காஞ்சிபுரம்:'வர்தா' புயலில் இழந்த பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் கைகோர்த்துள்ளனர். இதற்கு உற்ற நண்பனாக, 'தினமலர் - மரம் செய்ய விரும்பு' பிற அமைப்புகளுடன் சேர்ந்து, பாதிக்கப்பட்ட இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
'வர்தா' புயலின் போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் தாக்கத்தால், லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு விழுந்தன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியில், 'தினமலர்' நாளிதழின், 'மரம் செய்ய விரும்பு' களம் இறங்கியுள்ளது. இதன் மூலம், பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 'அறம் செய்' என்ற தனியார் அமைப்புடன் சேர்ந்து, 'மரம் செய்ய விரும்பு' சார்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரக்கன்று நட முடிவு செய்யப்பட்டது.'அறம் செய்' அமைப்பு, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என, படித்த இளைஞர்களை வைத்து, அந்தந்த பகுதிகளில் பிரச்னையாக கருதப்படும், சீமை கருவேல மரங்களை அகற்றுதல், குப்பை தொட்டி வைப்பது உட்பட, பசுமைக்கான பல பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து, மரம் செய்ய விரும்பு - அறம் செய் அமைப்பு சேர்ந்து, 'துாசி கிராமம்' எனும் பெயரில், சமூக வலைதளமான 'வாட்ஸ் ஆப்' குழு மூலம், அப்பகுதியை சேர்ந்த, 50க்கும் அதிகமான இளைஞர்களை ஒன்றிணைந்து, காஞ்சிபுரம் அடுத்த துாசி கிராமத்தில், 100க்கும்
மேற்பட்ட மரக்கன்றுளை நட்டுள்ளது.
இதுகுறித்து, துாசி கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் கூறுகையில், ''எங்கள் ஊரில், 10 ஆண்டுகளுக்கு முன் பல வகையான மரக்கன்றுகளை நட்டு, பாதுகாத்து வந்தேன். தற்போது அவை பெரிய மரங்களாக வளர்ந்து விட்டன. அது போல், 'மரம் செய்ய விரும்பு - அறம் செய்' இணைந்து, மரங்களை நட்டு வருவது, இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது போல், அனைத்து பகுதியில் உள்ள இளைஞர்களும் மரக்கன்றுகளை நட்டு, பராமரிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். மரங்கள் காடு போல் பெருகினால், மழை அதிகரிக்கும்; வெப்பம் குறையும்,'' என்றார்.
'மரம் செய்ய விரும்பு' திட்டத்தில் கைகோர்க்க விரும்புவோர், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை, 10:00 முதல், மாலை 5:00 மணிக்குள், 83001 89000 என்ற அலைபேசி எண்ணிலும், evants@dinamalar.in என்ற இ - மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.