ஆணென்ன, பெண்ணென்ன எல்லாம் ஓரினம்| Dinamalar

ஆணென்ன, பெண்ணென்ன எல்லாம் ஓரினம்

Added : மார் 03, 2017 | கருத்துகள் (4)
ஆணென்ன, பெண்ணென்ன எல்லாம் ஓரினம்

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில், பெண்களே எழுதும் 'என்பார்வை' வெளியாகிறது.

அண்மையில் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய செய்தி, ஹாசினி என்ற ஏழு வயது பெண் குழந்தையை இளவயது இன்ஜினியர் கற்பழித்து, தீயிட்டு கொன்றது. என்ன கொடுமையான செயல். இதில் தவறு செய்த அந்த இளைஞனை துாக்கிலிட வேண்டும் என்று பல பகுதிகளில் இருந்தும், குரல்கள் எழுப்பப்படுகின்றன.

என்னுடைய வேதனை என்னவென்றால், ஆணிவேரை கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, கிளைகளை மட்டும் வெட்டி, என்ன பயன். இதனுடைய ஆணிவேர் எது? நம்முடைய சமுதாய அமைப்பும், பெற்றோர் தம் குழந்தைகளை வளர்க்கும் முறையும் தானே.எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்மண்ணில் பிறக்கையிலே, பின்நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும்
அன்னையின் வளர்ப்பினிலே ....

எவ்வளவு உண்மையான வரிகள். பிறக்கும் குழந்தை ஆண் ஆகட்டும், பெண் ஆகட்டும் பிறக்கும்போது, களிமண்ணாக தானே உள்ளது. பெற்ற தாயும், தந்தையும், இந்த சமுதாயமும் தானே அவர்களிடம் பாரம்பரியத்தையும், பழக்கவழக்கங்களையும், உணர்வுகளையும் கற்றுக் கொடுத்து, அவர்களை ஒரு மனிதனாக உருவாக்குகிறார்கள். பல லட்சம் குழந்தைகளில் ஒரு சில குழந்தைகள் மட்டும் ஒழுக்கத்தில் பிறழ்வது ஏன் ?


பெண் குழந்தை வளர்ப்பு


பெற்ற தாய்க்குத் தான் தெரியும். ஒரு ஆணுக்கு பெண்ணின் உடலின் எந்த பகுதிகளை பார்க்கும்போது உணர்ச்சிகள் அதிகரிக்கும் என்று. அதனால் தன்னுடைய பெண் குழந்தையின் உடல் அமைப்பிற்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுத்து, அவர்களை உடுத்த அனுமதிக்க வேண்டும். எப்படி பொது இடத்தில் நிற்பது, அமர்வது, பேசுவது போன்ற விஷயங்களை உணவை ஊட்டுவது போல சிறுக, சிறுக ஊட்ட வேண்டும்.

அந்த பெண் குழந்தை எங்கே போகிறாள்? அவளுடைய நண்பர்கள் யார், யார் யாருடன் தொலைபேசியில் பேசுகிறாள் என்று மகளின் அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.அப்பா, மகள் உறவு எழுத்தில் விவரிக்க முடியாதது. அப்பாவுக்கு மகள் தேவதை. மகளுக்கு அப்பா ஹீரோ.

'ஆனந்தயாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் !
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில்,ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட
உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை'

இந்த பாடல் வரிகளை கேட்கும் போது, நிச்சயமாக பெண்ணைப் பெற்ற அப்பாக்களுக்கு, கண்ணில் நீர் வரும். நீங்கள் மனைவியை நடத்தும் முறை, குடும்பத்தை, குழந்தைகளின் நலனில் காட்டும் அக்கறை, அவர்களிடம் அன்பாக பழகும் முறைகளை பார்க்கும் போதே அந்த பெண்பிள்ளைகளுக்கு உங்களை ஏமாற்ற மனம் வராது. உங்கள் நடவடிக்கைகளில் தான் குடும்பத்தின் கவுரவம் உள்ளது.


தோளுக்கு மேல்


ஒவ்வொரு தாய்க்கும், தன்னுடைய ஆண் குழந்தையின் மீது அதீத தனி பாசம் உண்டு. இந்த பாசத்தின் காரணமாக அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் படும் அவஸ்தைகளை மகனுக்குத் தெரியாமல், பார்த்துக் கொள்வார்கள்.குழந்தைகளுக்கு பனிரெண்டு வயது ஆகும் வரை வளர்ப்பில் ஆண், பெண் குழந்தை என்று பேதம் பார்க்க வேண்டியதில்லை.

ஆனால், 12 வயதிற்கு மேல், தாய் தன்னுடைய மகனிடம், தன்னுடைய இளவயதில் உடம்பில் ஏற்பட்ட மாற்றங்கள், மாதா மாதம் தான் படும் வேதனைகள், கரு உண்டான காலத்திலிருந்து, பிரசவிக்கும் காலம் வரை பெண்ணிற்கு உண்டாகும் உடல், மனவேதனைகளை அவ்வப்போது எடுத்துரைக்க வேண்டும்.

தன்னைப் போலத்தான், அனைத்துப் பெண் குழந்தைகளும் வேதனைப்படுவார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தனக்கு வரும் மனைவியைத் தவிர, பிற பெண்களை அவன் தவறாக பார்க்கக்கூடாது, என்பதை அவனுக்குப்புரிய வைக்க வேண்டும்.அவன் தவறு செய்தால், அதன்
காரணமாக குடும்பத்திற்கு ஏற்படும் அவமானங்கள், அவனுடைய பின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படும் என்பதை விளக்கிக் கூற வேண்டும்.

நம் சமுதாயத்தில் தந்தை, ஆண் மகனுடன் ஒரு வயதுக்கு மேல் நேருக்கு நேர் பேசுவது இல்லை. பழகுவதும் இல்லை. அவனை ஏதாவது கண்டிக்க வேண்டும் என்றாலும், அல்லது அறிவுரைக்கூற வேண்டும் என்றாலும், உடனே மனைவியிடம் கூறி நீ உன் மகனை
கண்டிக்கிறாயா? இல்லையா? என்பார்கள். இது மிகவும் தவறான செயல்.

தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன். அதனால் அவனிடம் நண்பனாக பழகுங்கள். மகனுடைய வயதில் உங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள், ஆர்வங்கள், வாழ்க்கையில் ஏற்பட்ட அவமானங்களை மகனுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.தவறுதலாக படத்தையோ, வீடியோவையோ பார்க்க நேர்ந்தால், என்ன செய்ய வேண்டும். அந்த எண்ணத்திலிருந்து எப்படி வெளிவர வேண்டும்
என்பதை நட்பு ரீதியாகவே சொல்லுங்கள்


. போராட்டமும், பாடமும்-


வடநாட்டு நியூஸ் சேனல்கள் அனைத்தும் நம் தமிழ்நாட்டில் நடந்த இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பாராட்டி தீர்த்து விட்டனர். பாராட்டுதலின் முக்கிய காரணம் இளவயது ஆண்களும், பெண்களும் மெரினாவில் லட்சக்கணக்கில் கூடி இரவு, பகல்
சேர்ந்திருந்து, ஒரு சிறு தவறுகூட நடக்காமல் இருந்ததை தான் சுட்டி காட்டினார்கள். எவ்வளவு பெருமையான விஷயம்.

எவ்வளவு சந்தோஷமாக காலரை துாக்கிவிட்டு நடந்தோம். இதற்கு என்ன காரணம், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் ஒரே குறிக்கோள் தான், போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதே.வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை நோக்கி, ஓடும்போது வேறு தவறான எண்ணங்கள் எதுவும் மனதின் குறுக்கே வராது. அதனால், இளைஞர்கள் வாழ்க்கையில் எப்போதும் ஒரு குறிக்கோளை அமைத்து, அதை நோக்கியே உங்களுடைய பயணத்தை துவங்குங்கள்.


சமுதாயத்தின் பங்கு


பள்ளிக்கூடங்களிலும், கல்லுாரிகளிலும் தான் இளைஞர்கள் அதிகநேரம் செலவழிக்கிறார்கள். ஆசிரியர்கள், மாணவர்களிடம் நட்பாக பழகி, நல்லவற்றை எடுத்துக்கூறி அவர்களை நல்லமுறையில் வழிநடத்த வேண்டும்.வாரத்திற்கு ஒரு மணிநேரமாவது நல்லொழுக்க வகுப்பு நடத்தி, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

இன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பாக சினிமாக்கள் முதன்மையாக உள்ளன. இதன் மூலம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஆனால் பெருவாரியான சினிமாக்கள் பெண்களை கேலி, கிண்டலுக்குரிய பொருளாகவும், கொச்சைப்படுத்தியும் காட்சிகளை அமைக்கின்றனர். பெண் பாசம் கூட ஆபாசமாக பார்க்கப்படுகிறது.

'டிவி' நாடகங்கள் இன்றைய சமூக சீர்கேடுகளுக்கு துாபம் காட்டும் சாதனங்களாக எல்லோரது இல்லங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இதன் பிடியில் இருந்து விடுபட்டால் தான் எல்லோரது மனதிலும் துாய்மை பிறக்கும்.

-அமுதா நடராஜன்

தன்னம்பிக்கை பயிற்றுனர், மதுரை
r_amutha@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X