சிறப்பு பகுதிகள்

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000

உன்னைக் கொடு!

Added : மார் 17, 2017
Advertisement
 உன்னைக் கொடு! Ramanujar Download

'இப்போது நீங்கள் அனைவரும் உள்ளே வரவேண்டும் சுவாமி!' என்று பளிச்செனக் கதவை விரியத் திறந்தாள் அந்தப் பெண்மணி. உடையவர் எடுத்து வீசிய பரிவட்டத் துணி அவளது புடைவையாக மாறியிருந்தது.
ராமானுஜரின் சீடர்கள் அத்தனை பேரும் திடுக்கிட்டுப் போனார்கள். அரைக் கணம் அவள் கதவு திறந்ததை அவர்கள் பார்த்திருந்தார்கள். ஆனால் ஆளைப் பார்க்கவில்லை. முகத்தைப் பார்க்கவில்லை. வெளியே எட்டிக் கூடப் பார்க்க முடியாதபடிக்குக் கட்டிப் போட்டிருந்த புடைவையின் பொத்தல்களைப் பார்க்கவில்லை. உடையவர் எப்படி கவனித்தார்? 'இதில் வியக்க என்ன இருக்கிறது? இந்த வீடு பாகவதர்களுக்கு எப்போதும் திறந்திருப்பது என்பது அந்தப் பெண்ணின் அழைப்பிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் கதவுக்குப் பின்னால் ஒளிந்து நின்று அழைக்கிறாள் என்றால் வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்? ஏழைமையால் கதவைத்தான் மூடி வைக்க முடியும். இதயத்தை அல்லவே?'மிகச் சிறிய வீடு அது. புழங்கும் இடத்தில் நாலைந்து பேர் அமர்வது சிரமம். ஒருவர் மட்டுமே நின்று சமைக்கக்கூடிய அளவில் அடுக்களை. பூச்சற்ற மண் சுவரும் கரி படிந்த தரையும் தாழ்ப்பாள் சரியில்லாத கதவும் உடையும் தரத்து உத்தரமுமாக இருந்தது. உடையவரும் ஓரிருவரும் மட்டும் வீட்டுக்குள் சென்று அமர, மற்றவர்கள் வெளியிலேயே இருந்தார்கள்.'அம்மா, உன் கணவர் எப்போது வருவார்?''தெரியவில்லை சுவாமி. ஆனால் அவர் இல்லாமல் பசியாறுவது எப்படி என்று தயவுசெய்து கவலைப்படாதீர்கள். பாகவத உத்தமர்களுக்கு விருந்தளிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம். நீங்கள் குளத்துக்குச் சென்று நீராடிவிட்டு வாருங்கள். அதற்குள் உணவு தயாராகிவிடும்' என்றாள் அந்தப் பெண்.ராமானுஜர் தமது சீடர்களுடன் புறப்பட்டுப் போனார். அடுக்களைக்குள் நின்று யோசிக்க ஆரம்பித்தாள் அந்தப் பெண்.வீட்டில் ஒருவர் உண்ணும் அளவுக்குக் கூட உணவேதும் இல்லை. சமைப்பதென்றால் பிடி அரிசியும் இல்லை. வாங்கி வரப் பணமும் இல்லை. கடனுக்குத் தர ஆள்களும் இல்லை.ஆனால் வந்திருக்கும் திருமால் அடியார்களைப் பசியோடு அனுப்ப முடியாது. அதற்குப் பேசாமல் இறந்துவிடலாம். என்ன செய்வது?சட்டென்று அவளுக்கு அந்த மளிகைக்கடைக்காரன் நினைவுக்கு வந்தான். கண்ணில் காமத்தையும் சொல்லில் களவையும் எப்போதும் தேக்கி வைத்துக் காண்கின்ற போதெல்லாம் மனம் கூசச் செய்கிறவன். என்ன செய்ய? பணம் சேருகிற இடங்களில் குணம் கூடுவதில்லை. சற்றும் வெட்கமே இன்றி எத்தனையோ முறை தன்னைத் தவறாகக் கண்டவன் நினைவு சட்டென்று அவளுக்கு அப்போது வந்தது. ஒரு கணம் யோசித்தாள். ஒரு முடிவுக்கு வந்தவளாக விறுவிறுவென்று வீட்டை விட்டுக் கிளம்பி நேரே அவனிடத்துக்குப் போய் நின்றாள்.வணிகன் அவளைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. 'அட, நீயா!' என்றான் வியப்போடு.'ஐயா, எங்கள் வீட்டுக்கு பாகவத உத்தமர்கள் பலபேர் விருந்தாளிகளாக வந்திருக்கிறார்கள். என் கணவர் வீட்டில் இல்லாத நேரம் அவர்களை வெறும் வயிற்றுடன் என்னால் திருப்பி அனுப்ப இயலாது.''அதெப்படி முடியும்? விருந்தாளி என்று வந்துவிட்டால் சமைத்துப் போட்டுத்தான் ஆகவேண்டும்.''ஆனால் வீட்டில் அரிசி இல்லை. பருப்பில்லை. நெய்யில்லை. காய்கறி ஏதுமில்லை. மளிகைச் சாமான் எதுவுமே இல்லை. நீங்கள் உதவினால் மட்டும்தான் என்னால் அவர்களது பசியாற்ற முடியும்.'வணிகன் அவளை உற்றுப் பார்த்தான். சிரித்தான்.'உதவலாம் பெண்ணே. ஆனால் நான் வியாபாரி. வாங்கும் பொருளுக்கு, ஒன்று நீ பணம் தரவேண்டும் அல்லது பண்டமாற்றாகத்தான் எதையும் என்னால் தர முடியும்.'அவள் துக்கம் விழுங்கினாள். கண்ணை இறுக மூடி ஒரு கணம் அமைதியாக இருந்தாள். மானத்தை விலையாகக் கேட்கிற வியாபாரி. நிலையற்ற இந்த உடலின்மீதா இவனுக்கு இத்தனை இச்சை? எத்தனைக் காலமாக இதையே திரும்பத் திரும்பப் பல்வேறு விதமாகக் கேட்டுவிட்டான்? திருமணமான ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்கிறோமே என்கிற வெட்கம் சற்றும் அற்றுப் போன வெறும் பிறப்பு.'என்ன யோசிக்கிறாய் பெண்ணே? எனக்கு உன்னைப் பிடிக்கும் என்பது உனக்கும் நன்றாகத் தெரியும். உன் கணவனுக்கு அஞ்சியோ, ஊருக்கு பயந்தோ, அல்லது உனக்கே விருப்பமில்லாமலோ இன்றுவரை நீ என் கருத்தைக் கண்டுகொண்டதில்லை.எனக்கும் ஆசை தீராமல் அப்படியேதான் இருக்கிறது. சொல்லப் போனால் நாளுக்கு நாள் உன்மீது மையல் கூடிக்கொண்டேதான் போகிறது.'அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். சட்டென்று அவன் பேச்சை இடைமறித்து, 'நீங்கள் எனக்கு எதையும் விளக்க வேண்டாம். வீட்டுக்கு வந்திருக்கிறவர்களுக்கு நான் முதலில் உணவு படைத்தாக வேண்டும்.''அப்படியா? எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?''ஒரு முப்பது பேர் இருக்கும்.''ஒன்றும் பிரச்னை இல்லை பெண்ணே. நீ மட்டும் சம்மதம் சொல். அடுத்த நிமிடம் என் ஆட்கள் உன் வீட்டை அரிசி பருப்பால் நிரப்பி விடுவார்கள்.''பாகவத ததியாராதனத்துக்கு இச்சரீரம்தான் உதவ வேண்டுமென்றால் அப்படியே ஆகட்டும். அவர்கள் உண்டு இளைப்பாறிச் சென்றபின் நான் உம்மிடம் வருவேன்.' என்றாள் அவள்.அவன் திகைத்துவிட்டான். உண்மையாகவா, உண்மையாகவா என்று திரும்பத் திரும்பக் கேட்டான்.'என் சொல் மாறாது. நீங்கள் என்னை நம்பலாம்.''சரி, நீ வீட்டுக்குப் போ. இன்றைக்கு விருந்து தடபுடலாக நடக்கும் பார்!' என்றான்.சில நிமிடங்களில் அந்த வணிகனின் ஆட்கள் வண்டி எடுத்துக்கொண்டு அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். மூட்டை அரிசி. பானைகளில் பருப்பு வகை. உப்பு, புளி, மிளகாய் தனியே. நெய் ஒரு பக்கம். காய்கறிகள் ஒரு பக்கம். பாலும் தயிரும் பாத்திரங்களை நிரப்பின.'உன் வீட்டில் இத்தனை பேருக்குச் சமைக்கப் பாத்திரங்கள் போதாது என்று எஜமானர் இந்தப் பாத்திரங்களையும் கொடுத்து வரச் சொன்னார்' என்று சொல்லி பளபளக்கும் புதிய பித்தளைப் பாத்திரங்களையும் எடுத்து வந்து வைத்துப் போனார்கள்.அவள் பரபரவென்று சமையலை ஆரம்பித்தாள்.வெளியே சென்றிருந்த அவளது கணவன் வீட்டுக்கு வந்தபோது வியந்து போனான். 'இது நம் வீடுதானா?''சுவாமி, திருவரங்கத்தில் இருந்து அடியார் சிலர் வந்திருக்கிறார்கள். இங்கே உண்ணலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தவர்களை இல்லை என்று சொல்லித் திருப்பி அனுப்ப மனமில்லை. அதனால்தான்...''அதனால்தான்?'அவள் நடந்ததைச் சொன்னாள்.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X