மக்களுக்காக மாறலாம் அணி... மாசாமாசம் கிடைக்குமா 'மணி'?

Added : பிப் 28, 2017
Share
Advertisement
மக்களுக்காக மாறலாம் அணி... மாசாமாசம் கிடைக்குமா 'மணி'?

மரங்கள் அடர்ந்த நிழலில், 'குளுகுளு' என இருந்த கோவைபுதூர் ஆர்.டி.ஓ., அலுவலகச் சாலையோரத்தில், காலியாக இருந்த இருக்கையை ஆக்கிரமித்து, அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும். அருகிலேயே, டூவீலர் ஓட்டிப் பழகிக் கொண்டிருந்தாள் தோழி. அவளைப் பார்த்து, 'கீழ விழுந்தா கூப்பிடுடி' என்று சிரித்த மித்ரா, அதே புன்னகையுடன் சித்ராவைப் பார்த்துக் கேட்டாள்...
''இந்த மாதிரி, ஊருக்குள்ள இருக்குற எல்லா ரோடும் இருந்தா எவ்ளோ அழகா இருக்கும்?'' என்றாள்.
''உனக்கும் ரொம்பத்தான்டி ஆசை. வேணும்னா நீ தொகுதி மாறிக்கோ... ஊரை எல்லாம் இப்பிடி மாத்த முடியாது,'' என்று கண்ணடித்தாள் சித்ரா.
''நம்ம கூட தொகுதி மாறிக்கலாம்க்கா... இப்போ, மினிம்மாவுக்கு, 'சப்போர்ட்' பண்ற நம்மூரு எம்.எல்.ஏ.,க்கள், தொகுதி மாறினாலும் ஊருக்குள்ள போக முடியாது,'' என்றாள் மித்ரா.
''எதை வச்சு அப்பிடிச் சொல்ற?''
''ஜெ., பொறந்த நாளன்னிக்கு, மக்களோட மக்களா இருந்து விழா கொண்டாடுனது எல்லாமே, ஓ.பி.எஸ்., ஆளுங்களும், தீபா பேரவை ஆளுங்க தான். மத்தவுங்க எல்லாம், கட்சி ஆபீஸ்ல 'அம்மா' படத்துக்கு மாலை போட்டதோட கடமைய முடிச்சிக்கிட்டாங்க...''
''ஆமா மித்து...வழக்கமா, ஜெ., பர்த்டே அன்னிக்கு, இதய தெய்வம் மாளிகையில நல்ல சாப்பாடே போடுவாங்க. இந்த வருஷம், தக்காளி, தயிர்ன்னு ரெண்டு அண்டாவுல, வெரைட்டி ரைஸ் மட்டும் கொண்டு வந்திருக்காங்க. அதையும் வாங்குறதுக்கு ஆளில்லாம பாதி 'வேஸ்ட்' ஆயிருச்சாம்,'' என்றாள் சித்ரா.
''அதை விடக் கொடுமை, அங்க நடந்த செயல் வீரர்கள் கூட்டத்துக்கு, நிர்வாகிகள் பல பேரு வராததால, சுங்கத்துல இருந்து, லேடீசை தலைக்கு, 200 ரூபா கொடுத்துக் கூப்பிட்டு வந்ததுதான். அவுங்க கூட்டம் முடியுற வரைக்கும் கூட இருக்காம, 'காசைக் கொடுங்க'ன்னு நச்சு எடுத்துட்டாங்களாம்,''
என்றாள் மித்ரா.
''எம்.எல்.ஏ., அர்ச்சுணன், 'எக்ஸ்' கவுன்சிலர் சக்திவேல் மட்டும் தான், 'மினிம்மா' படத்தோட பேனர் வச்சிருக்காங்க. சிட்டிக்குள்ள மத்த ஆளுங்க வச்ச எந்த பேனர்லயும், 'மினிம்மா' படமே இல்லை.'' என்றாள் சித்ரா.
''தைரியம் தான்... இதே தைரியத்தோட, எல்லாரும் வெளியில வந்திருந்தா, இந்நேரம் தமிழ் நாட்டுக்கே விமோசனம் கிடைச்சிருக்கும்,'' என்று வெடித்தாள் மித்ரா.
''பாதியில பதவியைப் பறி கொடுத்த, 'எக்ஸ் டவுன்டாடி'எதுக்கு இன்னமும் அந்தப்பக்கம் ஒட்டிட்டு இருக்காரு,'' என்றாள் சித்ரா.
''பழைய டவுன்டாடிக்கு, மாநகர் மாவட்டம் மறுபடியும் கிடைக்கும்னு ஒரு நப்பாசை இருக்கும் போலிருக்கு. இல்லேன்னா, புரோட்டா சூரி மாதிரி, 'நீங்க தப்பா கணக்குப் பண்றீங்க. கோட்டை எல்லாம் முதல்ல அழிங்க; நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்'னு 'டவுன்டாடி' பதவிக்கு குறி வைக்கிறாரோ என்னவோ, குனியமுத்தூர்ல இருக்கற எக்ஸ்.எம்.எல்.ஏ., அணி மாறுவாருன்னு தொண்டர்கள் எதிர்பார்த்தாங்க. ஆனா, கூட்டுறவு பதவியில அவருக்கு மாசாமாசம் ரெண்டு, மூணு லட்ச ரூவா மாமூல் கிடைக்காம போயிருமோன்னு பயந்து அவரு அணி மாறலையாம்,'' என்றாள் மித்ரா.
அப்படியே தலையை உயர்த்தி, மேலே பறக்கும் விமானத்தைப் பார்த்தவளாய்க் கேட்டாள்...
''ஏன்க்கா, சிலையைத் திறக்க மோடி வந்துட்டு திரும்புறப்போ, நம்ம சி.எம்.,மும், ஹெலிகாப்டர்ல கூடவே வந்து, ஏர்போர்ட்ல வச்சு, கால் மணி நேரம் பேசுனாரே. என்ன பேசுனார்னு ஏதாவது தெரியுமா?''
''அவரு என்னத்த பேசிருப்பாருன்னு நமக்குத் தெரியாதா? நம்ம தமிழ்நாட்டோட கோரிக்கைகளை ஏதோ பேப்பர்ல எழுதிக் கொடுத்திருக்காங்க. அதை பாக்கெட்ல இருந்து எடுத்து வாசிக்க ஆரம்பிச்சதும், மோடியே அதை வாங்கி வச்சுக்கிட்டாராம்...''
''இவருக்குத் தெரிஞ்ச ஒரே மொழி, அவருக்குத் தெரியாது; அவருக்குத் தெரிஞ்ச எந்த மொழியும், இவருக்குத் தெரியாது. எல்லாம் நம்ம தமிழ்நாட்டோட தலையெழுத்து...''
''அதெல்லாம் கூட பொறுத்துக்கலாம் மித்து... அவரு நம்ம ஊர்ல கேட்காமலே பிரஸ்மீட் கொடுத்து, சென்ட்ரல் கவர்மென்ட் பண்ற வேலையெல்லாம் ஏதோ, இந்த கவர்மென்ட் செஞ்சது மாதிரியும், ஜெ., அறிவிச்சு, நடக்காத வேலை எல்லாம் ஏதோ நாளைக்கே முடியப்போறது மாதிரியும் சொன்னாரே; அதைத்தான் தாங்க முடியலை,'' என்றாள் சித்ரா.
''அக்கா... அவுங்க அரசியல்வாதிங்க. அப்பிடித்தான் பேசுவாங்க. ஜெ., பொறந்த நாளன்னிக்கு, அவரோட புகழ் பாடுறது மாதிரி, நம்ம கலெக்டராபீஸ்ல ஒரு போட்டோ கண்காட்சி நடத்தி, தங்களோட ஆளுங்கட்சி விசுவாசத்தை ஆபீசர்க காமிச்சது தெரியுமா?'' என்றாள் மித்ரா.
''ம்... பி.ஆர்.ஓ., ஆபீஸ் சார்புல நடத்துனாங்களாமே. என்ன தான் அவர் பழைய சி.எம்.,னாலும், சுப்ரீம் கோர்ட் குற்றவாளின்னு தீர்ப்பு கொடுத்த பிறகு எப்பிடி இப்பிடி ஒரு கண்காட்சி நடத்துனாங்கன்னு கேள்வி கேட்டு, பல பேரு கொந்தளிச்சிட்டாங்க. நிஜமாவே, இது கோர்ட் தீர்ப்பையே அவமதிக்கிறது ஆகாதா?'' என்றாள் சித்ரா.
''யாராவது ஒரு அமைப்பு, ஆதாரத்தோட கோர்ட்ல மனு தாக்கல் பண்ணுனா அல்லது ஆர்.டி.ஐ.,ல, 'யார் உத்தரவுல இதை நடத்துனீங்க'ன்னு கேட்டா, கலெக்டரும் சேர்ந்து, கோர்ட்டுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்,'' என்றாள் மித்ரா.
இருவரின் பேச்சையும் தடை செய்வது போல, ஆம்புலன்ஸ் ஒன்று சத்தத்துடன் கடந்து சென்றது.
''மித்து... ஆம்புலன்சைப் பார்த்ததும், நம்ம ஜி.எச்., ஞாபகம் வந்துச்சு. அங்க மார்ச்சுவரிய இடம் மாத்துனாலும் மாத்துங்க. அங்க இருக்குற டாக்டருக்கு ரொம்பவே வசதியாப் போச்சாம். அவருக்கு முதல் மாடியில தனி ரூமும் கொடுத்துட்டாங்களாம். எப்பப் பார்த்தாலும், லுங்கி, பனியனோட சரக்குல மெதக்குறாராம். பழையபடி, போலீஸ் உட்பட அங்க வர்ற எல்லா லேடீசையும் சீண்டுற வேலையையும் ஆரம்பிச்சிட்டாராம்,'' என்றாள் சித்ரா.
''அவர் தான், என்ன புகார் போனாலும், எல்லாத்தையும் 'ஜெய்'க்கிற 'சிங்'கமாச்சே,'' என்றாள் மித்ரா.
''டாக்டர் மேல மட்டுமில்லை மித்து... மார்ச்சுவரியில பணம் வாங்கி, வீடியோவுல மாட்டுன சாதாரண ஊழியர் மேல கூட, 'டீன்' நடவடிக்கை எடுக்கலையாம்,'' என்றாள் சித்ரா.
''இப்பல்லாம் பணம் வாங்குற ஆபீசர்க, யாருக்குப் பயப்புடுறாங்க. காரணம் என்னன்னா, மேல இருக்குற ஆபீசர்களே சரியில்லை. இல்லேன்னா,
அவுங்களே கீழ இருக்கிறவுங்கள்ட்ட கை நீட்டுறாங்க,'' என்றாள் மித்ரா.
''கரெக்ட் தான்... மதுக்கரையில இருக்குற ஒரு டெபுடி தாசில்தாரு, வயசானவங்க, ஏழைன்னு எதையும் பாக்குறதில்லையாம்; அவரு கேட்டதை மக்கள் தரலைன்னா, மக்கள் கேக்குற பட்டா, சிட்டா எதுவும் கிடைக்காதாம். ரெவின்யூ சர்டிபிகேட் கொடுக்கவும் ஏகமா காசு புடுங்குறாராம். மாவட்ட ஆபீசரோட 'அருள்' அவருக்கு இருக்காம்,'' என்றாள் சித்ரா.
''ஆனா, அருள் தர்ற அறநிலையத்துறையில இருக்குற பெரிய ஆபீசர், தனக்கு, 'கப்பம்' கட்டாத ஆபீசர்களை கன்னாபின்னான்னு பேசுறாராம். சலீவன் வீதியில ஒரு கோவிலை கவனிக்கிற லேடி ஆபீசர், அந்த கோவில் சின்னதா இருக்குறதால, போலீஸ் பாதுகாப்பு வேணாம்னு சொல்லிருக்காங்க. அதுல அந்த 'இன்ஸ்' கடுப்பாகி, 'எங்களைக் கையப்பிடிச்சு இழுக்காத குறையா வெளிய தள்ளிட்டாங்க'ன்னு இந்த ஆபீசர்ட்ட சொல்லிருக்காரு...''
''அதுக்கு இவரு என்ன சொன்னாராம்?''
''மேட்டுப்பாளையம் எலிபென்ட் கேம்ப்ல வச்சு, பல பேருக்கு முன்னால, அந்த லேடி ஆபீசர்ட்ட, 'என்னம்மா, போலீஸ்காரங்க கையப்பிடிச்சு இழுத்தியா'ன்னு நக்கலா கேட்ருக்காரு. இப்போ, அந்த லேடி ஆபீசர், மகளிர் ஆணையத்துக்கு புகாரைக் கொண்டு போயிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
அதற்கு சித்ரா பதில் சொல்வதற்குள், தனது 'வெஸ்பா'வை வேகமாக வந்து இவர்கள் முன் நிறுத்திய தோழி, 'நானாவது, விழுறதாவது' என்று கையில் 'தம்ஸ் அப்' காட்ட, மூவரும் புறப்படத் தயாராயினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X