ஊழல்வாதிகளை விரட்ட வாருங்கள் இளைஞர்களே!

Added : மார் 11, 2017 | கருத்துகள் (4)
Share
Advertisement
 ஊழல்வாதிகளை விரட்ட வாருங்கள் இளைஞர்களே!

ஜனவரியில், சென்னை மெரினா உட்பட, தமிழகம் முழுவதும் நடந்த, எழுச்சிமிக்க ஜல்லிக்கட்டு போராட்டங்கள், உலகெங்கும் தமிழர்களின், குறிப்பாக, நம் இளைஞர்களின் பெருமைகளை பறைச்சாற்றின. ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும், மக்கள் இடையே எழுந்த உணர்ச்சி பூர்வமான கோஷங்கள், போராட்டங்கள், கருத்து பரிமாற்றங்கள், தமிழ் இனத்துக்கு உலகளவில் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தன.
மிகவும் கண்ணியத்துடன், அமைதியாக, யாருக்கும் எந்த இடைஞ்சலும் செய்யாமல், தங்கள் பொறுப்பை உணர்ந்து, மிகுந்தக் கட்டுப்பாட்டுடன் நடந்த அந்த போராட்டம், சுதந்திரத்துக்காக, மகாத்மா காந்தி தலைமையில் நடந்த அறப்போராட்டத்துக்கு நிகராக கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு அடுத்த சில நாட்களில் துவங்கி, தற்போது வரை, நடந்து வரும் அரசியல் கூத்துகள், அனைவரும் வெட்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது. இதற்கு, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின், பதவி வெறியே காரணமாக அமைந்துள்ளது.
அந்தக் குடும்பத்துக்கு ஆதரவாக, கொத்தடிமைகள் போல செயல்படும், அ.தி.மு.க., ----- எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது, மக்கள் கடுங்கோபத்துடன் உள்ளனர்.
இதுவரை, அரசியல் என்றால் என்ன என்பதை அறியாமல், தேர்தலில் ஓட்டளிப்பதுடன் நிறுத்திக் கொண்ட, சாதாரண மக்கள் கூட, தமிழகத்தில் நடக்கும் ஒரு குடும்பத்தின் அரசியல் கூத்துகளை பேசத் துவங்கி விட்டனர்.
வீட்டு வேலை செய்யும் முனியம்மா முதல், கீரை விற்கும் பாட்டி, குடும்பத் தலைவியர், மாணவியர் என, அனைத்து தரப்பு பெண்களும், தற்போதைய அரசியல் காட்சிகளை பார்த்து, முகம் சுளிக்கின்றனர்.
'உங்களுக்கே இது கேவலமாக இல்லையா... உப்பு போட்டு தானே சாப்பிடுறே... சோத்தைத்தானே திங்கிறே...' என, பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு, எம்.எல்.ஏ.,க்கள் தரப்பிலிருந்து மவுனமே பதிலாக உள்ளது.
'செய்த தவறுகளுக்காக தண்டனை பெற்றதுடன், அடித்தக் கொள்ளையை கட்டிக் காப்பாற்ற, ஒரு குடும்பம் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அது தெரிந்தோ, தெரியாமலோ, பதவி ஆசைக்காகவும், அவர்கள் துாக்கிப்போடும் பணம் மற்றும் பதவி எனும் எலும்பு துண்டுகளுக்கு, ஆளாய் பறக்கும் இவர்களையா சட்டசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்தோம்...' என, மக்கள் வேதனைப்படுகின்றனர்.
எவ்வித மன உறுத்தலும் இல்லாமல், ஜெயலலிதாவுக்கு சொந்தமான, அவரும், அவரின் தாயும், தங்கள் சொந்த உழைப்பில் வாங்கிய, போயஸ் கார்டன் வீட்டை, தங்கள் குடும்ப சொத்தாக மாற்றிக் கொண்டதுடன், கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கும் அந்தக் குடும்பத்துக்கு வேண்டுமானால், இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாக இருக்காது.
ஆனால், இத்தனை ஆண்டுகள், 'அம்மா' புகழ் பாடியவர்கள், ஒரே நாளில், 'சின்னம்மா' புகழ் பாடத் துவங்கியதை, கட்சியின் அடி மட்டத் தொண்டர்கள் மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்ட, சாதாரண பொதுஜனங்களும் அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் பார்க்கத் துவங்கியுள்ளனர்.
கட்சித் தலைமை பொறுப்பை, அந்த குடும்பம் பறித்து கொண்ட போது, கட்சியின் மூத்த தலைவர்கள் மீது தான், மக்களுக்கு அதிருப்தியும், கோபமும் ஏற்பட்டது. ஆனால், முதல்வர் பதவியை பறிக்க, சசிகலா மறைமுகமாக முயன்ற போது, சிறு குழந்தைகள் முதல், குடுகுடு பாட்டிகள் வரை அனைவரும், இந்த கும்பலின் பதவி வெறியை பார்த்து மனம் நொந்தனர்.
'வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவர்களாக, சசிகலாவும், அவர் குடும்பத்தினரும் முழுமையாக மாறியதுடன், மற்றவர்களையும் மாற்றி விட்டார்களே...' என, எரிமலையாய் குமுறினர்.
ஆனால், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், இனி தங்களுடைய அரசியல் எதிர்காலமே போய்விடும் என்பது கூடவா, இந்த, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களாக, தங்களைக் கூறிக் கொள்பவர்களுக்கு தெரியாது!
அதற்கு ஒரு படி மேலாக, காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துார் சொகுசு விடுதியில் அடைக்கப்பட்டிருந்த போது, எம்.எல்.ஏ.,க்கள் செய்த கூத்துக்கள் குறித்து சொல்லவும், எழுதவும் கூசும் அளவுக்கு உள்ளன.
தங்களுடன், தங்கள் தொகுதி மக்களின் தன்மானத்தையும் இவர்கள் அடகு வைத்ததற்காக, இவர்களுடைய குடும்பத்தினரும், ஓட்டு போட்ட தொகுதி மக்களும், இவர்களுடைய வெற்றிக்காக பாடுபட்ட கட்சியினரும் நிச்சயம் வெட்கப்பட வேண்டும்.
அதற்கு பின், சட்டசபையில் நடந்தவை, சபையின் மாண்பையும், தமிழகத்தின் பெருமையையும் அடகு வைத்து விட்டது. மெரினாவில் மாணவர்கள் நடத்திய அமைதி போராட்டத்தையும், இதையும் பார்த்தவர்கள், 'தலைகுனிவை ஏற்படுத்தும், இது போன்றவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே...' என, அவமானத்தில் கூனிக் குறுகினர்.
மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவர்கள், மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். ஆனால், எந்த வெட்கமும் இல்லாமல், அரசியல் செய்யும் இது போன்றவர்களை, அந்தப் பதவியில் இருந்து திரும்பப் பெறக்கூடிய உரிமையை, ஓட்டுப்போடும் மக்களுக்கு அளிக்க வேண்டும்.
மிக நீண்ட காலமாக, இது குறித்து பேசப்பட்டு வந்தாலும், அது செயல் வடிவம் பெற வேண்டிய சூழ்நிலை, தற்போது ஏற்பட்டுள்ளது.
அரசியல், ஒரு பொதுச் சேவை என்பது மலையேறி, பல ஆண்டுகளாகி விட்டது. ராஜாஜி, காமராஜ், கக்கன் போன்ற மிகவும் எளிமையான, உயர்ந்த தலைவர்களை இப்போது எந்தக் கட்சியிலும் பார்க்க முடியவில்லை.
கட்சியில் சிறிய பதவியில் இருப்பவர்கள், ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்கினால், மேலே செல்லச் செல்ல, அது லட்சமாகவும், கோடியாகவும் உயர்ந்து விடுகிறது. அதிலும், கவுன்சிலர், எம்.எல்.ஏ., - எம்.பி., ஆகி விட்டால், கேட்கவே வேண்டாம்.
மக்கள் சேவையாற்ற இவர்களுக்கு சம்பளம், படிகள், வாகனம் என, பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஆனாலும் கூட, அடியாட்களை வைத்து, தாதா போல, தொகுதியில் தன்னை மீறி எதுவும் நடக்கக் கூடாது என, ராஜாங்கம் நடத்தும், எம்.எல்.ஏ.,க்களும், அவர்களுடன் உள்ளவர்கள் நடத்தும் அட்டகாசங்கள், சொல்லி மாளாது. இவர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அரசு உயரதிகாரிகள், 'சம்பாதிக்கின்றனர்!'
இப்படி ஒவ்வொரு நிலையாக பரவி, தற்போது லஞ்சம் கொடுப்பது, கிட்டத்தட்ட சட்டபூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த நிலைக்காக, எந்த அரசியல் கட்சித் தலைவர்களோ, முதல்வர்களோ, நிர்வாகமோ கவலைப்படுவதும் இல்லை; வெட்கப்படுவதும் இல்லை.
'அரசியல் என்பது, ஊழல் செய்வதற்கான ஒரு களமாக மாற்றப்பட்டுள்ளது. நல்ல, நேர்மையான கொள்கை உள்ளவர்கள் சிறுபான்மையினராகி விடுவோமோ என, அச்சப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்கு எதிராக நடந்த போராட்டம் போல, அரசியலில் இருந்து ஊழல்வாதிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தை துவக்க, இளைஞர்கள் முன் வர வேண்டும்' என, ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மிகவும் வேதனையுடன் கூறியுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள், நடுநிலையாளர்கள் என, அனைத்து தரப்பினரும் ஒன்று சேர வேண்டும். 'வெட்கங்கெட்ட அரசியல்வாதிகளை உருவாக்க மாட்டோம்; அவர்களுக்கு ஆதரவாக செயல்பட மாட்டோம்; அவர்களின் மறைமுக சதித்திட்டங்களை புரிந்து, நாட்டுக்கு எது நல்லது என, அறிந்து, அதற்காக உண்மையான முறையில் போராடுவோம்' என, அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல், 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்திய சிலர், ஜல்லிக்கட்டு போராட்டம் போன்றதொரு ஸ்தம்பிப்பு நிலையை ஏற்படுத்த முயன்றனர். போராட்டத்திற்கு எண்ணெய் ஊற்றிய சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் உண்மையான நோக்கத்தை உணராமல், அப்பாவி இளைஞர்கள் பலர் ஆதரவு அளித்தனர்.
நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களின் பின்னணியை ஆராய்ந்தால், கம்யூனிசம், நக்சல் தீவிரவாதம் போன்ற, அரசுக்கு கட்டுப்படாத, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான, அத்துமீறும் கும்பல்களின் முகங்கள் தென்பட்டன.
நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு கொண்டுள்ளவர்களின் கைப்பாவைகளாக, இளைஞர்கள் சென்று விடாமல் இருக்க, கவனமாக ஆராய்ந்தறியும் அறிவு, இந்த கால இளைஞர்களுக்கு தேவை. இல்லையேல், இளைஞர்களின் அபரிமிதமான சக்தியை, இத்தகையவர்கள், நாட்டின் அழிவுக்கு பயன்படுத்தி விடுவர்.
'ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன...' என, விட்டேந்தியாக இல்லாமல், நாளைய, வளர்ந்த, பொருளாதார வல்லரசு நாட்டை உருவாக்கும் கருவி, தாங்கள் என்பதை உணர்ந்து, இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே, இந்த வெட்கங்கெட்ட அரசியல்வாதிகளுக்கு கற்றுத் தரும் பாடமாக இருக்கட்டும்.
இ - மெயில்: amudh71@gmail.com- எஸ். ஆராவமுதன் -சமூக ஆர்வலர்

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
18-மார்-201721:52:26 IST Report Abuse
ezhumalaiyaan ஆராவமுதனின் கருத்துக்கள் அருமை.இதை நோட்டீஸாக அச்சடித்து RK நகரில் விநியோகம் செய்யலாம்.
Rate this:
Cancel
Anand K - chennai,இந்தியா
16-மார்-201710:35:15 IST Report Abuse
Anand K ,இளைஞர்கள் விழித்தால் வளமான எதிர்காலம் .இல்லையெனில் இருண்ட வாழ்வுதான் 13வது ஊதிய ஒப்பந்த பேச்சு 30 நிமிடங்களில் முடிந்தது... வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்ற வேண்டுமெனில் தமிழகஅரசு ஆணை இடவேண்டும் . அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் மட்டும் தான் படிக்க வைத்திருக்க வேண்டும் இல்லை எனில் அவர்களுக்கு 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்ற கூடாது . ஏன் எனில் அரசு பள்ளியில் இன்று மாணவர் மற்றும் மாணவிகள் எண்ணிக்கை மிகவும் ரொம்ப குறைந்துஉள்ளது . ஒவ்வெரு பள்ளிக்கு மாதம் தோறும் பல இலட்சம் சம்பளமாக ஆசிரியருக்கு வழங்கப்படுகிறது ஆனால் மாணவர்கள் பயில்வது சிலர் மட்டும் தான். இந்த பணம் அனைத்தும் நம்முடைய வரி RTI ACT தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தமிழக்தின் வருமான அனைத்தும் அரசு ஊழியருக்கு செல்கிறதாம் தமிழகத்தின் உயிர் நாடி விவசாயிக்கு வறட்சி, புயல் , வெள்ளம் நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் பிச்சை கேட்க வேண்டியுள்ளது
Rate this:
Cancel
Anand K - chennai,இந்தியா
16-மார்-201710:34:17 IST Report Abuse
Anand K 13வது ஊதிய ஒப்பந்த பேச்சு 30 நிமிடங்களில் முடிந்தது... வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்ற வேண்டுமெனில் தமிழகஅரசு ஆணை இடவேண்டும் . அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் மட்டும் தான் படிக்க வைத்திருக்க வேண்டும் இல்லை எனில் அவர்களுக்கு 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்ற கூடாது . ஏன் எனில் அரசு பள்ளியில் இன்று மாணவர் மற்றும் மாணவிகள் எண்ணிக்கை மிகவும் ரொம்ப குறைந்துஉள்ளது . ஒவ்வெரு பள்ளிக்கு மாதம் தோரும் பல இலட்சம் சம்பளமாக ஆசிரியருக்கு வழங்கப்படுகிறது அனால் மாணவர்கள் பயில்வது சிலர் மட்டும் தான். இந்த பணம் அனைத்தும் நம்முடைடய வரி RTI ACT தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தமிழக்தின் வருமான அனைத்தும் அரசு ஊழியருக்கு சேல்கிறதாம் தமிழகத்தின் உயிர் நாடி விவசாயுக்கு வறட்சி, புயல் , வெள்ளம் நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் பிச்சை கேட்க வேண்டியுள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X