அசையாமலிருக்கு 203 சரக்கு கடை! ஆபீசரே போடுறாங்க தடை

Added : மார் 14, 2017
Advertisement
அசையாமலிருக்கு 203 சரக்கு கடை! ஆபீசரே போடுறாங்க தடை

டாக்டர் நண்பர் ஒருவரின் புதிய கிளினிக் திறப்பு விழாவுக்கு வந்திருந்த சித்ராவும், மித்ராவும் அங்கிருந்த கூட்டத்தை விட்டு, ஒதுங்கி, தனியாக இருந்த சேர்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர், 'பொக்கே' கொடுத்து வாழ்த்தி விட்டு, வெளியே சென்று கொண்டிருந்தார்...
''மித்து... நம்ம சிட்டி போலீஸ்ல ஏ.சி.,யா இருந்து ரிட்டயர்டு ஆன பல பேரு, சத்தமில்லாம சம்பாதிக்கிறதுல டாக்டர் பட்டமே வாங்கிருவாங்க போலிருக்கு,'' என்றாள் சித்ரா.
''எனக்குத் தெரிய, ஐ.எஸ்.,ல இருந்து ரிட்டயர்டு ஆன ஏ.சி., ஒருத்தரு, ஒரு காலேஜ்ல 'சீப் செக்யூரிட்டி ஆபீசர்'ங்கிற பேருல, அந்த காலேஜ் சம்மந்தப்பட்ட போலீஸ் விவகாரத்தை எல்லாம் பாத்துட்டு இருக்காரு. அவரு, பொறுப்புல இருந்தப்போ, தன்னோட 'இன்புளூயன்ஸ்'ஐ வச்சு, அந்த காலேஜ்க்கு ஏகப்பட்ட வேலை பாத்துக் கொடுத்தார்னு கேள்விப்பட்ருக்கேன்,'' என்றாள் மித்ரா.
''நீ சொல்றது, தீயா வேலை செஞ்ச 'குமாரு' ஒருத்தர் தான... அது மாதிரி பல பேரு இருக்காங்க. சூப்பரா கணக்கு போட்டு, நாலு பேரை விடுதலை பண்ணுன கர்நாடக ஜட்ஜ் பேரைக்கொண்டவரு, 'எக்ஸ்' ஏ.சி., ஒருத்தரும் இந்த வேலை தான் பண்றாரு. அவுங்க சமுதாயத்துல பிசினஸ் பண்றவுங்களுக்கு பிரச்னைன்னா, ஸ்டேஷன்ல புகுந்து கட்டப் பஞ்சாயத்து பண்றது தான் அவருக்கு வேலை,'' என்றாள் சித்ரா.
''ம்... அவரையும் எனக்குத்தெரியும், வேற யாரு?,'' என்றாள் மித்ரா.
''ராம நாமம் கொண்ட ஒருத்தரும், பல இன்ஸ்பெக்டர்களோட 'டை அப்' வச்சுக்கிட்டு, ஏகப்பட்ட 'டீலிங்' பண்ணிட்டு இருக்காரு. இன்னொரு ஏ.சி., ஒரு பெரிய பைனான்ஸ் கம்பெனிக்கு வசூல் பண்ற வேலை பண்ணித் தர்றாரு. நகைத் தொழில், கந்து வட்டி, காலேஜ், ஹாஸ்பிடல் எல்லாத்துலயும் அவுங்கவுங்க ஜாதியைச் சேர்ந்த 'ரிட்டயர்டு' போலீஸ் ஆபீசர்களை வச்சுக்கிட்டு, ஸ்டேஷன்களை 'கன்ட்ரோல்'ல வச்சுக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.
''அதனால தான், என்ன 'கம்ப்ளைன்ட்' போனாலும் போலீஸ்காரங்க கண்டுக்கிறதில்லயோ?,'' என்றாள் மித்ரா.
இருவருக்கும் இளநீர் கொண்டு வந்து கொடுத்தனர். குடித்துக் கொண்டே பேசினாள் மித்ரா...
''ஐ.பி.எஸ்., ஆபீசருங்க பல பேரு, கோயம்புத்துார் சிட்டி போலீஸ்க்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வர்றதே, நகை பிசினஸ்சும், ரியல் எஸ்டேட் கட்டப் பஞ்சாயத்து பண்ணவும் தான்னு சொல்லுவாங்க. நம்மூர்ல இருக்குற வரைக்கும், 'நான் ரொம்ப ஸ்ரிக்ட்டு, ஸ்ரிக்ட்டு'ன்னு 'சிவாஜி' பட விவேக் டயலாக் பேசிட்டு இருந்தவரு, இங்க இருக்குறப்போ, ரியல் எஸ்டேட்ல சம்பாதிச்சதே பல நுாறு கோடி இருக்கும்கிறாங்க,''
''ஓ... அவரா, அவரு தான், ரெட்பீல்ட்ஸ்ல இருக்குற முக்கியமான பங்களாவையும் 'பினாமி' பேர்ல விலைக்கு வாங்கிட்டதா சொல்றாங்க மித்து. ஆளுங்கட்சியில அவருக்கு நல்ல 'லிங்க்' இருக்காமே,''
''அது தெரியலைக்கா... ஆனா, ஆளுங்கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் 'போஸ்ட்டிங்'கைப் பிடிக்கிறதுக்கு, நாலு முனைப் போட்டி பலமா இருக்கு. மேல ஆள் பிடிக்கிறதை விட, கீழ ஆள் பிடிக்கலாம்னு வார்டு செயலாளர்களை வளைச்சுப் போட, நம்ம வில் வித்தை எம்.எல்.ஏ., களம் இறங்கீட்டாரு,''
''ஏற்கனவே, டாஸ்மாக் பார் மாமூல் 25 ஆயிரம் ரூபாயை மாசாமாசம் அவர் தான வாங்கித்தர்றாரு. அதனால, அவருக்கு தான், அவுங்களும் 'சப்போர்ட்' பண்ணுவாங்க,''
''ஆனா, 'மினிம்மா' குரூப்புக்கு, அவரைப் போடுறதுல சுத்தமா விருப்பம் இல்லியாம். நம்ம பழைய 'டவுன்டாடி'யைப் போடலாம்னு நினைக்கிறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''கலெக்ஷன் பண்றதுக்கு, கரெக்ட் ஆன ஆளு அவரு தான்... இன்னொரு விஷயம் கவனிச்சியாக்கா... ஆளுங்கட்சியில இருக்குற மூணு 'மாஜி' டவுன்டாடிகளும், ஆளுக்கொரு அணியில இருக்காங்க. உள்ளாட்சித் தேர்தல் வந்துச்சுன்னா, சின்னம் யார்ட்ட இருந்தாலும், மூணு அணியில இருக்குற அ.தி.மு.க., ஓட்டும் சிதறிடும்,'' என்றாள் மித்ரா.
''டாஸ்மாக் மேட்டரைப் பத்திச் சொன்னியே...சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மார்ச் 31க்குள்ள நம்ம மாவட்டத்துல இருக்குற நார்த், சவுத்ன்னு ரெண்டு டாஸ்மாக் டிஸ்ட்ரிக்ட்ல இருக்குற 105 ப்ளஸ் 98 கடைகளை, வேற இடத்துக்கு மாத்தணும். ஆனா, ஒரு கடையைக் கூட மாத்துறதுக்கு நடவடிக்கை எடுக்கலை,'' என்றாள் சித்ரா.
''எடுக்கலைன்னா, கலெக்டர், டாஸ்மாக் எஸ்ஆர்எம், போலீஸ் கமிஷனர், எஸ்.பி., எல்லாருமே கோர்ட்டுக்கு பதில் சொல்லணுமே,'' என்றாள் மித்ரா.
''அதைப் பற்றி யாரும் கவலைப்படுறதாத் தெரியலை; ஏற்கனவே 'பார்' எல்லாமே 'டெண்டர்' விடாம, 'எக்ஸ்டென்ஷன்'ல ஓடுது. இப்போ, கடைய மாத்துனா, எங்களுக்கு தான் 'பார்' கொடுக்கணும்னு ஆளுங்கட்சி ஆளுங்க கொடி துாக்குறாங்க. கடைகளை இடம் மாத்த, சூபர்வைசர்க இடம் பார்த்தாலும், அதை இன்ஸ்பெக்ஷன் பண்றதுக்கு டி.எம்., எக்சைஸ் டி.சி., எல்லாரும் பத்தாயிரம், பதினஞ்சாயிரம் கேக்குறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''எரியுற வீட்டுல புடுங்குற வரைக்கும் மிச்சம்கிறது மாதிரி, எல்லாத்துலயும் காசு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க, ஆளுங்கட்சிக்காரங்க. சிட்டிக்குள்ள கேபிள் கனெக்ஷன்ல, பாதிக்குப் பாதி காசை, ஆளுங்கட்சிக்காரங்க அடிச்சிர்றாங்க. கவர்மென்ட்டுக்குப் போறது, வெறும் கொசுறு தான்,'' என்றாள் மித்ரா.
''அதெப்பிடி மித்து, அதைப் பார்க்கத்தான் ஆபீசர்க இருக்காங்களே,'' என்றாள் சித்ரா.
''அவுங்களும் கூட்டணி தான்... சிட்டியில, 250 கேபிள் ஆபரேட்டர்க இருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் இருக்குற கனெக்ஷன்ல பாதியைத் தான் கணக்குல காட்றாங்க. மீதியை ஆபீசர்களும், ஆபரேட்டர்களும் பங்கு போட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்போ அதையும் ஆளுங்கட்சி ஆளு ஒருத்தரே, மொத்தமா குத்தகைக்கு எடுத்துட்டாராம். சிட்டிக்குள்ள புது கேபிள் தாதா உருவாயிட்டார்னு ஆளுங்கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
அறைக்குள் இருந்த 'டிவி'யைப் போட்ட சித்ரா, அதில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த கம்யூ., தலைவரைப் பார்த்ததும் வேகமாய்க் கேட்டாள்...
''மித்து... கேரளாவுல பவானிக்குக் குறுக்க, தடுப்பணை கட்டுறதைக் கண்டிச்சு, அனைத்துக்கட்சி சார்புல, க.க.,சாவடியில மறியல் செஞ்ச அதே நாளு, அதே நேரத்துல ரெண்டு கம்யூ., கட்சிக்காரங்களும் ரயில் மறியல் பண்ணுனாங்களே. அதைப் பத்தி மக்கள் என்ன பேசிக்கிறாங்க?,''
''கொந்தளிக்கிறாங்க... கேரளாவுல தடுப்பணை கட்டுற கம்யூ., அரசைக் கண்டிச்சு, ஒரு வார்த்தை கூட அறிக்கை விடாம, கேரள சாலை மறியல் போராட்டத்தைத் திசை திருப்பணும்னே, இந்த மறியலை நடத்துனதா எல்லாருமே சொல்றாங்க. அதான் உண்மையுங்கூட!,''
சேனலை மாற்றினாள் சித்ரா. டைகர் பிஸ்கட் விளம்பரத்தைப் பார்த்ததும் சிரித்தவள், அடுத்த மேட்டருக்குத் தாவினாள்...
''டைகர் பிஸ்கட் இன்ஜினியரு, ரொம்ப கஷ்டப்பட்டு நம்ம கார்ப்பரேஷனுக்கு 'சி.இ.,' இன்சார்ஜ் போஸ்ட்டிங் வாங்கிட்டு வந்தாருல்ல... ஜேஎன்என்யுஆர்எம் எஸ்.இ.,யாவும் அவரைப் போட்டாங்க. ஆனா, 'சி.இ.,' இன்சார்ஜ்ல இருந்து துாக்கிட்டு, லேடி இன்ஜினியர் ஒருத்தரைப் போட்டுட்டாங்க தெரியுமா?,''
''ஏன் அவரு வேலை பார்க்க மாட்டாருன்னா?,''
''அதெல்லாம் இல்லை. சிட்டிக்குள்ள பல வேலைகள் நடந்தது மாதிரி, 'எம்.புக்'ல ரிப்போர்ட் எழுதி, அதுல அவரை கையெழுத்துப் போடச் சொல்லிருக்காங்க. நான் பார்க்காம, 'சைன்' போட மாட்டேன்னு சொல்லீட்டாராம். உடனே துாக்கிட்டாங்க. இந்தம்மாவை 'இன்சார்ஜ்'ஜா போட்டதும் எல்லாத்துலயும் 'சைன்' பண்ணீட்டாங்களாம். அதுல, பாதிக்கும் மேல வேலை நடக்கலையாம்; நடந்ததும் படு கேவலமா பண்ணி இருக்காங்களாம்,''
''அதை விட இன்னொரு மோசடி, கார்ப்பரேஷன்ல நடந்திருக்கு. ஏற்கனவே, பல ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களுக்கு, மூணு மாசச் சம்பளத்தை முன் கூட்டியே தந்து, பல கோடி 'ப்ளாக் மணி'யை 'ஒயிட்'டா மாத்துனாங்களே. அதே மாதிரி, கார்ப்பரேஷன் கான்ட்ராக்டர்கள்ட்ட இருந்து, பழைய 500, 1,000 ரூபா நோட்டுகளை 'டெபாஸிட்'ங்கிற பேருல வாங்கி, கார்ப்பரேஷன் அக்கவுண்ட்ல ஏத்தீட்டாங்க,''
''இதுல என்ன முறைகேடு இருக்கு?,''
''இப்போ என்ன பண்ணிருக்காங்க தெரியுமா... அந்த 'அமவுண்டை' எல்லாம் திரும்ப ஒப்படைத்தல்ங்கிற பேருல 'செக்'கா போட்டு, அதே கான்ட்ராக்டர்கள்ட்ட கொடுத்துட்டாங்க. இது எப்பிடி இருக்கு?,'' என்றாள் மித்ரா.
''எதுவுமே நல்லா இல்லடி. கமல் சொன்னது மாதிரி, மறுபடியும் எலக்ஷன் வந்தாத்தான்
நல்லாருக்கும்,'' என்ற சித்ரா, 'சரி கிளம்பலாம். பேங்க் போகணும்,' என்று எழுந்தாள். பின் தொடர்ந்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X