பொறுமை பொக்கிஷமா; பொங்கும் போராளியா| Dinamalar

பொறுமை பொக்கிஷமா; பொங்கும் போராளியா

Added : மார் 07, 2017 | கருத்துகள் (2)

BE BOLD FOR CHANGE' என்பது தான் இந்தாண்டு உலக மகளிர் தின கருப்பொருள். எத்தனை அழகாக இருக்கிறது. கரு என்பதே பெண்மைக்கே உரிய அழகு. அதனுடன் பொருள் கொண்டு இந்தாண்டு மைய கருத்தை சொல்வது மேலும் சிறப்பு. 'மாற்றத்திற்காக தைரியத்துடன் இரு' என பெண்ணிற்கு பாடம் சொல்லும் சோதனை என்பது, கல்வி கடவுள் சரஸ்வதிக்கு பாடம் சொல்லும் சோதனை. இதுவேதனையா... இல்லை சாதனையா...
உரமிட்டவள் : அந்த காலத்தில் பள்ளிக்கூடமே அறியாதவள் தான் நம் பெண்கள். ஆனால் ஆய கலைகள் 64ம் படிக்காமல் மற்றவர்களுக்கு கற்று கொடுத்தவள் நம் அன்னை. பதார்த்தத்தை ருசிக்காமல் யதார்த்தமாக புன்னகையுடன் பொறுமையாக மனதார உணர்த்தி உணர்வுடன் உறுதியாக ஊட்டி உரமிட்டவள் இந்த அன்னை... பொறுமையான பொக்கிஷம் அவள்.இயற்கை தான் அழகு; அதுதான் உண்மை. அந்த அழகு தான்பெண்ணாக படைக்கப்பட்டாள். அவளை பாலியல் தொந்தரவு செய்து அழிக்கும் கயவர்களை எப்படி தண்டிப்பது?இயற்கை எனும் இளையகன்னிகளை காப்பாற்ற, இயற்ற வேண்டிய சட்டத்திட்டங்களை, பெண்களிடமே கொடுத்து விடுங்கள். இந்த சூழ்நிலையில் அவர்கள் பொறுமை எனும் பொக்கிஷங்கள் அல்ல. பொங்கி எழும் போராளிகள். அவர்களுக்கு தெரியும். எந்த வகை சட்டம் வேண்டும்; எத்தனை திடமான திட்டங்கள் வேண்டும் என்று.
உரிமை உண்டு : பெண்களின் உரிமைகளை முடிவு செய்யும் முழு உரிமையும் அந்தந்த பெண்ணுக்கு தான் உண்டு. எந்த கலாசார பண்பாட்டையும் சேதாரம் செய்யாமல் பாதுகாத்து பெண்களின் உரிமைகளை பற்றி பேச பெண்களுக்கு தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை. பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல்,பொருளாதார கட்டமைப்புகளையும், நடைமுறைகளையும் சீர் செய்ய வேண்டும். சமத்துவமின்மையை சீர்செய்ய, அரசியலில் சட்டமாக்க, முழு உரிமையும் பெண்களுக்கு தான் உண்டு.தினம் தினம் நித்திரையை மறந்து கடைசி யாத்திரை வரைக்கும் மாத்திரையில் மட்டுமே பசியின் பிணியை போக்கும் உத்தமிகள் தான் பெண்கள். இந்த அற்புத பணிக்கு என்றும் தாழ்படியலாம், உண்மை அன்பும் உள்ளமும் கொண்டோர்.கல்வியை உணர்த்திய மலாலா உணர்வுப்பூர்வமாக உரைகல்லாக. பெண்களின் கல்விக்காக குண்டர்களையும், குண்டடிகளையும் தலையில் தாங்கி, பெண்களுக்கான 'அற்புத வேலி' தரமான கல்வி தான் என்று உணர்த்தியவள் அண்டை நாட்டு மலாலா. அன்று அவருக்கு வயது 15. பல்லாயிரக்கணக்கான பெண் குழந்தைகளுக்கு அறிவூட்டிய அற்புத தேவதை. அந்நாட்டின் வளர்ச்சியில்உண்மையாக பிரதிபலித்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. இங்கு இந்த பொக்கிஷம் தான் போராளியாக மாறினார்.அந்த மலாலாவின் திருவாசகம் நான்கு. ஒரு பேனா; ஒரு நோட்டு; ஒரு குழந்தை; ஒரு ஆசிரியர் இந்த பிரபஞ்சத்தையே மாற்றிய திருவாசகம் அது.அடுப்பறையில் ஊதுகுழலில் கரிச்சட்டியுடன், அன்றுவிளையாடிய அந்த மென் கைகள் இன்று மென்பொருளின் விஞ்ஞானத்துடன்! எல்லா வகை மெய்ஞான உணர்வுடன் விண்கலங்ளை செலுத்தினார்களே, இவர்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். அன்றுஅடுப்பறையில் வர்க்கமூலமாக இருந்த பெண்கள், இன்று சொர்க்க மாக நாட்டை மாற்றியுள்ளனர்.

ஒலிம்பிக்கில் சாதனை : வரும் 2020 ஒலிம்பிக்கில் பெண்களை அனுப்புங்கள். எத்தனை சிந்து, தீபா, செய்னா, சாக்ஷிகள் தங்கத்தை அள்ளி வருவார்கள் என்று பார்ப்போம்; ஒலிம்பிக்கில் தங்கத்தையும், வெள்ளி பதக்கங்களையும்அறுவடை செய்யும் திறன் இன்று பெண்களிடம் மட்டுமே உள்ளன.
கற்பக விருட்சங்கள் : எத்தனை ஹாசினிகளையும், நந்தினிகளையும் பாலியலில் அழிப்பீர்கள். அவர்கள் மண்ணில் வீழ்ந்தது, பெண்களின் அழிவை காட்ட அல்ல. அவர்கள் விதைக்கப்பட்டுள்ளனர். வீழ்ந்த கலைமகளையும், திருமகளையும் எந்த நிலத்தில் வீழ்த்தினாலும், நல் விதையான அவர்கள் கற்பக விருட்சமாக மாறும் பொக்கிஷமாக வருவார்கள்.பழிக்கு பழி என்று புறப்பட்டால், கயவர்களின் கூட்டடமே மிஞ்சாது. மக்களாட்சி நடக்கின்ற நாடுகளில், பெண்கள் தங்கள் அடிப்படை உரிமை களை எப்படி போராடி பெற வேண்டும் என்று உணர்த்திய மதுவிலக்கு போராளி நந்தினி மற்றும் மலாலாவின்... சாயலில் நம் நாட்டிலும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள்.
உதிரிப்பூக்கள் : பெண்களை உதிரி பூக்களாக நினைத்து மிதிக்க நினைக்காதீர். அந்த மணமிக்க உதிரி பூக்களுடன் உயர்ந்த கல்வி எனும் நுாலால் கோர்த்தால் பூமாலை ஆகும். அது புகழ் மாலையாகும் காலம் வெகுவிரைவில்! பூமாலை ஒரு பொன்மாலையாக மாறும் போது அதன் பலமே தனி. மணக்கும் உதிரி பூக்கள் உறுதியாக கோர்க்கப்படும் போது, அந்த பூமாலை ஓர் உன்னதமான உயர்வான இடத்தை அடைந்து செழிப்பினை வளத்தையும், நம் நாட்டிற்கு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. பிறப்பின் போதும், வளர்ப்பின் போதும், அமர்வின் போதும், மணமுடிப்பின் போதும், தாய்மையின் போதும், முதுமையின் போதும் ஏன் விதவையின் போதும் தான் எல்லா நேரத்திலும் கடும் போராளியாக திகழ்பவள் பெண். யார் கேட்டது நகையை யும், சுவையையும்? நகைச்சுவையுடன் அன்பான அரவணைப்புடன் கூடிய இனிய குரல் போதும் அவள் சரணடைய. ஆனால் சில ஆண்கள் அவளிடமுள்ள நகையையும், சுவையையும் பறித்து கரும்பு சக்கையாக துாக்கி எறிந்து விடுகிறார்கள்.
காற்றுக்கு என்ன வேலி : பெண்கள் ஒன்றுமேஅறியாதவள் அல்ல.அவர்களுக்கு தெரியும் காற்றுக்கு எப்படி வேலி போடுவது; கடலை எப்படி மூடி விடுவது என்று... பொருளோடு வந்த தாரங்கள் தான், இந்த பொருளாதாரத்தை உயர்த்தும் பெண்கள்.பாரத பிரதமரே காலில் விழுமளவு, பொருளாதாரத்தின் மகிமை சுருக்கு பையில் உண்டு என்று, களஞ்சியம் எனும் சுய மகளிர் வேலைவாய்ப்பு குழுக்களை மாற்றி காட்டியவர் மதுரை சின்னப்பிள்ளை.பெண்கள் எல்லாம் வெறும் 'ஹவுஸ் ஒய்ப்' என்று கேலி செய்த காலம் மலையேறி விட்டது... இன்று அவர்கள் நாட்டை காக்கும் 'சேப் நைப்'. பாதுகாக்கும் பராசக்தி... நாட்டையும், வீட்டை யும் காக்கும் ஜான்சிராணி.
பேணி காக்கும் ஞானி : அந்த சிவகாமி மைந்தனையும்... சத்ரபதி சிவாஜியையும்... நம் கட்டபொம்மனையும்... கர்ணனை யும் தானபிரபுவாக உரமிட்டவள் தானே இந்த பொக்கிஷ பொறுமைசாலியான பெண்கள். ஏணியாகவும், வெள்ளத்தின் போது தோணியாகவும் உதவி பேணி காக்கும் 'ஞானி' தான் பெண்கள். கேள்விகளை வேள்விகளாக்கி... தோல்விகளை வெற்றி மாலையாக்கி சூடும் 'ஆண்டாள்' போன்றவர்கள் இந்த பொக்கிஷங்கள். தான் படும் பாட்டையும்... பந்தாடப்படும் வேதனைகளையும் தாண்டி அனைத்து கலாசார பண்பாட்டை வளர்க்கும் வித்தை பெண்களிடம் தான் உள்ளது.பெண்கள் ஊமையர் அல்ல. உன்னதமான உணர்ச்சிமிக்க உரங்கள். நிசப்தத்தையே அர்த்தமாக்கும் அற்புத குணமுடையவள். பொறுமையாக இருப்பதால் சடமல்ல அவள். பெண்களின் பெருமையையும் அருமையையும் அற்புதமாகவும் அழகாகவும் வெளிகாட்டும் முழுநிலவு தான் பெண்கள்.உள்ளத்திற்கு உண்மையாக, ஊருக்கு உபகாரமாக இருக்கும் பெண்களை இமை போல பாதுகாக்காமல் பாலியல் தொந்தரவு கொடுக்கும் கயவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தவர் தான் பொறுமையான போராளி அன்னை தெரசா.நல்லார் ஒருவருக்கு செய்த உபகாரம், கல் மேல் எழுத்து போல் காணுமே என்ற ஒளவை பாட்டி ஒரு நல்லாள்.பெண்மையை போற்றுங்கள். இமயம் போல உயர்ந்து நாட்டை காப்போம். தரமான கல்வியை பெண்களுக்கு இலவசமாக கொடுங்கள். அதனையே வேலியாக்கி பாதுகாத்து கொள்வாள்.
பெருமை கொள்வோம் :பெண்களை பெற்றவர்கள் இனி மண்ணை பார்த்து விழ வேண்டாம். விண்ணை பார்த்து வீர நடை போடுங்கள். இனி வருங்காலம் என்றென்றும் வசந்த காலம்.. அதுவும் பெண்மை எனும் தாய்மையால் மட்டுமே...சேற்றில் ஜொலிக்கும் செந்தாமரை தான் பெண்கள். அவர்களை பூஜிக்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் கர்ப்பக்கிரகமான துாய்மையான மனத்திலாவது இடம் கொடுக்கலாம். பெண்களின் கண்களில் நீர் வழிந்து ஆண்களின் நெஞ்சில் உதிரம் கொட்ட வேண்டாம்... பெண்களாக பிறந்ததற்கு பெருமை கொள்வோம்.
-எம்.டி.விஜயலட்சுமி , குடும்ப நீதிமன்றமனநல ஆலோசகர்

மதுரை. 98421 28085

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X