சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

மனத்தைப் பார்!

Added : பிப் 23, 2017
Share
Advertisement
'உட்கார் வில்லி. இன்றைக்கு நாம் சிறிய திருமடலைச் சற்று சிந்திக்கலாம்' என்றார் ராமானுஜர்.அது, அவன் மடத்துப் பணிகளை முடித்துவிட்டு வீடு கிளம்பும் நேரம். ஆனால் உடையவர் சொல்லிவிட்ட பிறகு மறு பேச்சு ஏது? அவன் உட்கார்ந்து விட்டான்.ராமானுஜர் அவனுக்குத் திருமங்கையாழ்வார் வாழ்க்கையில் இருந்து ஆரம்பித்தார். மன்னனாக இருந்து கள்வனாக மாறி, பெருமானால் களவாடப்பட்டவரின் கதை.
மனத்தைப் பார்! Ramanujar Download

'உட்கார் வில்லி. இன்றைக்கு நாம் சிறிய திருமடலைச் சற்று சிந்திக்கலாம்' என்றார் ராமானுஜர்.அது, அவன் மடத்துப் பணிகளை முடித்துவிட்டு வீடு கிளம்பும் நேரம். ஆனால் உடையவர் சொல்லிவிட்ட பிறகு மறு பேச்சு ஏது? அவன் உட்கார்ந்து விட்டான்.
ராமானுஜர் அவனுக்குத் திருமங்கையாழ்வார் வாழ்க்கையில் இருந்து ஆரம்பித்தார். மன்னனாக இருந்து கள்வனாக மாறி, பெருமானால் களவாடப்பட்டவரின் கதை. பக்திதான் எத்தனை அற்புதங்களை நிகழ்த்தி விடுகிறது!மறுபுறம் ராமானுஜர் அனுப்பிய இரண்டு பேரும் வில்லியின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருந்தார்கள். வீடென்றா சொல்ல முடியும்? சிறு குடிசை. அவனது சொத்தாக அங்கு இருந்தது பொன்னாச்சியும் அவளது நகைகளும்தான்.அந்த நகைகளைத்தான் எடுத்து வரச் சொல்லியிருந்தார் ராமானுஜர்.சீடர்கள் வில்லியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது வேலைகளை முடித்துவிட்டுப் பொன்னாச்சி படுத்திருந்தாள். ஆனால் உறங்கியிருக்கவில்லை. வெளியே யாரோ வந்திருக்கும் சத்தம் கேட்டு, எழுந்திருக்கலாமா என்று அவள் எண்ணி முடிப்பதற்குள் பேச்சுக்குரல் அவளைத் தடுத்தது.'சத்தம் போடாதே. பொன்னாச்சி துாங்கிவிட்டாளா என்று உறுதிப்படுத்திக் கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும்.'அட, இது கேட்ட குரலாக இருக்கிறதே என்று அவளுக்குச் சட்டென்று வியப்பாகி விட்டது. கண நேர யோசனையில் யாருடைய குரல் என்றும் தெரிந்துவிட்டது. அவர் உடையவரின் சீடர் அல்லவா! நான் உறங்கும்வரை வெளியே நிற்பதென்றால் அவருக்குக் கால்கள் துவள ஆரம்பித்து விடுமே? அதற்காகவேனும் சீக்கிரம் உறங்கிவிடலாம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு உறங்க முயற்சி செய்தாள். ஆனால் அது வருவேனா என்றது.சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் கதவை மெல்லத் திறந்துகொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்கள். உறங்கும் பெண்ணைப் பார்த்தார்கள். மெல்ல நெருங்கி அவள் அணிந்திருந்த நகைகளைக் கழட்டத் தொடங்கினார்கள்.'விழித்துக் கொண்டு விட்டால்?''உஷ். சத்தம் போடாதே. திருமடத்தின் செலவுகளுக்காகத்தான் நாம் இதனைச் செய்கிறோம். நமக்காக அல்ல.'அவர்கள் காற்றுக்கு மட்டும் கேட்கிற குரலில் தமக்குள் பேசிக்கொண்டு காரியத்தில் முனைப்பாக இருந்தார்கள். ஒரு கால் சலங்கை. ஒரு கை வளையல்கள். ஒரு காதின் லோலாக்கு. ஒரு பக்க மூக்குத்தி. நெற்றிச் சுட்டி. கழட்ட முடிந்தவரை கழுத்தணிகள்.'ஒட்டியாணத்தைக் கழட்ட வரவில்லை' என்றான் ஒருவன்.'அடடா. அதுதான் கனமான ஆபரணம். கிடைத்தால் நல்ல விலை போகுமே?'என்ன செய்யலாம் என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது உறக்கத்தில் புரண்டு படுக்கிறவளைப் போலப் பொன்னாச்சி எதிர்ப்புறம் திரும்பிப் படுத்தாள்.ஒரு கணம்தான். வெலவெலத்துவிட்டது அவர்களுக்கு. கிடைத்தவரை போதும் என்று ஓடியே போனார்கள்.மடத்துக்கு அவர்கள் திரும்பிவிட்டதை உறுதி செய்துகொண்டு, 'நீ கிளம்பு வில்லி. மிகவும் தாமதமாகிவிட்டது இன்று' என்று அவனை அனுப்பி வைத்தார் ராமானுஜர்.அவன் தலை மறைந்ததும் சீடர்கள் நெருங்கினார்கள். 'சுவாமி, நீங்கள் சொன்னவாறு...''இருக்கட்டும். வில்லி வீட்டுக்குப் போகிறான். அவன் பின்னாலேயே நீங்களும் சென்று அங்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டு வாருங்கள்.'மீண்டும் வில்லியின் வீடு.'என்ன இது வினோதக் கோலம்? உன் ஒரு பக்க நகைகள் மட்டும்தான் இருக்கின்றன. மறு பக்க ஆபரணங்கள் என்னவாயின?' வில்லி உள்ளே நுழைந்ததும் பொன்னாச்சியிடம் கேட்டான்.'அதை ஏன் கேட்கிறீர்கள்? மடத்துச் செலவுக்குப் பணப்பற்றாக்குறை போலிருக்கிறது. சீடர்கள் இருவர் நகைகளைத் திருடிச் செல்ல வந்தார்கள். எனக்கு எதற்கு நகைகள்? நல்ல காரியத்துக்குச் செலவானால் சந்தோஷம்தானே? அதான், அவர்கள் கழட்டிச் செல்கிற வரைக்கும் துாங்குவது போலவே பாசாங்கு செய்து கொண்டிருந்தேன்.''நல்ல காரியம் செய்தாய். ஆனால் செய்ய நினைத்தது முழுமையடையவில்லை போலிருக்கிறதே.''நான் என்ன செய்வேன் சுவாமி? அவர்கள் ஒரு பக்க நகைகளைக் கழட்டி முடித்ததும், அவர்களுக்கு வசதியாக இருக்கட்டுமே என்று மறுபுறம் திரும்பிப் படுத்தேன். அவர்களோ, நான் விழித்துக்கொண்டு விட்டதாக எண்ணி அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.'வில்லி ஒரு கணம் அமைதியாக யோசித்தான்.'தவறு செய்துவிட்டாய் தேவி. நகைகளை எடுத்துச்செல்ல வந்தவர்களுக்கு வழிமுறை தெரியாதா? அவர்களுக்கு உதவுவதாக நீ ஏன் நினைக்க வேண்டும்? அப்படியே அசையாமல் கிடந்திருக்கலாம்.'வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த சீடர்களுக்குப் பேச்செழவில்லை. யாரோ எதிலோ ஓங்கி அடித்தாற் போலிருந்தது. அநேகமாக அது அகந்தையின் மீது விழுந்த அடியாக இருக்கவேண்டும்.மடத்துக்குத் திரும்பி நடந்ததை ராமானுஜரிடம் அவர்கள் விளக்கியபோது உடையவர் சிரித்தார்.'இப்போது சொல்லுங்கள். வில்லிதாசனைக் காட்டிலும் பரம பாகவதன் ஒருவன் இருக்க முடியுமா? அவனது மனைவி எப்பேர்ப்பட்ட மனம் கொண்டவள் என்று பார்த்தீர்கள் அல்லவா?''நீங்கள் சொல்லுவது சரிதான் சுவாமி.''அன்று உங்கள் வேட்டியில் அரை முழம் கிழிந்திருந்ததைக் கண்டு எத்தனை கலவரம் செய்தீர்கள்? கேவலம் அரை முழம் துணியைத் திருடிச் சென்று ஒருவன் என்ன சாதிக்க முடியும்?'அவர்கள் தலைகுனிந்தார்கள்.'ஆனால் பொன்னாச்சி அணிந்திருந்த விலைமதிப்பற்ற நகைகளை நீங்கள் திருடி வந்திருக்கிறீர்கள். அவளோ, ஒரு பக்க நகைகள் போதாமல் போய்விடுமோ என்று மறு பக்க நகைகளைக் கழட்டிக்கொள்ள வசதியாகப் புரண்டு படுத்தாள் என்று நீங்களே சொன்னீர்கள். வைணவ மனம் என்றால் இதுதான். வைணவ மதமென்பதும் இதுதான்.''ஆம் சுவாமி. நீங்கள் சொல்லுவது சரிதான்.''வில்லி அந்தண குலத்தில் பிறந்தவனில்லைதான். ஆசார அனுஷ்டானங்கள் பழகாதவன்தான். ஆனால் நீங்கள் திருடிச் செல்ல வசதி செய்து கொடுத்த தன் மனைவியைக்கூடக் கண்டித்திருக்கிறான். அதற்கு அவன் சொன்ன காரணத்தை யோசித்துப் பாருங்கள்! குலமா அவனுக்கு அந்தக் குணத்தைக் கொடுத்தது? பிறப்பால் யாரும் வைணவராவதில்லை. அது வாழும் விதத்தில் உள்ளது. அவன் மகாத்மா. நீராடிக் கரையேறும்போது அவன் கரத்தைப் பிடித்துக் கொள்ளாமல் வேறு யார் கரத்தை நான் பற்றுவேன்?'வில்லிக்கு அரங்கன் கண்ணைத் திறந்து காட்டி எதைப் புரியவைத்தானோ, அதையேதான் உடையவர் தமது சீடர்களுக்கும் புரியவைத்தார். ஆனால், கண்ணைத் திறந்து காட்டி அல்ல. வில்லியின் மனத்தைத் திறந்து காட்டி.
(நாளை தொடரும்...)writerpara@gmail.com- பா.ராகவன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X