பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்களா| Dinamalar

பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்களா

Added : மார் 02, 2017 | கருத்துகள் (1)
பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்களா

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
பாரதியார், பெண் சமூகத்திற்கு பாரதி விட்டுச்சென்ற அறைகூவல் நடைமுறையில் சாத்தியமாகி கொண்டு இருக்கிறது. ஆண்டுதோறும் மேடை அமைத்து மகளிர் தினம் கொண்டாடுகிறோம். ஆனால் சமூக கட்டமைப்பில் இருந்து ஒரு பெண் சுதந்திரமாக வாழ முடிகிறதா என்று சிந்தித்தால் 'இல்லை' என்பதே பதிலாகும்.
பெண் என்பவர் மென்மை யானவள். உடல் பலவீனமானவள். எப்போதும் ஆணை சார்ந்துதான் வாழ வேண்டியவள். சுயமாக முடிவெடுக்க தகுதியற்றவள் என்ற ஒரு தவறான கருத்தை, சமூகம் கட்டமைத்து அதற்கு அடக்கி வைத்து காலம் காலமாக பெண்ணை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது இச்சமூகம். இதுதான் யதார்த்தமான உண்மை. நியாய மான தேவைகளுக்கும், பெற வேண்டிய உரிமைகளுக்கும், இன்றைய காலத்திலும் பெண்ணானவள் போராட வேண்டியுள்ளது.
திருமணம்
பெண் குழந்தை பிறந்தவுடன் குழந்தை பருவம் முதல் குமரிப்பருவம் வரை வளர்ப்பு முறையிலேயே வேறுபாடு தொடங்கி விடுகிறது. இவள் அடுத்த வீட்டிற்கு போக கூடியவள் என்ற கருத்தை மையப்படுத்தியே வளர்க்கின்றனர். திருமணம் எனும் பந்தத்தில் அடியெடுத்து வைக்கும்போது, அவள்'வரதட்சணை' என்ற பெயரில் விலை பேசப்படுகிறாள். விலை கட்டுப்படியாகாது என்றால், திருமணத்திற்கு மறுக்கப்படுகிறாள். இது காலம் காலமாக நடந்து வருகிறது. திருமணம் முடிந்து விட்டது என்றால், ஆணின் கட்டுப்பாட்டிற்குள் அடியெடுத்து வைத்துவிட்டாள் என்று அர்த்தமாம். இது சமூகம், பெண்களுக்கு சொல்லிக்கொடுத்த போதனை.தாய், தந்தையை மறக்க வேண்டும். உற்றார் உறவினர் களை துாக்கி எறிய வேண்டும். தன் மனதில் உள்ள ஆசாபாசங்களை அழித்துவிட வேண்டும். கணவன் அடித்தாலும், உதைத்தாலும் நெருப்பால் சுட்டாலும், அழத்தான் செய்ய வேண்டுமே தவிர அந்நியருக்கு தெரியக்கூடாது. இதுதான் பெண்மையின் ரகசியம் என்று சமூகம் சொல்லிக்கொண்டு இருக்கிறது.
பெண்களின் உரிமை : கணவனே கண் கண்ட தெய்வம், குடிப்பான், அடிப்பான், பிற பெண்களிடம் உறவு வைத்து கொள்வான். இதை தட்டிக்கேட்கும் உரிமை எத்தனை பெண்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. தட்டிக்கேட்டால் வாழாவெட்டியாக்கி விடுவேன் என்ற மிரட்டல் தொனி. ஏன் இத்தனை அவலம். ஒவ்வொரு பெண்ணும் விலைக்கு விற்கப்படும் திருமணம் நடைபெறுவதால் வந்த கொடுமை.
குடும்பம்
ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானம். எத்தனை குடும்பத்தில் இது சாத்தியமாகி இருக்கிறது. சமூகத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம். வாழ்க்கை துணையாக வந்த பெண், ஆண் குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். பெண் குழந்தை என்றால் கருவிலேயே அழிக்கப்படுவதும், தப்பிப்பிறந்தால் 'அடக்கு முறை' என்ற பெயரில் அடக்கி வைக்கப்படுவதுதான் சமூகம் சொல்லிக்கொடுத்த பாடம்.பெண்களுக்கு என்று சிலகட்டுப்பாடுகளையும், ஒழுக்கங்களையும் சமூகம் கட்டமைத்தது. மீறும்போது 'ஒழுக்கங்கெட்டவள்' என்று சமூகம் தள்ளிவைத்தது. ஆடவன் ஆயிரம் தப்புசெய்தாலும், 'அவன் ஆம்பளை' என்று மெச்சிக்கொள்ளும் சமூகம், பெண்ணின் மீது கொடுமைகளை வாரி இறைக்கிறது.
இலக்கியங்களில்... ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நடந்த நிகழ்வுகளை இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன. கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரிமை உடையதாகவே இலக்கியங்கள் கற்பிக்கின்றன. அழகியல் சார்ந்த வர்ணனை பொருளாகவே பெண்களை சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றன. கட்டிய மனைவியை விட்டு, வேறொரு பெண்ணிடம் சென்று கூத்தடித்து, கும்மாளமிட்டு, மீண்டும் தன் மனைவியிடம் திரும்பிவரும்போது மறுப்பு ஏதும் சொல்லாத அடிமைத்தனத்தை, கண்ணகியான கதாபாத்திரம் சிலப்பதிகாரத்தில் உணர்த்திநிற்கிறது.எட்டு பெண்களை மணந்த, சீவகனை சீவகசிந்தாமணி தெளிவுபடுத்தி உள்ளது. கற்பை நிரூபிக்க வேண்டிய கடமை சீதைக்கு, செய்யாத தவறுக்கு கல்லான அகலிகை என ராமாயணமும் எடுத்துக்காட்டுகிறது. இப்படியாக சமூக கட்டமைப்பில் உள்ள பெண்களின் நிலையை இலக்கியங்கள் எடுத்துக்காட்டி இருக்கின்றன. பெண் என்பவள் ஆணின் அதிகாரத்திற்கு அடிமையாகவும், போகப்பொருளாக வும், பிள்ளை பெற்று கொடுக்கும் இயந்திரமாகவுமே, சமூகம் கட்டமைத்து இருக்கிறது என்பது வேதனையிலும் வேதனையே.மறுமணம்
ஒரு பெண் இறந்து போய்விட்டால் அவளது கணவனுக்கு என்று எந்த சடங்குகளும், சம்பிரதாயங்களும் செய்வது இல்லை. மாறாக, மறுமாதமே மறுமணத்திற்கு தயாராகிவிடுகிறான். ஆனால், கணவனை இழந்த பெண்ணிற்கு எத்தனை கொடுமைகளை இச்சமூகம் முன்வைக்கிறது. பூ, பொட்டு வைக்கக்கூடாது. மஞ்சள் பூசக்கூடாது. வண்ண ஆடைகள் அணியக்கூடாது. மங்களகரமான நிகழ்வுகளுக்கு முன்நிற்க கூடாது. இப்படிப்பட்ட சடங்குகளை பெண்களின் மீது திணித்து மேலும் மேலும் மனதளவிலும் அவளை பலவீனப்படுத்துவதையே, இச்சமூகம் விரும்புகிறது. உதவி செய்யும் அடுத்த ஆடவன், சகோதர உறவாக இருந்தாலும் தவறான பழிச்சொல்லை சுமத்தி பெண்களை இழிவுபடுத்துவது தான் சமூகக்கட்டமைப்பில் இன்றளவும் உள்ள நிலை. மறுமணம் இன்று சில இடங்களில் நடந்தாலும், அவளுக்கான அத்தனை உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
இதைதான் பாரதிதாசன்'வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்மணவாளன் இறந்தால்பின் மணந்தாள் தீதோ!'என்று மறுமணத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தான். பாரதியும், பாரதிதாசனும் நம் சமகாலத்து கவிஞர்கள். இக்காலத்திலும் இப்படியொரு அறைகூவல் விடுக்கக்காரணம் இந்நிலை இன்று வரை சமூகத்தால் கட்டமைக்கப்பட்டு கட்டிக்காத்து வருகின்றன. இதன் வெளிப்பாடுதான் பாரதிதாசனின் மேற்சொன்ன வரிகள்.
இன்றைய நிலை ஒன்று குடும்பம், மற்றொன்று வேலை என்று இரட்டை சுமையை சுமக்கும் சுமைதாங்கிகளாகவே பெண்கள் இன்று இருக்கின்றனர். ஆண்களுக்கு நிகராக சம்பாதிக்கின்றனர். படிக்கின்றனர். பணிபுரிகின்றனர். அரசியலில் சாதிக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு இடத்திலும் பாலியல் வன்முறைக்கும், ஒருதலை காதலுக்கும் உள்ளாக்கப்படுவதுதான் பரிதாபத்திற்குரியது.இரவில் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. பிடித்தமான ஆடைகளை அணிய முடியவில்லை. இருட்டில் நடந்துசென்றால் அவள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறாள். எதிர்த்து கேட்டால் 'பெண் ஏன் இருட்டில் தனியாக செல்ல வேண்டும்' என்று எதிர்கேள்வி சமூகம் கேட்கிறது. நம்மோடு வாழ்ந்த சுவாதி ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டாள். மாணவி சோனாலி கல்லுாரி வகுப்பறையில் கொல்லப்பட்டாள். கோவையில் மாணவி தண்யா வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.
துாத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா சர்ச்சில் கொலை செய்யப்பட்டாள். சேலத்தில் தேஷாஸ்ரீ படுகொலை. இத்தனை உயிர்கள் மிரட்டலுக்கும், ஆசைக்கும் அடி பணியாததால் இந்த உலகத்தில் வாழ முடியாமல் வழியனுக்கப்பட்டுள்ளது.
பெருமை பேசும் சமூகம்
யோசித்து பாருங்கள். 'பெண்கள் பெண்கள்' என்று பெருமை பேசும் இச்சமூகம், பெண்களுக்கு தரும் மரியாதையும், உரிமையும் இதுதான். வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் பெண் தன் இருப்பிற்காக போராட வேண்டிதான்உள்ளது. பெண்களை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன. ஆனால் வரதட்சணை கொடுமையில் இறப்பதும், ஆதிக்கத்திற்கு உட்படுத்தி அடிமைப்படுத்த நினைப்பதும் நடந்து கொண்டுதானே இருக்கிறது.பெண்களின் கனவுகளையும், லட்சியங்களையும் நிறைவேற்ற சமூக கட்டமைப்பில் மாற்றம் தேவை என்பது காலத்தின் கட்டாயம்.
மு. ஜெயமணிஉதவி பேராசிரியைராமசாமி தமிழ் கல்லுாரி

காரைக்குடி. 84899 85231

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X