சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

வாதமும் பாதமும்

Added : மார் 08, 2017 | கருத்துகள் (5)
Share
Advertisement
ராமானுஜரின் பிரச்னை, யக்ஞமூர்த்தியல்ல. அவர் பேசிய மாயாவாதமும் அல்ல. அதன் அருகே வைத்து ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை நிரூபித்தாக வேண்டியிருக்கிறதே என்று அவருக்கு சலிப்பாக இருந்தது. இதுவும் இதுவும் சேர்ந்தால் அது என்று அறிவியலில் நிரூபித்து விடலாம். இதையும் அதையும் கூட்டினால் இது என்று கணிதத்தில் காட்டிவிடலாம். பரம்பொருளின் தன்மையையும் அதைப் பாடிப் பரவும்
வாதமும் பாதமும் Ramanujar Download

ராமானுஜரின் பிரச்னை, யக்ஞமூர்த்தியல்ல. அவர் பேசிய மாயாவாதமும் அல்ல. அதன் அருகே வைத்து ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை நிரூபித்தாக வேண்டியிருக்கிறதே என்று அவருக்கு சலிப்பாக இருந்தது. இதுவும் இதுவும் சேர்ந்தால் அது என்று அறிவியலில் நிரூபித்து விடலாம். இதையும் அதையும் கூட்டினால் இது என்று கணிதத்தில் காட்டிவிடலாம். பரம்பொருளின் தன்மையையும் அதைப் பாடிப் பரவும் ஜீவாத்மாவின் ஒரே பெரும் லட்சியத்தையும் அறிவைக்கொண்டா அறிய முடியும்? அது ஆன்மாவின் அடியாழத்தில் பொங்கும் பெரும் புனலல்லவா? பக்தியின் பேராற்றலால் மட்டுமே திறக்க முடியும் பரமபதத்தின் வாயிற்கதவை கணிதச் சமன்பாடுகளால் கட்டுடைப்பது எப்படி?
ராமானுஜர், ஆதிசங்கரரின் மேதைமையை மதித்தார். ஆனால் அவர் பேசிய அத்வைதத்தை மாறுவேட பௌத்தம் என்றே கருதினார். பிரம்மத்தின் சொரூபத்தை உணர மறுத்த பௌத்த சித்தாந்தம், இயற்கை எனும் முடிவற்ற பேராச்சரியத்தையே உண்மை என்று சொன்னது. அதாவது நாம் அறிந்தது மட்டுமே உண்மை என்றாகிவிடுகிறது அல்லவா? பிரத்தியட்சத்துக்கும் பிரமாணத்துக்கும் அப்பால் வேத ஆதாரங்களின் அடிப்படையில் அறிய வேண்டியவற்றை நிராகரித்து அறியக்கூடியவைதான் என்ன? பரம்பொருளுக்கும் ஜீவனுக்குமான உறவு என்பது கண்ணுக்குத் தெரியாத நுாலிழைகளால் கோக்கப்பட்டது.ஜீவன், பக்தனாகப் பரிணாம வளர்ச்சி பெறும்போது பாதை புலனாக ஆரம்பிக்கிறது. பக்தியின் உச்சம் சரணாகதி. சகலமும் மறந்து, சகலமும் துறந்து, ஆதிமூலமே என்று ஆன்மாவின் அடியாழத்தில் இருந்து எழும் பெரும் அழைப்பில் சகலமும் துலக்கம் பெற்றுவிடுகிறது. இந்த அற்புத அனுபவத்தை மாயை தருமா? நான் தான் அது என்று சொல்லிவிட்ட பிற்பாடு தேடலுக்கு என்ன அவசியம்? தேடலற்ற வாழ்வில் அற்புதங்களுக்கு ஏது இடம்? அற்புதங்களின் சூட்சும வடிவத்தை, கரையற்ற பெருங்கடலை, எல்லைகளற்ற பெருவெளியை எட்டிப்பார்க்கக்கூட இடமின்றிப் போய்விடுகிறது.'எம்பெருமானே! உனக்கும் எனக்குமான உறவை நிரூபிப்பதன் பெயரா வாதம்? இதையா பதினேழு தினங்களாகச் செய்து கொண்டிருக்கிறேன்? இதன் அவசியம்தான் என்ன? இது சாதிக்கப் போவதுதான் என்ன?'அன்றிரவு அவருக்கு உறக்கமில்லாமல் போனது. சராசரி மக்களுக்கு, எளியோருக்கு, பாமரருக்குப் பெருவழி காட்டுகிற ஒரு மகத்தான சித்தாந்தத்தை அவர் முன்வைத்தார். மிக நேரடியான உபாயம். எளிமையானது. ஜோடனைகளற்றது. பூச்சற்றது. நேராகப் பரமனின் பாதாரவிந்தங்களில் கொண்டு சேர்க்கவல்லது. மாயையின் மேகத்திரை கொண்டு அதை மறைக்க நினைக்கிறார் யக்ஞமூர்த்தி. நிரூபணங்களில் விருப்பம் கொண்டவர்களால் மேலே கடந்து போக முடியாது. நிரூபிப்பது என்று இறங்கிவிட்டால் காலம் முழுதும் அதைச் செய்துகொண்டே இருக்கவேண்டியதுதான். செயலும் சாதனைகளும் நிரூபணங்களிலா பூரணமடைகிறது? திறந்து கிடக்கிற பெரும் கானகத்தில் யுக யுகமாகப் பூத்துக்கிடக்கிற வாசம் மண்டிய ஒற்றைச் சிறு மலரைத் தேடி அலையும் ஓ யக்ஞமூர்த்தியே! அது உமது உள்ளங்கைக்கு வெகு அருகிலேயேதான் உள்ளதென்பதை ஏன் கண் திறந்து பார்க்க மறுக்கிறீர்? எம்பெருமானே, நீயாவது அவருக்கு அதை எடுத்துக் காட்டலாகாதா?அதையே நினைத்தபடி படுத்துக்கிடந்த உடையவர் எப்போது உறங்கினார் என்று அவருக்கே தெரியவில்லை. ஆனால் உறக்கத்தில் ஒரு கனவு வந்தது. கனவில் காஞ்சிப் பேரருளாளன் வந்தான்.'ராமானுஜரே, எதற்குக் கவலைப்படுகிறீர்கள்? பதினேழு தினங்கள் யக்ஞமூர்த்தியுடன் வாதம் செய்திருக்கிறீர்கள். அவரது அறிவின் விரிவைக் கண்டீர்கள் அல்லவா? எத்தனை படித்திருக்கிறார் என்று பார்த்தீர் அல்லவா? எவ்வளவு பெரிய ஞானஸ்தர் என்று அறிந்தீர் அல்லவா? உமக்கு இப்படியொருவர் சீடராக அமைந்தால் இன்னும் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்று எண்ணிப் பாரும். நாளை அது நிகழும்.'திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்துவிட்டார் ராமானுஜர். அடப்பெருமானே! ஒரு அத்வைத சாகரத்தை ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்துக்குள் இழுத்துவரவா இப்படியொரு நாடகம் நடத்துகிறாய்! இதற்கு என்னை ஒரு கருவியாக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறாயா? பிரமாதம். என்ன விளையாட்டு இதெல்லாம்? 'தேவையான விளையாட்டுதான் ராமானுஜரே. பாமரர்கள் ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தை ஏற்பது இயல்பாக நிகழும். வாதத்தின் வழியே ஒரு பண்டிதர் வந்து சேரும்போது அதன் எல்லைகள் மேலும் விரிவு கொள்ளும். நிம்மதியாகத் துாங்கி எழுந்து வேலையைப் பாரும். நாளை உமக்கொரு புதிய சீடர் வந்து சேரவிருக்கிறார்.'மறுநாள் அது நிகழ்ந்தது.அரங்க நகரத்து மக்கள் முழுதும் அந்தப் பதினெட்டாவது நாள் வாதத்தைக் காண ரங்க நாச்சியார் முன் மண்டபத்தில் வந்து குழுமியிருக்க, யக்ஞமூர்த்தியும் தமது சீடர் குழாத்துடன் வந்து அமர்ந்திருந்தார். எங்கே ராமானுஜர்? ஏன் இன்னும் வரக்காணோம்?'வ ந்து விடுவார் சுவாமி. மடத்தில் திருவாராதனப் பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறார். பூஜை முடிந்ததும் கிளம்பி விடுவார்.'உடையவரின் சீடர்கள் சொல்லிக் கொண்டிருந்தபோதே ராமானுஜர் விறுவிறுவென்று அங்கே வந்துகொண்டிருப்பது தெரிந்தது. யக்ஞமூர்த்தி திரும்பிப் பார்த்தார். ஞானத்தின் பூரணமும் தன்னம்பிக்கையின் நிகரற்ற பேரமைதியும் மேலான தெய்வீக சாந்தமும் நிலவிய முகம் அன்று அவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கச் செய்தது.இல்லை. இவர் நேற்றுப் பார்த்த உடையவர் இல்லை. பதினேழு தினங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிற மனிதர் இல்லை. இவர் வேறு. அல்லது இவருக்குள் நிகழ்ந்திருப்பது வேறு. எனது வாதங்களைத் தவிடுபொடியாக்கவா இவர் வந்து கொண்டிருக்கிறார்? ஆண்டவனே, நானே தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறேனே? இவரிடம் வாதம் செய்து எப்படி என்னால் நிரூபிக்க முடியப் போகிறது? எதை நான் நிரூபிப்பேன்? நிரூபணமே தேவையற்ற பூரண அருளுடன் அல்லவா இவர் வந்துகொண்டிருக்கிறார்? எனக்குத் தெரிந்துவிட்டது. சர்வநிச்சயமாக இவர் பகவானின் பிரதிநிதி. வெல்ல முடியாத ஆகிருதி. வெல்ல அவசியமற்ற பேருண்மையின் பிரசாரகர். நான் தோற்றேன்.தடதடவென்று அவரது உடல் நடுங்கியது. அப்படியே மெல்ல எழுந்து கரம் கூப்பி நின்றார். ராமானுஜர் நெருங்கி வந்தபோது, 'சுவாமி!' என்று அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார்.திடுக்கிட்டுப் போனார் ராமானுஜர். 'யக்ஞமூர்த்தி, என்ன இது? நான் உம்முடன் வாதம் புரிய வந்திருக்கிறேன். இன்று நம் வாதின் இறுதி நாள். ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தை உமக்கு இன்று விளங்கச் செய்யாமல் மறு காரியமில்லை என்று எண்ணிக்கொண்டு வந்திருக்கிறேன். எழுந்திரும்.''அவசியமில்லை சுவாமி. வாதம் வீண். உமது பாதம் ஒன்றே என் கதி மோட்சம்.'கூட்டம் திகைத்து விட்டது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
11-மார்-201708:24:34 IST Report Abuse
Darmavan தேவாதிராஜன் கனவில் ராமாநுஜரிடம் ஆளவந்தாரின் தத்வத்ரியம் துணை கொண்டு வாதம் செய்ய சொன்னார் .அனல் அந்த வைராக்கியத்தோடு வந்த ராமானுஜரை பார்த்த உடனேயே யகிய மூர்த்தி சரணடைந்து சிஷ்யரானார். வாத நிபந்தனைப்படி தேவராஜன் பெயரான அருளாளப்பெருமாளையும் தன் பெயரான எம்பெருமானரையும் சேர்த்து அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்று பெயரிட்டார். மேலும் முன்னாள் அத்வைதியான அவரிடம் பெருமாள் திருவாராதன கைங்கர்யத்தையும் கொடுத்தார்.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
11-மார்-201712:06:45 IST Report Abuse
Darmavanசிறு திருத்தம்.1. ஆளவந்தாரின் 'சித்தித்தரையம் ' தத்வத்ரயம் அல்ல.2.வரதராஜன் - அருளாளப்பெருமாள்...
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
11-மார்-201707:40:22 IST Report Abuse
Manian அல்வாவின் திதிப்பை அனுபவித்தவன் அதை எப்படி வார்த்தைகளால் வர்ணிக்க முடியும். அதே அல்வாவை மெதுவாக வாயில் அடக்கி, அதை சுவைத்து,மென்று,அந்த இனிப்பில் ஆழ்ந்து திளைத்தவன்,அந்த சமயத்தில் வேறு சிந்தனையும் இல்லாமல் ஒரு பரம ஆனந்தம், திருப்தியில் மூழ்கி இருப்பானேஇதைத்தானே மனத்தில் திளைத்தல் -mindfulness-என்று பதஞ்சலி ஹடயோகத்தின் அங்கமாக கூறிகிறார். ஆழ்ந்த தியானத்தில் மூச்சை உள்ளிழித்து, சிறிது நேரம் அடக்கி பின் மெதுவாக விடவேண்டும். மனது அலையாமல் அந்த நிலை நின்று செய்யும் ஆசனங்களுக்கு உதவி செய்கின்றனவேகீழே விழுந்து விடுவோமே என்ற பயம் இல்லாமல், தடுமாறாத நிலே ஏற்படுகிறதே. அதைத்தான் யக்ஞமூர்த்திஇன் மனதில், கடைசியாக உள்ளுணர்வால்,பெருமாள் மட்டுமே அவர் மனதில் நிறைந்திரு்தார்.அவர் மனதில் திளைத்ததால்,ராமானுஜரை பெருமாள் அவதாரமாகவே கண்டதால்,இரண்டும் ஒன்றே" தாழ் சடையும், நீள்முடியும்,ஒண் மழுவும், சக்கரமும், சூழ் அரவும், பொன்னாணும் தொன்றுமால், தோன்றும் திரண்டருவி பாய் திருமலை மேல் எந்தைக்கு இரண்டு உருவும் ஒன்றாய் இணைந்து" என்ற ஆழ்வார் பாடல்,சைவம் வைஷ்ணவம் என்பது மயக்கம்,இரண்டும் பெருமாளேஇதை பலமுறை பெருமாள் அனுபவம் மூலம் எனக்குஉனர்த்தி உள்ளான் ஆனால், யக்ஞமூர்திக்கு 1000 வருஷங்களுக்கு முன்னாலேயே உணர்த்திய கருணையை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும். அது அனுபவித்தே அறியும் பரவச நிலை.
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
13-மார்-201707:51:45 IST Report Abuse
Darmavanராமானுஜர் அத்வைதத்தை /மாயாவாதத்தை ஏற்கவில்லை. அவர் காலத்தில் இந்த பேதம் உச்சத்தில் இருந்தது. குலோத்துங்க சோழன் என்ற கிருமி கண்ட சோழன் ராமானுஜரை இதை ஏற்க வைக்க முயன்றான் ஆனால் அவர் தப்பி திருநாராயணபுரம் சென்றார். தாழ்சடையும்.... தோன்றுமால், 'சூழும்' திரண்டருவி பாயும்..... ஒன்றாய் 'இசைந்து.' என்ற பூதத்தாழ்வார் பாசுரம் இருந்தாலும் இந்த சர்ச்சையினால் ராமானுஜர் ஆதிசேஷன் என்ற பாம்பாக உள் சென்று திருவேங்கடத்தானுக்கு சங்கு சக்கரங்களை அளிக்க வேண்டியிருந்தது....
Rate this:
Cancel
vinoth - Triruvananthapuram ,இந்தியா
09-மார்-201710:46:23 IST Report Abuse
vinoth மிக சிறப்பான தொடர். இக்காலத்திற்கு தேவையான தொடர். தினமலருக்கு நன்றி. இதே போல மக்களை கடைத்தேற்ற இம்மண்ணில் தோன்றிய மற்ற மகான்களை பற்றியும் எழுத வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X