நல்ல தலைவர்களை உங்களில் தேடுங்கள்! | Dinamalar

நல்ல தலைவர்களை உங்களில் தேடுங்கள்!

Added : மார் 18, 2017 | கருத்துகள் (4)
Share
தமிழக மக்கள், ஒரு வித சோகத்திலும், கோபத்திலும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். தன்னலம் கருதாத, அரசியல் தலைவர்கள் பலரை கண்ட இந்த மாநிலம், தற்போது நிலை குலைந்து, அவப்பெயர் சுமந்து நிற்கிறது. பணத்தை மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில், மக்கள் சேவையை மறந்த, அரசியல் தலைவர்களால் நிரம்பியிருக்கிறது, இந்த மாநிலம். இதை மாற்றும் பொறுப்பு, இளைஞர்கள் கையில்
நல்ல தலைவர்களை உங்களில் தேடுங்கள்!

தமிழக மக்கள், ஒரு வித சோகத்திலும், கோபத்திலும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். தன்னலம் கருதாத, அரசியல் தலைவர்கள் பலரை கண்ட இந்த மாநிலம், தற்போது நிலை குலைந்து, அவப்பெயர் சுமந்து நிற்கிறது. பணத்தை மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில், மக்கள் சேவையை மறந்த, அரசியல் தலைவர்களால் நிரம்பியிருக்கிறது, இந்த மாநிலம். இதை மாற்றும் பொறுப்பு, இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களால், இந்த மாநிலத்தைக் காப்பாற்ற முடியும் என்ற எண்ணத்தில், என் நினைவுகளை பின்னோக்கி செலுத்துகிறேன்.
சென்னை மாகாணம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கிய, விரிந்த மாநிலமாக இருந்த போது, ராஜாஜி அதன் பிரதம அமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர், தென்னட்டி விஸ்வநாதன்.
சட்டசபையில், தென்னட்டி விஸ்வநாதன், அரசு நடவடிக்கை குறித்து கடுமையாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பிரதம மந்திரி ராஜாஜி, ஏதோ மறுப்பு சொல்ல எழுந்தார். பிரதம மந்திரி பேச எழுந்தால், யார் பேசிக் கொண்டிருந்தாலும் நிறுத்தி விட வேண்டும். எனவே, தென்னட்டி விஸ்வநாதன், தன் பேச்சை நிறுத்தினார். 'மைக்' இருக்கும் இடம் நோக்கி, ராஜாஜி நகர்ந்தார். அன்று, இப்போது இருப்பது போல, சட்டசபையில் ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வுக்கும், தனி மைக் கிடையாது.
அவைத் தலைவர், சிவசண்முகம் பிள்ளை, 'பிரதம மந்திரி அவர்களே, இது எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம்; உங்களுக்கான நேரம் இல்லை' என்றார். அதைக் கேட்ட, ராஜாஜி, உடனே, தன் இருக்கையில் அமர்ந்து விட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பேசி முடித்த பின், பிரதம மந்திரி பேசும் நேரம் வந்தது. ராஜாஜி, 'முதற்கண், எதிர்க்கட்சித் தலைவர், தென்னட்டி விஸ்வநாதன், பேசும் போது, குறுக்கிட்டுப் பேச எழுந்தமைக்கு மன்னிப்பு கோருகிறேன்' எனக் கூறி, தன் பேச்சைத் துவக்கினார்.
கவர்னர் ஜெனரலாக, ராஜாஜி டில்லியில் பதவியில் இருந்த போது, ஒருமுறை காரில் பயணம் செல்லும் போது, வழியில் இருந்த ரயில்வே கேட்டை, அப்போது தான், ரயில்வே ஊழியர் மூடினார். உடனே, கவர்னர் ஜெனரலின் பாதுகாவலர்கள், ரயில்வே ஊழியரை அணுகி, 'உடனே கேட்டைத் திற, ரயில் வருவதற்குள் நாங்கள் போய் விடுகிறோம். கவர்னர் ஜெனரல் காரில் இருக்கிறார்' என்றனர்; ஊழியர் மறுத்து விட்டார். பாதுகாவலர் எவ்வளவு பயமுறுத்தியும், கேட்டைத் திறக்கவில்லை.
இதை, காரில் இருந்தபடியே கவனித்த ராஜாஜி, பாதுகாவலரை கூப்பிட்டு, அந்த ரயில்வே ஊழியரின் பெயரைக் கேட்டு வரச் சொன்னார். அந்த பாதுகாவலரோ, 'ஆஹா... அந்த ரயில்வே ஊழியர் மீது, கவர்னர் ஜெனரல் நடவடிக்கை எடுப்பதற்குத் தான், பெயர் கேட்கிறார்' என, எண்ணினார்.ஆனால், நடந்தது என்ன தெரியுமா... அடுத்த இரண்டு நாளில், ரயில்வே துறையின் ஜெனரல் மேனேஜருக்கு, அந்த ஊழியரின் நேர்மையையும், கடமை உணர்வையும் பாராட்டி, ராஜாஜி கடிதம் எழுதினார்.
காங்கிரசின், ஓமந்துார் ராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின் பிரதமராக - இப்போதைய முதல்வர் பதவி, 1947, பிப்.,யில் ஏற்றார். பதவியில் இருந்த காலத்தில், வெளியூரிலிருந்து ரயிலில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்; அவருடன், அவர் மகனும் இருந்தார்.நள்ளிரவு, 12:00 மணிக்கு டிக்கெட் பரிசோதகரைக் கூப்பிட்டார். 'ஐயா... என் மகனுக்கு, 12:00 மணியுடன், 12 வயது பூர்த்தியாகிவிட்டது. இந்த நிமிடத்திலிருந்து, 13 வயது ஆரம்பமாகிறது. இந்த நிலையம் வரை அவனுக்கு அரை டிக்கெட் எடுத்திருந்தேன். இந்நிலையத்திலிருந்து சென்னை வரை, அவனுக்கு முழு டிக்கெட் கொடுங்கள்' என கூறி, பணம் கொடுத்து, டிக்கெட் வாங்கினார்.
ஒருமுறை, ராமசாமி ரெட்டியாருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. பிரதம மந்திரிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால், அப்போது, சென்னை பொது மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள், மருத்துவ ஆலோசனை வழங்குவர். அவர்களில் இரண்டு மருத்துவர்கள், ரெட்டியாரின் உடலை பரிசோதனை செய்ய, அவர் இல்லத்துக்குச் சென்றனர். தன் உடலை மருத்துவர்கள் பரிசோதிக்கும் முன், அங்கிருந்த ஒரு தாளில், அவர்களை கையெழுத்துப் போடச் சொன்னார். 'கையெழுத்துப் போட்டால் தான் என்னை பரிசோதனை செய்யலாம்' என, அவர்களிடம் கூறினார்.
அந்தத் தாளில், 'பிரதம மந்திரிக்கு மருத்துவம் பார்ப்பதால், அந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி அவரிடம் எந்தச் சலுகையும், நான் கேட்க மாட்டேன் என, உறுதி அளிக்கிறேன்' என, எழுதியிருந்தது.சென்னையில் இருந்த, காமராஜரைப் பார்ப்பதற்காக, வெளியூரிலிருந்து ஒருவர் வந்திருந்தார். தன் மகளின் கல்யாணத்திற்கு, காமராஜர் தலைமை தாங்க வேண்டும் என, அந்த நபர் கேட்டுக் கொண்டார்.
காமராஜர், 'அந்த தேதியில் வேறு அலுவல் உள்ளது; வர இயலாது' என, சொல்லி விட்டார். கல்யாண நாளும் வந்தது. காமராஜர் திடீரென, கல்யாணம் நடக்கும் இடத்துக்கு, முகூர்த்த நேரத்திற்கு முன் வந்து விட்டார். அந்த நபருக்கோ ஆச்சரியம். கல்யாணம் இனிதே நடந்தேறியது. புறப்படும் முன், காமராஜர், 'நான் கல்யாணத்திற்கு வருகிறேன் என, சொல்லியிருந்தால், முதல்வர் வருகிறார் என கூறி, நீ கடன் வாங்கி, தடபுடலாக ஆடம்பரச் செலவு செய்திருப்பாய். அதனால் தான், வர இயலாது என, அப்போது சொன்னேன்' என்றார்.
முதல்வராக இருந்த காலத்தில், விழா ஒன்றில் பங்கேற்க, எம்.ஜி.ஆர்., மதுரை சென்றார். ரயில் நிலையத்திலிருந்து காரில் ஏறி, ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு காரைச் செலுத்துமாறு சொன்னார். மருத்துவமனை சென்றவுடன், அங்கே பொது வார்டில், தரையில் ஒரு பாயில், முன்னாள் அமைச்சர், சுதந்திரப் போராட்டத் தியாகி, கக்கன் படுத்திருந்தார். முதல்வர் வந்த செய்தி கேட்டு, டீன் உட்பட மருத்துவமனை நிர்வாகிகள், அங்கு வந்தனர்.
'சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர் அமைச்சராக இருந்தவர். அவருக்கு, கட்டில் கூடக் கொடுக்காமல் தரையில் படுக்கப் போட்டிருக்கிறீர்களே...' என, அவர்களை, எம்.ஜி.ஆர்., கடிந்து கொண்டார்.'ஒரு மணி நேரம் கழித்து வருவேன். சிறப்பு வார்டில், கக்கன் இருக்க வேண்டும் வேண்டிய அனைத்தும் செய்யுங்கள்' என, உத்தரவிட்டு, போய் விட்டார். மீண்டும், சில மணி நேரங்கள் கழித்து வந்து, கக்கனை சிறப்பு வார்டில் சந்தித்தார்.
அப்போது, கக்கனிடம், 'உங்களுக்கு என்ன வேண்டும்... எது வேண்டுமானாலும் கேளுங்கள்... செய்து தருகிறேன்' என்றார். சொந்த வீடு இல்லாத கக்கன், வீடு கேட்டிருக்கலாம்; வருவாய் இல்லாத அவர், மாதம் இவ்வளவு பணம் வேண்டும் என, கேட்டிருக்கலாம்; உறவினர் யாருக்கேனும் வேலை கேட்டிருக்கலாம். ஆனால், எளிமையாக வாழ்ந்த கக்கன், தன் சொந்த ஊரான மேலுாரிலிருந்து, மதுரையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு வந்து போக, பேருந்தில், இலவச அனுமதிச் சீட்டும், இலவச மருத்துவமும் கேட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து, காங்கிரசில் சேர்ந்து, சுதந்திரத்திற்காகப் போராடி, பின், கம்யூ., கட்சியில் பணியாற்றி, கடைசி காலத்தில் இலக்கியப் பணியில் ஈடுபட்டு, 1963ல் மறைந்தவர், 'ஜீவா' என, அன்போடு அழைக்கப்பட்ட, ப.ஜீவானந்தம்! கம்யூ., கட்சியில் இவர் இருந்த காலத்தில், கோவை பகுதியில் கட்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கே.பழனிச்சாமி என்ற தோழரும் சென்றார். பல ஊர்களுக்குச் சென்று, கடைசியாகப் பொள்ளாச்சி வந்து சேர்ந்தனர். அப்போதே, இரவுச் சாப்பாட்டுக்கான நேரம் ஆகியிருந்தது.
'சாப்பாட்டுக்கு இங்குள்ள தோழர்களிடம் தான் பணம் கேட்க வேண்டும். அவர்களிடம் காசு இருக்காது; கடனும் வாங்கத் தெரியாது. வா, கோவைக்குப் போகலாம். அங்கு போய் இரவு உணவு உட்கொள்ளலாம்' எனக் கூறி, இருவரும் கோவைக்குப் புறப்பட்டனர். ஜீவாவுக்கு உணவு வாங்கித் தர, அங்கிருந்தவர்களிடம் பணம் இல்லை. 'ஸ்டேன்ஸ்' மில்லுக்குச் சென்றார், ஜீவா. மில்லிலிருந்து வெளி வந்த தொழிலாளர்களிடமிருந்து கிடைத்த பணத்தில், ஆளுக்கு, நான்கு இட்லி வாங்கிச் சாப்பிட்டு, படுக்கத் தயாரானார்.
திடீரென, எதையோ நினைத்துக் கொண்டவராய், தன் பைஜாமா பைக்குள் கையை விட்டு, பணக்கட்டு ஒன்றையும், அதனுடன் பணம் வசூல் செய்ததற்கான குறிப்பு அடங்கிய தாளையும் எடுத்து, பழனிச்சாமியிடம் கொடுத்து, 'நாளை காலை, இங்கிருந்து ஊர் சென்று விடுவேன். நீங்கள் இதை, கட்சியின் தலைமை அலுவலகத்தில் சேர்த்து விடுங்கள். சுற்றுப்பயணத்தின் போது கட்சிக்காக, நான் திரட்டிய நிதி என, சொல்லுங்கள்' என்றார்.
பணக்கட்டை வாங்கிக் கொண்ட, அந்த நபர், 'என்ன ஜீவா, இவ்வளவு பணத்தைப் பையில் வைத்துக் கொண்டா, பட்டினி கிடந்தீர்கள்... மதியமும் சாப்பிடவில்லையே. கட்சிக்காகத் தானே உழைக்கிறீர்கள். வசூல் பண்ணிய பணத்திலிருந்து உங்கள் சாப்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளக் கூடாதா... நீங்கள் சர்க்கரை வியாதிக்காரராயிற்றே... உங்களை ஏன் இப்படி வருத்திக் கொள்கிறீர்கள்...' என, புலம்பித் தவித்தார்.
அதற்கு, ஜீவா 'இது, கட்சிக்காகத் தொண்டர்கள் கொடுத்தது; என் சாப்பாட்டுக்காக அல்ல' எனச் சொல்லி, திரும்பிப் படுத்து, உறங்க ஆரம்பித்து விட்டார்.என்ன இளைஞர்களே... உங்களால் இதையெல்லாம் நம்ப முடியவில்லை அல்லவா... முந்தைய காலத்தின் உன்னத அரசியல் தலைவர்கள் சிலரின் வாழ்வில் நடந்த, சில நிகழ்ச்சிகள் மட்டுமே இவை.
குறைந்தபட்சம், 'இன்னோவா' கார் இல்லாத அரசியல்வாதியை நீங்கள் பார்த்ததில்லை; கார்களின் அணிவகுப்புடன் வராத அமைச்சரை கண்டதில்லை. பணப் பெட்டிக்கும், தங்கக் கட்டிக்கும், மயங்கிக் கிடக்கும் வெற்றுப் பேச்சு, வெள்ளை வேட்டிகளை மட்டுமே பார்த்திருக்கும் உங்களுக்கு, தன்னலம் கருதாத உத்தமர்களை காண கொடுத்து வைக்கவில்லை.எனவே, தேடுங்கள் இளைஞர்களே... தேடுங்கள். நியாயம் நிலைக்க, நேர்மை கோலோச்ச, எளிமை வழிகாட்ட, நல்ல தலைவர்களைத் தேடிக் கண்டுபிடியுங்கள் அல்லது உங்கள் மத்தியில் அப்படிப்பட்ட தலைவர்களை உருவாக்குங்கள்.
தனி மனித வழிபாட்டுக்கு இடம் கொடுத்து விடாது, பிறர் நலன் போற்றும், புதிய அரசியலுக்கு வழிகாட்டுங்கள். நம் நாட்டின் எதிர்காலத்தை காக்கும் பொறுப்பு, உங்கள் தோளில் சுமையாய் உட்கார்ந்திருக்கிறது. சரியான முடிவு எடுங்கள்; சரிந்து கொண்டிருக்கும் சரித்திரத்தை சரி செய்யப் புறப்படுங்கள். இ - மெயில்:sadacpmb@hotmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X