சதுரங்க நாயகிகள்| Dinamalar

சதுரங்க நாயகிகள்

Added : மார் 09, 2017 | கருத்துகள் (7)
சதுரங்க நாயகிகள்

வாழ்க்கை, ஊர்தியைப் போல் அதன் பாதையில் வழுக்கிக்கொண்டு போகிறது. அதில் ஆளுக்கொரு திசையில் பயணிக்கிறோம். ஆண் என்னும் ஆதிக்க குடையின் கீழ், பெண் நசுங்கிய சிறு பறவையைப் போல் தன்சிறகுகளை இறுக்கித் தன்னை பாதுகாத்துக் கொள்ள விழைகிறாள். ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஒருவருடம் முழுதும் காத்திருக்கும் குழந்தையின் மனநிலையைத்தான் பெண்ணுக்குத்தருகிறது சமூகம்.
சுதந்திரத்தின் எல்லை : எது சுதந்திரம், எது அதன் எல்லைக்கோடு, வருடத்திற்கு ஒரு நாள் உழவர் திருநாளில் மாடுகளை குளிப்பாட்டி அழகுபார்த்துவிட்டு, வருடம் முழுவதும் உழவுக்கும், அடிமாடுகளாக ஆக்கும் நிகழ்வாக அல்லவா இருக்கிறது மகளிர்தினம். பெண் என்ற அடைமொழியினைச் சுமக்கும் மூன்றுவயதிற்கும், 60 வயதிற்கும் நடக்கும் பாலியல் தொந்தரவுகள்; எத்தனையோ நந்தினிகள் காதல் என்னும் பேரத்திற்கு இரையாகிறார்கள். ஏதோவொரு காமக் கரங்களுக்குள் சிக்கி சீரழிந்த இளம் பிஞ்சுகளின் உடல்கள்.இத்தனை கோரப் பார்வை பெண் இனத்திற்குள் ஏன் பதிந்து போய் இருக்கிறது, இதற்கு விடைகாண யாராலும் இயலவில்லை, ஆனால் அரங்கேற்றங்கள் மட்டும் நடந்துகொண்டே இருக்கிறது. நாம் வருடத்திற்கொருமுறை விழா மட்டும் எடுத்துவிட்டு, மேடையில் சில வீரமுழக்கங்களை முழங்கிவிட்டு, சில கட்டுரைகளில் காகிதம் தீப்பிடிக்கும் அளவிற்கு எழுதிவிட்டு மீண்டும் அடிமைத்தனமான அந்தக் கட்டளைக்கு கீழ்படிந்து கொள்கிறோம்.
விதைக்கப்படும் தடைகள் : ஆஸ்திக்கு ஒரு ஆண்... ஆசைக்கு ஒரு பெண்... என்று சொற்களை நாம் வளரும் போதே கேட்டு இருப்போம். அப்படி அலங்கரித்து நகைமாட்டும் ஒரு அலமாரியைப் போல் அவர்களை உருவகப்படுத்திவிடுகிறோம். பெண் குழந்தை என்றாலே திருமணம், அவர்களின் வளர்ச்சியின் பெரும்பகுதி ஊட்டச்சத்தை திருமணம் என்ற நிகழ்வு தின்றுவிடுகிறது. கருவேலவிதைகளைப் போல் ஆயிரக்கணக்கான தடைகளை விதைக்கிறார்கள் பெண்களின் பாதைகளில்! திருமண மேடைக்கு அனுப்பப்படும் பரிசுப்பொருட்களைப்போல அவளை தினம் தினம் அலங்கரிக்கிறார்கள். குழந்தையாய் பெற்றோரிடம், சிறுமியாய் சகோதரர்களிடம், குமரியாய் காதலனிடம், மனைவியாய் கணவனிடம், தாயாய் பிள்ளைகளிடம், பாட்டியாய் பேரப்பிள்ளைகளிடம் கப்பம் கட்டும் இ.எம்.ஐ., வாழ்க்கைதான் பெண்களுக்கு வாய்த்திருக்கிறது. இதில் அவளின் எண்ணங்களும் சிந்தனைகளும் சிதைக்கப்படுகிறது.எங்கோ சாதித்துவிட்ட பெண்ணின் சிறகுகளை மட்டும் வைத்துக்கொண்டு, பெண்களுக்கு முழுசுதந்திரம் கிடைத்து விட்டது என்று கூறுவது எப்படி சரியாகும். அளவுகோலில் பெண் : இன்னமும் தொண்ணுாறு சதவீதம் மகளிர், தங்கள் தேவைகளைக் கூட முடிவெடுத்துக் கொள்ள இயலாமல் இருக்கின்றனர். 'இங்கிலிஷ் வெங்கலீஷ்' என்றஒரு திரைப்படம் அதன் முதல் ஐந்து நிமிடக் காட்சிகளைப் பார்க்கும்போதே தெரிந்து விடும், ஒரு கப் காபியை முழுமையாக ருசித்து அருந்த முடியாமல் போகும் அதிகாலை பெண்களின் அல்லல். பேசினால் வாயாடி, பேசாவிட்டால் ஊமைக்கொட்டான். சிரித்தால், பொம்பளை இப்படி சிரிக்கலாமா? சிரிக்காவிட்டால் உம்மனாமூஞ்சி போல இருக்கிறாயே? என்று சகலத்திற்கும் ஒருநொட்டை சொல்.இதைவிட காமெடி, தெரிந்த நண்பரின் பெண்ணை பார்க்க மாப்பிள்ளைவீட்டார் வந்திருந்தார்கள். மணப்பெண்ணின் உறவினர் வீடு சற்று பெரியதால் அங்கே வைத்து பார்ப்பதாக ஏற்பாடு. எல்லாம் முடிந்து, போய் தகவல் தெரிவிப்பதாக சொன்னார்கள், ஆனால், போனவர்கள் பெண்ணை வேண்டாம் என்று சொன்னகாரணம், சிரிப்பதா கோபப்படுவதா என்றே தெரியவில்லை. பெண் மாடியில் இருந்து இறங்கிவந்தது, மிகவும் திமிராக இருந்தது; அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். மாடியில் இருக்கும் பெண், படியில் இறங்கி வராமல், மாடியில் இருந்து குதிக்கவா முடியும் ? பெண்ணின் குணத்தை எதைவைத்தெல்லாம் அளக்கிறார்கள்.
அளவுகோல்கள் : ''நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும். நாளோடு பொழுதோடும் உறவாடவேண்டும். நான் காணும் உலகங்கள், நீ காண வேண்டும். நீ காணும் பொருள்யாவும் நானாக வேண்டும்'' மேலோட்டமாகப் பார்த்தால் அழகான வரிகள், ஆனால் அதன் உட்பொருள், காதல் மணம் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் பாடும் பாடல் கணவன் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் மனைவியும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் அங்கே பொதிந்திருக்கும்.
ஊர்குருவி பருந்தாகாது : என்னதான் உயரப்பறந்தாலும், ஊர்க் குருவி பருந்தாகாது என்ற பழமொழி சொல்வார்கள். திறமைகள் பல இருந்தும், உயரங்கள் பல தொட்டு இருந்தாலும், நடுவில் எத்தனை இடர்பாடுகள். 'எதையேனும் சாதிக்க வேண்டுமானால் கல்யாணத்திற்கு முன்பு செய்துவிடுங்கள்; கல்யாணத்திற்கு பிறகு ஒரு 'டிவி' சேனலைக்கூட மாற்றமுடியாது' என்று ஆண்களின் தரப்பில் ஒரு துணுக்குப் பார்த்தேன். கல்யாணத்திற்கு பிறகு பெண்களின் நிலைமைதான் தலை கீழாகமாறிப் போய்விடுகிறது. அக்கம் பக்கத்தினர் பார்வைகள்தான் பெண்களின் நடவடிக்கைகளை நிர்மாணிக்கிறது. விலங்கிடப்படாத கைகளின் வழியே கருத்துக்கள் கட்டுண்டு கிடக்கின்றன. வெற்றிகளைப் பதிக்க வேண்டிய விழிகளில், வேள்விகளே நிறைந்து இருக்கின்றன. சாதித்த பெண்கள் பலரைப் பட்டியலிடுகிறோம், அதிகம் படிப்பறிவு இல்லாமல் ஆட்டுக்கல்லிற்கும், அம்மிக்கும்விடை கொடுத்தாலும் கொண்டவன் சரியில்லாமல் குடும்பத்தைத்துாக்கி நிறுத்த பீடித் தொழிலுக்கும், தீப்பெட்டிக்கும் வாழ்க்கையை பங்குவைத்தவர்கள் ஏராளம்.
அன்பும், ஆண்மையும் : நிஜங்கள் தொலைத்த நிழலாகும் பெண்களின் வாழ்வினையும், பாறையில் மோதி நிமிடத்தில் நுரையாய் வழியும் அலைகடல் நீர்தான் பெண்ணின் வாழ்வு.'எத்தனை பிரச்னை இருந்தாலும் நீதான் அட்ஜெஸ்ட் பண்ணிக்கணும்' என்று தட்டி தட்டியே ஒருவித மனநிலைக்கு தள்ளப்படுகிறாள். அன்பையும், ஆண்மையையும் நிரூபிக்க பெண்ணின் துணைதான் தேவைப்படுகிறது. பெண் தன் திருமணத்திற்கு முன் தொழிலிலோ, படிப்பிலோ சாதித்துவிட்டாள் என்றாலும் மணமாகிப்போன இடத்தில் சராசரிக்கும் கீழே அடிமுட்டாளாகத்தான் பார்க்கப்படுகிறாள். அந்த வீட்டைப் பொறுத்தவரையில் அவள் ஒரு புதுவரவு, அங்கே அவளுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஒருகாட்சிப் பொருளாகிப் போகும் அந்த பெண்ணின் நிலை பரிதாபம் தான். நம் சமூகத்திருமணங்களில் பணமும் நகையும் தான் மதிக்கப்படுகின்றன. அப்படி நிர்பந்தித்த உறவுகளை பெண் எப்படி மனமுவந்து ஏற்க முடியும். 20 வருடங்கள் வளர்ந்த பெற்றோரிடம் அவளுக்கு உரிமையோ பாசமோ இருக்கக்கூடாது என்பது எழுதப்படாத விதியாகிப் போய்விட்டது. மெல்ல மெல்ல அவள் ஏறிக் கொண்டும் படிக்கெட்டுகளை எப்படி உடைக்கலாம் அந்த வெற்றிக் கயிற்றின் நுனிதேடி எங்கே அறுக்கலாம் என்பது தான் பலரின் எண்ணமாகும். இத்தனையும் கடந்து சாதிக்கும் பெண்களின் வளர்ச்சி பாராட்டத்தக்கதுதான்.அத்தனை சீக்கிரம் மறந்திருக்கமாட்டோம் இலங்கையில் நம்சகோதரிகளின் சீரழிவை, சதியேற்றம் என்று தீநாக்கிற்கு தன்னை பலி கொடுத்த நிலையை கடந்தோம். சடங்குசம்பிரதாயம் என்றபெயரில் பெண்குழந்தைகளுக்கு பொட்டு கட்டிகோவிலுக்கு நேர்ந்துவிட்ட நிலையை கடந்தோம். கள்ளிப்பாலும் நெல்மணியும் விஷமானது பெண் பிஞ்சுகளுக்கு.
அகப்படும் நிலை : வரதட்சணை அரக்கனின் கையில் வெடிக்கப்பட்ட காஸ் அடுப்புகள், எத்தனையோ இன்னல்களை கடந்து இன்று வெற்றிவாகை சூடிக்கொண்டு இருந்தாலும், மீண்டும் அதே நான்கு அறைகளுக்குள் அகப்பட்டு கொள்ளும்நிலை பெண்களுக்கு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் இருக்கத்தான் செய்கிறது. ஜல்லிக்கட்டு நடைபெற்றபோது ஆண் பெண் பேதமின்றி, வயது வித்தியாசமின்றி, அத்தனை பெண்களும் கடற்கரையில் இருந்தனர். அன்று காக்கும் கரங்களாக இருந்த ஆண்களின் மீது, பெரிய மரியாதை இருந்தது. அதைதொடர முடியாமல், 8வயது குழந்தையைச் சிதைத்த ஆண்மகனைக் காணும்போது திட்ட வார்த்தைகள் இல்லை; அவனின் மிருகத்தனத்தை சொல்லிட! ஏன் இதை, நீங்கள்படித்துக்கொண்டு இருக்கும் போதுகூட ஏதோவொரு பெண் வேதனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறாள். பெண்களை தன்னம்பிக்கையுடன் வாழவிடுங்கள், அவர்களுக்கு கல்வியையும், தைரியத்தையும் கொடுங்கள். பாதுகாப்பு என்பது தத்தம் வீடுகளிலேயே கேள்விக்குறியான நிலைமையை மாற்றவேண்டும். ஆண் குழந்தைகளிடம் வளரும் போதே பெண் பிள்ளைகளுக்கு மதிப்பையும் பாதுகாப்பையும் கற்றுக்கொடுங்கள். ஏனெனில் நமக்குள்ள உரிமைகளையும், மதிப்புகளையும் கேட்டுப் பெறும் நிலையில் தான் இன்று வரையில் பெண்களை வைத்திருக்கிறது இச்சமூகம். கருவறை முதல் கல்லறை வரையில் நம்மைகொண்டு சேர்க்கும் பெண்களுக்கு, நாம் பெயரளவில் மட்டும் மதிப்பு கொடுத்தால் போதாது. சதுரங்கத்தின் நாயகிகளுக்கு ஒருநாள் மட்டும் என்று ஒதுக்காமல், அவர்கள் வாழ்நாள் வரையில் பாதுகாப்பும், மதிப்பும் கொடுப்போம்.
லதா சரவணன்எழுத்தாளர், சென்னை.

lathasharn@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X