தொட்டியம்:திருச்சி மாவட்டம், தொட்டியத்தில், விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 340 காய்களுடன் இருந்த அதிசய வாழைத்தார் வெட்டப்பட்டது.தொட்டியத்தைச் சேர்ந்த வாழை விவசாயி சந்திரசேகரன். திருச்சி மாவட்ட வாழை உற்பத்தியாளர் சங்க செயலராகவும் உள்ளார். சந்திரசேகரன், தன் தோட்டத்தில், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ஏக்கரில் பூவன் ரக வாழை சாகுபடி செய்திருந்தார்.
கடந்த, 19ம் தேதி வாழை அறுவடை செய்தார். பொதுவாக வாழைத்தாரில் ஒவ்வொரு சீப்பிலும், 30 முதல், 40 காய்கள் இருக்கும்.சந்திரசேகரனின் தோட்டத்தில் அறுவடை செய்த ஒரு வாழைத்தாரில், 12 சீப்புகள் இருந்தன. அதில், மூன்று சீப்புகளில் அதிகளவில் காய்கள் இருந்தன. முதல் சீப்பில், 51 காய்கள், இரண்டாவது சீப்பில், 49 காய்கள், மூன்றாவது சீப்பில், 50 காய்கள் உட்பட மொத்தம், 340 காய்கள் அந்த வாழைத்தாரில் இருந்தன.விவசாயி சந்திரசேகரன் கூறுகையில்,""பொதுவாக வாழைத்தாரில், 200 முதல் 220 காய்களே இருக்கும். ஆனால், எங்களது தோட்டத்தில் வெட்டிய ஒரு வாழைத்தாரில் மூன்று சீப்புகளில், 340 காய்கள் இருந்தது ஆச்சரியமாக உள்ளது,''என்றார்.
தொட்டியம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அதிசய வாழைத்தாரை வந்து ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மற்றும் சிறுகமணி வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் வாழைத் தாரினை பார்வையிட்டு, அதன் ஒரு பகுதியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.