மை உற்று நோக்குவதற்கான காரணம் நம் பண்பாடு, பாரம்பரிய பழக்க வழக்கங்கள் தான். இதற்கான அடிப்படை காரணம் என்னவென்றால் பிற நாடுகளில், எல்லாம் கோவில்கள் தனியாக வும், குடும்பங்கள் தனியாகவும் இருக்கும். ஆனால், நம் நாட்டில் மட்டுமே குடும்பங்களே கோவில்களாக உள்ளன. அன்பு, பண்பு, பாசம், பகிர்ந்து வாழ்தல் விட்டுக் கொடுத்தல் போன்ற குணநலன்கள் எல்லாம் உறவுமுறைகளினால் தான் உருவாகியது. காந்தி தாத்தா, நேரு மாமா என்று, நாம் விரும்பும் தலைவர்களையும் உறவுகளாக்கி, உறவுக்கு உயிர் கொடுப்பது நம் மண்ணிற்கே உரிய மாண்பு.
தலைமுறை இடைவெளிகள் : என் பரம்பரை பற்றி தெரியுமா என்று பலரும் கூறக் கேட்டிருக்கிறோம். பரம்பரை பரம்பரையாக என்று கூறுவதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறை என்பதா கும். அது போலவே தலைமுறை இடைவெளி எனப்படும் வார்த்தை யும் நமக்குப் பரிச்சயமான வார்த்தை தான். ஒரு தலைமுறை என்பது சராசரியாக 60 வருடங்கள் கொண்டது. ஏழு தலைமுறை 480 ஆண்டுகள் கொண்டதாகும். நாம் முதல் தலைமுறை - தந்தை தாய், இரண்டாம் தலைமுறை - பாட்டன் பாட்டி, மூன்றாம் தலைமுறை - பூட்டன் பூட்டி, நான்காம் தலை முறை - ஓட்டன் ஓட்டி, ஐந்தாம் தலை முறை - சேயோன் சேயோள், ஆறாம் தலைமுறை - பரன் பரை, ஏழாம் தலை முறை - தாத்தா, பாட்டி போன்ற உறவுகளின் பெயர்களைக் கேட்கும் போது நமக்குள் ஏற்படும் பரவசம் நம் பண்பாட்டிற்கான சிறப்பாகும்.
பாட்டியின் வானிலை அறிக்கை : கூரை இல்லாத ஓடு, கிழவிஇல்லாத வீடு, கீரை இல்லாத சோறு என்பது இன்றைய நாகரிக வழக்கமாகி விட்டது. தாத்தா, பாட்டிகள் சொன்ன கதைகளாலும், அறிவுரைகளாலும் வளர்ந்த தலைமுறைகள் நாம். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு 'பாட்டி மருத்துவர்' இருந்து ஆலோசனை கூறுவார். 'வானம் வடக்கே கருக்கலா இருக்கு, மழை வருமாட்டு இருக்கு, மாடியில காயிற வத்தல எடுத்துட்டு வா' என, கூறும் பாட்டி வானிலை அறிவியல் படித்ததில்லை. கணவனிடம் கோபித்துக் கொண்டு வரும் பேத்திக்கு 'அந்த காலத்துல உங்க தாத்தா செய்யாத சேட்டையா, வீட்டுக்கு வீடு வாசப்படி தான்' என, இதமாக அறிவுரை கூறி நல்வழிப்படுத்தும் பெரியவர்கள் நமக்கு கிடைத்த வரமாகும். பல்கலைக்கழகங்கள் கற்றுத் தராத பாடங்களை நம் வீட்டு தாத்தா, பாட்டிகளின் அனுபவங்கள் கற்றுத் தந்தன. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பது ஆன்றோர் கூற்று. மறந்து போன மண்பானைச் சோறு இடிந்து போன திண்ணைகள், மாயமாய்ப் போன மரக்குதிர் இந்த வரிசையில் காணாமல் போனது நம் தாத்தா, பாட்டி உறவு முறையும் தான். தாத்தா,பாட்டி இல்லாத வீடு இக்காலப் பெற்றோருக்கு வேண்டுமானால் சுதந்திரமாய் இருக்கலாம். ஆனால், இக்கால பேரப்பிள்ளைகளுக்கு கண்டிப்பாக சொர்க்கமானதாக இருக்காது.
பெற்றோர் என்னும் உறவு : 'தெய்வீகத் தாயைப் பெற்று இருக்கும் எந்த மனிதனுமே ஏழையில்லை' என்பது, முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனின் கூற்றாகும். ஆத்மார்த்த மான அன்பைத் தருவது தாயன்பு மட்டுமே. கருவறையில் இருக்கும் போது நமக்கு இதயவறை தந்தவள் தாய். 'காதறுந்த ஊசியும் கடை வழிக்குவாராது காண்' என்று, பாடிய உலகவாழ்வை முற்றும் துறந்த பட்டினத்தடிகள் கூட, தன் தாய் இறந்தபோது கதறி அழுத வரலாற்றை இவ்வுலகு அறியும். அன்பை கூட கண்டிப்புடன் தான் காட்டத் தெரியும் அப்பாவிற்கு. ஆனால், சோர்ந்து நிற்கும் நேரங்களில் அப்பா தரும் கை அழுத்தம் ஆயிரம் ஆறுதல்களைச் சொல்லும். இந்த உறவுகள் தரும் ஆனந்தமே அலாதியானது தான்.
உறவுகளின் இன்றைய நிலை : மாறி வரும் இன்றைய நாகரிக உலகில் 'அம்மா' என்னும் அழகிய வார்த்தை 'மம்மி' என்றாகி பின், அதுவும் சுருங்கி 'மாம்' என்றாகி விட்டது. அன்றைய திருமணப் பத்திரிக்கைகளை படிப்பதற்கே அரை நாளாவது ஆகும்; சொந்தங்கள் பெயர்கள் அனைத்தும் அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கும். இன்றைய நவீன திருமண அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயர்கள் கூட அச்சிடப்படாமல், மணமக்களே அழைப்பதான காலமாக உருவாகி விட்டது. இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல வாட்ஸ் ஆப், முக நுால் திருமண அழைப்பிற் கான களமாகிவிட்டது. முன்பெல்லாம் நம் வீட்டிற்கு வரும்விருந்தினர்களுக்கு இது என் தாத்தா, இது என் பாட்டி, இது என் சித்தப்பா என்று அறிமுகப் படுத்தி வைத்த காலம் போய் இன்று, இது புதிதாக வாங்கிய தொலைக்காட்சி, ஷோபா என்று பொருட்களை அறிமுகப்படுத்தும் காலமாகி விட்டது. மனிதர்களை் நேசிக்கும் காலம் போய் பொருட்களின் பின்னே ஓடும் அவலநிலை.'மெமரி'யை விற்று விட்டு 'மெமரி' கார்டை நம்புவதும் அறிவினை விற்றுவிட்டு புத்தகத்தை நம்பிக் கொண்டும், ஆரோக்கியத்தை விற்று விட்டு மருந்துகளை நம்பிக்கொண்டு இருக்கும் காலமாகி விட்டது. 'நான் ஸ்டிக்'ல் சாப்பிடுவதாலோ என்னவோ ஒட்டாத உறவுகளாக மாறி விட்டது இந்த உலகம்.
செல்லுலாய்டு பொம்மைகள் : அன்பு என்ற பண்பும், அறம் என்ற பயனையும் விட்டு விட்டு, பொருள் என்ற ஒன்றை மட்டுமே தேடிக் கொண்டிராமல் உறவுகளை நேசிப்பதே உயர்வான வாழ்க்கை. பேசாமல் போனால் அழிந்து போவது மொழி மட்டுமல்ல; உறவுகளும் தான். மூச்சுக் காற்று போல தான் பெற்றோரின் அன்பும் என்பதை உணர்வதே சிறப்பானது. குழந்தைகளிடம் நேரம் செலவழிப்பதும், பெரியவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்பதும், உறவினை மலரச் செய்யும் மாற்றங்களாகும். செல்லுலாய்டு பொம்மைகளால் தொலைந்து விடாமல், அன்பால் உறவினை இணைக்கும் வழியை உருவாக்குவதே சால சிறந்ததாகும். உறவுகளை அவர்களின் பலவீனங்களோடும், பலங்களோடும் ஏற்றுக் கொள்வதே உறவினை வலுப்படுத்தும் பாலமாகும். வெறும் பணத்தாலோ,அதிகார பலத்தாலோ ஏற்படுவதல்ல உறவுகள். அக்கறை, அன்பு, தியாகம் போன்றவை மூலம் உருவாக்கப்படும் உறவுகளே நிலையானவை.
கேட்க வேண்டிய கேள்விகள் : நம் அனைவரிடமும், முன் வைக்கப்பட வேண்டிய கேள்விகள் இவை. யாரிட மெல்லாம் இதற்கு பதில் இருக்கிறதோ அவர்கள் அனைவரும் உலகின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகள். ஊரில் உள்ள அப்பா, அம்மாவை கடைசியாக எப்போது போய்ப் பார்த்தீர்கள், உங்கள் உறவுகளுக்கு கடைசியாக கடிதம் எழுதியது எப்போது, சொந்தங்கள் வீடுகளுக்கு குழந்தைகளை அழைத்து சென்றுள்ளீர்களா, குடும்பத்தில் உள்ள அனைவருடனும் சேர்ந்து உணவருந்தியது எப்போது, இதற்கானபதில்களை யோசிப்போம். அன்பு நிறைந்த உறவுகளை நேசிப்போம்.இருக்கும் போது வேண்டியவரையும் பார்க்க மறுக்கும் மனித மனம், இறக்கும் போதுவேண்டாதவரையும் பார்க்க நினைக்கிறது. தொழில்நுட்பங்களை எளிதாக புரிந்து கொள்ள முடிந்த நம்மால், உறவுகளின் மனநுட்பங்களை புரிந்து கொள்ள முடிவதில்லை. இவ் வாழ்க்கை பயணம் மிகக் குறுகியது. எனவே, இருக்கும் வாழ்வை வசந்தமாக மாற்ற,அனைவரையும் நேசிப்பதே சிறப்பானது. இந்தியா என் தாய் நாடு, இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள் என்ற, உறுதி மொழியைக் கூறும் போதேதெரிகிறது நம் இந்திய நாடு, உறவுச் சங்கிலியால் பின்னப்பட்டதென்று.மனம் விட்டுப் பேசாதகாரணத்தால் பாதி உறவுகள் மரணித்து விடுகின்றன. 'ஆடி, அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா' என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தாலே போதும். சொத்து தகராறுகளும், வாய்க்கால் தகராறுகளும் முடிவுக்கு வந்து விடும். நேற்றைய பொழுதுகள் நிஜமில்லை, இன்று என்பதே நிஜம். எனவே இந்த,தருணங்களை மனக்கண்ணில் நிறுத்தி, காயப்படுத்திய உறவுகளிடம் மன்னிப்பு கேட்கலாம். உறவுச்சிக்கல்களை உணர்வுப் பூர்வமாக அணுகி வாழ்வை இனிமையாக்குவோம்.
-- ம.ஜெயமேரி, ஆசிரியைக.மடத்துப்பட்டி

bharathisanthiya10@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X