சர்வதேச அளவில் பெட்ரோலிய எரிபொருளுக்கு அதிக விலை உள்ளது. இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள், எரிபொருளுக்காக வளைகுடா நாடுகளையே நம்பி உள்ளன.
எரிபொருள் இறக்குமதிக்கு, அதிகளவு அன்னிய செலாவணி செலவாகிறது. அதனால், நம் நாட்டிலேயே எரிபொருள் இருப்பு குறித்து ஆராய்ச்சிகள் செய்து எரிபொருள் எடுக்கின்றனர்.
அதன்படி, மீத்தேன், ஷேல் காஸ் என்ற இறுகிய களிமண் எரிவாயு மற்றும் ஹைட்ரோ கார்பன் என்ற எரிவாயுவை பூமியிலிருந்து எடுக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது.
எடுப்பது எப்படி? : பூமிக்கு அடியில் எல்லா இடங்களிலும் எரிபொருள் வாயு கிடைப்பதில்லை. ஷேல் என்ற இறுகிய களிமண் படிவுப் பாறை இருக்கும் இடங்களில், பூமிக்கு அடியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிடைக்கும். நிலத்தடியில், பல அடுக்குகளாக களிமண் படிந்து,
கல்லாக மாறுகிறது. சமையலறை கட்டுமானத்தில் பயன்படும் கடப்பா கல், முந்தைய காலத்தில் மாணவர்கள் எழுத பயன்படுத்திய கல் சிலேட் போன்றவை, இந்த வகை களிமண் படிவம் ஆகும். முந்தைய காலத்தில் புதையுண்ட மரங்கள், செடிகள் போன்ற தாவர வகைகள் அழுகி உருவானதே, ஹைட்ரோ கார்பன் வாயு. ஷேல் களிமண் அடுக்குகள், மிக நுண்ணிய துகள்களாலானவை என்பதால் அவற்றை தாண்டி, ஹைட்ரோ கார்பன் வாயு வெளிவர முடியாமல் அங்கேயே தங்கிவிடும். நிலத்தின் மேற்பகுதியில், அதிக பட்சம், 1,000 அடிக்குள் மட்டுமே நீர் இருக்கும்; மணல் அல்லது பாறைப்பகுதி இருக்கும். ஆனால், எரிவாயு அல்லது கச்சா எண்ணெய், குறைந்த பட்சம், 3,000 அடி ஆழத்திற்கு கீழே தான் இருக்கும். பூமியில் துளையிட்டு, துருபிடிக்காத குழாயை புகுத்தி, ஹைட்ராலிக் விசை தொழில்நுட்பம் மூலம் பூமிக்கு கீழே எந்த பகுதியிலும் எரிவாயு எடுக்க முடியும். குழாய் மூலம் வாயுவை எடுக்கும் போது சரியான அழுத்தம் கிடைக்காமல், ஹைட்ரோ கார்பன் வாயு தங்கிவிடும். அதை எடுக்க, குழாய் வழியாக உள்ளே நீர் செலுத்தப்படும். நீரை விட காற்றின் எடை குறைவு என்பதால் நீர் உள்ளே
சென்றதும் வாயு மேலே வரும். அதற்காக, பூமிக்குள் நீர் செலுத்தப்படுகிறது.சில நேரங்களில், எரிவாயு ஆங்காங்கே விலகி, நீண்ட துாரத்தில் இருக்கும். அதை எடுக்க, பூமியின் ஆழத்தில் பல அடி நீளத்துக்கு, மேலே தெரியாமல் சிறிய குகை போன்று உள்ளேயே துளையிட்டு குழாய்கள் பதிக்கப்படும். இப்படி பூமிக்குள், பல நுாறு கிலோ மீட்டருக்கு துளைகள் போட்டு, வாயுவை உறிஞ்சும் தொழில்நுட்பம் உள்ளது.
நிலச்சரிவு இருக்காது ; மேலும் கீழே இருக்கும் வாயுவை வெளியே கொண்டு வந்தால், அந்த பகுதி பூமிக்குள் வெற்றிடமாகி நிலம் சரிந்து விடும், நிலநடுக்கம் ஏற்படும் என்ற அச்சம் வேண்டாம். வளைகுடா நாடுகளில், எவ்வளவோ எண்ணெய் எடுக்கப்படுகிறது. அங்கு, நிலநடுக்கமோ, நிலச்சரிவோ ஏற்படவில்லை. எரிவாயு எடுத்ததும், பூமியில் ஏற்படும் வெற்றிடங்
களை சீர்படுத்த, அந்த பகுதியை சுற்றி, சிறு கிணறுகள் தோண்டி, கடல் நீர் அல்லது
உப்புநீர் செலுத்தப்படும்; அவை வெற்றிடத்தை நிரப்பும். ஆனால் இந்த நீர், 3,000 அடிக்கு கீழே செல்வதால் அவை மேலே வராது. அதனால், அந்த நீரை மக்கள் பயன்படுத்த முடியாது.
சரியான பாதுகாப்பு விதிகளை பின்பற்றினால், எரிவாயு வெளிவரும் போது பேரிடர் எதுவும் ஏற்படாது. ஆனால், 'ப்ளோ அவுட்' என்ற, அதிக அழுத்தத்தில் எரிவாயு வெளியேறினால் விபத்து ஏற்படும். இதுவரை எங்கேயும் அப்படி நிகழ்ந்ததில்லை. அதற்கேற்ப, எரிவாயு எடுக்கும் நிறுவனம், பாதுகாப்பு வசதிகளை கவனித்து கொள்ள வேண்டும்.
கடும் விதிகள் தேவை : பெட்ரோலிய பொருட்கள் எடுப்பதற்கு, மேலை நாடுகள் கடைபிடிக்கும் தொழில்நுட்பத்தையும், பாதுகாப்பு முறைகளையும் நம் நாட்டில் கடைபிடிப்பரா என்ற சந்தேகம் மக்களிடம் உள்ளது. வாயுவை எடுக்கும் நிறுவனம், பாதுகாப்பு விதிகளிலிருந்து மாறாமல் இருக்க, அரசு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். நம் நாட்டின் பல திட்டங்களில், பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு விதிகளில் அலட்சியம் காட்டும் சம்பவங்கள் தொடர்கின்றன. தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை போன்ற பிரச்னைகளில் ஆறுகள், நீர் நிலைகள் மாசுபட்டு, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அனுபவத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்க்கின்றனரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. மக்களுடைய வாழ்வாதாரம்
பாதிக்காமல் செயல்படுத்த அறிவியலாளர்கள், அதிகாரிகளும் மக்களிடம்
உறுதியளிக்க வேண்டும்.
விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்குமா? : பூமிக்கு கீழே மணல் அல்லது பாறைகள் உள்ள, 1,000 அடி ஆழத்திற்குள் தான், நிலத்தடி நீர் இருக்கிறது. ஆனால், ஹைட்ரோ கார்பன் வாயு, 3,000 அடிக்கு
கீழேயிருந்து, சிறிய குழாய்கள் மூலமே எடுக்கப்படுகிறது; இந்த குழாய்களில் கசிவுகள் ஏற்படாது. ஏற்பட்டாலும், அவை மேல்மட்ட நிலத்தடி நீரோடு கலக்காது. அதே போன்று, கீழே களிமண் அடுக்குகள் இருக்கும் பகுதியில் ஹைட்ரோ கார்பன் உள்ளதால், அங்கு ஊடுருவும் நீரால், பல ஆயிரம் அடிக்கு மேலே இருக்கும் நிலத்தின் மேலடுக்கு பகுதிக்கு வர முடியாது. எனவே, மேலேயிருக்கும் விவசாயத்துக்கோ, நிலத்தடி நீருக்கோ பாதிப்பு வராது.
கட்டுரையாளரின் ஆராய்ச்சிகள் : பேராசிரியர் எல்.இளங்கோ, சென்னை அண்ணா
பல்கலையில் நில அமைப்பியல் துறை தலைவராக பணியாற்றுகிறார். நில இயற்பியல், நிலத்தடி நீர் ஆய்வு, நீர் நில அமைப்பியல் நிபுணர் ஆவார். சர்வதேச நிலத்தடி நீர் நிபுணர்கள் சங்கம், சர்வதேச நீர் அறிவியல் சங்கம், இந்திய நீர் ஆய்வாளர்கள் சங்கம், இந்திய நீர்வள ஆதார அமைப்பு, சர்வதேச நில அமைப்பியல் விஞ்ஞானிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகளில் இடம்பெற்றுள்ளார்.நீர்நில அறிவியல், சுற்றுச்சூழலில் நீர்நில வேதியியல் பாதிப்புகள், நிலத்தடி நீர், நெல் சாகுபடி விவசாயத்தில் சுற்றுச்சூழல் விளைவுகள் என, பல ஆராய்ச்சிகள்
மேற்கொண்டுள்ளார்.பேராசிரியர் எல்.இளங்கோ
தலைவர்,
நில அமைப்பியல் துறை,
அண்ணா பல்கலை.,
சென்னை
Advertisement