சந்தையே கோயில்; நுகர்வோரே கடவுள் | Dinamalar

சந்தையே கோயில்; நுகர்வோரே கடவுள்

Added : மார் 15, 2017 | கருத்துகள் (2)
 சந்தையே கோயில்; நுகர்வோரே கடவுள்

அமெரிக்காவில் 1962ம் ஆண்டு மார்ச் 15ல், அப்போதைய அதிபர் ஜான் கென்னடி உலக நுகர்வோர் அமைப்பின் கூட்டத்தில்பேசினார். நுகர்வோர் உரிமைகளுக்கான மசோதா பிறந்தது. சர்வதேச
நுகர்வோருக்கான அடிப்படை உரிமைகளை பெற இந்த மசோதா வழி செய்தது. அதை குறிப்பிடும் வகையில் நுகர்வோர் உரிமை ஆர்வலர் அன்வர் பசல் அன்றைய நாளை, சர்வதேச நுகர்வோர் தினமாக அறிவித்தார்.


நோக்கம்


நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது, அதன் மீது நடவடிக்கை எடுப்பது,
சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுவது ஆகியவை இந்த தினத்தின் முக்கிய நோக்கங்கள்.
1985ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் இது ஏற்றுக் கொள்ளப்பட்டு, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டாலும், நவீன கால இயக்கத்திற்கு ஏற்ப 1999ல் மேம்படுத்தப்பட்ட புதிய சட்ட விதிகள் உருவாக்கப்பட்டன.

அவற்றின்படி நுகர்வோருக்கு அடிப்படை தேவைகளில் திருப்தி அடையும் உரிமை; பாதுகாப்பு உரிமை; பொருட்கள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ளும் உரிமை; வாங்குவதை தேர்ந்தெடுக்கும் உரிமை; உத்தரவாதம் பெறும் உரிமை; நிவர்த்தி பெறும் உரிமை; நுகர்வோர் உரிமை; கல்வி பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை; ஆரோக்கியமான சுற்றுச்சூழல் பெறும் உரிமை போன்றவை உள்ளன.


நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்


உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும்,நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய சட்டங்களும் அதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன. இச்சட்டம் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 என அழைக்கப்படுகிறது. இந்தியா வில் வாழும் மக்களின் நுகர்வுத்
தன்மையை பாதுகாக்கும் பொருட்டு, இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்ற சட்டம். நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள் முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு 2003ம் ஆண்டு புதிய பரிமாணங்
களுடன் வெளியிடப்பட்டது.


நுகர்வு கலாசாரம்


ஒவ்வொரு மனிதரும் தங்களுக்கு தேவையான ஏதோ ஒன்றை விலை கொடுத்து வாங்கி கொண்டுள்ளனர். ஜனநாயகத்தில் மக்களுக்கு உரிமைகள் பல உள்ளன. ஆனால் அதை பற்றிய புரிதல் இல்லை. ஒரு நாட்டின் பொருளாதாரம் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கிறது. தொன்று தொட்டு வணிகமும், வியாபாரமும் சமுதாய வளர்ச்சி யுடன் இணைந்துள்ளன. ஒரு நாடு செழிப்பாக இயங்க வேண்டு மெனில் நேர்மையான வணிகம் மிக அவசியம். அதனால் தான் மகாத்மா காந்தி, ''வாடிக்கையாளர்களே முதன்மையானவர்,'' என குறிப்பிட்டுள்ளார். நுகர்வோரை புறக்கணித்தாலோ ஏமாற்றினாலோ வியாபாரம் பாதிக்கப்படும்.


நுகர்வோரின் உழைப்பு


பண்டம் மாற்று முறையில் வணிகம் செய்த காலத்தில், உழைப்பிற்கு ஏற்றவாறு பண்டம் கொடுக்கப்பட்டது. ஆனால் அது மாறி பணத்தின் ஆதிக்கம் தலை துாக்கி, வியாபாரத்தின்
நாணயத்தை நசுக்கி விட்டது. நுகர்வோரின் நம்பிக்கையை சம்பாதித்தால் தான் வியாபாரம் நிலைத்து நிற்கும். அதற்கு நுகர்வோர் விழிப்புணர்வு இருந்தால், உழைப்பிற்கு மதிப்பு கொடுத்தால் நாணய வியாபாரம் நாணயமாக நிகழும். நுகர்வோர் கொடுப்பது பணம் மட்டுமல்ல. அது அவர்களின் உழைப்பு. அதற்கு மதிப்பு கொடுக்கப்பட வேண்டும்.


நுகர்வோர் யார்


நுகர்வோர் என்றால் பணம் கொடுத்து பொருளை வாங்கு பவர். பணம் கொடுத்து சேவை
பெறுபவர் ஆவார். அந்த வகையில் அனைத்து குடிமக்களும் நுகர்வோரே. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், சில உரிமைகளை அவர்களுக்கு வழங்குகிறது.

உயிருக்கும், உடமைக்கும் ஊறு விளைவிக்கின்ற பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக நுகர்வோர் பாதுகாக்கப்பட வேண்டும். நியாயமற்ற வணிக
நடவடிக்கைகளிலிருந்து, நுகர்வோர் பாதுகாப்பு பெற பொருட்களின் தரம், அளவு, வீரியம், துாய்மை நிலை, விலை ஆகியவை தெரிவிக்கப்பட வேண்டும். நியாயமற்ற வணிக நடவடிக்கைகளால், பரிகாரம் தேடுவதற்குரிய உரிமைகளை சட்டம் அளிக்கிறது.

காசு கொடுத்து, ஒருபொருளையோ, சேவையையோ, தன் சொந்த உபயோகத்திற்காக பெறும் ஒருவர், தான் வாங்கும் பொருட்களுக்கு அதிகபட்ச விற்பனை விலை குறிப்பிடப்பட்டு
உள்ளதா என்பதை பார்த்து வாங்கிய பொருளுக்குரிய ரசீது பெற வேண்டும். அவ்வாறு ரசீதுடன் நுகர்வோர் வாங்கிய பொருட்களில், சேவைகளில் குறைபாடுகள் இருந்தாலோ, சட்டத்திற்கு புறம்பாக அல்லது அறிவிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விலை பெற்றிருந்தாலோ நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளிக்கலாம். நுகர்வோர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சேவை குறைபாட்டிற்குரிய இழப்பீட்டை பெறலாம்.


தரமற்ற பொருட்கள்


சிறிய அல்லது பெரிய குறைபாடு, முழுமை பெறாத, தரக்குறைவான, எடைக்குறைவான இந்திய பொருள் பாதுகாப்பு சட்டங்களுக்கு உட்படாதபொருட்கள் தரமற்றவையாகும். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 பகுதி 2(1)(ஜி)பிரிவின்படி பணம் கொடுத்து சேவை பெற்று கொள்வது சேவையில் வாக்குறுதியளித்தபடி சேவை கொடுக்கப்படாமல் இன்னல்களுக்கு ஆளாக்குவது சேவை குறை பாடு ஆகும்.

உதாரணமாக பஸ் பயணத்தின் போது பணம் கொடுத்து பயணிக்கிறோம். அப்படி பயணிக்கும் போது டிரைவர், கண்டக்டர் தரக்குறைவான வார்த்தைகளால் பேசும் போது அது சேவை குறைபாடு ஆகிறது.ரேஷன் கடைகளில் பணம் கொடுத்து வாங்கும் பொருட்களில் குறைபாடு இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். அரசு மருத்துவமனைகளில் சேவை குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தை அணுக முடியாது. ஏனெனில் இலவசமாக சிகிச்சை பெறுகிறோம். ஆனால் அங்கு பணம் கொடுத்து பெறும் மருத்துவத்தில் குறைபாடு இருந்தால் நீதிமன்றம்
செல்லலாம்.


எங்கு புகார் செய்யலாம்


நுகர்வோர் தங்களுக்கு ஏற்பட்ட சேவை குறைவிற்கான நஷ்டஈடு தொகை 20 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களிலும், ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால் தேசிய ஆணையத்திலும் புகார் செய்யலாம்.

நுகர்வோர் தங்கள் புகார்களை மிகச்சிறந்த முறையில் நுகர்வோர் மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர் முன் வாதாடலாம். வழக்கறிஞர் தேவையில்லை. பணம் கொடுத்து பெறும் பொருட்களில் குறைபாடு இருந்தாலோ அல்லது சேவை பெறுவதில் குறை இருந்தாலோ நேரிடையாக நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.


ஏன் புகார் செய்ய வேண்டும்


இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன் நுகர்வோர் தங்களுக்கு இழைக்கப்பட்ட எல்லா அநீதிகளையும் பொறுத்து கொள்ள வேண்டிய அவலம் இருந்தது. 1986 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, நாம் வாங்கிய பொருளில் குறையோ அல்லது சேவையில் குறைபாடோ இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம். நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார் செய்வதினால், நாமும் இழந்த நஷ்டத்தை அபராதத்துடன் பெறலாம். இதுபோல மற்ற நுகர்வோருக்கு நஷ்டம் நேரிடுவதையும் தவிர்க்கலாம். இதன் மூலம் அனைவருக்கும் தரமான பொருள், சேவை கிடைக்க வழி பிறக்கும்.


புகார் செய்வது எப்படி


நுகர்வோர் புகாருக்கு உரிய இழப்பீடு, நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றால் சரியான முறைகளை பின்பற்றி புகார் செய்ய வேண்டும். புகார் செய்ய வேண்டிய அளவுக்கு, நியாயமான குறையோ அல்லது இழப்போ உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் முதலில், எதிர் தரப்பிற்கு எழுத்து மூலம் ஒரு கடிதம் எழுதி, நீங்கள்அவரிடமிருந்து வாங்கியபொருளில் அல்லது சேவையில் குறையை விபரமாக தெரிவிக்க வேண்டும். அக்கடிதம் அவரை அடைந்ததற்கான அத்தாட்சி தேவை. உங்கள் புகார் தொடர்பான அனைத்து விபரங்கள், ஆதாரங்களையும் திரட்ட
வேண்டும். முடிந்தவரை விரைந்து புகார் செய்ய வேண்டும். உங்கள் கடிதம் குறித்து எதிர்தரப்பு
விளக்கமளிக்க நியாயமான அவகாசம் கொடுக்க வேண்டும்.


விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்


நுகர்வோர் உரிமை குறித்த புத்தகங்களை படித்து, தெரிந்து கொள்ள வேண்டும். பாடப்
புத்தகங்களில் நுகர்வோர் உரிமைகள் குறித்த பாடத்தை மத்திய, மாநில அரசுகள் சேர்க்க வேண்டும். அனைவரும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை தெரிந்து கொள்ள அரசுகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். நுகர்வோர் போராடினால் தான் தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்கும். நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வை, தங்கள் பகுதியில் குறைந்தது ஒருவருக்காவது ஏற்படுத்துவோம் என இந்நாளில் உறுதி ஏற்கவேண்டும்.

-மு.பிறவிப்பெருமாள்
செயலாளர்
நுகர்வோர் கண்காணிப்பகம் மதுரை. 99941 52952We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X