சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட மதுக் கடைகளை மூட வேண்டி உள்ளது. ஆனால், 500 கடைகளை மட்டும் மூட உத்தரவிட்டு, மக்களையும், சுப்ரீம் கோர்ட்டையும் ஏமாற்ற, தமிழக அரசு முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தலின் போது, தமிழகத்தில், 6,800க்கும் அதிகமான மதுக் கடைகள் இருந்தன. தேர்தலின் போது, மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற கோஷம் ஒலித்தது. 'ஆட்சிக்கு வந்தால், மதுக் கடைகள், படிப்படியாக மூடப்படும்' என, அ.தி.மு.க., வாக்குறுதி அளித்தது.இதன்படி, மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், 500 மதுக் கடைகளை மூட, முதல்வராக இருந்த, ஜெ., உத்தரவு பிறப்பித்தார். அதன்பின், அவர் மரணமடையும் வரை, கூடுதலாக மதுக் கடைகள் எதுவும் மூடப்படவில்லை.
இதற்கிடையில் விபத்துகள் தொடர்பான, பொது நல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச், ஆண்டுக்கு, 1.50 லட்சம் பேர், விபத்தில் இறப்பதையும், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்புகளையும் சுட்டிக் காட்டியது. மேலும், 'தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து, 500 மீட்டருக்குள் உள்ள மதுக் கடைகளின் லைசென்ஸ்களை, மார்ச் 31க்கு பின் புதுப்பிக்கக் கூடாது' என, டிச., 15ல் உத்தரவிட்டது. இதன்படி கணக்கிட்டால், தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட மதுக் கடைகளை மூட வேண்டியிருக்கும்; ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும், தமிழக அரசு துவக்கியதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள இடைப்பாடி பழனிசாமி, மேலும், 500 மதுக் கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார். சுப்ரீம்கோர்ட் உத்தரவின் படியும், தேர்தல் வாக்குறுதியின் படியும், குறைந்தபட்சம், 1,000 மதுக் கடைகளையாவது, இந்த நிதியாண்டு இறுதிக்குள் மூட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.த ற்போது, வெறும், 500 மதுக் கடைகளை மூடுவதன் மூலமாக, சுப்ரீம் கோர்ட்டையும், அ.தி.மு.க.,வுக் கு ஓட்டளித்த மக்களையும் ஏமாற்ற, தமிழக அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் விதித்த காலக்கெடு முடிய, மார்ச் 31 வரை அவகாசம் இருக்கிறது; அதனால், அடுத்த மாதத்துக்குள், மேலும், 1,000 மதுக் கடைகளை மூட வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு உள்ளது; தவறும் பட்சத்தில், பொது மக்களுக்கு மட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட்டுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
- நமது நிருபர் -