சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

வாதம் செய்ய வா

Added : மார் 07, 2017
Share
Advertisement
வாதம் செய்ய வா Ramanujar Download

காவிரிக் கரையோரம் பல்லக்கு வந்து கொண்டிருந்தது. பல்லக்கின் பின்னால் யக்ஞமூர்த்தியின் சீடர்கள் பத்திருபது பேர் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு மாட்டு வண்டியில் கட்டுக்கட்டாக ஓலைச் சுவடிகள். சுவடி வண்டிக்குப் பின்னால் இன்னொரு குழுவாக மேலும் பத்திருபது பேர்.
நதியின் மேல் பரப்பில் இருந்து பிறந்து வந்த குளிர்ச்சியைக் கரையோர மரங்கள் கலைத்து நகர்த்தி, காற்றோடு விளையாடிய கணத்தில், பல்லக்கின் திரைச்சீலை படபடத்து நகர்ந்தது. ஒரு சுவடியைக் கையில் வைத்துக்கொண்டு யக்ஞமூர்த்தி அமர்ந்திருப்பது தெரிந்தது. துாய காவியும் முண்டனம் செய்த தலையும் திருநீறு துலங்கும் நெற்றியும் அவரது தீட்சண்யம் மிக்க கண்களை அலங்கரிக்கச் செய்த ஏற்பாடு போலிருந்தது. அருகே சாய்த்து வைக்கப்பட்டிருந்த தனது ஏக தண்டத்தை எடுத்துச் சற்றே நிமிர்த்தி வைத்தார். தொண்டையை லேசாகக் கனைத்துக் கொண்டு வெளியே மெல்லத் தலைநீட்டிக் கேட்டார். 'இன்னும் எவ்வளவு துாரம்?''வந்துவிட்டோம் குருவே. அரங்க நகரின் எல்லையைத் தொட்டு விட்டோம். அங்கே பாருங்கள். கோபுரம் நெருக்கத்தில் தெரிகிறது.'பல்லக்கின் அருகே நடந்து வந்து கொண்டிருந்த சீடன் சுட்டிக்காட்டிய திசையில் அவர் பார்த்தார். விண்ணுக்கும் மண்ணுக்குமான இட்டு நிரப்ப இயலாத இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிற கோபுரம். ராமாயண காலத்து விபீஷணனுக்கு ராமச்சந்திர மூர்த்தி தன் நினைவின் பரிசாகக் கொடுத்தனுப்பிய விமானம். அது அவரது குலச் சொத்து. இக்ஷ்வாகு குலம் தோன்றிய காலம் முதல் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வந்த ரங்க விமானம். ராமன் அதை விபீஷணனுக்குக் கொடுக்க, விபீஷணன் அதைத் தலையில் ஏந்தி வந்து திருவரங்கத்தை அன்று ஆண்டு கொண்டிருந்த தர்மவர்மா என்னும் மன்னனிடம் ஒப்படைத்ததாகச் சொல்லுவார்கள். விமானம் வந்து சேர்வதற்கு முன்னால் திருவரங்கத்துக்கு அந்தப் பெயர் கிடையாது. அது சேஷ பீடம் என்று அழைக்கப்பட்டது. ரங்க விமானம் வந்த பிறகுதான் அது திருவரங்கம் ஆனது.யக்ஞமூர்த்திக்கு அந்தக் கதைகள் தெரியும். வடக்கில் உதித்த இக்ஷ்வாகு குலத்தின் தெற்கு வழித்தோன்றல்களே சோழ மன்னர்கள் என்பதும் தெரியும். அதை வசிஷ்டரே உறுதிப்படுத்தி எழுதி வைத்த சுலோகத்தை அவர் படித்திருந்தார். அவருக்குச் சிரிப்பு வந்தது. சோழர்கள் இன்று சிவபக்தர்கள். அத்வைத சித்தாந்தத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள். ஊருக்கு ஊர் சிவாலயங்களைக் கட்டியெழுப்பி அறம் வளர்ப்பவர்கள். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட திருவரங்கத்தில் அத்வைத சித்தாந்தமே ழிக்கப்பட்டுவிட்டது.ஒரு தனி மனிதர் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார். பிராந்தியத்தில் அத்தனை பேரையும் வைணவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார். திருவரங்கம் தாண்டித் தென் இந்திய நிலப்பரப்பு முழுதும் மக்கள் அவரைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர் புகழ் பாடுகிறார்கள். அவர் வழியே சிறந்ததெனக் கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். என்னத்தைக் கண்டுவிட்டது இம்மூட ஜனம்? அவர் பேசுகிற விசிஷ்டாத்வைதம் புரியுமா இவர்களுக்கு? சாமானியர்கள் சித்தாந்தங்களால் கவரப்படுவதில்லை. அது அவர்களை முழுதாக எட்டுவதுமில்லை. ஒரு நம்பிக்கை. நாடி பிடித்துப் பார்க்கிற வைத்தியனின் முகக் கனிவு கொடுக்கிற நம்பிக்கை போன்ற ஒன்று. ஆனால் தோற்றமல்ல, மக்களே. அதற்கு அப்பால். எதற்கும் அப்பால் என்றும் நிலைத்திருப்பது என்று ஒன்று உள்ளது. மடத்தனமாக அதை எதற்கு வெளியே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? அறிவதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. பிரத்யட்சம், பிரமாணம், சுருதி. கண்ணுக்குத் தென்படுவது பிரத்யட்சம். சூரியன் பிரத்யட்சம். சந்திரன் பிரத்யட்சம். மரங்களும் நதியும் கடலும் பிரத்யட்சம்.ஆனால் நெருப்பு சுடும் என்பது பிரமாணம். நீ தொட்டுத் தெளிய வேண்டாம். தொட்டுப் பார்த்தவர்கள் சொல்லி வைத்தது போதும். அது அனுமானம். நீ தொடாவிட்டாலும் அது சுடத்தான் செய்யும். தொட்டுத்தான் பார்ப்பேன் என்று கை வைத்து சுட்டுக்கொண்டால் உன் இஷ்டம்.சுருதி என்பது முன்னறிவு. வேதங்கள் வழங்குகிற பேரறிவு. அதுதான் பிரம்மம் ஒன்றே உண்மை என்கிறது. பிரம்மம் ஒன்றே உண்மை என்றால் மற்றதெல்லாம் மாயையே அல்லவா? இதுவல்லவா சத்தியம்? மாயையே சத்தியம் என்பதைக் கேட்டு நகைக்காதே. நான் நிரூபித்துக் காட்டுகிறேன். கூப்பிடுங்கள் உங்கள் ராமானுஜரை. இரண்டில் ஒன்று பார்த்துவிடுகிறேன். இரண்டே இல்லை; ஒன்றுதான் (அ-த்வைதம் என்றால் இரண்டல்ல; ஒன்றே என்று பொருள்) என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்.தனது மானசீகத்தில் ஒரு பெரும் கூட்டத்தின் எதிரே நின்று அவர் பிரகடனம் செய்து கொண்டிருந்தார். திருவரங்கத்து மக்களின் எதிரே ராமானுஜர் முன்வைக்கும் வைணவ சித்தாந்தத்தைத் தோற்கடித்து அரங்கமாநகரில் அத்வைத சித்தாந்தத்தை நிலைநாட்டும் அடங்காத பேரவா அவரைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.அவர் பெரும் பண்டிதர். கங்கைக் கரையில் பல்லாண்டு காலம் பல்வேறு குருகுலங்களில் பயின்றவர். ஆதி சங்கரரின் அடிச்சுவடே உய்ய வழி என்று நம்பி ஏற்றுத் துறவறம் பூண்டவர். துறவுக்குப் பிறகு வட இந்தியா முழுதும் சுற்றித் திரிந்து அத்வைத சித்தாந்தத்தைப் பிரபலப்படுத்தியவர். ராமானுஜரின் பெயரும் புகழும் அங்கே எட்டியபோதுதான் யக்ஞமூர்த்திக்குக் கோபம் மூண்டது. அப்படியென்ன வெல்லவே முடியாத ஆளுமை? வென்று காட்டுகிறேன் பார்.பல்லக்கும் பரிவாரமும் சேரன் மடத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்தது.யக்ஞமூர்த்தியின் சீடர்கள் சிலர் உள்ளே சென்று தகவலைச் சொன்னார்கள். 'வந்திருப்பவர் மகா பண்டிதர். தெற்கில் பிறந்து வடக்கே போனவர்தாம். ஆனால் வட இந்தியா முழுதும் இன்று புகழ் பெற்ற அத்வைத மகாகுரு. உங்களுடைய ஆசாரியர் ராமானுஜரைச் சந்திக்க வந்திருக்கிறார்.''அதற்கென்ன சந்திக்கலாமே!' என்று எழுந்து வந்தார் ராமானுஜர்.'உம்மை வெறுமனே பார்த்துப் போக நான் வரவில்லை ராமானுஜரே. உம்முடன் வாதம் செய்ய வந்திருக்கிறேன்.''வாதமா? என்ன காரணம் பற்றி?''காரணமென்ன காரணம்? உமது சித்தாந்தத்தின் அபத்தத்தை உலகுக்குச் சொல்லப் போகிறேன். துணிவிருந்தால் வாதத்துக்குத் தயாராகுங்கள். மகாபாரத யுத்தம் பதினெட்டு தினங்கள் நடந்தன. நாமும் பதினெட்டு நாள் வாதம் செய்வோம். நீங்கள் வாதில் வென்றால் நான் உமது அடிமையாவேன். நீங்கள் வென்றால் உமது வைணவ சித்தாந்தத்தை விடுத்து, அத்வைதமே சத்தியமென்று ஏற்கவேண்டும்.'ராமானுஜர் ஒரு கணம் அமைதியாக யோசித்தார்.'வாதத்துக்கு நான் தயார். ஆனால் உயிர் இருக்கும்வரை மாய, சூனிய வாதங்களை என்னால் ஏற்க இயலாது. வேண்டுமானால் நான் தோற்றால் வைணவப் பிரசாரப் பணிகளை நிறுத்திக் கொள்கிறேன்' என்று சொன்னார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X