பன்னீரை அழைக்கும் தினகரன்: பின்னணியில் என்ன திட்டம்?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பன்னீரை அழைக்கும் தினகரன்: பின்னணியில் என்ன திட்டம்?

Updated : பிப் 26, 2017 | Added : பிப் 25, 2017 | கருத்துகள் (33)
dinakaran ops, தினகரன், பன்னீர்செல்வம்

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.க.,வுக்கு திரும்ப வேண்டும் என்று, தொடர்ந்து சொல்லத் துவங்கி இருக்கிறார், அ.தி.மு.க.,வின் புதிய துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன். அவருக்கு அடுத்தபடியாக, நேற்று வரை சசிகலா தரப்புக்கு ஆதரவாகவும்; துணையாகவும் இருந்து வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், திடீரென தினகரனை எதிர்க்கத் துவங்கி இருக்கிறார். இதை மேலோட்டமாகப் பார்க்கும்போது, தினகரனுக்கும், தீபக்குக்கும் பிரச்னை இருப்பது போல தோன்றலாம். ஆனால், அவர்கள் பேசி வைத்துக் கொண்டு, பன்னீர்செல்வத்தை, தனிமைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்று, என்று, அ.தி.மு.க.,வில் இருக்கும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் கூறியதாவது:
சசிகலா, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதே, அடிப்படை சட்டவிதிகளுக்கு முரணானது. அதையே, தேர்தல் கமிஷனுக்குப் புகாராக கொடுத்து, அதன் மேல், தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர், எந்தவிதத்திலும், கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட முடியாது. அதனால், சசிகலா பொதுச் செயலராக நியமித்துக் கொண்டதை, தேர்தல் கமிஷன் ஏற்காது.சட்ட ரீதியில், தேர்தல் நடத்தவே தேர்தல் கமிஷன் உத்தரவிடும். அதனால், பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட சசிகலா, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்போது, அவரால் கட்சிப் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்களும்; பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்களும், பழைய நிலைக்கே திரும்புவார்கள். கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் தள்ளுபடியாகும்.

அந்த சூழ்நிலையில், பன்னீர்செல்வம் கை ஓங்கிவிடும். ஏற்கனவே, சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்புக்குப் பின்னும், அவருக்கான செல்வாக்குக் குறையவில்லை; மக்கள் அவர் மீது கூடுதல் ஈர்ப்புடன் தான் உள்ளனர். அதனால், பன்னீர்செல்வத்தை அரசியல் ரீதியில் பலம் இழக்கச் செய்ய வேண்டும் என்றால், அவரையே மீண்டும் கட்சியில் சேர்க்கப் போகிறோம் என் கிற தகவலைப் பரப்புவதுதான், சசிகலா தரப்புக்கு இருக்கும் ஒரே வழி.இதற்காக, பன்னீர்செல்வம், தாய் இயக்கத்துக்கு திரும்பி வரவேண்டும்; கட்சியின் செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்று, கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் கூறியிருப்பது, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருப்பவர்களின் எண்ணங்களில், பன்னீர்செல்வம் மீது விஷ விதையைத் தூவும் எண்ணம்தானே தவிர, பன்னீருக்கோ, கட்சிக்கோ துளிகூட நன்மை செய்வதாகாது.இது பன்னீருக்கும் நன்கு தெரிந்து விட்டது. அதனால், மிகவும் சாதுர்யமாக அரசியல் செய்து விருகிறார். இறுதியில், அவர்தான் வெல்வார்; ஆள்வார்.இவ்வாறு, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X