"போகனுக்கு' தெறித்த தெற்கு எம்.எல்.ஏ., கோபத்தில் தொட்டியை வைத்த அதிகாரி

Added : பிப் 28, 2017
Advertisement
எப்போதும் வாகனங்கள் அணிவகுக்கும் அவிநாசி ரோட்டில், போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, மொபட்டை லாவகமாக ஓட்டி வந்தாள் சித்ரா. பின்னால் அமர்ந்து வந்த மித்ரா, ""வழியில், கம்ப்யூட்டர் சென்டரை பார்த்தா நிறுத்து. லேப் டாப் சர்வீசுக்கு கொடுக்கணும்,'' என்றாள்.""கம்ப்யூட்டர்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது. அனுப்பர்பாளையம் ஸ்டேஷனில் இருந்து கம்ப்யூட்டர் காணாம போன
"போகனுக்கு' தெறித்த தெற்கு எம்.எல்.ஏ., கோபத்தில் தொட்டியை வைத்த அதிகாரி

எப்போதும் வாகனங்கள் அணிவகுக்கும் அவிநாசி ரோட்டில், போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, மொபட்டை லாவகமாக ஓட்டி வந்தாள் சித்ரா. பின்னால் அமர்ந்து வந்த மித்ரா, ""வழியில், கம்ப்யூட்டர் சென்டரை பார்த்தா நிறுத்து. லேப் டாப் சர்வீசுக்கு கொடுக்கணும்,'' என்றாள்.
""கம்ப்யூட்டர்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது. அனுப்பர்பாளையம் ஸ்டேஷனில் இருந்து கம்ப்யூட்டர் காணாம போன விவகாரம் என்னாச்சு?'' என்று கேட்டாள் சித்ரா.
""இந்த விவகாரம் டி.ஜி.பி., ஆபீஸ் வரை போயிடுச்சு. அங்கிருந்து விவரம் கேட்டப்ப, சர்வீசுக்கு போயிருக்கு; முன்பு வேலை பார்த்த ஒரு போலீஸ்காரரோட சொந்த கம்ப்யூட்டர், அதுன்னு, சாக்குபோக்கு சொல்லி சமாளிச்சுட்டாங்க,'' என்றாள் மித்ரா.
""அப்புறம் என்னதான் ஆச்சு,'' என்று, ஆவலாக கேட்டாள் சித்ரா.
""வழக்கம் போல், வேறு வழியில்லாம, அங்கு வேலையிருந்த பெண் ஏட்டு ஒருத்தரை, வேறு ஸ்டேஷனுக்கு மாத்திட்டாங்க. அது போகட்டும்,
சீமைக்கருவேலம் ஒழிப்பு பணியில், நீதித்துறை ரொம்ப தீவிரமாக இருக்கு பார்த்தியா,'' என்று மித்ரா கேட்டாள்.
""ஆமா. திருப்பூர் மாவட்டத்தில் சுறுசுறுப்பா வேலை நடந்திட்டு இருக்கே,'' என்றாள் சித்ரா.
""நல்ல விசயம் தான். ஆனா, செலவு தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லாம, இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிற அதிகாரிங்க ரொம்பவே திணறி வர்றாங்க,''
என்றாள் மித்ரா.
""அதில் என்ன பிரச்னை இருக்கு? ''
""சீமைக்கருவேல மரங்களை அழிக்கறதை யார் செய்யறது; செலவுகளை எந்த துறை ஏத்துக்குமுன்னு, முறையான அறிவிப்பு இல்லை. அதனால, மாவட்ட
நிர்வாகம் ஏற்பாட்டிலே, வருவாய்த்துறையினர் இந்த வேலைகளை செய்யறாங்க. அந்த துறை அதிகாரிகளோ, இந்த செலவை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம விழி பிதுங்கி நிற்கறாங்க,'' என்றாள் மித்ரா.
""அப்படின்னா, பூனைக்கு யார் மணி கட்டறதுன்னு, பிரச்னை ஓடிக்கிட்டிருக்கா,'' என்று கேட்டவாறே கம்ப்யூட்டர் சென்டர் முன் மொபட்டை நிறுத்தினாள் சித்ரா.
உள்ளே சென்று "லேப் டாப்' கொடுத்து விட்டுவந்த மித்ரா, ""சரிப்பா, வண்டியை, ஈஸ்வரன் கோவில் வரைக்கு விடு. சிவராத்திரிக்கு கோவில் பக்கமே போகலை,'' என்றவாறு, பின் சீட்டில் அமர்ந்தார்.
சித்ரா வண்டியை கிளப்பியவாறே, ""ஆளுங்கட்சிக்கு பாதகமான செய்தி பரவிடக்கூடாதுங்கிறதில, கரை வேட்டிகளைவிட, சில அதிகாரிங்க ரொம்பவே
தீவிரமாக இருக்காங்க,'' என்று, அடுத்த விஷயத்தை ஆரம்பித்தாள்.
""என்ன நியூஸ்? எந்த துறை அதிகாரிங்க அப்படி நடந்துக்கறாங்க,'' என்று மித்ரா ஆர்வமாக கேட்டாள்.
""சசிகலா குடும்பத்துக்கு எதிரா பன்னீர் பேட்டி கொடுத்தப்பவும், சசிகலா சிறைக்கு போனப்பவும், சட்டசபை அமளி நடந்தப்பவும், திருப்பூர் சுற்றுவட்டாரத்தில பல இடங்களில், அரசு கேபிள் "டிவி' ஒளிபரப்பு "கட்' ஆயிடுச்சு. இதனால, பொதுமக்கள் ரொம்பவே, "டென்ஷன்' ஆயிட்டாங்க,'' என்று சித்ரா கூற, ""யாரும் புகார் சொல்லலையா,'' என்று கேட்டாள் மித்ரா.
""பழைய கலெக்டர் ஆபீசில இருக்கிற, அரசு கேபிள் "டிவி' கட்டுப்பாட்டு அறைக்கு பலரும் தொடர்பு கொண்டு கேட்டிருக்காங்க. ஆனா, கேபிள் தாசில்தார், வழக்கம் போல் மழுப்பிட்டார். நிறைய போன் வரவும், "ஸ்விட்ச் ஆப்' செஞ்சுட்டார்,'' என்று சித்ரா பதிலளித்தாள்.
அதற்குள், குமரன் ரோடு, சிக்னலில், ரெட் எரியவே, பேச்சு திசைமாறியது. ""சி.இ.ஓ., அலுவலகம், புது கலெக்டர் ஆபீசுக்கு மாறினாலும், காட்சிகள் இன்னும் மாறலைன்னு தலைமை ஆசிரியர்கள் புலம்பறாங்க மித்ரா,'' என்று, அடுத்த விஷயத்துக்கு மாறினாள் சித்ரா.
"" எதுக்காக இந்த புலம்பலாம்,'' என்று மித்ரா ஆர்வம் பொங்க கேட்டாள்.
""கலெக்டர் ஆபீஸின் ஐந்தாவது மாடியில், சி.இ.ஓ., அலுவலகம் இருக்கு. அங்க, தலைமை ஆசிரியர்களுக்கு மீட்டிங் நடத்துற வசதியும் இருக்கு. ஆனா,
இன்னும் தனியார் பள்ளிகளையே கெஞ்சீட்டு இருக்காங்க...''
""அதுமட்டுமா, மீட்டிங் நடக்கிற நாளில் முதன்மை கல்வி அலுவலர் தன்னோட போனை "ஸ்விச் ஆப்' செஞ்சு வெச்சுடறாராம். மீட்டிங் பத்தின டவுட் கேட்டு ஆசிரியர்கள் கொடைஞ்சிடுவாங்களோன்னு நினைக்கிறாரா அல்லது, பிரஸ் அதுஇதுன்னு பதில் சொல்லனுமேன்னு கவலையா என்னமோ,'' என்று சித்ரா கூறவும், ஈஸ்வரன் கோவில் வரவும் சரியாக இருந்தது.
""மூணு பிரிவா, ஜெ., பிறந்த நாள் விழா கொண்டாடிட்டாங்க,'' என்று, கோவில் வாசலில் ஆளுங்கட்சி தரப்பு தகவலை ஆரம்பித்தாள், மித்ரா.
""அட, இருப்பா, சாமி கும்பிட்டு வந்துட்டு பேசலாம்,'' என்று சித்ரா கூறியதும், இருவரும் உள்ளே சென்றனர்.
வழிபாடு முடிந்து, இருவரும் வண்டியில் மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர். ""இப்ப சொல்லு, இதில் யார் கை ஓங்கியிருந்துச்சு,'' என, சித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.
""அதிக கூட்டம் சேர்த்து, ஆரவாரமா கொண்டாடின வகையில், பன்னீர் அணிதான் ஜெயிச்சுருக்கு. குமரன் சிலை அருகே நடந்த நிகழ்ச்சியில, ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்க கலந்துகிட்டாங்க. புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் பக்கம், மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த விழாவில், கூட்டமே இல்லையாம்,'' என்று மித்ரா விளக்கினாள்.
""சசி தரப்பு அணியினரோட ரியாக் ஷன் எப்படியிருந்துச்சாம்,'' என்று சித்ரா கேட்டாள்.
""பப்ளிக் சப்போர்ட் இல்லை. சசி சொந்தக்காரருன்னு சொல்லி மிரட்டிட்டு இருந்த முன்னாள் கவுன்சிலர் ஒருத்தர், அவர் வார்டுக்குள்ள இருந்து, ஆளுங்களை கூட்டிட்டு போயிருக்காரு. "டாஸ்மாக்' பார்ல வேலை செய்யறவங்களையும் கூட, விட்டு வைக்கல. அப்படியிருந்தும், 60 பேர் கூட சேரலை. திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ.,வும், ஜெ., பிறந்த நாள் விழாவுக்கு வராததால, நிர்வாகிகள் கடுப்பாகிட்டாங்க,'' என்று மித்ரா கூறி முடித்ததும், அவ்வழியே திருப்பதி பஸ் சென்றது.
அதைப்பார்த்ததும், ""கூவத்துலுர்ல இருந்து வந்த பிறகு, எம்.எல்.ஏ.,கள் நிலைமை எப்படி இருக்கு,'' என்று சித்ரா கேட்க, ""கிட்டத்தட்ட தலைமறைவு மாதிரித்தான் வந்துட்டு போறாங்க. தாயோட இறுதிச்சடங்குக்கு கூட வர முடியாம போச்சேன்னு, வடக்கு எம்.எல்.ஏ.,தான் ரொம்ப அப்செட்ல இருக்காரு,''என்றாள் மித்ரா.
""தீபா பேரவை நிர்வாகிகள் என்ன பண்றாங்க?'' என்று கேட்டாள் சித்ரா.
""பன்னீர் தனி அணியா செயல்பட துவங்கியதும், அ.தி.மு.க., தொண்டர்களும், நிர்வாகிகளும், தீபா பக்கம் இருந்து, பன்னீர் அணிக்கு மாறிட்டாங்க,'' என்று மித்ரா கூறினாள்.
""அது சரி, தெற்கு எம்.எல்.ஏ., நிலவரம் ஏதாவது தெரியுமா,'' என்று சித்ரா கேட்க, ""அவருதான் "போகன்' படத்துக்கு போயிட்டாராம் தெரியுமா?'' என்றாள் மித்ரா.
""கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு,'' என்று சலித்து கொண்டே கேட்டாள் சித்ரா.
""ஜெ., நினைவிடத்தில் அமர்ந்து, 40 நிமிடம் தியானம் செஞ்சப்ப, தெற்கு எம்.எல்.ஏ., சென்னையில் இருந்தார். முதலமைச்சருக்கு என்னாச்சோனு, சமாதிக்கு போலாம்னு புறப்பட்டாராம். டிவியில், சசிகலாவுக்கு எதிரா, பன்னீர் பேட்டி கொடுத்ததும், தெற்கு எம்.எல்.ஏ., கோபமாகி, உடனே, குடும்பத்தோட "போகன்' படத்துக்கு தெறிச்சுட்டாராம்,'' என்றாள் மித்ரா.
""நீயும் அங்கிருந்து பார்த்த மாதிரியே சொல்றயே?'' என்று கிண்டலாக கேட்டாள் சித்ரா.
""யாரும் பார்க்கலை. மாவட்ட ஆபீஸ்ல நடந்த கூட்டத்துல, அவரேதான் சொன்னாரு,'' என்று முடித்தாள் மித்ரா.
""கடை முன்னாடி குப்பை தொட்டிய வச்சுட்டாராம். உனக்கு தெரியுமா?'' என்று வேறு மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
""தமிழ்நாட்டுக்கு சி.எம்., யாருனு கேட்ட மாதிரி கேட்காதே. என்னன்னு நீயே சொல்லு?'' என்றாள் மித்ரா.
""மாநகராட்சி செயற்பொறியாளர் "குவாட்டர்ஸ்' மங்கலம் ரோடு பக்கத்துல இருக்கு. அவரு ஜீப்பில் போறப்ப, அங்கிருந்த கடை முன்னாடி நிறுத்தியிருந்த வாகனங்கள் இடைஞ்சலா இருந்தது. இதனால, செயற்பொறியாளர் சத்தம் போட்டாரு. அவங்களும், பதிலுக்கு பேசியிருக்காங்க. கோபமா போன அதிகாரி, மறுநாள் காலையில், கடை வாசப்படி பக்கத்துல குப்பை தொட்டியை வச்சுட்டாரு.
""உடனே, ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள் நாள் முழுவதும் போராட்டம் நடத்தியிருக்காங்க. அதுக்கு அப்புறமா, குப்பை தொட்டி வேற இடத்துக்கு போயிருக்கு. அதிகாரிங்க போக்கு இப்படியிருந்தா எப்படி?,'' சித்ரா கூறி முடித்ததும், ""ஓ.கே.,ப்பா. நேரமாச்சு. நான் கிளம்பறேன்,'' என்றவாறு வண்டியில் பறந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X