உனக்கு நீயே ஒளி! அசலாக இரு!| Dinamalar

உனக்கு நீயே ஒளி! அசலாக இரு!

Added : பிப் 27, 2017

நல்ல நோக்கங்கள், நேர்மை, தீவிரமான உள்ளார்ந்த அன்பு இவை உலகையே வெற்றிக் கொள்ளக் கூடியவை,''
என்கின்றார் விவேகானந்தர்.
அன்பு ஆனந்தத்தின் உறைவிடம். அங்கு கோபம் இருக்க வாய்ப்பில்லை. கசப்பிற்கு இடமில்லை. அன்பு நல்ல நோக்கங்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.விடுமுறையில் 'ஐபேடில்' விளையாடிக் கொண்டிருந்த மகனிடம், ''கண் கெட்டுவிடப் போகிறது. விளையாண்டது போதும். வேறு ஏதாவது வேலையை செய்,'' என்றேன்; என்னை கோபித்துக் கொண்டான். அப்போது எனது மனைவி அவனிடம் இருந்த 'ஐ பேடை' பறித்து வைத்தாள். உடனே கோபம்கொண்டு என்னை அடித்தான்; கிள்ளினான்; தள்ளிவிட்டான். என் கையில்இருந்த புத்தகத்தை எடுத்து வீச முயன்றான். அமைதியாக இருந்தேன்.அதன்பின் அறைக்கு சென்று அவனது விளையாட்டுப் பெட்டியை எடுத்து, அதில் உள்ள பொருட்களைக் கொண்டு விளையாட ஆரம்பித்தான். 'பில்டிங் பிளாக்ஸ்' கொண்டு மாளிகை கட்டினான். சிறிது நேரத்தில், என் அருகில் வந்தான். பின்பக்கமாக வந்து முதுகில் சாய்ந்தபடி, தாடையை திருப்பி, கன்னத்தில் முத்தம் கொடுத்து, ''டாடி, இந்த பில்டிங் எப்படி இருக்கு?'' என்றான். அதற்குள் எனது மகள், ''டேய்... அப்ப அப்பாவை அடிச்ச... இப்ப வந்து கொஞ்சுற... உன்னை அடிச்சா... நீ உடனே சமாதானமாகி பேசிடுவியா?'' என, கேட்டாள். அவன் சற்றும் தாமதிக்காமல், ''அவரு என்டாடி. அடிச்சா என்ன? நான் மன்னிச்சிடுவேனே...'' என்றான்.அவனை இறுகத்தழுவி முத்தமிட்டேன். மன்னிப்பு என்பது அத்தனை எளிதல்ல. ஆனால், உணர்ச்சிகரமான அந்த விஷயம் அன்பினால் மட்டுமே சாத்தியம். ஆகவே, அன்பு கொள்ளுங்கள். தவறுகளை மன்னிக்க, மறக்க பழகுங்கள். அன்பினால் மகன் கூட நண்பனாவான். அதனால், குடும்பம் இன்பமானதாக மாறும்.
'அன்(பு)ஈனும் ஆர்வமுடைமை அதுஈனும்நண்பென்னும் நாடாச் சிறப்பு'
என்கிறார் வள்ளுவர். பிறர் நல்வாழ்வில் பற்றுக் கொள்ளச் செய்வது அன்பு ஆகும். அந்த அன்பே -நாம் தேடாது -நல்ல நண்பர்களைத் தானாகவே பெறக்கூடிய சிறப்பைத் தரும்.அன்பு நமக்கு தியாகம் செய்யவும், மன்னிக்கவும், நன்றி கூறவும் கற்றுக் கொடுக்கிறது. நாம் மகிழ்ச்சியைத் தேடி ஓட வேண்டியதில்லை. அதுவே நம்மைத்தேடி ஓடி வரும். ஆகவே, உள்ளார்ந்த அன்பு கொண்டு வாழ்வோம்!தவறுகள் மனித இயல்பு. ஆனால், தவறுகள் திரும்ப நிகழாது பார்த்துக்கொள்ள வேண்டும். தவறுகளை உணர்ந்த நிமிடம், அந்த குற்றம் மறைந்து விடுகின்றது. அதுவே, நமக்கான நல்ல வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
பைபிளில் ஒரு கதை : நினைவுக்கு வருகிறது. மேரி என்ற விபச்சாரி, இயேசுவை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகின்றாள். ஆனால், அவள் மனக்குழப்பத்தில் இருந்தாள். 'நான் உடலை விற்றுப் பிழைப்பவள்; இழித்தொழிலில் ஈடுப்பட்டிருப்பவள். என்னை இயேசு சந்திப்பாரா?' என அவளது மனம் போராடியது. கூட்டம்இல்லாத போது இயேசுவை சந்தித்தாள்.''பாவிகளை நீங்கள் மன்னிப்பதாக கூறுகின்றனர். நீங்கள் என்னையும் மன்னிப்பீர்களா?'' என கேட்டாள். ''நீ ஏற்கனவே மன்னிக்கப்பட்டு விட்டாய்,'' என்றார் இயேசு. ஆம்! குற்றம் என்பதை உள்ளப்பூர்வமாக உணர்ந்த கணத்தில் அது மறைந்துவிடும்.இதையே வள்ளுவர் இப்படி கூறுகிறார்;
'குற்றமே காக்க பொருளாகக் குற்றமேஅற்றம் தரூஉம் பகை'தான் செய்யும் குற்றச் செயலே தன்னை அழிக்கும் பகையாக வருமாதலால், குற்றம்செய்யாத நெறியைச் செல்வம் போல் காத்துக் கொள்ள வேண்டும். குற்றமற்ற நிலையே வாழ்வில் இன்பத்தை கொடுக்கும். அச்சம், பயம், கோபம், வன்முறை, பேராசை, குற்ற உணர்வு... இவை நீங்கப்பட வேண்டும். இவை நமது லட்சியத்திற்கு தடையாக இருப்பவை; மனித வாழ்வின் மேன்மையை குலைப்பவை. எனது சொந்தக் குழந்தைகளை மட்டும் அல்ல; என்னிடம் பயிலும் குழந்தைகளையும் அவர்கள் இயல்பில் வாழவே அனுமதிக்கின்றேன். உயர்ந்த குறிக்கோளுடன் இயங்க வேண்டும் என்கிறேன். லட்சியங்களை நீங்களே தேர்ந்தெடுங்கள்; விரும்பியதை உணர்வுப் பூர்வமாக செய்யுங்கள். அவர்களிடத்தில் ஒன்றை மட்டும் எப்போதும் நினைவூட்டுவது உண்டு.'வாழ்க்கையில் நீ எதை வேண்டுமானாலும் செய். அதை விரும்பிச் செய். ஆனால், செய்யும் வேலையை முழு ஈடுபாட்டுடன் செய். நீ செய்வதை யார் தடுக்க நினைத்தாலும் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் முழுக் கவனத்தையும் செலுத்து. ஒன்றை மட்டும் மறந்துவிடாதே. நீ செய்யும் எந்த செயலையும் எவரும் கேவலமானதாக, இழிவானதாக, அருவருப்பானதாக பார்க்கலாம். அதைப் பற்றி கவலைப்படாமல் செய். ஆனால், செய்ததை நினைத்து நீயே பிறகு அவமானமாக உணரக் கூடும் என நினைத்தால், அதை எப்போதும் செய்யாதே!'உங்களிடத்திலும் அதையே கூறுகிறேன். செய்வதை திருந்தச் செய்யுங்கள். வாழ்க்கை இன்பமானதாக, வெற்றிகரமானதாக மாற, நீங்களே பிறகு அவமானமாக நினைக்கும் வகையில் எந்த செயலையும் செய்யாதீர்கள். உங்கள் லட்சியங்கள் உயர்வானதாக இருக்கட்டும். லட்சியத்தை நோக்கி பயணிக்கும் போது எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். முக்கியமாக தோற்றுப்போவோம் என நினைக்க வேண்டாம். ஒருமுறை, முல்லா நகரத்திற்கு சென்றார். அங்கே மைதானத்தில் பலரும் ஓடிக் கொண்டிருந்தனர். அதை கண்ட முல்லா, தன்னருகில் இருந்தவரிடம், ''அங்கே என்ன நடக்கிறது?'' என கேட்டார். ''ஓட்டப் பந்தயம். ஓடினால் பரிசு கிடைக்கும்?'' என்றார்.''எல்லோருக்கும் பரிசு கிடைக்குமா?'' என கேட்டார் முல்லா.முல்லாவை ஏற இறங்க பார்த்து, ''இல்லை... முதலில் ஓடிவருபவருக்கு தான் பரிசு கிடைக்கும்!'' என்றார்.''அப்போ... மீதிப்பேருக்கு கிடைக்காதா?'' என்ற முல்லாவை முறைத்தபடி, ''கிடைக்காது,'' என்றார். முல்லா அப்பாவியாக, ''அப்போ, அந்த மீதிப்பேரெல்லாம் எதுக்கு வீணா ஓடணும்?'' என்றார்.இந்த கதை வேடிக்கைக்காக கூறவில்லை. லட்சிய ஓட்டத்தில் எது வீண் ஓட்டம்! லட்சியத்தை நோக்கி ஓடுங்கள். பரிசுக்காக ஓடாதீர்கள். உங்கள் ஓட்டம் லட்சியத்தை நோக்கியதாக இருக்கும் போது, உங்கள் முயற்சி வீணாவதில்லை. தன்னம்பிக்கை வையுங்கள். யானைக்கு பலம் தும்பிக்கை. மனிதனுக்கு பலம் நம்பிக்கை.விடா முயற்சி, கெடாத பயிற்சி, தன்னம்பிக்கை, நல்லுணர்வு, மேலோரிடம் பணிவு, மேலான துணிவு, அழகு சேர்க்கும் அறிவு, மெழுகாய் உருகும் பரிவு, திட்டம் தீட்டுதல், புரியும் வேலைகள் ஆகிய பத்தும் உங்கள் சொத்தாகட்டும்.அதுவே உங்கள் வெற்றிக்கு வித்தாகும். எப்போதும் உங்கள் தனித்துவத்துடன் செயல்படுங்கள். யாரையும் காப்பி அடிக்காதீர்கள். நீங்கள் அசலாக இருங்கள்.போகு ஜூ என்ற ஜென் குருவிடம் சீடனாக சேர்வதற்கு ஒருவர் வந்தார்.'குருவே! என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்றார்.குரு கோபமுடன் அவரைப் பார்த்து ஓங்கி ஓர் உதை விட்டார். விட்ட உதையில் வாசலுக்கு வெளியில் போய் விழுந்தார், சீடனாக விரும்பியவர். சில மாதங்கள் சென்ற பின், அதே குருவிடம் திரும்பி வந்த அவர், 'குருவே! என்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்றார்.இந்த முறை நிமிர்ந்து பார்த்தவர் அவரை தலைக்கு மேலே துாக்கி, ஜன்னல் வழி வெளியே துாக்கி எறிந்தார். வெளியே போய் விழுந்து கொண்டிருந்த அந்த நொடிகளில் சீடனாக சேர வந்த அவருக்கு ஞானம் கிட்டியது.'யாரையும் பின்பற்றாதே... உனக்கு நீயே ஒளி' என, அவர் உள்ளொளி பெற்றார். ஜென் குருவாகினார். ஆம்! கடந்து யோசியுங்கள். கடவுளும் கைக்கு எட்டும் துாரத்தில்! அசலாக இருக்க பயிற்சி மேற்கொள்ளுங்கள். விடாது உழைத்து வெற்றி பெறுங்கள்.உழைப்பவனின் உடலின் அழுக்கு கூட தங்கம். உழைத்தவனிடத்தில் தங்கம் கூட அழுக்கு. உங்கள் இலக்கை அடைய நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். அதுவரை பொறுமையாக இருங்கள். நீரைக்கூட சல்லடையில் அள்ளலாம். அது பனிக்கட்டியாகும் வரை பொறுமை கொண்டால்!பூமிக்குள் விதைகள், மழைக்காகப் பொறுமையாக காத்திருக்கின்றன. வருடக்கணக்கில் மழை பொய்த்த பூமியில் கூட இந்த விதைகள் பொறுமையை இழக்கவில்லை; நம்பிக்கையை இழக்கவில்லை.அதே போல் உங்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் விதைகளும் பொறுமையாக காத்திருக்கட்டும். சரியான சூழல் கிடைத்ததும், சடாரென்று மலரும். அதுவரை காத்திருங்கள். உங்களுக்குள் அதற்கான சூழலை எப்போதும் உருவாக்கிக் கொண்டிருங்கள்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர் போராட்டம் கூட அப்படிப்பட்ட காத்திருப்பு தான். வெற்றி எனும் சொல்லில் தான் வெறி உள்ளது. வாழ்க்கை எனும் சொல்லில் தான் வாகை உள்ளது. வித்தியாசமான செயல்களைச் செய்ய வேண்டியதில்லை; செய்வதை வித்தியாசமாகச் செய்தல் வேண்டும். அதுவே வெற்றி கரமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.-க. சரவணன்தலைமை ஆசிரியர்டாக்டர் டி. திருஞானம்

துவக்கப்பள்ளி, மதுரை 99441 44263

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X