பெண்கள் தினத்தை அல்ல... பெண்களை கொண்டாடுவோம் நாளை சர்வதேச மகளிர் தினம்| Dinamalar

பெண்கள் தினத்தை அல்ல... பெண்களை கொண்டாடுவோம் நாளை சர்வதேச மகளிர் தினம்

Added : மார் 07, 2017 | |
ஒவ்வொரு வருடமும் பெண்கள் தினத்தன்று, குறைந்தது மூன்று நிகழ்வுகளில் பங்கேற்று பேசி வருகிறேன். காலையில் ஒரு கல்வி நிறுவனம், பிற்பகல் ஒரு கல்வி நிறுவனம், மாலையில் ஏதேனும் ஒரு பெண்கள் அமைப்பு என மிக மகிழ்வோடு,மேடையில் பெண்ணின் பெருமைகள் குறித்து, மிகுந்த ஆர்வமுடன் பேசுவேன். ஆனால் இந்த வருடம், தொடர்ந்து பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் வன் கொடுமைகளும், மூன்று
   பெண்கள் தினத்தை அல்ல... பெண்களை கொண்டாடுவோம்  நாளை சர்வதேச மகளிர் தினம்

ஒவ்வொரு வருடமும் பெண்கள் தினத்தன்று, குறைந்தது மூன்று நிகழ்வுகளில் பங்கேற்று பேசி வருகிறேன். காலையில் ஒரு கல்வி நிறுவனம், பிற்பகல் ஒரு கல்வி நிறுவனம், மாலையில் ஏதேனும் ஒரு பெண்கள் அமைப்பு என மிக மகிழ்வோடு,மேடையில் பெண்ணின் பெருமைகள் குறித்து, மிகுந்த ஆர்வமுடன் பேசுவேன். ஆனால் இந்த வருடம், தொடர்ந்து பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் வன் கொடுமைகளும், மூன்று வயது பெண்
குழந்தைக்கும் கூட பாதுகாப்பு இல்லாத சமுதாயத்தில் வாழ்கிற பதற்றமும், என்ன பெரியபெண்கள் தினம் என மிகுந்த அயர்ச்சியை உண்டு பண்ணுகின்றன.


கொண்டாட்டங்கள்வருடத்தில் ஒருநாள், பெண்கள் தினம் அன்று மட்டும், பெண்களைத் தாயாக மதிப்போம், பெண்களைப் போற்றுவோம் என கோஷம் போட்டு விட்டு, மற்ற நாட்களில் எல்லாம் பெண்கள் மீது வன்முறையைச் செலுத்துவது என்றாகி விட்ட சூழலில், பெண்கள் தினம் என்பதே ஒரு சம்பிரதாயத்திற்காகத் தான் கடைபிடிக்கப்படுகிறதோ என தோன்றுகிறது.பெண்கள் தினத்தை, பெரும்பாலான நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள் சமையல் போட்டி, கோலப் போட்டி, கூந்தல்
அலங்கார போட்டி நடத்தித் தான் கொண்டாடுகின்றன.


கசக்கும் உண்மைகள்நான்கு மாதங்களுக்கு முன், எங்களுக்கு இரண்டாவது குழந்தையாக மகன் பிறந்தான். முதல் குழந்தை பெண். பயணங்களில், உணவகங்களில், திரையரங்குகளில் நிறைசூலிக்கான கரிசனத்தோடு என்னிடம் பேசிய பெண்கள் எல்லோருமே, இது ஆண் குழந்தை தான் என்றே அசரீரி சொன்னார்கள். பிரசவ அறைக்கு என்னைத் தயார்
படுத்திய பணிப்பெண், "கவலைப்படாதம்மா...ஆம்பள புள்ளயாவே பொறக்கும்" என்றார். எனக்கென்னம்மா கவலை... ஏற்கனவே பொண்ணு இருக்குறதால, இது பையனா இருந்தா நல்லா இருக்கும் தான். ஆனா, அதுக்காக பையன் தான் வேணும்னு நினைக்கல, பொண்ணா இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான்" என்ற என்னை ஆச்சர்யத்தோடு பார்த்தார்.
"நீ மட்டும் தாம்மா இப்படி சொல்ற, ரெண்டாவது பொண்ணா பொறந்தா, பெத்தவங்க அந்த குழந்தை முகத்தைக்கூட பாக்க வரமாட்டாங்க என வருத்தப்பட்டார்.ஆபரேஷன் தியேட்டரில், நான் மயக்கத்திலிருந்த போதும், ஒரு செவிலிப் பெண், என் உறவினர்களிடம் இதையே கூறி இருக்கிறார். "இரண்டாவது பெண் குழந்தையா இருந்தா, குழந்தையை வாங்கவே மாட்டாங்க" என.


கருக்கலைப்புஏறக்குறைய எல்லா மருத்துவமனைகளிலும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவிப்பது சட்டப்படி குற்றம் என்கிற அறிவிப்பு பலகை இருக்கிறது. கள்ளிப் பாலின் நவீன வடிவம் தான் கருக்கலைப்பு. என்றைக்கு மருத்துவமனைகளில், இந்த
அறிவிப்பு பலகை இல்லாமல் போகிறதோ, அன்றைக்கு பெண்கள் தினத்தை இன்னும் அதிக மகிழ்வோடு கொண்டாடலாம்.இந்த மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை நிபுணர்களாக இருக்கும் பெண் மருத்துவர்களைப் பார்த்த பிறகும், ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தான் கவுரவம் என சில பெண்களே நினைப்பது தான் மிகு துயர்.


அம்மாக்களின் பதற்றம்பெண் பிள்ளைகளைமகிழ்வோடு பெற்று வளர்க்கும் அம்மாக்களும் கூட, எந்நேரமும் பதற்றத்தில் இருக்கும் படியான சமூக சூழலின் அவலம், பெரும் வலியைத் தருகிறது.என் சிறுவயதில், மாலை நேரங்களில், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில், பக்கத்து தெருவிற்கு சென்று, அங்குள்ள பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, அதற்கும் பக்கத்துத் தெருவிற்கு சென்று, மணிக்கணக்கில் விளையாடி இருக்கிறேன். யார் வீட்டிலும் தேடவே
மாட்டார்கள். எங்க போகப்போறா, வந்துடுவா என்ற நம்பிக்கை அன்று அவர்களுக்கு இருந்தது. அண்ணே, அந்த இருட்டைத் தாண்டி, வீட்டுக்குப் போக பயமாயிருக்குண்ணே, கொண்டு வந்து விடுங்கண்ணே என்ற எங்கள் வேண்டுகோளை ஏற்று, பத்திரமாக வீடு வரை கொண்டு வந்து விட்டுப் போன முன், பின்
அறிமுகமில்லாத அண்ணன்கள் இருந்தார்கள்.இன்று பக்கத்துத் தெருகூட வேண்டாம், நம் வீட்டின் அருகிலேயே, நம் பெண் குழந்தை களை விளையாடவிட பயமாக இருக்கிறது. மாலை முழுதும் விளையாட்டு என வழக்கப் படுத்திக் கொள்ள விடாமல்,
மகிழ்வாக விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தையை, போதும் வா....என இழுத்துக் கொண்டு போய் கதவை சாத்துவது எவ்வளவு கொடூரம்.


மாறிப்போன காலம்ஊரில் திருவிழா, கல்யாணம், சாவு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்க செல்லும் என் பெற்றோர், சுமதிக்கு பரீட்சை நடக்குது, உங்க வீட்ல இருக்கட்டும் என பக்கத்து வீட்டில் அடைக்கலப் படுத்தி செல்வார்கள். அங்கிள், ஆன்ட்டி வார்த்தைகள் அதிகம் புழக்கத்தில் இல்லாத அந்நாட்களில்,
பக்கத்து வீட்டு அத்தை, மாமா, என்னை அவர்களின் குழந்தையோடு குழந்தையாகப் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் ஊருக்குச் சென்ற போது, அவர்களின் குழந்தைகள் எங்கள் வீட்டில் தங்கினார்கள். இன்று அப்படி பெண் குழந்தைகளை பக்கத்து வீட்டில் விட்டுச் செல்கிற சூழல் இருக்கிறதா... இல்லை யெனில் பெண் விடுதலை என்பது கேள்விக்குறி தான் இல்லையா...?ஆட்டோ டிரைவர் முதல் ஆசிரியர்கள் வரை, நம் பெண் குழந்தைகளுக்கு யாரால், எப்போது பாலியல் துன்புறுத்தல் நேருமோ என்கிற பயத்தில், என்ன பெரிய பெண்கள் தினம் என்கிற சலிப்பே மிஞ்சுகிறது.ஆசிட் வீச்சு, அரிவாள் வெட்டு என காதலின் பெயரால் இன்னும் எத்தனை பெண்களைத் தான் பலி கொடுக்கப் போகிறோம்..?ஒவ்வொரு முறையும், ஒரு அசம்பாவிதம் நடக்கும் போதும், அது கொஞ்சமேனும் இச்சமூகத்தை உலுக்கி இருந்தால், மனசாட்சியைத் தொட்டிருந்தால், அடுத்தடுத்து குற்றங்கள்
குறைந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும், இன்னும் அதிகமான உக்கிரத்துடன் தான் பெண் மீதான கொடூரத் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது.

'எதிலும் பெண்களே இலக்கு

அரசியல், சினிமா,கலை,இலக்கியம் என பொது தளத்தில் இயங்கும் பெண்களை, கருத்து ரீதியாக எதிர் கொள்ளாமல், வார்த்தைகளால் புற முதுகிட்டு ஓட வைக்கிறார்கள். இங்கே பெண்களைத் திட்டுவதற்கான வார்த்தை கள் ஏராளம். ஆனால், ஒரு ஆணைத் திட்ட வேண்டுமெனில், தனியே வார்த்தைகள் தேவைப்
படுவதில்லை. பெண்களைத் திட்டுகிற வார்த்தையால், அந்த ஆணின் அம்மாவைத் திட்டுகிறார் கள். எப்படியாயினும் அந்த வசவுகளின் இலக்கு ஒரு பெண்ணே.


மாறாத காட்சிகள்இப்போதெல்லாம் நான் சொற்பொழிவிற்காக செல்கிற, எல்லா மகளிர் கல்லுாரிகளிலும், ஒருவேளை உங்கள் புகைப்படம் தவறாக பயன் படுத்தப் பட்டிருந்தால், அதை செய்தவன் தான், வெட்கப்பட வேண்டுமே தவிர, நீங்கள் அல்ல. எந்த தவறும் செய்யாத நான் ஏன் அழ வேண்டும், நான் ஏன் உயிரை விட வேண்டும் என்ற உறுதியோடு வாழ்வை எதிர் கொள்ளுங்கள் என தொடர்ந்து வலியுறுத்திப் பேசி
வருகிறேன்.நாங்கள் பள்ளிக்குச் செல்லும் போது, வழியில் சில இளைஞர்கள் நின்று கொண்டு பாட்டுப் பாடி கேலி செய்வார்கள். அதற்கு பயந்து கொண்டு,இரண்டு கிலோ மீட்டர் சுற்றி தான் பள்ளிக்குப் போவோம். இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு என் மாணவி சொல்கிறாள், "தினமும் நான் வர்ற வழியில் பசங்க நின்னு கிண்டல் பண்றாங்கனு நான் வேற வழியில் வர்றேன் மேம்" என. இந்த இருபத்தைந்து வருடங்களில், அதே போல் ஆண்கள் கிண்டல் செய்வதும், அதே போல் பெண்கள் வேறு பாதையில் சுற்றிக் கொண்டு செல்வதும் மாறவே
இல்லையெனில், என்ன வளர்ச்சியடைந்திருக்கிறோம்?, என்ன பெண் விடுதலை பெற்றிருக்கிறோம்?


தைரியம் வளர்ப்போம்ஆண் பிள்ளைகளைப் பெற்ற ஒவ்வொரு அம்மாவும், அந்த குழந்தையை, பெண்களை மதிப்பவனாக, பெண்ணை இழிவு செய்யாதவனாக, எந்த சூழலிலும் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் தராதவனாக, காதல் என்ற பெயரில் பெண்கள் மீது வன்
முறையை கட்டவிழ்ப்பவனாக இல்லாமல் வளர்க்க வேண்டும்.அதை உருவாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த பெண்கள் தினத்திலாவது, பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமுதாயத்திற்கான, நம் கடமையை உறுதி மொழியாக ஏற்போம்.
கவிக்கோ அப்துல் ரகுமான், குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதை விட்டு விட்டு, குழந்தைகளைக் கொண்டாடுங்கள் என்று சொன்னது போல், பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதை விட, பெண்களைக் கொண்டாடுவது தான் முக்கியம்.
-சுமதிஸ்ரீசொற்பொழிவாளர்sumathi.ben@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X