சதுரங்க நாயகிகள்| Dinamalar

சதுரங்க நாயகிகள்

Added : மார் 09, 2017 | கருத்துகள் (7)
Advertisement
சதுரங்க நாயகிகள்

வாழ்க்கை, ஊர்தியைப் போல் அதன் பாதையில் வழுக்கிக்கொண்டு போகிறது. அதில் ஆளுக்கொரு திசையில் பயணிக்கிறோம். ஆண் என்னும் ஆதிக்க குடையின் கீழ், பெண் நசுங்கிய சிறு பறவையைப் போல் தன்சிறகுகளை இறுக்கித் தன்னை பாதுகாத்துக் கொள்ள விழைகிறாள். ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஒருவருடம் முழுதும் காத்திருக்கும் குழந்தையின் மனநிலையைத்தான் பெண்ணுக்குத்தருகிறது சமூகம்.
சுதந்திரத்தின் எல்லை : எது சுதந்திரம், எது அதன் எல்லைக்கோடு, வருடத்திற்கு ஒரு நாள் உழவர் திருநாளில் மாடுகளை குளிப்பாட்டி அழகுபார்த்துவிட்டு, வருடம் முழுவதும் உழவுக்கும், அடிமாடுகளாக ஆக்கும் நிகழ்வாக அல்லவா இருக்கிறது மகளிர்தினம். பெண் என்ற அடைமொழியினைச் சுமக்கும் மூன்றுவயதிற்கும், 60 வயதிற்கும் நடக்கும் பாலியல் தொந்தரவுகள்; எத்தனையோ நந்தினிகள் காதல் என்னும் பேரத்திற்கு இரையாகிறார்கள். ஏதோவொரு காமக் கரங்களுக்குள் சிக்கி சீரழிந்த இளம் பிஞ்சுகளின் உடல்கள்.இத்தனை கோரப் பார்வை பெண் இனத்திற்குள் ஏன் பதிந்து போய் இருக்கிறது, இதற்கு விடைகாண யாராலும் இயலவில்லை, ஆனால் அரங்கேற்றங்கள் மட்டும் நடந்துகொண்டே இருக்கிறது. நாம் வருடத்திற்கொருமுறை விழா மட்டும் எடுத்துவிட்டு, மேடையில் சில வீரமுழக்கங்களை முழங்கிவிட்டு, சில கட்டுரைகளில் காகிதம் தீப்பிடிக்கும் அளவிற்கு எழுதிவிட்டு மீண்டும் அடிமைத்தனமான அந்தக் கட்டளைக்கு கீழ்படிந்து கொள்கிறோம்.
விதைக்கப்படும் தடைகள் : ஆஸ்திக்கு ஒரு ஆண்... ஆசைக்கு ஒரு பெண்... என்று சொற்களை நாம் வளரும் போதே கேட்டு இருப்போம். அப்படி அலங்கரித்து நகைமாட்டும் ஒரு அலமாரியைப் போல் அவர்களை உருவகப்படுத்திவிடுகிறோம். பெண் குழந்தை என்றாலே திருமணம், அவர்களின் வளர்ச்சியின் பெரும்பகுதி ஊட்டச்சத்தை திருமணம் என்ற நிகழ்வு தின்றுவிடுகிறது. கருவேலவிதைகளைப் போல் ஆயிரக்கணக்கான தடைகளை விதைக்கிறார்கள் பெண்களின் பாதைகளில்! திருமண மேடைக்கு அனுப்பப்படும் பரிசுப்பொருட்களைப்போல அவளை தினம் தினம் அலங்கரிக்கிறார்கள். குழந்தையாய் பெற்றோரிடம், சிறுமியாய் சகோதரர்களிடம், குமரியாய் காதலனிடம், மனைவியாய் கணவனிடம், தாயாய் பிள்ளைகளிடம், பாட்டியாய் பேரப்பிள்ளைகளிடம் கப்பம் கட்டும் இ.எம்.ஐ., வாழ்க்கைதான் பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. இதில் அவளின் எண்ணங்களும் சிந்தனைகளும் சிதைக்கப்படுகிறது.எங்கோ சாதித்துவிட்ட பெண்ணின் சிறகுகளை மட்டும் வைத்துக்கொண்டு, பெண்களுக்கு முழுசுதந்திரம் கிடைத்து விட்டது என்று கூறுவது எப்படி சரியாகும். அளவுகோலில் பெண் : இன்னமும் தொண்ணுாறு சதவீதம் மகளிர், தங்கள் தேவைகளைக் கூட முடிவெடுத்துக் கொள்ள இயலாமல் இருக்கின்றனர். 'இங்கிலிஷ் வெங்கலீஷ்' என்றஒரு திரைப்படம் அதன் முதல் ஐந்து நிமிடக் காட்சிகளைப் பார்க்கும்போதே தெரிந்து விடும், ஒரு கப் காபியை முழுமையாக ருசித்து அருந்த முடியாமல் போகும் அதிகாலை பெண்களின் அல்லல். பேசினால் வாயாடி, பேசாவிட்டால் ஊமைக்கொட்டான். சிரித்தால், பொம்பளை இப்படி சிரிக்கலாமா? சிரிக்காவிட்டால் உம்மனாமூஞ்சி போல இருக்கிறாயே? என்று சகலத்திற்கும் ஒருநொட்டை சொல்.இதைவிட காமெடி, தெரிந்த நண்பரின் பெண்ணை பார்க்க மாப்பிள்ளைவீட்டார் வந்திருந்தார்கள். மணப்பெண்ணின் உறவினர் வீடு சற்று பெரியதால் அங்கே வைத்து பார்ப்பதாக ஏற்பாடு. எல்லாம் முடிந்து, போய் தகவல் தெரிவிப்பதாக சொன்னார்கள், ஆனால், போனவர்கள் பெண்ணை வேண்டாம் என்று சொன்னகாரணம், சிரிப்பதா கோபப்படுவதா என்றே தெரியவில்லை. பெண் மாடியில் இருந்து இறங்கிவந்தது, மிகவும் திமிராக இருந்தது; அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். மாடியில் இருக்கும் பெண், படியில் இறங்கி வராமல், மாடியில் இருந்து குதிக்கவா முடியும் ? பெண்ணின் குணத்தை எதைவைத்தெல்லாம் அளக்கிறார்கள்.
அளவுகோல்கள் : ''நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும். நாளோடு பொழுதோடும் உறவாடவேண்டும். நான் காணும் உலகங்கள், நீ காண வேண்டும். நீ காணும் பொருள்யாவும் நானாக வேண்டும்'' மேலோட்டமாகப் பார்த்தால் அழகான வரிகள், ஆனால் அதன் உட்பொருள், காதல் மணம் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் பாடும் பாடல் கணவன் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் மனைவியும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அங்கே பொதிந்திருக்கும்.
ஊர்குருவி பருந்தாகாது : என்னதான் உயரப்பறந்தாலும், ஊர்க் குருவி பருந்தாகாது என்ற பழமொழி சொல்வார்கள். திறமைகள் பல இருந்தும், உயரங்கள் பல தொட்டு இருந்தாலும், நடுவில் எத்தனை இடர்பாடுகள். 'எதையேனும் சாதிக்க வேண்டுமானால் கல்யாணத்திற்கு முன்பு செய்துவிடுங்கள்; கல்யாணத்திற்கு பிறகு ஒரு 'டிவி' சேனலைக்கூட மாற்றமுடியாது' என்று ஆண்களின் தரப்பில் ஒரு துணுக்குப் பார்த்தேன். கல்யாணத்திற்கு பிறகு பெண்களின் நிலைமைதான் தலை கீழாகமாறிப் போய்விடுகிறது. அக்கம் பக்கத்தினர் பார்வைகள்தான் பெண்களின் நடவடிக்கைகளை நிர்மாணிக்கிறது. விலங்கிடப்படாத கைகளின் வழியே கருத்துக்கள் கட்டுண்டு கிடக்கின்றன. வெற்றிகளைப் பதிக்க வேண்டிய விழிகளில், வேள்விகளே நிறைந்து இருக்கின்றன. சாதித்த பெண்கள் பலரைப் பட்டியலிடுகிறோம், அதிகம் படிப்பறிவு இல்லாமல் ஆட்டுக்கல்லிற்கும், அம்மிக்கும்விடை கொடுத்தாலும் கொண்டவன் சரியில்லாமல் குடும்பத்தைத்துாக்கி நிறுத்த பீடித் தொழிலுக்கும், தீப்பெட்டிக்கும் வாழ்க்கையை பங்குவைத்தவர்கள் ஏராளம்.
அன்பும், ஆண்மையும் : நிஜங்கள் தொலைத்த நிழலாகும் பெண்களின் வாழ்வினையும், பாறையில் மோதி நிமிடத்தில் நுரையாய் வழியும் அலைகடல் நீர்தான் பெண்ணின் வாழ்வு.'எத்தனை பிரச்னை இருந்தாலும் நீதான் அட்ஜெஸ்ட் பண்ணிக்கணும்' என்று தட்டி தட்டியே ஒருவித மனநிலைக்கு தள்ளப்படுகிறாள். அன்பையும், ஆண்மையையும் நிரூபிக்க பெண்ணின் துணைதான் தேவைப்படுகிறது. பெண் தன் திருமணத்திற்கு முன் தொழிலிலோ, படிப்பிலோ சாதித்துவிட்டாள் என்றாலும் மணமாகிப்போன இடத்தில் சராசரிக்கும் கீழே அடிமுட்டாளாகத்தான் பார்க்கப்படுகிறாள். அந்த வீட்டைப் பொறுத்தவரையில் அவள் ஒரு புதுவரவு, அங்கே அவளுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஒருகாட்சிப் பொருளாகிப் போகும் அந்த பெண்ணின் நிலை பரிதாபம் தான். நம் சமூகத்திருமணங்களில் பணமும் நகையும் தான் மதிக்கப்படுகின்றன. அப்படி நிர்பந்தித்த உறவுகளை பெண் எப்படி மனமுவந்து ஏற்க முடியும். 20 வருடங்கள் வளர்ந்த பெற்றோரிடம் அவளுக்கு உரிமையோ பாசமோ இருக்கக்கூடாது என்பது எழுதப்படாத விதியாகிப் போய்விட்டது. மெல்ல மெல்ல அவள் ஏறிக் கொண்டும் படிக்கெட்டுகளை எப்படி உடைக்கலாம் அந்த வெற்றிக் கயிற்றின் நுனிதேடி எங்கே அறுக்கலாம் என்பது தான் பலரின் எண்ணமாகும். இத்தனையும் கடந்து சாதிக்கும் பெண்களின் வளர்ச்சி பாராட்டத்தக்கதுதான்.அத்தனை சீக்கிரம் மறந்திருக்கமாட்டோம் இலங்கையில் நம்சகோதரிகளின் சீரழிவை, சதியேற்றம் என்று தீநாக்கிற்கு தன்னை பலி கொடுத்த நிலையை கடந்தோம். சடங்குசம்பிரதாயம் என்றபெயரில் பெண்குழந்தைகளுக்கு பொட்டு கட்டிகோவிலுக்கு நேர்ந்துவிட்ட நிலையை கடந்தோம். கள்ளிப்பாலும் நெல்மணியும் விஷமானது பெண் பிஞ்சுகளுக்கு.
அகப்படும் நிலை : வரதட்சணை அரக்கனின் கையில் வெடிக்கப்பட்ட காஸ் அடுப்புகள், எத்தனையோ இன்னல்களை கடந்து இன்று வெற்றிவாகை சூடிக்கொண்டு இருந்தாலும், மீண்டும் அதே நான்கு அறைகளுக்குள் அகப்பட்டு கொள்ளும்நிலை பெண்களுக்கு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் இருக்கத்தான் செய்கிறது. ஜல்லிக்கட்டு நடைபெற்றபோது ஆண் பெண் பேதமின்றி, வயது வித்தியாசமின்றி, அத்தனை பெண்களும் கடற்கரையில் இருந்தனர். அன்று காக்கும் கரங்களாக இருந்த ஆண்களின் மீது, பெரிய மரியாதை இருந்தது. அதைதொடர முடியாமல், 8வயது குழந்தையைச் சிதைத்த ஆண்மகனைக் காணும்போது திட்ட வார்த்தைகள் இல்லை; அவனின் மிருகத்தனத்தை சொல்லிட! ஏன் இதை, நீங்கள்படித்துக்கொண்டு இருக்கும் போதுகூட ஏதோவொரு பெண் வேதனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறாள். பெண்களை தன்னம்பிக்கையுடன் வாழவிடுங்கள், அவர்களுக்கு கல்வியையும், தைரியத்தையும் கொடுங்கள். பாதுகாப்பு என்பது தத்தம் வீடுகளிலேயே கேள்விக்குறியான நிலைமையை மாற்றவேண்டும். ஆண் குழந்தைகளிடம் வளரும் போதே பெண் பிள்ளைகளுக்கு மதிப்பையும் பாதுகாப்பையும் கற்றுக்கொடுங்கள். ஏனெனில் நமக்குள்ள உரிமைகளையும், மதிப்புகளையும் கேட்டுப் பெறும் நிலையில் தான் இன்று வரையில் பெண்களை வைத்திருக்கிறது இச்சமூகம். கருவறை முதல் கல்லறை வரையில் நம்மைகொண்டு சேர்க்கும் பெண்களுக்கு, நாம் பெயரளவில் மட்டும் மதிப்பு கொடுத்தால் போதாது. சதுரங்கத்தின் நாயகிகளுக்கு ஒருநாள் மட்டும் என்று ஒதுக்காமல், அவர்கள் வாழ்நாள் வரையில் பாதுகாப்பும், மதிப்பும் கொடுப்போம்.
லதா சரவணன்எழுத்தாளர், சென்னை.

lathasharn@gmail.comவாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paramuk - kumari,இந்தியா
10-மார்-201719:25:48 IST Report Abuse
Paramuk சகோதிரியே உங்கள் அனுபவத்துக்கு மிகுந்த அனுதாபங்கள். ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். எல்லா ஆண்களும் அப்படி இல்லை பெரும்பாலான ஆண்கள் தன் தாய், தமக்கை, தங்கை ஆகியோருக்கு சிறுவயது முதலே பாதுகாப்பகத்தான் இருக்கிறார்கள். நீங்கள் குற்றம் சாற்றுவது மிக சொற்ப சதவீதமாக இருக்கலாம். தன்னை அழகு படுத்தி பார்ப்பது என்பது, பெண்ணுக்கு இயற்கையிலேயே உருவாகும் ஒருவித தாகம் அதனால் அவள் சிறுவயதிலிருந்தே அதை எதோ ஒரு விதத்தில் முயற்சி செய்து கொண்டே இருப்பாள். பொதுவாக படைத்தலில் உள்ள ரசியங்களை ஆராய்ந்து பார்த்தால், மனிதன் முதல் எல்லா ஜீவ ராசிகளையும் எதோ ஒரு விதத்தில் இன கவர்ச்சி செய்யும் விதத்தில் தான் படைக்கப்பட்டிருக்கின்றன என்பது மறுக்கமுடியாத ஓன்று. இதனால் நான் பெண்களை தவறாக சொல்லவில்லை. உங்களுக்கு மருத்துவ நண்பர்கள் இருந்தால் கேட்டு பார்க்கவும், பெண்களின் மூளையின் செயல் பாடுகளும், ஆண்களின் மூளை செயல் பாடுகளும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வீர்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் காரணங்களுக்கு, என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், => சிறுவயது முதல் வாலிப வயது வரை பெண்ணிடம் நெருங்கி பழக விடாததற்கு நமது ஊரில் அநேக காரணங்கள் இருக்கிறது. ==> தன் மகள் அல்லது மகன்தவறு செய்து விடுவானோ என்கிற பயம். ==> சாதி என்கிற பிரச்னை[பெற்றோர்களே மகளை கொன்று விடும் நிலை. ==> நம் நாட்டில் சட்டம் இல்லை [மேலை நாடுகளில் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவள் மேல் ஒருவன் தொட்டால் அதற்கு தண்டனை உண்டு, மேலும் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ள பெண்ணின் மேல் சம்மதத்தோடு தொட்டாலும் பயங்கரமான தண்டனைகளை அனுபவிக்க வேண்டும்.] ==> தனி மனித உரிமை சட்டங்கள் இல்லாததால், யாருக்கும் பயமே இருக்காது.[மேலை நாடுகளில் அநேகமாக மாக்கள் கூடும் எல்லா இடங்களிலேயும் கண்காணி இருக்கும்] காவல் துறை எளிதில் கண்டுபிடித்து விடலாம். நம் ஊரில் அந்த மாதிரி சட்டங்கள் இல்லை, வந்தாலும் அரசியல்வியாதிகள் கொண்டு வரவிடமாட்டார்கள். அதனால் நாமே முடிந்த வரை பாதுகாப்பாக இருந்து கொள்ளும் அவலநிலை தான் இருக்கிறது. ==> இந்த மாதிரி சட்டங்கள்[சமூக பாதுகாப்பு] இல்லாததால் தான், நம்முடைய தாய் தகப்பன்மார்கள், தன் பெண்பிள்ளைகள் சரியான உடை உடுத்தி செல்ல வற்புறுத்துகிறார்கள். அதை தடைகள் என்று சொல்ல முடியாது. ==> எல்லாவற்றிக்கும் மேலாக, சாதாரண சினிமாவில் உள்ள நடைமுறைக்கு ஏற்காத காதல் காட்சிகள், அரைகுறை ஆபாச காட்சிகள், நம்முடைய பாரம்பரிய மண்ணில் ஒத்து வராது. இவைகளை பார்க்கிற, சிறுவது முதலே பெண்களின் அருகே செல்ல முடியாத ஆண்கள், பவாராக சிந்திக்கிறார்கள். மேலை நாடுகளில், சாதி மதம் பெரிதாக இருக்காது. ஆனால், ஒரு சில ஆண்கள் இந்த காட்சிகளை பார்த்து காதலிக்க முற்படுவதும், பின்விளைவுகளை யோசிக்காமல் முடிவுகளை எடுக்கிறார்கள். [முற்றிலும் அவர்களை குறை கூறவும் முடியாது] தகுந்த பாதுகாப்பு இல்லை என்று நீங்கள் கருதுகிற ஒரு கல்லூரி விழாவிற்கு உங்கள் மகளை நீங்கள் விரும்பும் ஆடையோடு தான் போக அனுமதிப்பீர்கள். அதை தடை என்று சொல்வீர்களா? திருமணம், நகை, மற்றும் வரதட்சனைகளுக்கு, காரணம் எண்பது விழுக்காடு பெண்கள் தான். ஆண்கள் இந்த விசயத்தில் ஈடுபாடு இல்லாமல் தான் இருப்பார்கள். ஆண்களுக்கும், அண்ணனாக, தம்பியாக, மகனாக, கணவனாக, தகப்பனாக, தாத்தாவாக, அநேக அறிய பொறுப்புகள் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
10-மார்-201715:03:20 IST Report Abuse
Sukumaran Sankaran Nair நம் எல்லோருடைய கவனம் அன்றாடைய நிகழவைபற்றியதாகவே இருக்கிறது. அந்த நிகழ்வுக்கு காரணமாக விளங்கும் செயலாக்கத்தைத் பற்றிய கவனம் ஏனோ தொடர்பில்லாமல் காண்கிறது. இன்றைய தினம் என் பிறந்த தினம் .அறைய தினம் நோய்வாய்ப்பட்ட தினம் என நிகழவுகளைப்பற்றியே (Event ) கல்வி அமைந்துவிட்டது.செயல் பாடு ( Process ) தான் முக்கியத்துவம் தரப்படவேண்டியது என்பதை உணரத்தவறிவிட்டோம். நல்ல எண்ணங்களை செயல் வடிவம் பெற பல நாட்களாக அல்லது மாதங்களாகவும் ஆகலாம். இன்று நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது திருப்புமுனை என்ற பாதைக்கு வந்த பிறகு எந்த திசையை நோக்கிச் செல்வது என்பதுதான்.உயிரத்தியாகம் புரிந்த பெண் புலவர் தஹீரி அம்மையார் (1848 ) காலத்திலிருந்து ,பெண் விடுதலைக்கான புரடசிகளும் ,போராட்டங்களும் நடைபெற்றுவிட்டது.அந்த காலகட்டம் (உதயத்தை வென்றவர்கள்dawn breakers ) முடிவுற்று, formative age அமைப்பு கால கட்டமைப்பு எனும் காலத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம். இதையும் கடந்த பின்னர் பொறகாலமென்ற (Golden Age ) கட்டமைப்புக்குள் மனித சமுதாயம் 2030 முன்னேற்றம் காண ஆயத்த பணிகள் ,திட்டங்கள் நடைபெற்றவண்ணம் ,சமூக சீரமைப்பு டனான உலக சீர்திருத்தம் புதிய உலகமைப்பு கட்டத்திற்கு வழிவகுக்கும் .நம் பார்வை உலகளாவிய நிலைக்கு வரும்போது, கட்சி அரசியல் அமைப்பு காணாமல் போய்விடும்.ஆண் பெண் சமத்துவம் என்ற மனித நாகரிகம் அதன் இலக்கை அடையும் .
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10-மார்-201714:20:54 IST Report Abuse
A.George Alphonse Since this author is a woman she is fully supporting the womanhood and blaming the entire manhood for the present women sufferings. In the world the men after their marriage are forgetting the smile in their entire lives by sacrificing and compromising every thing for their families and became dump and mute slaves till their death. Unlike the women the men never have Alamaras full of dresses and jewels and only few dresses and one old watch.These men never gives imporantance to them and only gives importance to their wives and children for every thing.They never live for them but for the entire family by working day and night.In fact the men are used as" Sadhurainga Nayagargal "for the betterment of the entire family.Since the women folks are considered as weaker sex they enjoy all privileges and sympathy from the society and the public never know the cruelly of women towards men in every aspects.The women by their cleverness and cunningness shed tears in order to achieve their goal very easily where as the men can not.All men are crying while they take birth in the world but they are silence when they leave the world as they lost every thing during their lives time.All are worrying and sympathetic on women always but no one is here for men to show mercy and sympathy. Men may come and men may go but this episode will run in the world screen forever and ever till the world come to an end.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X