பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வா... வா...!| Dinamalar

பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வா... வா...!

Added : மார் 08, 2017
Advertisement
பாரதி கண்ட புதுமை பெண்ணாய் வா... வா...!

ஆண் கல்வி கற்றால், அது குடும்பத்திற்கு மட்டும் பயன் தரும்; ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் குடும்பம், நாட்டிற்கும் பயன்தரும்.
'பெண்ணுக்கு பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோபெண்ணினத்தை பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீந்துவரல் முயற்கொம்பே”
என்ற பாரதிதாசனின் பெண்ணுரிமை உணர்ச்சி வரிகள் நாட்டின் பெண் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்தது.
எது பெண் சுதந்திரம் : உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கு உள்ள சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டு தான், அந்நாட்டின் மனித உரிமைகள் எந்த அளவிற்கு மதிக்கப்படுகிறது என்பதை அளவுகோலாக வைத்துள்ளனர். இந்தியாவில், தேசிய விடுதலை இயக்கத்தில் பெண்கள் துணிந்து பங்கெடுத்த பின்னர் தான், தங்களுடைய சமூக கவுரவத்தை பற்றி ஆழமாகசிந்திக்கவே தொடங்கினர். இதற்கு ராஜாராம் மோகன்ராய் தொடங்கி காந்தி, அம்பேத்கர், மகாராஷ்டிராவின் புலே, கேரளாவில் நாராயணகுரு, ஆந்திரா வில் வீரசேசாங்க பந்தலு, பசுவய்யா, கர்நாடகத்தில் சித்தராமையா, தமிழகத்தின் ஈ.வெ.ராமசாமி, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
'விண்ணுக்கு பறப்பது போல் கதைகள் சொல்வீர்;விடுதலை என்பீர்; கருணை வெல்ல மென்பீர்; பெண்ணுக்கு விடுதலை நீரில்லை என்றால் பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை” என பெண்ணுக்கு சுதந்திர வாழ்வு இல்லை என்றால் இந்த உலகில் மனிதனுக்கு வாழ்வில்லை என அன்றே பாரதி எச்சரித்துள்ளான்.
வரலாற்று காலம் முதல் பெண்கள் போக பொருளாகவும், அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் வாழப் பழக்கப்படுத்தப் பட்டனர். இந்நிலையில் இருந்து, படிப்படியாக மீண்ட நிலையே இந்நிகழ்வின் பின்னணிக்கு அடிப்படையாக உள்ளது. 1789 ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நடந்த, பிரெஞ்சு புரட்சியின்போது பாரிஸில் பெண்கள் போர்க் கொடி துாக்கினர். 'ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும்,' என குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.அதில், பணிக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, வாக்குரிமை, அடிமைகளாக நடத்தப்படுவதில் இருந்து பெண்களுக்கு விடுதலை போன்றவை முன் வைக்கப்பட்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னர் வாக்குறுதி அளித்தார். ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போகவே அவர் பதவி இழந்தார்.இதனால் ஐரோப்பிய நாடுகளிலுள்ள பெண்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கால கட்டத்தில் இத்தாலியிலும் தங்களுக்கு வாக்குரிமை கேட்டு பெண்கள் போராடினர். கிரிஸ் நாட்டின் விஸிஸ்ட்ரா என்பரின் தலைமையில் டென்மார்க், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் பெண் பிரதிநிதிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டபோது ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்க தொடங்கியது.
முதல் பெண் வெற்றி : பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில், இரண்டாவது குடியரசை நிறுவிய லுாயிஸ் ப்ளாங்க், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைகுழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தார். அந்த நாள் மார்ச் 8, 1848 ஆகும். உலக பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே 'மகளிர் தினமாக' அமைய அடிப்படை வித்தாக அமைந்தது.
இந்தியாவில் பெண்கள் : இந்திய பெண்கள், திருமணம் ஆகும் வரை தந்தை சொல் கேட்கிறவளாகவும், திருமணத்திற்கு பின் கணவனுக்கு அடிமை யாகவும் கணவன் இறந்த பிறகு மூத்த மகனின் கட்டளைக்கு அடங்கி நடப்பவளாக பேதமைப்படுத்தப்பட்டு வருகிறாள்.அனைத்து நாடுகளிலும் 'சராசரி பெண்' என்று அடையாளம் காண முடியும். ஆனால் இந்திய நாட்டில் மட்டும் தான் சராசரி பெண் என்று கோடிட்டு காட்ட முடியாது. இங்கு மட்டும் தான், மேட்டுக்குடி பெண்களும், ஆளுகை செய்கிற பெண்களும், இருக்க வயலோரம், வாய்க்காலோரம் என படிப்பறிவில்லாமல் அடிப்படை தேவைகள் கூட கிடைக்கப் பெறாத பெண்களும் இருக்கிறார்கள்.ஆண், பெண் பற்றிய கருத்துக்கள் மாறி மாறி வந்திருக்கின்றன. ஒரு நேர் கோட்டில் நாம் முன்னே இருக்கிறோம் என்பது தவறு, ஒரு வளையத்தில் நாம் எங்கோஇருக்கிறோம். எங்கே இருக்கிறோம் என்பதில் தான் நமது வாதம் முடிவாகாமல் இருக்கிறது. மாற வேண்டும் இரண்டாம் நிலை : நமது சமுதாய கட்டமைப்பு பெண்களை இரண்டாம் நிலையில் தான் வைத்து உள்ளது. நாம் பெண் விடுதலை பற்றி என்னதான் பேசினாலும், பெண்கள் எல்லாத் துறைகளிலும் வளர்ந்து வந்தாலும், இன்றும் அடிப்படை தேவைகள் கூட இல்லாத பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.காந்தி, "இந்தியா பெரும்பான்மைகிராமங்களையே கொண்டுள்ளது," என்றார். இந்திய நாட்டின் வளர்ச்சி கிராமங்களுடைய வளர்ச்சியை பொறுத்தே அமையும். கிராமங்களின் வளர்ச்சி அங்கிருக்கும் பெண்களுடைய வளர்ச்சியை பொறுத்தே அமையும்.
தொடரும் 'களர் நிலம்' : நகர்ப்புற பெண்கள் சிந்தனையாலும், தொழிலாலும், பொருளாதாரத்தாலும் முன்னடைவு அடைந்திருந்தாலும், கிராமப்புற பெண்கள் இன்னும் நலிந்த நிலையில் தான் உள்ளனர்.
'கல்வியில்லா பெண்கள் களர்நிலம் கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி” என்ற பாரதிதாசனின் எண்ணத்திற்கேற்ப பெண்களுக்கு கல்வி, பேச்சு மற்றும் அடிப்படை உரிமைகள் என்று முழுமையாக கிடைக்க பெறுகிறதோ அன்று தான் நம்நாடு முன்னேற்ற பாதையில் வீறுநடை போடும்.
உறுதி ஏற்போம் : விதைகளை காப்பாற்றி செடிகளை பிறப்பிக்கிற நிலம் தான் அடிக்கடி கொத்திக்கிளறப்படுகின்றன. அதுபோல் தான் பெண் இனமும், அவள் சிறைப்பட்டதும் சிம்மாசனத்தில் அமர்வதும் இந்திய வரலாற்றில் மாறிமாறி நிகழ்கின்றன.
'பெண்களுக்கு கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே பெண்களுக்கு கல்வி வேண்டும் மக்களைப் பேணுதற்கே பெண்களுக்கு கல்வி வேண்டும் உலகினை பேணுதற்கே பெண்களுக்கு கல்வி வேண்டும் கல்வியை பேணுதற்கே' என்ற பாடலுக்கேற்ப பெண்கள்அறியாமை என்ற இருளில் இருந்து விடுபட்டு கல்வியறிவு பெற்று, சுதந்திரம் அடைந்து, ஆண்களுக்கு நிகராக உரிமை பெறவும், பாலியல் கொடுமைகள் நீங்கி, பாரதி கண்ட புதுமை பெண்ணாக வாழ உறுதி ஏற்போம்!
- எஸ்.எம்.சோபியாஉதவி பேராசிரியை

பாத்திமா கல்லுாரி, மதுரை rajisophia@yahoo.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X