இடியுங்கள் மடத்தை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

இடியுங்கள் மடத்தை!

Added : மார் 09, 2017 | கருத்துகள் (1)
இடியுங்கள் மடத்தை! Ramanujar Download

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வாதத்தின் இறுதி நாளான இன்று எப்படியும் ராமானுஜரைத் தோற்கடிப்பேன் என்று தமது சீடர்களிடம் சொல்லிவிட்டே யக்ஞமூர்த்தி புறப்பட்டிருந்தார். திருவரங்கத்து வைணவர்களும், ராமானுஜரைக் காண்பதற்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்களும் மண்டபத்தில் நிறைந்திருக்க, வாதம் இதோ தொடங்கிவிடும் என்று காத்திருந்தவர்கள் அத்தனை பேரும் திகைத்துப் போனார்கள்.
'ஏன் யக்ஞமூர்த்தி? உமக்கு நிரூபிக்க இன்னும் நிறைய இருக்கிறதே? இன்று மாலைக்குள் வாதத்தை முடிக்கலாம் என்றுதானே சொல்லியிருந்தீர்?' என்றார் ராமானுஜர்.கண்ணீரும் பரவசமுமாக யக்ஞமூர்த்தி கைகூப்பி நின்றார்.'சுவாமி, நிரூபணங்கள் தேவையற்ற பரமாத்மாவின் பரிபூரண அருளாசியுடன் நீங்கள் இன்று வந்திருப்பதை உமது முகமே சொல்கிறது. தத்துவங்களில் என்ன இருக்கிறது? தத்துவங்களுக்கு அப்பால் உள்ள பரமனே உங்கள் பக்கம் இருக்கிறபோது இந்த வாதங்களுக்கு அவசியம்தான் என்ன? என்னை ஆட்கொள்ள வந்த எம்பெருமானாரே, இந்த யக்ஞமூர்த்தி இனி உமது அடிமை.'கூட்டம் பேச்சற்றுப் போனது. யக்ஞமூர்த்தியின் சீடர்கள் அதிர்ந்துவிட்டார்கள். 'குருவே, என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?' 'என் குழந்தைகளே, நான் சாஸ்திரங்களில் கரை கண்டவனாக இருக்கலாம். வேதம் அளித்த ஞானத்தின் செழுமை எனக்கு இருக்கலாம். நுால் வாசிப்பும் வாத விவாதங்களில் பெற்ற அனுபவங்களும் என் பலமாக இருக்கலாம். உண்மை என்று நம்பி நான் ஏற்ற அத்வைத சித்தாந்தம் என் மூச்சுக்காற்றாக இருக்கலாம். ஆனால் எது பேருண்மையோ அது இவர் பக்கம் இருக்கிறது. நீயும் நானும் பேசுவதுபோல பகவான் இவரோடு உரையாடுகிறார். வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தருகிறார். பகவானின் பூரண அருளைப் பெற்றவரை வாதில் வென்று நான் எதை நிரூபிப்பேன்? அது அபத்தமல்லவா?'அவர் பேசியது யாருக்கும் புரியவில்லை. ராமானுஜருக்கு மட்டும் புரிந்தது. கனவில் வந்த பேரருளாளன் சொன்னதைச் செய்துவிட்டான். இது தெய்வ சங்கல்பம். நாம் செய்ய ஒன்றுமில்லை. எனவே, 'வாரும் யக்ஞமூர்த்தியே! ஸ்ரீவைஷ்ணவ தரிசனம் இனி உம்மாலும் செழுமை கொள்ளும். உமது ஞானத்தின் பலத்தை நாரணன் சேவைக்குத் திருப்புங்கள்!' என்று சொன்னார். யக்ஞமூர்த்தி, சிகை நீக்கிய, ஏகதண்டம் ஏந்திய அத்வைத சன்னியாசி. ராமானுஜர் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைத்து, மீண்டும் பூணுால் அணிவித்து, திரிதண்டம் வழங்கி, வைணவ தரிசனத்துக்குள் வரவேற்றார்.'காஞ்சிப் பேரருளாளன் சித்தம், நீங்கள் வைணவ தரிசனத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமென்று இருந்திருக்கிறது. எனவே நீங்கள் இனி அருளாளப் பெருமான் எம்பெருமானார் என்று அழைக்கப்படுவீர்.''ஆஹா. எம்பெருமானார் என்பது தங்களுக்கு சாற்றப்பட்ட பேரல்லவா? தங்களது பரம ஆசாரியர்களுள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பி சூட்டிய நாமமல்லவா? அதைப் போய் எனக்கு அளிக்கிறீர்களே சுவாமி! நான் தங்கள் கால் துாசு பெறுவேனா?''இல்லை. எம்பெருமானே உவந்து தங்களை வைணவ தரிசனத்துக்கு அழைத்திருக்கிறான். எவ்விதத்திலும் நீங்கள் தாழ்ந்தவரல்லர்.''நான் என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள். 'ராமானுஜர் அவருக்கு நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைச் சொல்லிக் கொடுத்தார். யக்ஞமூர்த்தி சமஸ்கிருதத்தில் பெரும் பண்டிதர். வேத உபநிடதங்களில் தொடங்கி அவர் வாசிக்காததே கிடையாது. ஆனால் பிரபந்தம் படித்ததில்லை. அதில் ஆர்வம் செலுத்தியதும் இல்லை. எனவே ராமானுஜர் அதில் ஆரம்பித்தார். வெகு விரைவில் அவர் பிரபந்தங்களில் ஆழ்ந்த தேர்ச்சியுற்றது கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, 'சுவாமி, இனி நீங்கள் என்ன செய்யவிருக்கிறீர்கள் என்பதை நீங்கள்தாம் முடிவு செய்யவேண்டும். வைணவ தரிசனத்துக்கு நீங்கள் ஆற்றவிருக்கும் தொண்டு என்னவாயிருக்கும் என்று அறிய ஆவலாயிருக்கிறேன்.'யக்ஞமூர்த்தி காவிரிக் கரையோரம் தனியே ஓரிடம் அமைத்துத் தங்கி நுால்கள் எழுத விரும்பினார். அதை ராமானுஜரிடம் அவர் தெரிவித்தபோது, அவரே ஒரு மடம் கட்டிக் கொடுத்தார்.'நீங்கள் இனி இங்கே தங்கலாம். தங்கள் விருப்பப்படி நுால்கள் இயற்றலாம்.'அருளாளப் பெருமான் எம்பெருமானார் அன்றுமுதல் அந்தப் புதிய மடத்தில் தங்கி எழுத்துப் பணியில் ஈடுபட ஆரம்பித்தார். முதலியாண்டான் தொடங்கி ராமானுஜரின் அத்தனை சீடர்களுக்கும் இது பெரும் வியப்பாக இருந்தது. யக்ஞமூர்த்தியின் மனமாற்றம் அவர்கள் சற்றும் எதிர்பாராதது. இது எப்படி நிகழ்ந்தது, எப்படி நிகழ்ந்தது என்று பேசிப் பேசி மாய்ந்தார்கள்.'அவர் பெரிய ஞானஸ்தர். அவரது அறிவின் ஆழம் வைணவ தரிசனத்துக்கு அவசியம் என்று எம்பெருமான் நினைத்திருக்கிறான். இதில் நமது பங்கு என்ன இருக்கிறது?' என்றார் ராமானுஜர்.அன்றைக்கு எங்கோ வெளியூரிலிருந்து நான்கு இளைஞர்கள் மடத்துக்கு வந்தார்கள்.'சுவாமி, உம்மிடம் மாணாக்கர்களாகச் சேர்ந்து உய்ய வந்துள்ளோம். தயைகூர்ந்து எங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறோம்' என்று பணிந்து கேட்டார்கள்.ஒரு கணம் ராமானுஜர் அமைதியாகக் கண்மூடி யோசித்தார். பிறகு, 'நல்லது பிள்ளைகளே. அருளாளப் பெருமான் எம்பெருமானார் அங்கே காவிரிக் கரையில் தனியொரு மடத்தில் இருக்கிறார். அவரிடம் செல்லுங்கள். அவரை உமது ஆசாரியராகக் கொண்டு பயின்று வாருங்கள். அவருக்கு உரிய சேவைகளைச் செய்துவாருங்கள். அவர் உங்களுக்கு நற்கதி கொடுப்பார்.' என்று சொல்லி அனுப்பி வைத்தார்.அனந்தாழ்வான், எச்சான், தொண்டனுார் நம்பி, மருதுார் நம்பி என்ற அந்த நான்கு இளைஞர்களும் அப்போதே கிளம்பி அருளாளப் பெருமான் எம்பெருமானாரின் திருமடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.'என்ன விஷயம்?''சுவாமி, நாங்கள் உடையவரிடம் சீடர்களாகச் சேர்வதற்காகப் போனோம். அவரோ எங்களைத் தங்களிடம் அனுப்பி வைத்தார். நீங்கள்தாம் எங்களுக்கு ஆசாரியராக இருந்து அருள்பாலிக்க வேண்டும்!' என்று தாள் பணிந்து நிற்க, திகைத்துவிட்டார் அவர்.ஒரு கணம்தான். சட்டென்று ஆட்களை அழைத்தார். 'இம்மடத்தை இப்போதே இடித்துவிடுங்கள். இங்கே மடம் இருந்த சுவடே தெரியக்கூடாது!' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று சேரன் மடத்துக்குச் சென்றார்.'உடையவரே, இதென்ன அபத்தம்? நானே தங்களுடைய சீடனாகச் சேர்ந்து பயின்று கொண்டிருப்பவன். என்னிடம் நான்கு பேரை அனுப்பி ஏன் பரிசோதிக்கிறீர்கள்? இனி எனக்குத் தனி மடம் வேண்டாம். தங்கள் நிழலாக இங்கேயேதான் இருப்பேன். காலம் முழுதும் தங்களின் சீடனாகவே இருந்து கழிப்பேன்!'ராமானுஜர் புன்னகை செய்தார்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X