நீங்கள் அறிவியல் மனப்பான்மை கொண்டவரா :இன்று தேசிய அறிவியல் தினம்

Updated : பிப் 28, 2017 | Added : பிப் 28, 2017 | கருத்துகள் (1)
Advertisement
   நீங்கள் அறிவியல் மனப்பான்மை கொண்டவரா :இன்று தேசிய அறிவியல் தினம்

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, 1946 ல் எழுதிய,'டிஸ்கவரி ஆப் இந்தியா' எனும் நுாலில், மக்களின் அறிவியல் மனப்பான்மை குறித்து முதன்முறையாகக் குறிப்பிட்டிருந்தார்.
அறிவியல் ஆராய்ச்சியில்நேரடியாக ஈடுபடுதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல்களைத் தெரிந்து வைத்திருத்தல் மற்றும் அறிவியல் மனப்பான்மை யுடன் வாழ்தல் ஆகியன
மூன்றும் சற்றே வேறுபாடுகளைக் கொண்டவை. அறிவியல் ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் உழைக்கிறார்கள். அறிவியலை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு எடுத்துச்செல்கிறார்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல்களை பலரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது தனிநபரின் தகவல் அறியும் ஆர்வம், கல்வி இவற்றால் அமைகிறது.
அறிவியல் மனப்பான்மை விஞ்ஞானியாக இருந்தாலும், அறிவியல் தகவல்களை நிறைய தெரிந்து வைத்திருப்பவராக இருந்தாலும், அவர் அறிவியல் மனப்பான்மை கொண்டவரா என்றால், ஆம் என்று கூறிவிட முடியாது. அறிவியல் தகவல்களை தெரிந்து வைத்திருப்பவர், எதையும் கேள்வி கேட்கும் திறன் கொண்டவராக இருக்கும் போதுதான்
அவர் அறிவியல் மனப்பான்மை உடையவராக மாறுகிறார்.அறிவியல் கண்டுபிடிப்பாளராக, தனது துறையில் சிறந்து விளங்கக் கூடியவராக இருப்பவர் கூட, சில நேரங்களில் மூடநம்பிக்கைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கலாம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல்களை நிறைய தெரிந்து வைத்திருப்பவர் கூட, சில நேரங்களில் மூட நம்பிக்கைகளை கொண்டிருக்கலாம்.


விஞ்ஞானியின் நம்பிக்கைசில ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தியை படித்தோம். ஒரு விஞ்ஞானி தான் செலுத்தவிருக்கும் செயற்கைக்கோளின் மாதிரியைக் கோயிலுக்குக் கொண்டு சென்று வழிபாடு நடத்தினார், அது சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காக! அது அவரது நம்பிக்கை என்றாலும், நுாற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் உழைப்பால், அந்த செயற்கைக்கோள் சரியான பாதையில் சென்றது.
அந்த விஞ்ஞானிக்கு அறிவியல் தெரிந்திருந்தும் கூட, அறிவியல் மனப்பான்மை இல்லாதவராகிறார். அவர் தன்னுடைய குடும்பத்தினருடன் சொந்த விஷயங்களுக்காக
வழிபாடு நடத்தியிருந்தால் இந்த கேள்வி எழுந்திருக்காது.எலுமிச்சையைக் கட்டினால் வாகனம் நன்றாக ஓடும்என்பதற்கும் இதற்கும் எந்த பெரிய வித்தியாசம் இல்லை. புராணங்களில் உள்ள புஷ்பக விமானத்தை, இன்றைய தொழில்நுட்பத்துடன் இணைத்துப் பேசுகிறோம்.


கேள்வி கேட்கும் திறன்அறிவியல் மனப்பான்மை மட்டுமே ஒரு தனிநபர்,சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்குத் தேவையான வழிகளை அமைத்துக் கொடுக்கும். இந்த கேள்வி கேட்கும் திறனால், அறிவியல் சிந்தனை ஊக்குவிக்கப்பட்டு உண்மை நிலை அறிந்து கொள்ளக் கூடியவராக இருப்பார். அறிவியல் மனப்பான்மையுடன் இருப்பவர், படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால்
கேள்விகள் கேட்கும் அறிவைக் கொண்டவராக இருந்தால் போதும்.மதம் மற்றும் ஜாதி பிரச்னைகள் மலிந்திருக்கும் இந்தியாவில் இக்கேள்வி கேட்கும் மனப்பான்மையே பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு. மூடநம்பிக்கைகள், அதையொட்டி தனிநபருக்கு ஏற்படும் சிக்கல்களை அறிவியல் மனப்பான்மை மூலமே வென்
றெடுக்க முடியும் என்று நேரு கருதினார். இந்த சிந்தனை எல்லோருடைய மனதிலும் வர வேண்டும். உதாரணமாக மனிதன், பிறப்பு அறிவியலை உற்று நோக்கினால் அதில் பிரிவுகளுக்கு இடமில்லை.


இந்தியாவின் சவால்சுதந்திரத்தின் போது,இந்தியாவில் எழுத்தறிவின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியன மிகப்பெரிய சவால்களாக இருந்தன. அறியாமையில் இருப்போர் ஒடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தன.
கெட்ட சக்திகள் தாக்கமலிருப்பதாகக் கூறி வாகனங்களிலும் வீட்டின் முன்புறம் எலுமிச்சை-மிளகாய் கட்டுவது, நோய் ஏற்பட்டால் தீயசக்தியின் விளைவு என்று கருதுவது, கழுதைகளுக்குத் திருமணம் செய்தால் மழை பொழியும் என்று நம்புவது. சூரியனை ராகு விழுங்குவதால் - சூரிய கிரகணத்துக்குப் பின் குளிக்க வேண்டும் - சாப்பிடக்கூடாது,
கர்ப்பிணிகள் வெளியே செல்லக்கூடாது உள்ளிட்ட தவறான நம்பிக்கைகளின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.


அறிவியலாளர்கள் கூட்டம்1980ல் நீலகிரி மாவட்டம்குன்னுாரில் இந்தியா வின் மிக முக்கிய அறிவியலாளர்கள் கூடிய கூட்டம் ஒன்று நடந்தது. அதில் இந்திய மக்கள் மனதில் அறிவியல் மனப்பாங்கினை வளர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதையொட்டி மும்பையிலிருந்து இந்திய அறிவியல் மனப்பான்மைக்கான பிரகடனம் வெளியிடப்பட்டது. அந்த பிரகடனத்தில் இந்திய மக்கள் மனதில்அறிவியல் மனப்பாங்கை வளர்ப்பது தொடர்பாக உள்ள சிக்கல்கள், தீர்வுகள் பற்றி ஆராயப்பட்டன. மக்கள் மனதில் அறிவியல்
வித்துக்களை ஊன்றுவதில் விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், அறிவியல் இயக்கங்கள், ஊடகங்கள் துணை புரிய வேண்டும் என்று அந்த பிரகடனத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.மீண்டும், 2011 ல் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பாலாம்பூரில் நடந்த மாநாட்டிலும் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. இவ்வளவு தகவல் தொடர்பு வசதிகள் பெருகிவிட்ட போதிலும்,
அறிவுசார் யுகத்தில் வாழ்ந்த போதிலும் - அறிவியல் மனப்பாங்கினை வளர்க்க இன்னும் பணிகள் இருக்கின்றன என்பதை இந்த பிரகடனமும் சுட்டிக்காட்டியது.


மழை எப்படி வரும்மக்களின் மத்தியில் நிலவும் மூட நம்பிக்கைகளை அறிந்து அவற்றை அகற்றும் பணிஊடகங்களுக்கு உள்ளது. அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் மிக முக்கியப் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. கழுதைக்குத் திருமணம் செய்தால் மழை வரும் என்பது, அறிவியல் உண்மைகளுக்குப் புறம்பானது, என்று புரிந்து கொள்ளும் வகையில் பத்திரிகைகள் தகவல்களை வழங்க வேண்டும். சூரிய கிரகணத்தின் போது நடக்கும் அறிவியல் செய்தி களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். புராணம் மற்றும் மூடநம்பிக்கைகள் எது
என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.செய்தியாளர்கள், ஒவ்வொரு சமூகப் பிரச்னைக்கும் பின்பு உள்ள அறிவியல் உண்மைகளைக் கண்டறியும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் செய்தியின் துல்லியத் தன்மைக்கான அளவுகோலாக இருக்கும்.ஆண், பெண் ஏற்றத்தாழ்வை அறிவியல்பூர்வமாக சிந்திக்கும் போது, பெண் உரிமை நிலைநாட்டப்படும். அறிவியல் மனப்பான்மையுடன் இருப்பவர்கள், நமது சுற்றுச்சூழலையும் காப்பாற்றி, இந்த உலகத்தை அகத்திலும், புறத்திலும் அழகாக்க முயற்சி செய்வார்கள்.


ராமன் விளைவு1928 பிப்ரவரி 28ல் சர்.சி.வி.ராமன் கண்டறிந்த 'ராமன் விளைவு'க்காக இன்று தேசிய அறிவியல் தினம் கொண்டாடுகிறோம். அந்த கண்டுபிடிப்புக்கு உறுதுணையாக இருந்த, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணன், சர்.சி.வி.ராமனின் ஆய்வு மாணவர். அவரை வெளிநாட்டிலிருந்து இந்தியா அழைத்து வந்து அவரது அறிவியல் சேவையை தொடரச் செய்தது அப்போதய மத்திய அரசு. அறிவியல் உண்மைகளுக்கும், உண்மையான அறிவியலுக்கும் அரசு ஊக்கம் தரவேண்டும்.
அறிவியல் மனப்பான்மை எனும் கருத்து, சமூக மறுமலர்ச்சிக்கு ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்று தேசிய அறிவியல் தினமான இன்று நாம் உறுதியேற்போம்.முனைவர். சு.நாகரத்தினம்புலத்தலைவர், மொழியியல் மற்றும் தொடர்பியல் புலம்
மதுரை காமராஜ்பல்கலைக்கழகம் , snagarathinam@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
05-மார்-201712:16:33 IST Report Abuse
Sukumaran Sankaran Nair அறிவியலும்,சமயமும் மனிதனுடைய முன்னேற்றத்திற்கு எப்படி ஒரு பறவை தங்கு தடையின்றி சம நிலையில் பறந்து செல்ல இரு சிறகுகளுமே தேவைப்படும். அது போலவே இரு கல்விக்கூறுகளும் ஒன்றோடு ஒன்று இணக்கமான கருத்தைக் கொண்டிருத்தல் அவசியம் . அறிவியல் மூலம் நாம் பெறும் அறிவு ஆக்ககரமான தேவைகளுக்கு உதவுகிற. அதே சமயம் ,சமய கொள்கைகளையும் ,பண்புகளின் அடிப்படையிலும் அமைந்திராவிடில் அது அழிவுக்கு வழி கோலும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X